Published:Updated:

வீட்டு சாப்பாடு - 14

வீட்டு சாப்பாடு - 14

பிரீமியம் ஸ்டோரி
வீட்டு சாப்பாடு - 14

வ்வொருவரின் வாழ்க்கையிலும் அதிக அளவு உட்கொள்ளும் காலமும் குறைந்த அளவு உட்கொள்ளும் காலமும் இருந்தே தீரும். எல்லா வயதிலும் ஒரே அளவு உண்பவர்கள் என யாரும் இருக்க முடியாது. கடைசி நாட்களில் வாயில் ஊற்றிய ஒரு மிடறு பாலைக்கூட உட்கொள்ள முடியாமல் கடைவாயில் வழிந்தோடும் காலமும் வரும். என் வாழ்க்கையில் நான் மிக அதிக அளவு உணவு உட்கொண்ட நாட்களாக என் ராணுவப் பயிற்சிக் காலத்தைச் சொல்வேன்.

வீட்டு சாப்பாடு - 14

அப்போது எனக்கு வயது 20. அதிகாலையில் எழுந்து ஒரே ஒரு டீ குடித்துவிட்டு, ஓட ஆரம்பித்தால் எட்டு மணி வரைக்கும் ஓட்டம்தான். குளிக்க, காலை உணவுக்கு என ஒதுக்கப்படும் அரை மணி நேரத்தில், ரெண்டு பூரி, ஒரு அவித்த முட்டை ஒரு டீ... யானைப் பசிக்கு  சோளப்பொரியாய் கிடைக்கும். மீண்டும், லெஃப்ட் ரைட் போட்டு இதர பயிற்சிகள் முடித்து, நாக்பூர் வெயிலில் வதங்கி, கொலைப் பசியோடு திரும்பும் மதிய வேளையில்தான் கூடை கூடையாக மெஸ்ஸில் ரொட்டிகள் கொட்டிக்கிடக்கும். அதில், புரண்டு எழுவோம். 30 ரொட்டி என்பது என் சாதாரண அளவு. சிறப்பு சப்ஜிகள் அமையும் நாட்களில், 40 நோக்கியும் போவேன். நான்தானா அது என்று இந்த நாலு ரொட்டி நாட்களில் நினைத்துப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

‘மதராஸிகள் சோற்றைத்தான் வெட்டுவார்கள். ரொட்டி, சப்பாத்தின்னா பம்முவார்கள்’ என ஒரு சக பீகாரி வீரன் என் தன்மானத்தை உரசிப்பார்த்த கதையைச் சொன்னேன் அல்லவா?  இப்படி, உணர்வுகள் தூண்டப்பட்டு, தன்மானத்துக்காகச் சாப்பிடுவது சின்ன வயதிலேயே நமக்கு ஊட்டப்படும் விஷயம்தான்.

‘கூச்சப்படாம சாப்பிடுங்க. உங்க வீடு மாதிரி நினைச்சு சாப்பிடுங்க. இன்னிக்கு நீங்க சரியாவே சாப்பிடலியே. இது என்ன சாப்பாடுன்னு சாப்பிடுறீங்க. வீட்லயுமா அளவுச் சாப்பாடு?’ என்பதுபோன்ற வசனங்களால் வசப்படாத மனிதர் உண்டா? மனிதர் என்று பொதுவாகச் சொல்ல முடியவில்லை. பெண்களுக்கு இது பொருந்தாது. ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று சொல்லி, அவர்கள் வாயையும் வயிற்றையும் கட்டிப்போட்டுவிடுவார்கள்.

குழந்தைப்பருவம் ஒன்றுதான் அவர்களுக்கு நிறைய சாப்பிட வாய்ப்பளிக்கும் பருவம். நிறைய சாப்பிட்டுத் தொப்பை வந்துவிட்டால் மாப்பிள்ளைகளுக்குப் பிடிக்காது என்கிற அச்சம் ஊட்டப்பட்டுவிடும்.  கர்ப்ப காலத்திலோ கேட்கவே வேண்டாம். அதன் பிறகு, குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுக்கும் காலம் முழுவதும் குழந்தைக்கு எது ஒப்புக்கொள்ளும் எது ஒப்புக்கொள்ளாது என்று பயந்து பயந்து சாப்பிட வேண்டும். பிரசவம் ஆனதும் வயிறு ஊதிப்பருத்துவிடாமல் இருக்க, வயிற்றில் பெல்ட் கட்டுவது போன்ற பலவிதமான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சாப்பாட்டின் அளவை அதிகரிப்பது பசி மட்டுமல்ல. சாப்பாட்டின் ருசியும் ஒரு முக்கியக் காரணி. சாப்பிடும்போது நம்மோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகிற பிரியமான நபர்களும் இன்னொரு முக்கியக் காரணம். ‘உங்ககூடப் பேசிக்கிட்டே சாப்பிட்டதில் அளவே தெரியாமல், 10 இட்லி சாப்பிட்டுட்டேன் பாருங்க’ என்று சொல்லிக் கேட்டிருப்போம்.

‘கடுமையாக உழை. விருப்பம்போல ருசித்துச் சாப்பிடு’ என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. குறைவாகச் சாப்பிடுபவர்களைப் பார்த்து, ‘வயித்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்க. நல்லா சாப்பிடுங்க’ என்பது நம்ம ஊர்ப்பேச்சு. ‘குறை வயித்துக் காரனும் குத்துப்பட்ட வயித்துக் காரனும் தூங்க மாட்டான்’ என்பதும் ‘வகுறு நெறைஞ்சா, வெச்சு மூடத் தெரியாது’ என்பதும் எங்கள் கரிசல் வட்டாரத்து சொலவடைகள்.

வீட்டு சாப்பாடு - 14

சின்ன வயதில், எங்க வீட்டுப்பிள்ளை, நவராத்திரி, முரடன் முத்து போன்ற திரைப்படங்களில் வரும் சாப்பாட்டுக் காட்சிகளுக்காகவே எங்க பாய்ஸ் குரூப்ஸ் எல்லோரும் திரும்பத் திரும்ப அந்தப் படங்களுக்குப் போவோம். ஹோட்டலில், முரட்டு எம்.ஜி.ஆர் ஒரு டேபிள் நிறைய ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல் போய்விட, அதே டேபிளில் வந்து அமரும் அப்பாவி எம்.ஜி.ஆர் ரெண்டே இட்லி சாப்பிட்டுவிட்டு அனைத்து சாப்பாட்டுக்கும் பணம் கட்டும் காட்சி, முரட்டு எம்.ஜி.ஆர் சரோஜாதேவி வீட்டில் பெரிய டேபிள் நிறைய உணவுவகைகளை வெளுத்துவாங்குவது, ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில், சிவாஜி சாப்பாட்டு ராமனாக நடித்திருப்பதும், வாலிப விருந்து படத்தில் பாலையா ஒரு தட்டு நிறைய (எனக்குப் பிடித்த) பழைய சாதத்தைக் குவித்துவைத்து ‘உடம்புக்கு சரியில்லே... அதனாலே கொஞ்சூண்டு பழையது சாப்பிடறேன்’ என்று சொல்லிக்கொண்டே சாப்பிடும் காட்சியும், நவராத்திரி படத்தில் ரௌடி சிவாஜி, கோழியின் லெக் பீஸைக் கடித்துக் குதறுவதும் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத காட்சிகள். 

நிறைய சாப்பிடுகிற, வஞ்சகம் இல்லாத மனிதர்களுக்கு சரியான சாப்பாட்டுராமன் என்று ஏன் பேர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. கோதண்ட ராமன், கல்யாண ராமன், சீதா ராமன் என்பதுபோல ஒரு ஃப்ளோவில் சாப்பாட்டு ராமன் என்று வந்திருக்கலாம். வஞ்சகம் இல்லாமல் சாப்பிடுகிற நாங்கள் ஏன் பொது சமூகத்தால் இப்படி ‘தின்னே தீர்க்கிறோம்’ என்று அவமானப்படுத்தப்படுகிறோம். சாப்பாட்டு ராமன் என்று எகத்தாளமாகப் பேசிப் புண்படுத்தப்படுகிறோம்? இதைத் தட்டிக்கேட்க எந்த மனித உரிமை அமைப்பும் நாட்டில் இல்லையா?

அந்தக் காலத்தில் ஹோட்டல்களில் கேட்க கேட்கச் சாப்பாடு வைப்பார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்னும் கதையில் வருவது போன்ற மெஸ்கள் உண்மையிலேயே இருந்தன. லாபத்தின் அளவை அதிகரிக்க நினைத்தபோது, சாப்பாட்டின் அளவைக் குறைத்தார்கள். அளவுச் சாப்பாடு என்னும் புதிய கருத்தாக்கத்தைக் கடைக்காரர்கள் கண்டுபிடித்தார்கள். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாரதி சொன்னது அளவு சாப்பாட்டை அல்ல. வயித்துக்கு நல்லா சாப்பிடுங்க என்று வருகிற பேச்சு வழக்கிலிருந்துதான் பாரதி ‘வயிற்றுக்குச் சோறிடுக’ என்றிருப்பான்.

‘நொறுங்கத் தின்னா நூறு வயசு’ என்பதை மனதில்வைத்து, மென்று தின்றால் போதும். நிறைய சாப்பிடுவது குறித்து நிறையவே பேசலாம் என்றாலும் குறைவாகச் சாப்பிடுவதன் அவசியம் பற்றி நான் அறியாதவன் அல்ல. எழுத்தாளர் போப்பு எழுதிய ‘டப்பா உணவும் பட்டினி வயிறுகளும்’ என்கிற புத்தகத்தில் வரும் ஒரு வரியைச் சொல்லி முடித்தால்தான் ஒருபக்கச் சார்பாக இல்லாமல் இந்தப் பகுதி சமநிலை அடையும். அந்த வரி:

‘உங்கள் தேவைக்கு அதிகமாகத் தின்று உங்கள் தொண்டைக்குழி வரை நிரம்பியிருக்கும் ஒவ்வொரு கவள உணவும், உலகெங்கும் பட்டினியாகக் கிடக்கும் கோடானகோடி ஏழை மக்களின் ஏழைக் குழந்தைகளின் வயிற்றிலிருந்து திருடிய உணவாகும்’.

வீட்டு சாப்பாடு - 14

காய்கறி தோசை

காக்கா முட்டை படத்தில் பாட்டி தோசையில் பீட்சா சுடும் காட்சியைப் பார்த்ததும், எனக்கு என் தம்பி மணி சேலத்தில் சுட்டுக்கொடுத்த, வெஜிடபிள் தோசைதான் நினைவுக்கு வந்தது. தம்பியிடம் குறிப்பு கேட்டு, அதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி, நான் எங்கள் வீட்டில் சுட்ட தோசை இது:

முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். ஊறிய பருப்பை உலரவைத்து, எண்ணெயில் லேசாகப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் போல, வீட்டில் இருக்கும் துருவி எடுக்க வாய்ப்புள்ள காய்கறிகளைத் துருவி வைத்துக்கொள்ளவும். தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். கொழுப்புச்சத்துக்குச் சிறந்த மருந்தெனச் சொல்லப்படும் பெரிய குடமிளகாயையும்கூட நறுக்கி லேசாக வதக்கிக்கொள்ளவும்.

தோசை மாவைக் கெட்டியாக வைத்துக்கொண்டு, தோசை வார்த்து, அதன் மேலே வதக்கிய எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துத் தூவி, தோசைக்கரண்டியால் மாவுக்குள் அழுத்திவிட்டு மிதமான சூட்டில் நன்றாக வேகவைத்து எடுத்தால், நம்ம ஆரோக்கிய தோசை தயார். சட்னியே தேவை இல்லை.

- சமைப்பேன்
படங்கள்: ர.சதானந்த், தி.கெளதீஷ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு