வீட்டு சாப்பாடு - 21

ன்னுடைய ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் காந்தியைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதில் அவர் ஒருநாள் ஆட்டுக்கறி சாப்பிட்டுவிட, அன்று இரவு எல்லாம் அவருடைய வயிற்றுக்குள் இருந்து ஆடு கதறுகிற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாம். அதற்குப் பிறகுதான் அவர் அசைவ உணவே சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தாராம் என்று எழுதியிருந்தது. அந்தப் பாடத்தைப் படித்ததில் இருந்து, நான் கறி சாப்பிட மறுத்தேன். பாட்டி வீட்டில் வளர்ந்த என்னை மாமிச உணவு சாப்பிடவைக், தாத்தாவும் பாட்டியும் அத்தையும் எவ்வளவோ முயன்றார்கள். நான் மறுத்துவிட்டேன். அவித்த முட்டையையும் சாப்பிட மறுத்தேன். ‘முட்டை, வயிற்றுக்குள் போய் குஞ்சு பொரித்துவிட்டால் என்னாவது?’ என்கிற பயம்.

வீட்டு சாப்பாடு - 21

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர், அம்மா அப்பாவோடு வாழும் வாய்ப்பு 10-ம் வகுப்புப் படிக்கும்போது கிடைத்தது. அம்மா கையால் சமைத்த கோழிக்கறியை முதன்முதலாகச் சுவைத்தேன். பிராய்லர் சக்கைகள் நம் நாட்டுக்கு வந்து சேராத காலம் அது. கோழி என்றாலே அது நாட்டுக்கோழிதான். கோழியின் கழுத்தை அறுத்து (பாவம்), ரோமத்தைப் பிடுங்கி நெருப்பிலே வாட்டி, மஞ்சள் பூசிக் குளிப்பாட்டிய பிறகுதான் அறுப்பார்கள். எங்கள் தாத்தாவும் தம்பி கோணங்கியும் ஈடுபாட்டோடு இந்த வேலையைச் செய்வார்கள். பின்னர், தாத்தா இல்லாமலேயே கோணங்கி தனி ஆவர்த்தனமாகவே கோழி அறுப்புச் செய்யலானான். எனக்கு அது முடியவில்லை. பொதுவாக, இந்தக் கழுத்தறுப்பு வேலைகளை எங்கள் ஊரில் பெண்கள் செய்வது இல்லை. எப்போதும் ஆண்கள்தான் செய்வார்கள். இதில் ஒரு பண்பாட்டுக் கூறு மறைந்துள்ளதை இப்போது அவதானிக்க முடிகிறது.

இறைச்சி சாப்பிட ஆரம்பித்தபோதும் அதில் முழு மனஈடுபாட்டுடன் நான் பங்கேற்கவில்லை.எப்போது ரசத்துக்கு வருவோம் என்றிருக்கும்.ரசத்துக்கு வந்ததும் மனம் ஆசுவாசம்கொள்ளும்.இந்த மனநிலையோடுதான் சமீப காலம் வரை அசைவ உணவைச் சுவைத்து வந்தேன். கடைகளில் பரோட்டாவுடன் சிக்கன், மட்டன் கலந்து வெட்டும்போதும் இதே மனநிலைதான். கிரேவி எனப்படும் குழம்பைத்தான் விரும்பிச் சாப்பிட்டேன்.

வீட்டு சாப்பாடு - 21

எங்கள் கிராமத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த குலதெய்வக் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வண்டிகட்டிப் போவோம். கூடவே நாலு ஆடுகள் எங்கள் வண்டிகளுடன் ‘மே...மே...’ என்றபடி தங்கள் மரணத்தை நோக்கி நடைபோட்டு வரும். அங்கே போய் கிடா வெட்டிப் பொங்கலிட்டு, மணக்க மணக்கப் பரிமாறுவார்கள். வீட்டில் வைக்கும் கறிக்குழம்பு அடர்த்தியாக ஒரு ருசியுடன் இருக்கும். காட்டுக் கோயிலுக்குள் கிடா வெட்டி வைக்கப்படும் குழம்பு, கெட்டியாக இல்லாமல் நீர் கூடுதலாகச் சேர்ந்து, ஒரு தனி ருசியுடன் திகழும். சிறப்பு விருந்தினர்களாக வந்த ஆண்களுக்கு மட்டும் தலைக்கறி, ஈரல், குடல்கறி, ரத்தப் பொரியல் என ஆட்டின் ஒவ்வோர் உறுப்பும் தனித்தனியாகப் பரிமாறப்படும். இப்போது எல்லாம் இந்த வகையறாக்களை குடிகார கோவிந்தன்கள் முன்கூட்டியே ரிசர்வ் செய்து எடுத்துப் போய்விடுகிறார்கள். மற்றவர்களுக்கு இந்தச் சிறப்பு உறுப்புப் பொரியல்கள் கிடைப்பது இல்லை. பெண்களுக்கு எப்போதும் கிடைக்காது.

ராணுவத்துக்குப் போய் பயிற்சி முடித்து, சீன எல்லையில் இருந்த படை முகாமில் சேர்ந்தபோது, அங்கே அவ்வப்போது வெட்டப்பட்டது ஆட்டுக்கறி. கிடைக்காவிடில், டின்டு மீட் (Tinned meat) எனப்படும் பதப்படுத்தப்பட்ட மாமிச உணவைச் சமைத்துப் பரிமாறினார்கள். அந்த வாசனையே எனக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் தாவர உணவுக்குத் தாவிவிட்டேன்.

வீட்டு சாப்பாடு - 21

ராணுவத்தில் இருந்து திரும்பி வந்து திருமணம் செய்துகொண்டேன். என் துணைவியார் நல்ல அசைவ உணவுப்பிரியர். புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வைப்பவர்கள், அவருக்கு அசைவமும் எனக்குச் சைவமுமாகச் சமைத்துக்கொண்டிருந் தார்கள். அசைவத்திலேயே பிறந்து, வளர்ந்து, உருண்டு, புரளும் என் சொந்தங்களின் கஷ்டத்தைக் குறைக்கவும் துணைவியாரின் உணவுப் பண்பாட்டோடு இசைந்து பயணிக்கவுமான மனநிலையோடு, மீண்டும் எலும்புகள் கடிக்க ஆரம்பித்தேன்.

கல்யாணத்தை ஒட்டிய சில மாதங்கள் நானும் ஒரு சிறப்பு விருந்தினர் அந்தஸ்தில் வைக்கப்பட்டு இருந்ததால், தலைக்கறி முதல் ஆட்டுக்கால் சூப்பு வரை அத்தனை அவிர்பாகங்களும் என் இலைக்கு அட்டியில்லாமல் வரிசையாக வந்து சேர்ந்தன. தவிர, அவர்கள் ஊர்தெய்வமான மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பங்குனி, புரட்டாசி மாதங்களில்  நடைபெறும். இதுபோன்ற நாட்டுப்புறத் தெய்வங்களின் திருவிழாக்கள் எல்லாமே மக்களின் உணவுப் பண்பாட்டுடன் இறுக்கமாகப் பின்னப்பட்டவை. ஆகவே, கோயிலுக்குப் போகும் முன் கறிச்சோறு சாப்பிட்டுவிட்டுப் போகும் மரபு இருக்கும். எங்கள் வீடு இப்போது சிவகாசிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் இடையில் அமைந்திருக்கிறது. கூப்பிடு தூரத்தில் திருவண்ணா மலை நிற்கிறது.  அது வைணவத் தலமாகக் கொண்டாடப்படுகிறது. அங்கே கால் பதித்திருக்கும் சீனிவாசப் பெருமானுக்குப் பெரிய பெரிய செருப்புகளை நேர்த்திக்கடனாகச் செய்து போடுவது வழக்கம். செருப்பைத் தைத்துக் கொடுக்கும் அருந்ததியர் சமூகத்து மக்கள் மலைக்குக் கீழே ஆண்டுக்கு ஒருமுறை கூடி, ஏழு நாள் தங்கி இருந்து ஒரு விழா எடுக்கிறார்கள். எங்களுக்கு ஆட்டுக்கறி சாமியின் நைவேத்தியம் என்றால், அவர்களுக்கு மாட்டுக்கறி படையலாகிறது.

வீட்டு சாப்பாடு - 21

இப்போது எல்லாம் எங்கள் எழுத்தாளர் சங்க மாநாடுகளில், மாட்டுக்கறி பரிமாறும் பழக்கத்தை,  கடந்த 10 ஆண்டுகளாகத் தொடங்கி இருக்கிறோம். உழைக்கும் மக்களுக்காகக் கதை, கவிதை எழுதுகிற நாம் அவர்களின் உணவுப் பண்பாட்டையும் ஏற்க வேண்டும் அல்லவா?

வீட்டு சாப்பாடு - 21

இப்போது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு எல்லாம் அதிகமாகிவிட்ட பின்னணியில், முற்றிலுமாக அசைவத்தைத் தவிர்க்க வேண்டிய (பல்லும் பிரச்னை)  வயதுக்கு வந்து நிற்கிறேன். மீண்டும், பச்சிலைகளை மேய்கிறேன். ‘குழம்பு மீனும் முட்டையின் வெள்ளைப் பகுதியும் சாப்பிடலாம்’ என்கிற டாக்டரின் கருணைக்குக் கண்கலங்கி, நன்றி சொல்லிக்கொள்ளும் நாட்கள் இவை. ஈரோட்டின் குடல் குழம்பும் என் மாமியார் கொடுத்த ரத்தப் பொரியலும், ஈரலும் இன்று என் ஏக்கப்பெருமூச்சில் கரைந்துகொண்டிருக்கின்றன. ‘ஆடு, கோழி வெட்டக் கூடாது’, ‘மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது’ என்று எல்லாம் சொந்த உணவுப் பண்பாட்டில் வெளி சக்திகள் குறுக்கிடும் இந்தக் காலம் வேதனையான காலம்தான்.  உணவுப்பழக்கம் என்பது அவரவர் வழியில் தன்னியல்பாக மாற்றம்கொள்வதாகும். பிறர் சொல்லி ஏற்பதும் கஷ்டம். பிறர் சொல்லி நிறுத்துவதும் கஷ்டம்.

- சமைப்பேன்

படங்கள்: எம்.விஜய குமார்

பயத்தங்குழம்பு

பாசிப் பருப்பு எனப்படும் சிறு பருப்புக் குழம்பு அல்லது சாம்பார் எல்லோரும் வழக்கமாக வைப்போம். பயத்தங்குழம்பு என்று நான் சொல்வது தோல் நீக்காத பாசிப் பயறு இருக்கிறது அல்லவா, அதை அப்படியே இரண்டாக உடைத்து, (திருகையில் போட்டு உடைப்பது சிறப்பு. இப்போது பாக்கெட்டுகளில் மால்களுக்கும் வந்துவிட்டன) உடைத்த பயறை தேவையான அளவு எடுத்து, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்துவைத்துக்கொள்ள வேண்டும். வத்தல், சீரகம், மஞ்சள் தூள், மல்லி விதை (தனியா), இரண்டு பூண்டுப்பல், சிறிய தேங்காய்துண்டு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி, அதில் அரைத்த மசாலாவையும் போட்டு, வதங்கிய பிறகு நீர் சேர்த்து, வறுத்துவைத்த பயறு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பயறு வெந்ததும், குழம்பை இறக்கித் தாளிக்க வேண்டும். ருசியும் ஆரோக்கியமும் மிக்க பயத்தங்குழம்பு தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism