Published:Updated:

வீட்டு சாப்பாடு - 13

வீட்டு சாப்பாடு - 13

பிரீமியம் ஸ்டோரி
வீட்டு சாப்பாடு - 13

சீனிக்கிழங்கு, அவித்த மொச்சைப்பயறு, சேவு என்று அந்தக் கடையைக் கடந்து போகும்போதெல்லாம் என்னத்தையாச்சும் வாங்கிப்போட்டு அரைத்துக்கொண்டேதான் இருப்பான் ராமு. சின்னப் புள்ளையில் பருத்தி களவாண்ட நாளிலிருந்து இந்த நச்சுத் தீனிப்பழக்கம். குறிப்பாக, பட்டாணி சுண்டல் என்றால் போதும். ஒரு மரக்கால் பயறு என்றாலும் அசராமல் உட்கார்ந்து அரைத்துவிடுவான். சீனி நாய்க்கரின் சம்சாரம் அப்படிப் பக்குவமாய் அவிச்சுத் தாளிதம்பண்ணி, கடையில்கொண்டு வைக்குமே. இப்ப நினைச்சாலும் எச்சில் ஊறும். போன வருசம் படுக்கையில் விழுந்தான். காடுகரைகளுக்குப் போறது நின்றது. முழுக்க முழுக்க மாசாமாசம் மகன் வந்து கொடுக்கிற காசை வச்சித்தான் பிழைப்புன்னு ஆச்சு. பிறகெங்கே சீனி நாயக்கர் கடைக்குப் போக?

வீட்டு சாப்பாடு - 13

என்னைக்காச்சும் சுப்பியாகப் பார்த்து `ஐயோ! பாவம் கிழவன்’ என்று மனமிரங்கி கம்பரிசியோடு இம்புட்டுக் கருப்பட்டியைக் கலந்து இடிச்சு மாவுருண்டை பிடிச்சுக் குடுத்தா உண்டு. இல்லாட்டி ஆடிக்கிட்டிருக்கும் ரெண்டு பல்லை மென்று சப்பிக்கொண்டு திண்ணையில் சாய்ந்துகிடக்க வேண்டியதுதான். முன்பெல்லாம் மகன் வரும்போது எதனாச்சும் லட்டு, பூந்தினு டவுன் பலகாரங்கள் வாங்கிட்டு வருவான். என்னமோ தெரியலே, இப்ப ஒண்ணும் வாங்கிட்டு வாரதில்ல.

(ச.தமிழ்ச்செல்வனின் ‘வேறு ஊர்’ சிறுகதையிலிருந்து...)

வயதானவர்கள் மட்டுமே இருக்கும் வீடுகளுக்கு வரும் விருந்தாளிகள்கூட ஸ்வீட், காரம் வாங்கி வருவது இல்லை. ஆரஞ்சுப் பழத்தையும் ஆப்பிள் பழத்தை
யும் வாங்கி வந்து கதை முடியப்போவதை ஞாபகப்படுத்துவார்கள். மூத்த குடிமக்களின் திண்பண்ட ஏக்கத்தை, நம் பொதுச் சமூகம் புரிந்துகொள்வதே இல்லை. அவர்களின் திண்பண்ட உரிமைக்காகத் தனியாக ஒரு இயக்கமே நடத்த வேண்டும்.

என் சிறு வயதில், எங்கள் கிராமத்தில் ஒத்தைப்பல்லுகூட இல்லாத பாட்டிகள்தான் நிறைய இருப்பார்கள். ஒவ்வொருத்தரும் சொந்தமாக ஒரு வெத்திலை இடிக்கிற குட்டி உலோக உரலும் உலக்கையும் வைத்திருப்பார்கள். டவுன் பாட்டிகள் இப்போது செல்போன் வைத்திருப்பதுபோல. வசதியான பாட்டிகள் வெண்கலத்திலும் மற்றவர்கள் இரும்பிலும் வைத்திருப்பார்கள். அது சும்மா வெத்திலை இடிக்கும் கருவியாக மட்டும் இருப்பது இல்லை. மற்ற சராசரி பல்லுடையோர் சாப்பிடும் முறுக்கு, சீடை, சேவு போன்ற பல்லுடைக்கும் பண்டங்களையெல்லாம் அதில் போட்டு நொறுக்கி, வாயில் போட்டுச் சுவைப்பார்கள். பல்லுப்போனாலும் நொறுக்குத் தீனிமேல் இருக்கும் பிரேமை போகுமா? இன்னும் சொல்லப்போனால், முடியாதபோதுதான் அதன் மீது ஆசை அதிகமாகும் என்பது மானுட உளவியல்.

நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் குடிபோன பிறகு, வீடுகளில் தயாரிக்கும் திண்பண்டங்களின் வகைகள் பற்றி நிறைய தெரிந்துகொண்டோம். கரிசல் காட்டு வாழ்க்கை அனுமதிப்பதைவிட தீர வாசத்தில் பண்டங்கள் தயாரிப்புக்கான கால அவகாசமும் தேவையும் அதிகம் எனப் புரிந்துகொண்டோம். அங்கு முறுக்கு, தேன்குழல் சுட்டு விற்கும் வீடுகள் பல உண்டு. எண்ணெயில் முறுக்கைப் பிழிந்து வேகவிட்டு எடுக்கும்போது, பல் இல்லாத கிழடுகளுக்காக அவர்கள் முக்கால் வேக்காட்டில் முறுக்கைத் தனியே எடுத்துவைப்பதைப் பார்த்தேன். முறுக்கை ஜவ்வு மிட்டாய் போல பெரிசுகள் சுவைத்துச் சாப்பிடுவதையும் பார்த்தேன். ‘கறுக் முறுக்’ என்று தின்றால்தான் அது முறுக்குக்கு மரியாதை. பல் போன காலத்தில் முறுக்கின் வாசனையையும் முக்கால் வேக்காட்டு ருசியையுமாவது பார்த்துவிடமாட்டோமா என்கிற அவர்களின் ஏக்கத்தின் வடிவமாக அந்த மென்முறுக்குகளைப் புரிந்துகொண்டேன்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான ‘அஞ்ஞாடி’யில் பூமணி, பல இடங்களில் இந்த மூத்தோர் உணவுக் கனாக்கள் பற்றி எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞான வளர்ச்சியில் பல்போனால் மாற்றுப்பல் கட்டிக்கொளும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆனால், வசதி வேண்டுமே. இலவச பல்கட்டும் முகாம்களை அரசே நடத்தி, பெரியவர்களின் முறுக்குக் கனாக்களைத் தீர்த்தால், பெரியவர்களின் ஆசிகள் அரசுக்குக் கிடைக்கும், ஓட்டும்தான். திண்பண்டங்கள் என்று இல்லை. அவர்களின் அன்றாட உணவுப்பழக்கமே பிரச்னை ஆகிவிடுகிறது. காபி, டீ போன்ற பானங்களில் பிரச்னை இல்லை. இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவு வகைகள், பல்லுக்கு மிருதுவாய் பணியாரம் போன்றவையும் ஓ.கேதான். தோசையில்கூட ரொம்ப முறுகலான தோசைகள் பிரச்னைக்கு உரியவை. ஊத்தாப்பம் போல மெத்து மெத்தென்று தோசை வார்த்தால், பெரிசுகள் பல் மகிழ்ந்து சாப்பிடுவார்கள். ‘சாதத்தைக் குறைச்சுட்டு, சப்பாத்தியைச் சாப்பிடுங்க’ என டாக்டர்கள் ரொம்ப லேசாகச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். பூப்போன்ற இட்லி மாதிரி, பூப்போன்ற சப்பாத்திகள் எல்லோருக்கும் அமைவது இல்லையே. ‘கோல்ட் ரஷ்’ படத்தில் சார்லி சாப்ளின் செருப்புத் தோலைக் கடித்துச் சாப்பிடுவதுபோல, செருப்பு வார் மாதிரிச் சப்பாத்திகள்தான் பல வீடுகளிலும் அமைகின்றன.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் அம்மா சப்பாத்தி போட்டால், அப்படி ஒரு மிருதுவாக இருக்கும். பல் இல்லாதவர்களுக்கு அப்படி சப்பாத்திகள் அமைய வேண்டும். வீட்டு தோசைக்கல்லில் அவர் சப்பாத்தி போட்டால் அப்படி விரிகிறது. அதே தோசைக்கல், நாம் சொன்ன பேச்சைக் கேட்பது இல்லை. கோதுமை மாவுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தியோ ரொட்டியோ மிருதுவாக அமையும் என்கிறார்கள். தோசைக்கல்லில் சப்பாத்தி கிடக்கும்போது, வெள்ளைத் துணியைப் பொதிந்து கையில் வைத்துக்கொண்டு, சப்பாத்தியை அமுக்கி அமுக்கிவிட்டால் உப்பலாக, பூரி மாதிரி சப்பாத்தி எழும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நமக்கு மட்டும் அது அமைய மறுக்கிறதே என்கிற ஆதங்கமும் தோற்றுப்போன மனநிலையும் எனக்கு சப்பாத்தி விஷயத்தில் நீண்ட காலமாக இருக்கிறது. டாக்டர்கள் சொல்லும், ‘70 வருஷம் எவ்வளவோ சாப்பிட்டுட்டீங்க. போதும்னு விடுங்க. இன்னும் கொஞ்ச நாள் டயட் கட்டுப்பாட்டுடன் இருங்க. எல்லாம் உங்க நன்மைக்குத்தானே’ எனும் வசனங்கள் அக்கறை மிக்கவையாக இருக்கலாம். ஆனால், அது உண்டாக்கும் வேதனையை வயதாகி, பல் போனவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நிற்க.

எல்லா அம்மாக்களையும் போல எங்கள் அம்மாவும் அருமையாகச் சமைப்பார். அவர் எதைச் சமைத்தாலும் அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, அவருக்கு ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் வந்ததும், அவரால் எதையுமே சாப்பிட முடியவில்லை. பெரும்பாலான நாட்களில் கஞ்சிதான் ஆகாரம். அவர் கஞ்சி குடித்தாலும் எங்களுக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டே இருந்தார். கொஞ்ச நாளில் ருசி அவர் கைப்பக்குவத்தை விட்டுப் போனது. கஞ்சி குடித்து, கஞ்சி குடித்து நாக்கு மரத்துப்போனது போல, கையும் மரத்துப்போய்விட்டது. தன் கைமணம் தன்னை விட்டுப்போனதை அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது பற்றிய பெருமூச்சுகளும் புலம்பல்களுமாக அவரது இறுதிக்காலம் கழிந்தது.

நன்றாக ருசிச்சுச் சாப்பிடுகிறவர்களால்தான் ருசியாகச் சமைக்கவும் முடியும் போலும். வயதானால் வரும் இன்னொரு பிரச்னை, ருசிகண்டு ருசிகண்டு 70-80 வருஷம் வாழ்ந்த நாக்கு, ருசிகளின் உச்சத்தை இப்போது கோரும் பிரச்னை. எங்கள் தாத்தா, வயதான காலத்தில் புளிப்பு என்றால் பல் கெடுக்கும் புளிப்பான தயிர்தான் வேண்டும் என்பார். இனிப்பு என்றால், பல் கூச வேண்டும். உறைப்பு என்றால், நாக்கில் ரத்தம் வர வேண்டும். சூடு என்றால், வாய் வெந்துபோக வேண்டும்.

காப்பகங்களில் அடைந்துகிடக்கும் பெரியவர்களின் பாடு ரொம்பப் பரிதாபம். நாக்குச் செத்த சாப்பாட்டுடன் காலம் கழிப்பது எவ்வளவு பெரிய தண்டனை? ஆரோக்கியம் மட்டுமே வயதானவர்களின் பிரச்னை அல்ல. நாக்கின் தேவை அறிந்து சமைத்துக்கொடுக்க அன்பான கைகளும் வேண்டும்.

வீட்டு சாப்பாடு - 13

மாங்காய் குழம்பு

புளிப்புச்சுவை கூடுதலாக உள்ள மாம்பழம் அல்லது அரைப் பழமாக உள்ள மாங்காயைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வத்தல் கிள்ளிப்போட்டுத் தாளித்து, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்பூன் போட்டு, கருகவிடாமல் பார்த்து, அதிலேயே நறுக்கிய மாங்காய்த்துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, இறக்கி வைத்துக்கொள்ளவும். அரை டம்ளர் புளிக்கரைசலை அடுப்பில்வைத்து, வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் அளவுக்குப் போட்டு, லேசாகக் கொதிக்கவைக்கவும். ஏற்கனவே, வதக்கிவைத்த மாம்பழத்துண்டுகளை அதில் கொட்டி, உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கினால், மாங்காய் குழம்பு தயார்.

- சமைப்பேன்
படம்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு