Published:Updated:

வீட்டு சாப்பாடு - 15

வீட்டு சாப்பாடு - 15

வீட்டு சாப்பாடு - 15

‘தேடிச்சோறு நிதம் தின்று’ எனும் பாரதியின் வார்த்தைகளை நான் நினைக்காத நாள் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதேதோ பொது வேலைகளுக்காக பல ஊர்களில், தெருக்களில் அலையும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டதால், வாரத்தில் நான்கு நாட்கள்கூட எமக்கு வீட்டுச் சாப்பாடு வாய்த்தது இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கூட்டமோ போராட்டமோ முடிந்த பின், நல்ல சோறு கிடைக்கும். கடையைத் தேடி அலையும்போதெல்லாம், ‘தேடிச்சோறு நிதம் தின்று’ எனும் பாரதியின் வரிகள் வந்து நக்கலாகச் சிரிக்கும்.

வீட்டு சாப்பாடு - 15

வறுமை காரணமாகவோ பயணம் காரணமாகவோ வீட்டு சாப்பாடு கிட்டாத பேர்களுக்கென அன்னசத்திரம் ஆயிரம் இருந்ததைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு கோயில்களில் அடியார்க்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை, ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ எனும் அப்பரின் தேவார வரிகளில் அறியலாம் என ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் அறிஞர் தொ.பரமசிவன் சொல்கிறார். விஜயநகரப் பேரரசு காலம் தொடங்கி தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் பரவலாகின எனக் குறிப்பிடுகிறார்.

வணிக நிமித்தம் பொருள் தேடி நில வழியும் கடல் வழியும் சென்ற முன்னோடிச் சமூகம், நம் தமிழ்ச் சமூகம். பின்னர், பிழைப்பு தேடி பிஜித் தீவுகளுக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கும் கப்பலேறியதும் நம் முன்னோடிகள்தாம். ‘சயாம் மரண ரயில்’ நாவலும் ‘எரியும் பனிக்காடு’ நாவலும் அப்படிப் போன மக்கள் பட்ட அவதிகளைப் பேசுகின்றன. நமக்கு அப்படி ஒரு அவதியும் இல்லை. நல்லாத் தின்னுட்டுத்தான் பொதுச்சேவை.

வீட்டு சாப்பாடு - 15

சின்ன வயதில் ஹோட்டல் சாப்பாடு பற்றி எங்கள் ஊர்ப் பெரிசுகள் கட்டிவிட்ட கதைகளைக் கேட்டு அவற்றை அப்படியே நம்பி, அதன் மது வெறுப்பும் அச்சமும் கொண்டிருந்தோம். பொங்கின சோத்துக்குள்ளே சுண்ணாம்பு ஆவி பிடிக்கிறதாலேதான் ஹோட்டல் சோறு இப்படி வெள்ளை வெளேர்னு இருக்கு என்பது ஒரு கதை. கொஞ்சம்போல சாப்பிட்டாலே வயிறு நிறையிற மாதிரி நமக்குத் தெரியறதுக்காக அவன் சோத்துல என்னமோ சேக்கான் என்பது இன்னொன்று. மண்பானையில் பொங்காமல் சோத்தை அலுமினியப் பானையிலே பொங்குறான். அதனாலே ஹோட்டல்ல சாப்பிட்டா வயித்துப்புண், வாய்ப்புண் வரும் என்பது இன்னொன்று. எங்கள் தெருவில் எங்க கூடப் படிச்ச கட்டாரி வேலுச்சாமிக்கு வாய்ப்புண் இருந்ததும் அவன் சாத்தூரில் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டிருந்ததும் இந்தக் கதைக்கு ரத்த சாட்சியாக இருந்தன.

அந்தக் காலத்தில், கிராமங்களில் பெரும்பாலும் கைக்குத்தல் அரிசிதான். ஆகவே, வெள்ளைவெளேர் என்கிற அரிசியை நாங்கள் கண்ணால் பார்த்தது இல்லை. நகர்ப்புறத்தில் அப்போதே ரைஸ் மில்கள் வந்துவிட்டதால் மெஷினில் தீட்டிய அரிசி வெள்ளையாக வந்திருக்க வேண்டும். என்னுடைய முதல் ஹோட்டல் போஜனமானது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. சாத்தூரில் எங்கள் செவன்த் ‘ஏ’ பையன்கள் ஒரு குரூப்பாகப் போய் ஸ்காலர்ஷிப் விண்ணப்பத்தில் தாசில்தாரிடம் கையெழுத்து வாங்கினோம். அப்படியே ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிட்டோம். லெமன் சாதம் அப்போது நாலணா. மனதில் பயம் இருந்ததால் வெள்ளைச்சோறு சாப்பிட எங்கள் யாருக்கும் தைரியம் இல்லை. மஞ்சள் சோறு சாப்பிட்டோம். வெந்த சோற்றை மறுபடியும் வறுத்துப் பாழாக்கி ஃப்ரைடு ரைஸாக்கிச் சாப்பிடும் காலமும் ஒன்று வரும் என்று அப்போது யாருக்குத் தெரியும்?

வீட்டு சாப்பாடு - 15

ஊர் சுற்றுகிறவர்களில் பலர் எச்சரிக்கையாக, ஊரில் ஆபத்து இல்லாத சாப்பாட்டுக் கடை தேடிச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சந்துகளில் மறைந்திருக்கும் அன்னை மெஸ், சந்திரன் மெஸ் போன்ற கடைகளுக்கும், மண் பானை சமையல் கிடைக்கும் என்கிற போர்டைப் பார்த்து, அந்தக் கடைகளுக்கும் போகிறவர்கள் உள்ளனர். இன்னும் சிலர் ஹோட்டலுக்குப் போனால், வெறும் ரசம், மோர் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு, மசாலாக்களிலிருந்து தப்புவதையும் பார்த்திருக்கிறேன். ஹோட்டல்களில் நுழைந்தாலே அந்த சாம்பாரின் வாசனை மூஞ்சியில் அடிக்கும். அப்படி வாசனை அடிக்காத கடை பார்த்துப் போவோரும் உண்டு.

தமிழ்நாடெங்கும் சுற்றுகிற நாங்கள் பூகோளரீதியாக ஒரு கணக்கு வைத்திருக்கிறோம். குமரி மாவட்டத்தில் சைவச் சாப்பாடு சாப்பிட ஒரு நல்ல கடை கிடையாது. மீன் சாப்பாடு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. திருநெல்வேலியில் ஓரிரு நல்ல கடைகள் உண்டு. அதை விட்டால் சைவச் சாப்பாட்டுக்கு மதுரைதான். இடையில் வறண்ட நிலப்பரப்புத்தான். உள்ளூர்க்காரர்கள் ஏன் எங்க ஊர் பர்மாக்கடைக்கு என்னவாம் என்பதுபோல கேள்விகளை எழுப்பலாம். ஆனாலும், எங்க லெவல்ல வச்சு பாக்கணும்ல. அப்புறம் கிழக்கே போனால், திருப்பத்துரில் ஒரு கடை உண்டு. அதை விட்டால் தஞ்சாவூர்தான். புதுக்கோட்டையில் முட்டை மாஸ் எனப்படும் ஒரு அயிட்டத்துக்காகப் பஸ் விட்டு இறங்கலாம். தஞ்சாவூரிலும் ஒன்றிரண்டு கடைகள்தான். நாகப்பட்டினம் போனால், மீன் குழம்பு, மீன் வகைகளை வெட்டலாம். மரக்கறிக்காரர்களுக்குத் திண்டாட்டம்தான்.

மதுரையிலிருந்து வடக்கே போனால், திருச்சியில் சில நல்ல கடைகள் உண்டு. அதைவிட்டால், சென்னைதான். மேற்கு மண்டலத்தில் திருப்பூரிலும் கோவையிலும் சில பல கடைகள் உண்டு. கொங்கு மண்டலத்தில் கோதுமை உப்புமாவும் தயிரும் போடுவார்கள். எங்கள் கரிசல்காட்டில் உப்புமா போட்டால், அந்தக் குடும்பத்தைக் கேவலமாகப் பேசும் பழக்கம் உண்டு. ‘போயும் போயும் ஒரு உப்புமாவைப் போட்டு அனுப்பிட்டா’ என்பார்கள். கோவை வட்டாரம் உப்புமாவைக் கொண்டாடும் பகுதி. தர்மபுரிப் பக்கம் நல்ல கூழ் கிடைக்கும். ஓசூரில் சில நல்ல உணவகங்கள் உள்ளன.

வீட்டு சாப்பாடு - 15

மக்களைக் கவர்ந்திழுக்க ‘சரவணபவன் – உயர்தர சைவ உணவகம்’ என்று போர்டு வைப்பது தமிழகம் முழுவதும் பரவியுள்ள கலாச்சாரம். அதைவிட்டால் ‘ஆரியபவன் – ஹை கிளாஸ் வெஜிடேரியன்’ என்று போர்டு வைக்கிறார்கள். நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி ரெட்டியார் சமூகத்து மக்கள்தான் பெரும்பாலான ஊர்களில் ‘ஆரிய பவன்’ நடத்துபவர்கள். அந்தக் கடைகளில் நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால், அந்தப் பேரில் ஏமாற்றுபவர்களும் உள்ளனர். திருநெல்வேலியில் ‘சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா’ புகழ் பெற்றதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ என்ற பேரில் 22 கடைகள் திறந்து வெளியூர் மக்களைக் குழப்புவது நல்ல உதாரணம். நான் தேர்வு செய்து சோறு தின்கிற ரகம் இல்லை. என்ன கிடைத்தாலும் போட்டுத் தாக்குகிற டைப். பசி ருசி அறியாது என்கிற பழமொழியைப் பற்றிக்கொண்டு, எந்த ஊரிலும் எந்தத் தெருவிலும் எந்தக் கடையிலும் சாப்பிடுவேன். ஏதாவது ஒரு அயிட்டமாவது நல்லா  இருக்காதா எனும் நம்பிக்கையில். பல கடைகளில் டம்ளரில் வைத்த தண்ணீர் மட்டும்தான் நல்லா இருக்கும். எதுவுமே வாயில் வைக்க முடியாமல்,  எப்படித்தான் சமைத்தார்களோ என்கிற வியப்பிலேயே சாப்பிட்டுவிடுவது வழக்கம். பஸ் பிடிக்கிற அவசரத்தில் நாக்கு மரத்துச் சாப்பிடும் மக்களே அந்தக் கடைகளுக்கு அதிகமாகவருவார்கள். அவசர மனநிலையை அவர்கள் சாதகமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். தங்க நாற்கரச்சாலைகள் வந்த பிறகு இன்னும் கொடுமை அதிகமாகிவிட்டது. இந்தக் கடைகளுக்கு கஸ்டமர்களை வரவழைக்கப் பல டெக்னிக் களைக் கடைப்பிடிப்பார்கள். அழைத்துவரும் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு எல்லாம் இலவசம்.

இப்போது ஒருசில ஊர்களில் இயற்கை உணவுக் கடைகள் ஒன்றிரண்டு முளைத்துள்ளன. ஆரோக்கியமான உணவு. ஆபத்து இல்லாத உணவு. ஆனாலும் காரசாரம் இல்
லாமல் மந்தமான உணர்வை ஏற்படுத்தும் அவற்றை எப்படித்தான் சாப்பிடுவது? அந்த உணவு வகைகளை சுவாரஸ்யப்படுத்த அவர்கள் ஏதாவது செய்தால் நல்லது.

- சமைப்பேன்

வீட்டு சாப்பாடு - 15

மொச்சிக்காய்

பார்க்க அவரைக்காய் போலவே இருக்கும் மொச்சிக்காய், தென் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதை அரைக் கிலோ உரித்து, உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு துண்டு தேங்காய், தேவையான அளவு பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, சிறிது இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தப்பருப்பு போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிப் பொன்னிறமானதும் அரைத்த மசாலாவையும் போட்டு லேசாக வதக்கி,  உரித்த மொச்சிக்காய் விதைகளைக் கொட்டி தேவையான அளவு உப்பும் தண்ணீரும் சேர்த்து, மூடிவைக்கவும். 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஒரு கிளறு கிளறிப் பரிமாறலாம். சோற்றுக்குத் துணையாக ஒரு காய் போலவும் பயன்படுத்தலாம். அப்படியேவும் சாப்பிடலாம். விதைகளைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொண்டு மசாலாவைத் தனியாக வதக்கி, பிறகு இரண்டையும் கலப்போரும் உண்டு.

படங்கள்: தே.தீட்ஷித்,
       தி.கௌதீஸ்
இடம்: சுமங்கலி மஹால், திருச்சி

ஆரோக்யம் தொடர்பான டிப்ஸ்களை இன்னும் படிக்க இங்கே க்ளிக் செய்க.!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு