Published:Updated:

டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, பாக்கெட்டோடு கொறிப்பது...`ஓவர் ஈட்டிங்'கை குறைக்க 11 எளிய வழிகள்!

பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது மிகவும் கடினம், குறிப்பாக சாப்பாடு விஷயத்தில்.

உடல்பருமன் பிரச்னைக்கு மருத்துவ ரீதியாகப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உணவின் அளவை அதிகமாகச் சாப்பிடுவதும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. உடல்பருமன் சர்க்கரைநோய், இதயநோய் போன்ற தீவிர நோய்களை உருவாக்கும் ஆபத்து உள்ளது. அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை மருத்துவச் சொற்களில் `குறைபாடு' என்றே குறிப்பிடுகின்றனர். உணவை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியதும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம்தான். உணவின் அளவை சரியாக எடுத்துக்கொள்வதற்கான 11 எளிய வழிமுறைகள்:

2
overeating

கவனச்சிதறல் வேண்டாம்!

கம்ப்யூட்டர், மொபைல், டிவி ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுதான் அதிகமாகச் சாப்பிடுவதற்கான பொதுவான காரணமாக இருக்கிறது. இவ்வாறான கவனச்சிதறல் அந்த நேரத்தில் அதிக உணவை சாப்பிடுவதோடு, அடுத்தடுத்த வேளை உணவுகளையும் அதிகமான அளவில் எடுத்துக்கொள்ள காரணமாக அமைகிறது என்று ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அதனால் சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.

3
overeating

`டிரிக்கர்' உணவைக் கண்டுபிடியுங்கள்!

உங்களை அதிகம் சாப்பிடத் தூண்டும் ஆரோக்கியமில்லாத உணவு வகைகள் எவை என்பதை முதலில் கண்டறியுங்கள். அவற்றிடமிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும். உதாரணமாக, ஐஸ்க்ரீம் அதிகமாகச் சாப்பிடப் பிடிக்கும் என்றால் அதை வாங்கி வீட்டில் ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பதைத் தவிர்க்கலாம். ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவதில்லை என்றாலும் வாங்கிச் சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற நொறுக்குத் தீனிகளை போகும்போதும் வரும்போதும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டால்கூட, பிரச்னைகள் வரலாம்.

4
overeating

டப்பா வேண்டாம்!

முழு சிப்ஸ் பாக்கெட் அல்லது ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம் டப்பா போன்றவற்றைக் கையில் வைத்துச் சாப்பிடாதீர்கள். இந்தப் பழக்கம் கையிலிருப்பது காலியாகும்வரை சாப்பிடச் சொல்லும். எப்போதும் சிறிய கிண்ணம் அல்லது தட்டில் கொஞ்சமாக எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் அதிக கலோரிகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.

5
overeating

மனஅழுத்தத்தைக் குறையுங்கள்!

மனஅழுத்தத்தில் இருக்கும்போது அதிகமாகச் சாப்பிடத் தோன்றுமாம். அதன் தொடர்ச்சியாக உடல் பருமனும் அதிகரிக்கும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதனால் அன்றாட நாளை மனஅழுத்தம் இல்லாமல் இலகுவாக நகர்த்த, யோகா, தியானம், செடி வளர்த்தல், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.

6
overeating

சத்துள்ள உணவுகள்!

நார்ச்சத்து அதிகம் காணப்படும் பச்சை நிறைக் காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் பழங்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது நீண்ட நேரத்துக்குப் பசியெடுக்காத நிறைவைக் கொடுக்கும். இதனால் உணவு வேளைக்கு இடையிடையே தேவையில்லாத நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.

7
overeating

வேளா வேளைக்குச் சாப்பாடு!

எடை குறைக்கிறேன் பேர்வழி என்று சிலர் சில வேளைகளில் உணவுகளைத் தவிர்ப்பார்கள். உணவைத் தவிர்ப்பதன் மூலம் அதிக கலோரிகள் சாப்பிடுவது குறையும் என்ற தவறான புரிந்துணர்வு அது. சில வேளைகளில் உணவைத் தவிர்ப்பதால் பசி அதிகம் தூண்டப்பட்டு, அடுத்த வேளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் பசி உணர்வையும், உட்கொள்ளும் ஒட்டுமொத்த உணவின் அளவையும் குறைக்க முடியும். அதனால் வேளை தவறாமல் சாப்பிட்டுவிட வேண்டும்.

8
overeating

உங்களை நீங்களே கண்காணியுங்கள்!

ஒரு மொபைல் ஆப் அல்லது டைரியில் உங்கள் உணவுப்பழக்கம் பற்றி குறித்து வையுங்கள். எந்தெந்த நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுகிறீர்கள், எந்த உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறீர்கள் உள்ளிட்ட சாப்பிடும் பழக்கம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்த விவரங்களைக் குறிப்பிட்ட நாளைக்கொருமுறை ஆராய்ந்து அதில் எந்தப் பழக்கத்தையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள்.

9
overeating

ஒரே அலைவரிசை!

ஒருவரின் உணவுப்பழக்கம் தன்னுடன் சேர்ந்து சாப்பிடுபவரிடம் தாக்கத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உதாரணமாக, நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அருகில் இருப்பவர் அப்போதுதான் குலோப் ஜாமூனை வாங்கி ரசித்துச் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதைப் பார்க்கும் நமக்கும் சபலம் ஏற்பட்டு அதையே வாங்கிச் சாப்பிடுவோம். அதனால் அதிகமாகச் சாப்பிடக் கூடாது என்ற மனநிலையில் இருக்கும்போது அதே அலைவரிசையில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். இல்லையென்றால் சோலோவாக ஆக்ஷனில் இறங்கிவிடுங்கள்.

10
overeating

நிதானம் பிரதானம்!

ரயில் இன்ஜினுக்கு கரி அள்ளிப்போடுவதைப்போல அவசர அவசரமாக வாயில் உணவை அள்ளிப்போட்டால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிடும் நிலை ஏற்படலாம். அது உடல்பருமனுக்கு வழிவகுக்கலாம். அதனால் சற்று அவகாசம் எடுத்துக்கொண்டு உணவை நன்கு மென்று விழுங்கினால் சரியான அளவு சாப்பிடுவதோடு, வயிறு நிறைந்த திருப்தியும் அதிகரிக்கும்.

11
overeating

`பிளானிங்' முக்கியம்!

பசியெடுக்கும்போது கைவசம் ஏதாவது சாப்பிட இல்லையென்றால் அந்த நேரம் ஆரோக்கியமற்ற உணவையோ அதிக அளவிலான உணவையோ சாப்பிட நேரும். குறிப்பாகப் பசியான நேரத்தில் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும்போது இந்தத் தவறு நிச்சயம் நேரும். அதனால் கைவசம் எப்போதும் ஆரோக்கியமான தின்பண்டங்கள், எளிதில் தயார் செய்யக்கூடிய உணவுகளை வைத்துக்கொள்வது நல்லது.

12
overeating

பழையன கழிதல்!

பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது மிகவும் கடினம், குறிப்பாக சாப்பாடு விஷயத்தில். உதாரணமாக, `ராத்திரி 9 மணிக்கு இந்த சீரியலைப் பார்த்துட்டேதான் சாப்பிடுவேன்', 'மதியம் சாப்பிட்டதும் வாயில ஒரு சாக்லேட் போடணும்' என்பன போன்ற பழக்கவழக்கங்களை மெள்ள மெள்ள மாற்றிக்கொள்ள வேண்டும். டிவி முன்னால் சாப்பிடுவதற்குப் பதில் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிடுவது, சாக்லேட்டுக்குப் பதில் சிறிய துண்டு கடலைமிட்டாய் என மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சிறிய மாறுதல்கள் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன? #DoubtOfCommonMan
அடுத்த கட்டுரைக்கு