Published:Updated:

வீட்டு சாப்பாடு - 22

கைகளின் நீட்சியாக...

வீட்டு சாப்பாடு - 22

ழுத்தாளர், தோழர் பாமரன் ஒருமுறை குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அதையொட்டி நிறைய நண்பர்களின் வருகை. மதிய உணவு வரை கொறிப்புகளுடன் பேச்சு போய்க்கொண்டிருந்தது. பிறகு, அவசரஅவசரமாக மதிய உணவைத் தயாரித்தோம்.பாமரனின் துணைவியார், தங்கை யாழ் 10 முட்டைகளை  குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தார். எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. முட்டையைக் குக்கரில் வைப்பதை அன்றுதான் பார்த்தேன். எங்கள் வீட்டில் அப்படிச் செய்தது இல்லை. நிமிடத்தில் முட்டை பக்குவமாக அவிந்து தயாராகிவிட்டது. கோழி முட்டையை குக்கரில் வேகவைப்பது பற்றி நான் கற்பனைகூடச் செய்துபார்த்தது இல்லை. குக்கரை இன்னும் முழுமையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ளவில்லையோ என அன்று தோன்றியது.

‘எதையும் அவித்துத்தரும் கருவி’ என்கிற அதன் அடிப்படைத் தொழில்நுட்பத்தின் அதிகபட்ச சாத்தியங்களைப் பெண்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். சமைக்கப்போகும் ஆண்கள் ‘சமைப்பதே ஒரு தியாகம்’ என்கிற மனநிலையோடு இருப்பதால், அதன் நுட்பங்களைக் காணத் தவறுகிறோம் எனப் புரிந்துகொள்கிறேன். ‘ஜென்மத்துக்கும் நாம்தானே சமைக்கணும்!’ என்கிற  திணிப்பு ஆண்கள் மீது இல்லாததால் ‘இதுவே பெரிசு’ என அன்றைய கடமையாகச் சமையலைப் பார்க்கிறோம். ஆழக் கற்றுக்கொள்வது இல்லை. படைப்பாக்கத் திறனோடு சமையலில் புதியனவற்றைக் கண்டுபிடிப்பதும் அபூர்வம்தான்.

வீட்டு சாப்பாடு - 22

என்னுடைய இன்னொரு நண்பர் வீட்டில் குக்கர் பயன்படுத்துவது இல்லை. அது கெடுதி என்கிற நம்பிக்கை அவர்களுக்கு. அவர்களின் திருமணத்துக்குப் பரிசாக வந்த குக்கர் பல ஆண்டுகளாக அதே அட்டைப்பெட்டிக்குள் பரணில் தூசு படியக்கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘நவீனமானது எல்லாமே கெடுதி’ என்கிற நாட்டுப்புற நம்பிக்கையின்பாற்பட்டதாக இருந்தது அவர்களின் கருத்து. இட்லி என்றால் துணி விரித்து, கொப்பரையில் அவிப்பார்கள். சட்னி என்றால் அம்மியில் வைத்துத்தான் அரைப்பார்கள். சாதம் என்றால் கொதிநீரில் போட்டு, வேகவைத்து வடிப்பார்கள். அடுப்பென்றால் விறகு அடுப்புத்தான் இன்னமும். தோசைக்கு அரைக்க இன்னும் கல்  உரல்தான். மிக்ஸியில் அரைத்தால் சூடு, கிரைண்டரில் அரைத்தால் சீக்கிரம் புளித்துவிடும் என்பதுபோல ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஆரோக்கியம் சார்ந்த காரணம் அவர்களிடம் இருக்கும். தொடர்ந்து அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, நவீன சாதனங்களைப் பயன்படுத்த அவருடைய துணைவியார் விரும்பினாலும், அவர் அனுமதிப்பது இல்லை எனப் புரிந்தது. சமையலில் எது நல்லது என்பது குறித்த அவரது நம்பிக்கை சார்ந்த கருத்துக்காக அந்தப் பெண்மணி புகையோடு மல்லாடிக்கொண்டிருக்க நேர்கிறது.ஆரோக்கியத்தின் பேரிலான ஆணாதிக்கத்தின்  வடிவம் இது.

சமையலில் நவீன கருவிகள், உபகரணங்களைப் பயன்படுத்தும் பொருளாதார வசதி இன்னும் வந்து சேராத கோடானுகோடி இந்திய விவசாயக் குடும்பங்களின் கதை வேறு. படித்த நடுத்தரக் குடும்பங்களில் இவ்விதம் முற்றிலும் இயற்கை சார்ந்த வாழ்வைக் கைக்கொள்வது என்பது, அந்த வீட்டுப் பெண்கள் இடுப்பை ஒடிக்கும் வன்முறையாகவே மாறி நிற்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து சமையல் வேலைகள் எல்லாவற்றையும் - சட்டி பானையைக் கழுவுவது உள்பட - செய்வதை அன்றாடமாக்கிக்கொள்ளும் வீடுகள், இப்படியான இயற்கை வாழ்வுக்கு செல்வதில் எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை. அது ஒருவகையில் நல்லதுதான். அதிலும்கூட முற்றிலும் நவீனத்தைப் புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஃப்ரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப்பெட்டியை நாம் புறக்கணிக்கலாம். அவ்வப்போது வாங்கி, அவ்வப்போது சமைக்கும் பழக்கம் உடலுக்கும் நல்லது. ஃபிரிட்ஜ் வெளிவிடும் வாயு சுற்றுச்சூழலுக்கும் கேட்டைத் தரும். கிரைண்டர், மிக்ஸி, காஸ் அடுப்பு போன்ற மாற்றங்கள், கால்நடையாக நடந்துகொண்டிருந்த நாம் பேருந்தில் ஏறியதைப் போன்றதும்,   சைக்கிளிலிருந்து பைக்குக்கு மாறியதைப் போன்றதும்தான். அது இருக்கலாம். வேகமான அன்றாடத்துக்குள் வரலாறு நம்மைத் தள்ளிவிட்ட பின்னணியில், நாம் இன்னும் வேட்டைக்கால சமையல் முறையிலேயே நீடிப்பது தேவையற்றது.

வீட்டு சாப்பாடு - 22

காய்கறிகளின் தோல் நீக்க ‘பீலர்’ எனப்படும் விதவிதமான தோல் நீக்கிகள் வந்துவிட்டன. அரிவாள்மனையில் வைத்துத் தோலைச்  சீவிக் கொண்டிருப்பது காட்டுமிராண்டி காலத்து நாகரிகம்போல் ஆகிவிட்டது. அதேபோல காய்களைத் துருவுவதற்கும் விதவிதமான டிசைன்களில் நறுக்குவதற்கும் மிக எளிதான கருவிகள் வந்து விட்டன. ‘வெஜிடபிள்  சாலட்’ எனப்படும் தக்காளி, வெங்காயம், கேரட், வெள்ளரி  கலவைக்கு இப்போது என்ன அழகான வடிவங்களில் எல்லாம் நறுக்க முடிகிறது. அதன் அழகைப் பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது.ஆப்பிள் கட்டர், ஆரஞ்சு பிழிதல், வட்டமாக வெட்டும் கருவி, நீளமாக வெட்டும் கருவி, முட்டையை வெள்ளைப்பகுதி, மஞ்சள்கரு என, இரண்டாக வடிகட்டும் கருவி... என 20 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் கற்பனை செய்துகூடப் பார்த்திராத  பொருட்கள் சந்தைக்கு வந்துவிட்டன. நுகர்வுப் பண்பாட்டைத் திணிக்கும் நிறுவனங்கள், இவற்றை நம் வீடுகள் வரை கொண்டு சேர்த்துவிட்டன.

ஒரே நேரத்தில் ஆயிரம் இட்லி அவிக்கும் கருவிகள் வந்துவிட்ட பின்னணியில், நம் அடுப்படிகளையும் அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப மாடர்ன் கிச்சனாக மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்று நகர வாழ்க்கையில் நாம் மால்களுக்கும் சூப்பர்மார்க்கெட்டுகளுக்கும் போனால், தோல் நீக்கி, நறுக்கிவைத்த வெங்காயம், காய்கறிகள் அப்படியே சமைக்கலாம் என்கிற நிலையில் கிடைக்கின்றன. இன்னும் ரெடிமேட் பூரி, ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டாகூட பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. அந்த பாக்கெட்டுகளில் உப்பை மட்டும் சேர்த்து, ஓவனில் வைத்தால் மூன்று நிமிடங்களில் ஆவி பறக்கத் தயாராகிவிடுகிறது சமையல். அவரவர் வாழ்வின் அவசரத்துக்கு ஏற்ற ஒரு சமையல்பாணிக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். சிலவற்றை நாம் தடுக்க முடியாது. ஆனால், பாரம்பர்யமான சமையல் முறைகளில் சாத்தியமானவற்றையேனும்  நாம் கைவிட்டுவிடாமல் பாதுகாக்க முயல வேண்டும்.

ஃப்ரிட்ஜுக்குப் பதிலாக மண் பாண்டத்திலேயே ஒருவகையான இயற்கை ஃப்ரிட்ஜை நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் டெரக்கோட்டா மண் பாண்டக் கலைஞர்கள் உருவாக்கி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அது எல்லோர் கைகளுக்கும் எட்டுவதும் இல்லை. கிடைக்கச் சாத்தியம் இருந்தால், சிலரேனும் ஃப்ரிட்ஜை துறப்பார்கள் என்றே நம்புகிறேன்.  மண்பாண்டம் செய்யும் கலைஞர்களும் கலையும் நம் கண்ணுக்கு முன்னால் மறைந்துகொண்டிருப்பதுதான் நம் காலத்தின் சோகம். மிக்ஸி, கிரைண்டர் வந்ததும் கல் தச்சர்களும், அம்மி கொத்தும் தொழிலாளிகளும் பிழைப்பை இழந்ததுபோல, கால வெள்ளம் எத்தனையோ கைவினைஞர்களையும் சமையல் முறைகளையும் அடித்துச் சென்றுவிடும். நாமும் அப்படியே வெள்ளத்தோடு போய்விடுவதா?

வீட்டு சாப்பாடு - 22

தீர்மானிப்பது நம் பொருளாதாரமாக இருந்தாலும், சமைப்பதும் சாப்பிடுவதும் ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகவும் இருக்கிறது. அதில், சமூகத்தின் பிற துறைகளைப் போன்றே நம்பிக்கைகளும், மூட நம்பிக்கைகளும் அறிவியல் பார்வைகளும் கலந்தே இருக்கின்றன. நுகர்வுப் பண்பாட்டுக்குள் நம்மை இழுக்கும் அல்லது தள்ளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களின் வெள்ளத்தில் தாக்குப்பிடித்து நின்று எது நல்லது, எது தேவையானது, எது தவிர்க்க முடியாதது என்பதைத் தீர்மானித்து வாங்க வேண்டியிருக்கிறது.

சிக்கிமுக்கிக் கற்களை வெகுநேரம் தட்டித் தட்டி தீயை மூட்டிய நம் முப்பாட்டி,- பாட்டன் காலம் முதல், ரெகுலேட்டரைத் திருகினாலே அடுப்புத்தானாகப் பற்றிக்கொள்ளும் தற்போதைய தொழில்நுட்ப மேஜிக் காலம் வரை நம்மோடு சமையல் கருவிகள் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. அவை நம் கைகளின் நீட்சிதாம். நுகர்வு சுனாமியில் பறந்துவிடாமல், பழையதை மறந்துவிடாமல், காலத்துக்கு ஏற்ப கொள்ளவேண்டியதைக் கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி நம் பாரம்பர்யத்தை, நவீனத்தோடு சேர்த்துக் கைக்கொள்வோம்.

- சமைப்பேன்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ர.சதானந்த்

பீர்க்கங்காய்த் தோல் சட்னி

வீட்டு சாப்பாடு - 22
வீட்டு சாப்பாடு - 22

பீர்க்கங்காய் மிகுதியான மருத்துவக்குணம் கொண்ட நம் நாட்டுக்காய். அதன் தோலும் சத்துமிக்கது. இதைச் சட்னி அரைப்பது வழக்கம். சீவி எடுத்த பீர்க்கங்காய்த் தோலை மொத்தமாகக் கழுவி, கடாயில் லேசாக எண்ணெய் விட்டு, வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலையையும் ஒரு குத்து வதக்கி எடுக்கவும். இரண்டு தேக்கரண்டி உடைத்த உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்துஎடுக்க வேண்டும். தேங்காய் தேவை எனக் கருதினால், ஒரு சில்லு பொடியாக நறுக்கி, அதையும் பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். உரைப்புத் தேவைக்கு ஏற்ப பச்சை மிளகாய் எடுத்து, அதையும் கடாயில் வதக்க வேண்டும். மேற்சொன்ன எல்லாவற்றுடனும் தேவையான அளவு உப்பும் புளியும் சேர்த்து அரைத்துத் தாளித்தால், ஆரோக்கியமான பீர்க்கங்காய்த் தோல் சட்னி ரெடி.