வீட்டு சாப்பாடு - 19

ழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் ஒரு சிறுகதையில், ஒரு கரிசல் கிராமத்திலிருந்து பள்ளி விடுமுறைக்காக இன்னொரு கரிசல் கிராமத்தில் இருக்கும் தாய் மாமன் வீட்டுக்குப் போவார்கள் இரு பெண் குழந்தைகள். இரண்டு வீடுகளிலும் வறுமை பாய் விரித்துப்படுத்திருக்கும் நிலை. பிள்ளைகள், மாமன் வீட்டுக்குப் போனால் நெல்லுச்சோறும் தின்பண்டமும் கிடைக்கும் என நம்பிக்கொண்டு, குதூகலத்துடன் கிளம்புவார்கள்.

வீட்டு சாப்பாடு - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், ஒரு மாத விடுமுறையும் எவ்விதத் தின்பண்டமும் கிட்டாமலே கழியும். கடைசி நம்பிக்கையாக ஊருக்குத் திரும்பும் நாளில், பக்கத்து நகரத்துக்குச் சென்று பஸ் ஏற்றிவிடும்போது, மாமன் சீனிப்பலகாரம் வாங்கித்தந்து பஸ் ஏற்றுவான் எனும் எதிர்பார்ப்புடன் குழந்தைகள் வெயிலைக் குடையாகப் பிடித்து, டவுனுக்கு நடந்து வருவார்கள். 

ஒவ்வொரு  மிட்டாய் கடையாகக் கடந்து போய்க்கொண்டிருக்கும். மாமன், கடைப்பக்கம் தலையைக்கூடத் திருப்பாமல், நேரே பார்த்தபடி, குழந்தைகளின் கைகளைப் பிடித்தபடி பஸ் நிலையம் நோக்கி, வேகமாக நடந்துகொண்டிருப்பான். குழந்தைகள் சாலையைப் பார்க்காமல், கடந்துபோகும் மிட்டாய் கடைகளைப் பார்த்தபடியே, மாமன் இழுப்புக்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டு சாப்பாடு - 19

கடைசி மிட்டாய் கடையில் வாங்கிக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும், கடைசிக் கடையைத் தாண்டும்போது சிதைந்துபோகும். குழந்தைகள் இருவரும் கடைசிக் கடையைத் தாண்டும்போது ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிடுவார்கள். கையில் காசு இல்லாத மாமன், குழந்தைகளைத் தேற்ற எந்த வார்த்தையும் இல்லாமல் குழந்தைகள் அறியாவண்ணம் அழுதபடி நடந்துகொண்டிருப்பான். ஓர் ஆழமான மௌனப்படம்போல இந்தக் காட்சி, வாசிக்கும் எவர் மனதையும் கரைத்துவிடும்.

என்னுடைய ‘பாவனைகள்’ என்கிற சிறுகதை தின்பண்டம் கிடைக்காத குழந்தைகள் பற்றியதுதான். கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் கறுத்தடையான் வரை, எங்கள் கரிசல்காட்டு எழுத்தாளர்கள் எல்லோருமே ஒரு கதையாவது எம் குழந்தைகளின் தின்பண்ட ஏக்கம் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

வீட்டு சாப்பாடு - 19

நொறுக்குத் தீனி அல்லது தின்பண்டங்கள் நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கின்றன. நான் சிறுவனாக எங்கள் கரிசல் கிராமமான நெ.மேட்டுப்பட்டியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில், இட்லி, தோசை இரண்டும்தான் முக்கியமான தின்பண்டங்களாக இருந்தன. அதுவே, ஆண்டுக்கு இரண்டு மூன்று நாட்களுக்குத்தான் கிடைக்கும். எங்கள் வீடு ஒப்பீட்டளவில் கொஞ்சம் வசதியான வீடு. பணியாரம் சுடுவார்கள். பணியாரம் என்றாலே, இனிப்புப் பணியாரம் மட்டும்தான். இப்போது, பல கடைகளில் இனிப்பும் காரமுமான பணியாரங்களைச் சுட்டுத்தருவதைப் பார்க்கிறோம். 

கரிசல் காட்டின், அறிவிக்கப்படாத பஞ்ச காலத்துப் பலகாரமாக எங்கள் வீடுகளில் கிடைப்பது ‘அவியரிசி’. அரிசி ஊறவைக்கப்பட்டு, அதில் கருப்பட்டி கலந்து, தண்ணீர் ஊற்றி அரைவேக்காடாக வேகவைத்து எங்களுக்குத் தரப்படும். கரிசல் தேசத்தின் தேசியப் பண்டம் அது. கம்பரிசியை ஊறவைத்து, முளைகட்டி மறுநாள், துணியை அவிழ்த்து அதையும் பண்டமாகத் தின்போம். எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் நென்மேனி எனும் ஊர் இருக்கிறது. அங்குதான் நாச்சியாரம்மா சேவுக்கடை என்று அழைக்கப்பட்ட தின்பண்டக் கடை இருந்தது. தலையாரியாக வேலை பார்த்த எங்கள் தாத்தா, பணி நிமித்தம் அடிக்கடி அங்கு போய் வரும்போது், எங்களுக்குப் பண்டமாக ஒரு முறுக்கு மாலையை வாங்கி வருவார்.

வீட்டு சாப்பாடு - 19

50 முறுக்குகளை அதன் ஓட்டைகளுக்குள் சணல் கயிற்றை நுழைத்து, பெரிய மாலைபோல  கட்டிக் கொடுத்துவிடுவார்கள். அதை, ஒரு முறுக்குக்கூட உடையாமல் எங்கள் தாத்தா கொண்டுவந்து, ஆளுக்கு 10 முறுக்காக எங்களுக்குப் பங்கு வைத்துக்கொடுப்பார்.

பாடம் படிக்கத் தனியாக உட்கார்ந்து பாராயணம் செய்வதுபோல ஓர் அரை மணி நேரம் முறுக்குக்காக ஒதுக்கி, நானும் தம்பி கோணங்கியும் 10 முறுக்குகளையும் தின்று முடித்துவிட்டு வாய் எல்லாம் எண்ணெயாக வெளியே வருவோம்.

வீட்டில் எப்போதாவது உளுந்த வடை சுடுவார்கள். அன்றைக்கு முழுவதும் அடுப்படியிலேயே நிற்போம். சுட்டுப்போடப் போடத் தின்றுகொண்டே இருப்போம். இத்தனை வடை என்கிற கணக்கெல்லாம் கிடையாது.

வீட்டு சாப்பாடு - 19

எங்கள் அம்மா வீடு இருந்த நாகலாபுரத்துக்கு லீவுக்கு நாங்கள் போவோம். இந்த வீடு வேறொரு நாகரிகத்தில் இருந்தது. அம்மாவின் அப்பாவான மதுரகவி பாஸ்கரதாஸ், அந்தக் காலத்தில் புகழ்மிக்க நாடக ஆசிரியர். பால கான சபா நடத்தியவர். முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’க்கு பாடல்கள் எழுதியவர். ஆளுக்கு 50 வடைகள்கூட வாங்கித்தரும் வாய்ப்பும் வசதியும் இருந்த வீடுதான். ஆனாலும், எங்கள் அம்மாச்சி ஒண்டியம்மாள் நாலு பிள்ளைகள் இருந்தால், எண்ணி நாலு பஜ்ஜி வாங்கிவரச் சொல்லி, ஆளுக்கு ஒரு பஜ்ஜியை ஒரு சிறிய தட்டில் வைத்து, சட்னியும் வைத்து கொடுப்பார்கள். எங்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். ஒரு பஜ்ஜி என்கிற அந்த ஏற்பாட்டால் கோபமடைந்து, நாங்கள் எங்கள் எதிர்ப்புஉணர்வைக் காட்ட காபி வேண்டாம் என்று மறுப்போம்.

வீட்டு சாப்பாடு - 19

கரிசல் காட்டின் மிக முக்கியமான தின்பண்டமாக உருவானது சேவு. காராச்சேவு என்று சொன்னால்தான், வெளி மாவட்டங்களுக்குப் புரிகிறது.கடலை மாவில் செய்யப்படும் இந்தப் பண்டம் சாத்தூரில் உள்ள சண்முக நாடார் கடையில்தான் தனித்த பக்குவத்தோடு தயாரிக்கப்படுகிறது. சாத்தூர் சேவு என அறியப்படுவது இந்தக் கடையின் சேவுதான். சங்க காலத்தில் கள் மாந்தி, மக்கள் களித்திருந்த்து போல, நாங்கள் எப்போது சாத்தூரைக் கடந்துபோனாலும்  சண்முக நாடார் கடைச் சேவை வாங்கி, கண் மூடி ருசித்துச் சாப்பிட்டு மயங்குவது வழக்கம் அந்தக் கடையில் சேவு மாஸ்டரை எங்கள் த.மு.எ.க.ச கலை இரவு மேடைக்கு அழைத்துவந்து, ‘சாத்தூரின் நாயகன்’ என்று பாராட்டிக் கௌரவம் செய்தோம்.

இன்னொரு கரிசல் நகரமான கோவில்பட்டியில் கடலை மிட்டாய். கடலை மிட்டாய்களைவிட, சதுரமாக வெட்டியதுபோக, ஓரத்தில் வெட்டித் தள்ளப்படும் உதிரிக்கடலை மிட்டாய்தான் இப்போது பிரபலம். பிற்காலத்தில் நான் திருநெல்வேலியில் வாழப்போனபோது எல்லோரும் கொண்டாடும் அல்வா, எனக்குப் பிடிக்காமல் போனது. சேவும் முறுக்கும் தின்ற வாய், அல்வாவை இயல்பாக நிராகரித்தது. ஆனால், பாளையங்கோட்டையில் கிடைக்கும் அன்னபூர்ணா தேங்காய்ப்பால் முறுக்கு என்னை இழுத்துக்கொண்டது.அந்த முறுக்கு, பாக்கெட்டில்தான் கிடைக்கும். பல பாக்கெட்டுகளை ஒரே நாளில் காலி செய்யும் அளவுக்கு அதன் மீது சில ஆண்டுகள் பைத்தியமாகிக்கிடந்தேன்.

வீட்டு சாப்பாடு - 19

சிவகாசியில் இருந்து என் நண்பர் பேராசிரியர் சசிதரன், வறுத்த பாசிப்பயறு வாங்கிவந்தார். ரயிலில் அவரோடு சேர்ந்து புனே சென்றபோது, அதை அறிமுகம் செய்தார். வேலாயுத நாடார் கடை எனப்படும் நிறுவனம் இன்றைக்கும் சிவகாசியில் அதைத் தயாரித்து விற்கிறது.எத்தனையோ விதமான தின்பண்டங்கள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டிருந்தாலும், ‘சாத்தூர் சேவு’ போல என்றென்றும் என்னை ஆக்கிரமித்த பண்டம் வேறு இல்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் நொறுக்குத்தீனி அத்தியாயம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களில், சாத்தூர் சேவின் மீதான ஏக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

- சமைப்பேன்

படங்கள்: எல்.ராஜேந்திரன், தே.தீட்ஷித்

ஓட்ஸ் கஞ்சி

வீட்டு சாப்பாடு - 19

ப்போதெல்லாம் எடை குறைப்பதற்காக, ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள். ஓட்ஸ் தேவை இல்லை, நம் நாட்டு சிறுதானியங்களைக்கொண்டு கஞ்சி தயாரித்துக்குடித்தாலே போதும் என மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார். ஓட்ஸ் குடித்துப் பழக்கமாகிப் போனவர்களுக்காக இதை எழுதுகிறேன். எனக்கு ஞாநியின் நண்பர், எழுத்தாளர் அ.பத்மாதான் முதன்முதலாக ஓட்ஸ் கஞ்சியை அறிமுகம் செய்தார். அதை பால் விட்டும் குடிக்கலாம். மோர் விட்டும் குடிக்கலாம் என அறிமுகம் செய்தார். மூணு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் இரண்டு கரண்டி (குழம்புக்கரண்டி) ஓட்ஸ் போட்டுக் கிண்டிக்கொண்டே இருக்கவும். அதிகபட்சம், 10 நிமிடங்கள் போதும். இறக்கி, உப்பிட்டு மோர்விட்டுக் குடிக்கலாம். காலப்போக்கில் நான் அதில் வெங்காயம், பூண்டு, தக்காளி, வேகவைத்த காய்கறிகள் எல்லாம் போட்டு, ஓட்ஸ்தன்மையைக் குறைத்து, காய்கறித்தன்மையை அதிகரித்துக் குடித்தேன். சில சமயங்களில், அவசரத்துக்கு வீட்டில் மற்றவர்களுக்காகத் தயாரிக்கப்படும் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவற்றை, ஓட்ஸ் கஞ்சியுடன் கலந்து குடிப்பேன். எப்படியாவது உணவை சுவாரஸ்யப்படுத்திக்கொண்டு முன்செல்ல வேண்டும் அல்லவா?