மனதால் சாப்பிடுகிறோம்

மனதைத் தொட்ட சில வீட்டு சாப்பாடுகளை அவ்வப்போது மனமும் நாக்கும் அசைபோடுவது உண்டு. மறைந்த எழுத்தாளர், என் அன்பு அண்ணனும் தோழருமான கந்தர்வன் அவர்களைச் சந்திக்க, அடிக்கடி புதுக்கோட்டைக்குச் செல்வேன். “ஏப்பா... யார் வந்திருக்கா பாரு...” என்று உள்ளே குரல் கொடுத்ததும் சந்திரா அண்ணி காபி டம்ளரோடுதான் வருவார். நாங்கள் இருவரும் இலக்கியம் பேசிக்கொண்டே இருப்போம். நேரம் ஆக ஆக இலக்கியவாதிகளின் எண்ணிக்கை பெருகும். நொறுக்குத்தீனிகளும் காபி, தேநீரும் வந்துகொண்டே இருக்கும். ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை...
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை’ என கவிதை எழுதிய அண்ணன் கந்தர்வன், வீட்டுச் சமையல் வேலைகளில் பங்கெடுத்து நான் பார்த்தது இல்லை. “குற்ற உணர்விலிருந்துதான் அந்தக் கவிதை வந்ததப்பா...” என்று ஒருமுறை அவர் சொன்னார். அண்ணிக்கு தன் மூன்று பிள்ளைகளைவிடவும் ரொம்ப செல்லப்பிள்ளை அண்ணன்தான். அந்த அன்பின் கதகதப்பிலேயே அடுப்படிக்குள் நுழையாமல், டிமிக்கி கொடுக்கும் அண்ணன்மார்கள் நம்மில் நிறையப் பேர் உண்டு.

மதியம் சாப்பிட வருமாறு சின்ன மகள் சாருமதி அழைப்பாள். அப்போது அவளுக்கு ஏழு வயதிருக்கும்.சமைத்த உணவை எல்லாம் ஒவ்வொன்றாக அடுக்களையிலிருந்து எடுத்து வந்து, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் அறையில் வைப்பது அவள்தான். தண்ணீர்ச் சொம்பை முதலில் கொண்டுவந்து நடுவில் வைப்பாள். உடனே, நாங்கள் பேச்சை நிறுத்தி எழ யத்தனிப்போம். அவள், ‘பொறுங்க... பொறுங்க’ என்பதுபோல வலது கையை உயர்த்தி ஆட்டிவிட்டு, அடுத்தப் பதார்த்தத்தை எடுக்க உள்ளே ஓடுவாள். அவள் அன்போடு கையை அசைக்கும் காட்சி மனசை என்னவோ செய்துவிடும். ‘சரி தாயி’ என்று மனம் பதில் சொல்லும். அப்புறம் அவளுடைய உத்தரவுக்காக, நாங்கள் பேச்சை நிறுத்திவிட்டுக் காத்திருப்போம். ஓடி ஓடி அவள் பரிமாறுவாள். அந்தச் சாப்பாடு அவ்வளவு ருசியாக இருந்ததற்கு அண்ணியின் கைப்பக்குவத்தைவிடவும், சின்ன மகளின் சின்னக் கைகளால் பரிமாறப்பட்டதுதான் முக்கியமான காரணம் என இப்போதும் நினைக்கிறேன். அண்ணனின் நினைவுகளால் கன்னங்களில் கண்ணீர் வழியும் சில தருணங்களில் அந்தச் சாப்பாட்டின் மணமும் பாப்பாவின் உத்தரவுகளும் சேர்ந்தே மனதில் கரையும்.
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியைச் சந்திக்க மாலையில் கோவில்பட்டியில் பஸ் ஏறிப்போய் சாத்தூரில் இறங்கி, விடிய விடியப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் மீண்டும் பஸ் ஏறி, கோவில்பட்டிக்கு வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தேன். வாரத்தில் மூன்று இரவுகளாவது அவரோடு இருந்தால்தான் என் மனம் சமநிலையில் இருக்கும். ஆகவே, ராத்திரி சாப்பாடு அவர் வீட்டில்தான். “சரஸ்வதி! தமிழ்ச்செல்வன் வந்திருக்கான்” என்று உள்ளே சத்தம் கொடுப்பார். ஒரு தட்டில் மிக்ஸர், காராச்சேவுடன் தேநீர் வரும். பேச்சுன்னா பேச்சு, அப்படிப் பேசிக்கொண்டிருப்போம். என் கதைகளின் முதல் கைப்பிரதியை வாசித்துவிட்டுப் பேசும் அவருடைய பேச்சில் நான் மயங்கித்தான் கிடப்பேன். அதைவிட அதிகமாக அண்ணி பரிமாறும் சாப்பாட்டில் பெரு மயக்கம் கொண்டிருந்தேன்.
அவர் வீட்டில் தயாரித்து, அப்போது பரிமாறும் ஊறுகாய்க்கு ஈடான ஒரு ஊறுகாயை, வாழ்க்கையில் அப்புறம் நான் இன்று வரை சாப்பிட்டது இல்லை. நாங்கள் இருவரும் தரையில் அமர்ந்து தட்டில் போட்டதைச் சாப்பிடச் சாப்பிட அவர் நின்று, பார்த்துப் பார்த்துப் பரிமாறுவார். அந்தக் காட்சி இன்று ஓர் ஆணாதிக்கக் காட்சியாக மனதை உறுத்தினாலும், அத்துடன் அன்றைய சாப்பாட்டின் ருசி சற்றே குற்ற உணர்வைத் தணிக்கும்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘மேல்பார்வை’ சிறுகதைத் தொகுப்பை ஒரு கல்லூரியில் பாடமாக வைத்திருந்தார்கள். அந்தக் கதைகள் பற்றி ஆசிரியர்களோடு பேச வேண்டும் என என்னை அழைத்தார் சுந்தர ராமசாமி. அந்தக் கல்லூரியில் பேசிவிட்டு மதியம் அவர் வீட்டில் சாப்பிடப் போனோம். அன்றுதான் அவர் வீட்டில் முதன்முறையாகச் சாப்பிடுகிறேன். நான் கதை எழுதுவதைக் கவனிக்காமல் இயக்க வேலைகள், கூட்டங்கள் என அலைந்துகொண்டிருப்பதில் அவருக்கு விமர்சனம் இருந்தது. அதனால், சந்திக்கும் வேளைகளில் “என்னா தலைவரே...” என்று ஒரு கேலிச் சிரிப்புடன் என்னை அழைப்பார். அன்று சாப்பாட்டு மேசையில் அப்படித்தான் “சாப்பிடுங்க தலைவரே... இன்னும் கொஞ்சம் போட்டுக்குங்க தலைவரே...’ என்று உபசரித்தபடி இருந்தார். சிறு வயதில் அவருடைய ‘புளிய மரத்தின் கதை’, ‘ஜன்னல்’, ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ போன்ற கதைகளை எல்லாம் படித்துவிட்டு எட்டாத உயரத்தில் அவரை வைத்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவன் நான். ஆகவே, அவ்வளவு அருகில் அவரோடு உட்கார்ந்து அவருடைய அன்பான வார்த்தைகளைக் கேட்டபடி சாப்பிட்ட அந்த நேரம் ஒரு ருசியும் தெரியவில்லை. அந்தத் தருணமே போதுமானதாக இருந்தது. அது அப்படியே என் மனதில் உறைந்த காட்சியாக இன்றும் நிற்கிறது.
அன்புத் தம்பி சீமான் திருமணத்துக்கு முன்னால் ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த வீட்டில், அவரோடு அமர்ந்து உப்புக்கறி (கோழி) சாப்பிட்ட அனுபவம் வேறு மாதிரியானது. தம்பி நா.முத்துக்குமாரும் நானும் சேர்ந்துதான் எப்போதும் சீமான் வீட்டுக்குப் போவோம். ஈழம், இலக்கியம் எனப் பலவாகப் பேச்சுப் போய்க்கொண்டிருக்க, சீமானின் தம்பிகள் படையில் இருந்து ஒருவர் சிக்கனை அள்ளி அள்ளி வைத்துக்கொண்டே இருப்பார். அன்பும் கோபமும் கலந்த உரையாடலுக்கு நடுவே, பேச்சைப்போலவே கோழிக்கறியும் அவ்வளவு காட்டமாக இருக்கும்.
ஒருகாலத்தில் (35 வருடங்களுக்கு முன்பு) சென்னை என்றால், அது எனக்கு முனைவர் வீ.அரசு-மங்கை வீடுதான். அவர்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை நாள் போலத்தான்.
10 பேர் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இருவரும் பேராசிரியர்கள் என்பதால், அவர்களுடைய மாணவர்கள், அவர்களுடைய நாடகக் குழு நண்பர்கள் என, ஒரு சுற்றம் சூழ வட்டமாக அமர்ந்து சாப்பிடுவோம். அறிவார்ந்த விவாதங்களைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அந்த உணவின் ருசி வேறாக இருக்கும்.

நான் அறிவொளி இயக்கத்தில் பணியாற்ற ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவில் ஒரு வீட்டில் உண்டேன். கணவனால் கைவிடப்பட்டு தன் குழந்தையோடு வாழ்வைத் துணிவுடன் எதிர்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் எங்களுக்குப் பரிமாறிய அந்த உணவு எளியதாக இருந்தாலும் மனதை நிறைத்தது. அவருக்குத் தன்னம்பிக்கை கொடுத்த அறிவொளி இயக்கத்துக்கு தன் நன்றியைச் செலுத்தவே அவர் எங்களுக்குச் சமைத்துப் பரிமாறினார் என்பதால், நெகிழ்ச்சியான தருணமாக அந்த உணவு வேளை இருந்தது.
நான் யோசித்துப்பார்க்கிறேன்... மனதுக்குப் பிரியமான மனிதர்களோடு அமர்ந்து சாப்பிடும் சாப்பாட்டின் ருசிதான் வாழ்நாள் முழுவதும் நம் நாக்கின் கீழ் அழியாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்தந்த நாளின் மனநிலைகளோடு ஒட்டியிருக்கிறது அந்த சாப்பாட்டின் ருசி. அவை எல்லாமே நம்ம வீட்டு சாப்பாடுபோல ஆரோக்கியமானவைதான். சொல்லப்போனால், நாம் கைகளால் சாப்பிடுவது இல்லை. மனதால்தான் சாப்பிடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், கண்களாலும் நாசியாலும் வாயாலும் அப்புறம் மனசாலும்தான் சாப்பிடுகிறோம். ஒன்றைச் சொல்லி முடிக்க வேண்டும். அறிவொளி இயக்கத்தை எளிய மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியின் பகுதியாக, திருநெல்வேலியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு காலையிலும் மாலையிலுமாக அலைந்துகொண்டிருந்த நாட்கள். நாங்கள் காலையில் அவர்கள் குடியிருப்புகளுக்குப் போனால், அவர்கள் அதிகாலையிலேயே கிளம்பி ஊரைப் பெருக்கிச் சுத்தம் செய்யவும், சாக்கடை, கழிப்பறைகள் சுத்தம் செய்யவும் பணிக்குப் போயிருப்பார்கள். மாலையானால் குடிக்காமல் முடியாது. அதிகாலையில் இருந்து மாலை வரை குப்பையும் மலமும் சாக்கடையும் என மனதாலும் கைகளாலும் அள்ளிப்போட்ட பிறகு வீட்டுக்கு வந்து அவர்களால் நம்மைப்போல சோற்றில் கைவைக்க முடிவது இல்லை. லேசாகவேனும் குடித்தால் மட்டுமே மனதில் மலத்தின் பிம்பங்கள் மறந்து, கொஞ்சம் சாப்பிட முடியும். இந்தியாவில் குடிப்பதற்கு அவர்களுக்கு மட்டும்தான் தேவை இருக்கிறது. நியாயமும் இருக்கிறது. சுத்தமான மனதுடன் விருப்பத்துடன் சாப்பிடும் அவர்களுக்கான ஒரு நாள் எப்போது வரும்?
அவர்கள் கணவனும் மனைவியுமாக அதிகாலையில் டியூட்டிக்குப் போய்விட, அவர்களின் குழந்தைகள் தாங்களே குளித்து, தாங்களே உடைமாற்றி, தாங்களே தட்டில் எடுத்துவைத்துச் சாப்பிடும் காட்சியைப் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கான குதூகலமான வீட்டு சாப்பாடு அமையும் நாள் எப்போது வரும்?
- சமைப்பேன்
படங்கள்: தே.தீட்ஷித்
சி.தினேஷ்குமார்
புளி இல்லாப் புளிக்குழம்பு
சாம்பாரையும் புளிக்குழம்பையும் விட்டால் மரக்கறி உணவில் வேறு மார்க்கம் இல்லை. மருத்துவக் காரணங்களால் புளியைத் தவிர்க்க நேரிட்டால் வீட்டில் வைக்கும் குழம்புகளில் ஒன்று, இந்தப் புளி இல்லாப் புளிக்குழம்பு.
இரண்டு முருங்கைக்காய்களை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.அரை மாங்காய், மூன்று தக்காளிகளையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.மல்லி (தனியா) விதை, சீரகம், பூண்டு, பத்து மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் இவற்றை வாணலியில் லேசாக எண்ணெய்விட்டுத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் நான்கு சின்ன வெங்காயம் ஒரு துண்டு தேங்காயைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து தேவையான அளவு உப்பும் அளவான தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கள் வெந்தவுடன் இறக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து இறக்கவும்.