Published:Updated:

வீட்டு சாப்பாடு - 20

வீட்டு சாப்பாடு - 20

பிரீமியம் ஸ்டோரி
வீட்டு சாப்பாடு - 20

“கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார்’ என பாரதி பாடியது முதல் ‘அவன் ஒரு கஞ்சிக்குச் செத்த பய’ என்கிற உள்ளூர் வசவு வர, தமிழர் வாழ்வில் கஞ்சிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ‘கட்டியாத் திங்கிறதை  கரைச்சுக் குடிச்சாப்போச்சு’, ‘கஞ்சிக்கு லாட்டரி... கைக்கு பேட்டரியா?’... இப்படி கஞ்சி குறித்த சொலவடைகளுக்கும் தாராளம்... ஏராளம்.

வீட்டு சாப்பாடு - 20

‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்று பாரதி கொதித்ததில் ஒரு வரலாற்று உண்மை பொதிந்திருக்கிறது. கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது, அடிக்கடி பெரும் பஞ்சங்கள் வந்து மக்களைத் தாக்கின. அவை பிரிட்டிஷாரின் ஒட்டச் சுரண்டும் வேகத்தால் வந்த செயற்கைப் பஞ்சங்கள். வானம் பொழிந்தாலும் பஞ்சம்; வானம் பொழியாவிட்டாலும் பஞ்சம். நெல்லும் கோதுமையும் நாட்டுப்பயிர்களும் விளைந்த நம் மண்ணில், அவன் பருத்தியும் அவுரியும் மட்டுமே விதைக்கச்சொன்னான். பருத்தி லங்காஷெய்ரில் அப்போது உருவாகியிருந்த, தொழிற்புரட்சியின் எந்திரங்களுக்குத் தீனியாகப்போனது. அங்கு உற்பத்தியாகும் துணிகளுக்கு வண்ணம் சேர்க்க, இண்டிகோ சாயம் தயாரிக்க, அவுரி விவசாயம் அவனுக்காக நடத்தப்பட்டது. இதன் காரணமாக நிலம் பாழானது. அதை மீறியும் விளைந்த தானியங்களை ஆங்கிலேயர் ஏற்றுமதி செய்தனர். இதன் காரணமாகப் பஞ்சங்கள் படையெடுத்து வந்தன. மக்கள் பட்டினியால் செத்து மடிந்தார்கள்.

தமிழ்நாட்டைத் தாக்கிய பஞ்சங்களில் கொடுமையான பஞ்சம் தாது வருடத்துப் பஞ்சம். ‘மரக்காலுருண்ட பஞ்சம், மன்னரைத் தோற்ற பஞ்சம், கணவனைப் பறிகொடுத்து, கைக்குழந்தை விற்ற பஞ்சம்’ என நல்லதங்காள் கதைப்பாடலில் விளக்கப்பெறுவதுபோன்ற பஞ்சம் அது. 1876-77 காலம்தான் தாது வருடம். இந்தப் பஞ்சத்துக்கு ‘கஞ்சித்தொட்டிப் பஞ்சம்’ என்றொரு பெயரும் உண்டு. ஆங்கில சர்க்கார் பட்டினிச் சாவுகளைக் குறைக்க, ஆங்காங்கே கஞ்சித்தொட்டிகளைத் திறந்தார்கள்.

வீட்டு சாப்பாடு - 20

‘கஞ்சித்தொட்டி போட்டார்களே - ஓ சாமியே

அன்புடனே சலுக்காரர்தானே - ஓ சாமியே

காலம்பர கோடிசனம் - ஓ சாமியே

கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே

பொழுதுசாயக் கோடிசனம் - ஓ சாமியே

பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே

கஞ்சிக்குக் கடிக்கிறதுக்கு – ஓ சாமியே

காணத்துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே’

என ஒரு நாட்டுப்புறப் பாடல் கஞ்சித்தொட்டியைக் காட்சிப்படுத்துகிறது (நன்றி: ஆ.சிவசுப்பிரமணியனின் அடித்தள மக்கள் வரலாறு)

சுதந்திர இந்தியாவிலும் பஞ்சங்கள் வராமல் இல்லை. ராஜாஜி ஆட்சிக்காலத்தில் நெசவுத்தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.நெசவாளர்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டது. அப்போதும், அரசு கஞ்சித் தொட்டிகளைத் திறந்தது. மக்கள் வரிசைகளில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக் குடித்து உயிர் பிழைத்தனர்.

வீட்டு சாப்பாடு - 20

தொழிற்புரட்சிக் காலத்துச் சுரண்டல் வாழ்க்கையைச் சொல்லும் சார்லஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ போன்ற நாவல்களில், குழந்தை உழைப்பாளிகள் வெறும் கஞ்சிக்கு வேலை வாங்கப்பட்டது பற்றிப் பேசப்படுகிறது.

பொதுவாக, கஞ்சி என்பது உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களும் சோற்றுக்கு வழி இல்லாமல் போன வறுமைப்பட்ட மக்களும் குடிக்கும் உணவாகும். உணவு வகையில் மரியாதை இல்லாத உணவாக இது உலகு எங்கும் கருதப்படுகிறது. ‘கஞ்சிக்கு இல்லாத பயலுக’ என்பது போன்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்பது இதனால்தான். ஹார்லிக்ஸ், ஓவல்டின் போன்றவையும் கஞ்சிக் குடும்பத்தைச் சார்ந்தவைதான். ஆனாலும், கஞ்சிக்குப் பொதுச் சமூகத்தில் மரியாதை இல்லாத காரணத்தால், அந்த நிறுவனங்கள் அதை, ‘கஞ்சி’ என அறிமுகம் செய்யாமல், பானம் என அறிமுகம் செய்துவிட்டார்கள்.

கெட்டியாக உருட்டி உருட்டிச் சாப்பிடும் அரிசிச்சோறு, கம்பஞ்சோறு, சோளச்சோறு போன்றவற்றை கெட்டியாக அல்லாமல், திரவ வடிவில் கரைத்துக் குடிப்பதே கஞ்சி ஆகிறது.இப்போது, தமிழகம் எங்கும் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் கம்பங்கூழ் என்பது, கரிசல் வட்டாரத்தில் இன்றைக்கும் ‘கம்பங்கஞ்சி’ என்றே வழங்கப்படுகிறது. கூழும் கஞ்சியும் ஒரே குடும்பத்தினர்தாம். (சில இடங்களில் இதைக் ‘கம்பங்கூல்’ என எழுதிவைக்கிறார்கள்.எழுத்துப்பிழையாக எழுதினார்களா அல்லது கூல்டிரிங்ஸ் குடும்பத்தில் கம்பங்கஞ்சியைச் சேர்த்து, அதையும் ஒரு குளிர்பானமாகக் காட்டும் முயற்சியா என்பது இன்று வரை எனக்குப் பிடிபடவில்லை).

நான் சிறு பையனாக இருந்தபோது, காய்ச்சல் கண்டது. அப்போதுதான் முதன்முதலாக எனக்குக் கஞ்சி கொடுத்தார்கள். அது பார்லி அரிசிக் கஞ்சி. இனிப்பான வழவழப்பான திரவமாக, பிசுபிசுத்த அதை எனக்குப் பிடிக்கவே இல்லை. பிற்காலத்தில், சில கல்யாண வீடுகளில் பந்தியில் பாயசம் விடும்போது, பார்லியும் சேமியாவும் கலந்த பாயசம் விட்ட சமயங்களில், நான் அதை மறுத்துவிடுவேன். ‘கல்யாண வீட்டில் இப்படிக் காய்ச்சக்காரக் கஞ்சியை ஊற்றுகிறார்களே...’ எனக் கடுப்பாவேன். ஆனால், பாயசமும் அதே கஞ்சி ஃபேமிலியைச் சேர்ந்த ஒன்றுதான் என்பது அப்போது உரைக்கவில்லை.கர்ப்பிணிகளுக்கு, நீர் பிரிவதற்காக தினசரி இரவு பார்லி கஞ்சி கொடுப்பது வழக்கம். மருத்துவக் குணம் கொண்ட கஞ்சி அது.

வீட்டு சாப்பாடு - 20

அரிசியைப் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் லேசாக ஒரு சுற்றுசுற்றி, அரைகுரையாக உடைத்து, தண்ணீர் நிறையக் கொதிக்கவைத்து, அதில் உடைத்த அரிசியைப் போட்டு காய்ச்சும் கஞ்சி எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்குப் பச்சை மல்லி விதை, தேங்காய், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்த துவையல் சரியான ஜோடி.

இதே கஞ்சியில் பாலும் பூண்டும் சேர்த்து, பால் கஞ்சியாகக் குடிப்பாரும் உண்டு. நமக்கு அது பிடிப்பது இல்லை. ராணுவத்தில் இருந்த நாட்களில் எனக்கு முதுகு வலி வந்தபோது, முன்னர் என்னுடன் அறைத்தோழனாக இருந்து பின்னர் குடும்பத்தை அழைத்து வந்திருந்த ராஜஸ்தான் மாநிலத்து நண்பன் ஆர்.எஸ்.புனியா, வீட்டில் இருந்து உளுந்தங்கஞ்சி தயாரித்துக்கொண்டுவந்து தந்தான். அப்படி ஒரு ருசி உளுந்துக்கு உண்டென்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன். முழு உளுந்தை அப்படியே வேக வைத்து காரம், உப்பு எல்லாம் சேர்த்த ஒரு கஞ்சி அது. முழு உளுந்தை குழம்பாக வைப்பது; இப்படிக் கஞ்சியாக வைப்பது எல்லாம் நம் பழக்கம் இல்லை.

எல்லா வகையான சிறு தானியங்களில் இருந்தும் கஞ்சி தயாரிக்கும் பழக்கம் நம்மிடம் உண்டு. கம்பு, கேழ்வரகு இரண்டும் பெரு வழக்காகக் கஞ்சி தயாரிக்க உதவுகிற சிறுதானியங்கள். சோளம், வரகு, குதிரைவாலி, தினைக்கஞ்சிகளும் நம்முடைய முன்னோர் புழக்கத்தில் இருந்தவைதாம். தானியங்கள் அன்றி மாவாகத் திரித்து, மாவைக் கரைத்துக் கஞ்சி காய்ச்சும் பழக்கமும் நம்மிடம் உண்டு. வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு அரோரருட் மாவுக் கஞ்சியைக் கொடுக்கிறோம்.

கம்யூனிஸ்ட் வட்டாரங்களில் ‘இ.எம்.எஸ். கஞ்சி’ என்பது  மிகவும் பிரசித்தம். அது வேறு ஒன்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியை அவ்வப்போது ஆட்சியாளர்கள் தடைசெய்து விடுவார்கள். அப்போது எல்லாம் தலைவர்கள் தலை மறைவு வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள். அப்படி ஒரு தலைமறைவுக் காலத்தில் காட்டுக்குள் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு அவர்கள் கிடைத்த அரிசி, காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு, கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் வழங்கினாராம். அன்று முதல் கிடைப்பதை எல்லாம் ஒன்றாகப் போட்டுக் காய்ச்சும் கஞ்சிக்கு ‘இ.எம்.எஸ்.கஞ்சி’ என்றே பெயர் வந்தது என்பார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, வயற்காட்டில் வேலையாக இருக்கும் மச்சானுக்கு கஞ்சிக்கலயம் எடுத்துக்கொண்டு வரப்பு வழி நடந்துபோகும் காதல் கிழத்திகள் பற்றி ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் நம்மிடம் உண்டு. காதலில் இருந்து காய்ச்சல் வரை நம் தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கஞ்சிக்கு, ஒரு வணக்கம் வைத்து இப்போதைக்கு முடிப்போம்.

- சமைப்பேன்

வாழைப்பூ குழம்பு

வீட்டு சாப்பாடு - 20

வாழைப்பூவை உரித்து சின்னச்சின்ன முட்டைகளாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை உரிப்பது இந்தக் குழம்பு வைப்பதில் முக்கியமான ஒரு நடவடிக்கை. உரித்துக்கொண்டே போனால், இளசுக்கும் இளசான வாழைப்பூ கிடைக்கும். வீட்டில் கூட்டம் அதிகம் என்றாலோ, பூ கொஞ்சம்தான் கிடைத்தது என்றாலோ, சிவப்பு நிறத் தோலை மட்டும் நீக்கி, பூ எல்லாவற்றையும் போட்டுக் குழம்பு வைக்கலாம். எங்களுக்கு மைத்துனர் தோட்டத்தில் இருந்து பை நிறையப் பூ கிடைக்கும் என்பதால், நாங்கள் சின்னப் பூ வரை உரித்துவிடுவோம்.

புளிக்குழம்பு வைக்கும் அதே பக்குவம்தான் இதற்கும். கடாயில் சின்னச்சின்னதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கி, பொன்னிறமாக வந்ததும் தக்காளி, உரித்துவைத்த வாழைப்பூக்களை பிய்த்துப்போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி, புளிக்குழம்பு மசாலாப் பொடியைச் சேர்த்து, புளியைக் கரைத்துவிட்டு, தேவையான உப்பும் போட்டு, கொதிக்கவிட வேண்டும். மீன் குழம்பு மசாலா லேசாகச் சேர்க்கலாம். அது சேர்க்காமலேயே வாழைப்பூக் குழம்பு, மீன் குழம்பு மாதிரி சுவையாகத்தான் இருக்கும். நல்லெண்ணெய் விட்டுத் தாளித்து, இறக்கினால் வீடே மணக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு