Published:Updated:

வீட்டு சாப்பாடு - 24

அந்நியர் வந்து புகல் என்ன நீதி?

பிரீமியம் ஸ்டோரி
வீட்டு சாப்பாடு - 24

வீடற்றவர்களாக, வீட்டு சாப்பாடும் வீட்டுத் தூக்கமும் இழந்தவர்களாக, ரோட்டோரங்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்களை எதிர்பார்த்து குழந்தைகளோடு காத்திருப்பவர்களாக ஆகிப்போன துயர்மிகு நாட்களை இப்போது நாம் கடந்துகொண்டிருக்கிறோம். புதுமைப்பித்தன் சென்னை நகரம் மாநகரமாக உருமாறிக்கொண்டிருந்த 1930-களில் ஒரு கதை எழுதினார். ‘மகா மசானம்’ என்று அதற்குத் தலைப்பிட்டார். வேறோர் அர்த்தத்தில் அவர் எழுதியிருந்தாலும், இன்று நூற்றுக்கணக்கான மக்கள் உணவின்றி மருத்துவ உதவியின்றி மரணமடைந்த மகா மயானமாகத்தான் சென்னை ஆகியிருக்கிறது.

எனக்கு சுனாமி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதும் இப்படி எல்லாம்தான் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர் படை, அப்போது செய்துகொண்டிருந்த பணிகளைப்பற்றி எழுத்தில் பதிவு செய்வதற்காக, அந்தப் பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். மீன் இல்லாமல் ஒருவேளை உணவைக்கூட மீனவ மக்களால் சாப்பிட முடியாது என்பதை, அப்போதுதான் அறிந்துகொண்டேன்.ஆனால், அவர்களுக்குப் பல பகுதிகளிலில் இருந்தும் மக்கள் பெட்டி பெட்டியாகத் துவரம் பருப்பும் சாம்பார் பொடியும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்போதும், நடுத்தரவர்க்கத்தினர் வாழும் பகுதிகளில், உணவுப்பொட்டலங்கள் தேவைப்படாத வீடுகளுக்கும், சில அமைப்பினர் பொட்டலங்கள் வழங்கியதை வடசென்னை-கொடுங்கையூர் பகுதி நண்பர்கள் தெரிவித்தார்கள்.

வீட்டு சாப்பாடு - 24

பேரிடர் காலத்தில் எங்கு, என்ன மாதிரியான தேவை இருக்கும் என்பதைக் கணக்கிட்டு ஒருங்கிணைப்பதே, மிக முக்கியமான பணி.

அதிலும், உணவு பற்றிய ஞானம் மிக மிகத் தேவை. எல்லோருக்கும் புளியோதரை அல்லது லெமன் சாதம் என்பதுதான் எளிதாகத் தயாரிக்கக்கூடியதாகவும் பொட்டலமாக்கி விநியோகிக்கத் தோதானதாகவும் இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதாக அந்த உணவு இருப்பது இல்லை. இந்த முறை பல இடங்களில் ஆங்காங்கே அடுப்புக்கூட்டி சாம்பார் தயாரித்து, உணவு வழங்கியதைப் பார்க்கச் சற்று ஆறுதலாக இருந்தது.

எனினும், தொடர்ந்து ஈரத்திலேயே உழல வேண்டிய சூழலில், எல்லோருமே எளிதில் நோய்களுக்கு இரையாகும் நிலையில் இருப்பார்கள். முதியவர்கள், குழந்தைகள் பற்றியும் உடல்நலம் குறைந்த மக்கள் பற்றியும் கவனம்கொண்டு, அவர்களுக்கான உணவையும் தனியாக நாம் தயாரிக்க வேண்டும். மழை இல்லாமல் வெயில் அடித்தால், இதை எல்லாம் யோசித்துச் செய்ய முடியும். மழைக்கு நடுவில் நிவாரணப் பணியாற்றும் மகத்தான மனிதர்கள், இதை எல்லாம் கவனத்தில்கொள்வது சிரமம்தான்.

இரண்டு, மூன்று நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும்படியான உணவு வகைகள் நம்மிடம் குறைவு. அந்தக் காலத்தில் எங்கள் கரிசல் வட்டாரத்தில், கோயில், குளங்களுக்குக் குடும்பத்தோடு செல்பவர்கள், பெரும்பாலும் புளி சாதம் எனப்படும் புளியோதரையைத்தான் கட்டிக்கொண்டு செல்வார்கள். தயிர் சாதம் கொண்டுபோனால், கொஞ்சம் தயிர், நிறைய பால் சேர்த்துக் கிண்டுவார்கள். மறுநாள் சாப்பிடும்போது, ரொம்பப் புளித்துவிடாமல் இருக்க அது உதவும். லெமன் சாதம் என்பது எல்லாம் அப்போது, அறிமுகம் ஆகியிருக்கவில்லை. நகர்ப்புறம் வரும்போதுதான் கடைகளில் லெமன் சாதத்தை நாங்கள் பார்த்தோம். மணற்புயல் வீசும் அரபுப்பகுதி மக்களின் பயணங்களில் உருவானதுதான் பிரியாணி என்பார்கள்.

வீட்டு சாப்பாடு - 24

ஆதி மனிதர்கள் அன்றன்று வேட்டையாடி, அன்றன்று சுட்டு, அப்படியே பகிர்ந்துண்டு வாழ்ந்த காலம் இருந்தது. மிச்சம் வைத்தால் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பமும் அன்று இல்லை.  உப்பும் எண்ணெயும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், உபரியாக மிஞ்சும் மாமிசம் மற்றும் இதர உணவு வகைகளைப் பதப்படுத்தி, வெயிலில் காயவைத்துப் பாதுகாக்கும் பழக்கம் வந்தது.இன்றைக்கும் எங்கள் பக்கத்தில், கிராமப்புறக் கோயில்களுக்கு கிடா வெட்டிப் பொங்கல் வைக்கும்போது, எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். கோயில் வளாகத்தைவிட்டுக் கிளம்பும்போது, சட்டியில் எதுவும் மிஞ்சக் கூடாது. வீட்டுக்கு எதையும் எடுத்துவரக் கூடாது என்கிற ஐதீகம் புழக்கத்தில் இருக்கிறது. இது அன்றைய வேட்டைக்கால மனநிலையின் மிச்சமாகக்கூட இருக்கலாம்.

சோற்றில் உப்புப் போட்டுச் சமைக்கும் தொழில்நுட்பம்கூட உணவைப் பாதுகாக்கும் ஒரு முறைதான். அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள், சமைக்கும்போதே சோற்றில் உப்புப் போட்டுச் சமைப்பதைப் பார்க்கிறோம். பெண்கள், வெளி வேலைகளுக்குப் போகாமல், வீட்டிலேயே இருக்க நேர்ந்த சமூகங்களில், அவ்வப்போது சமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், உப்புப் போடாமல் சமைப்பதைப் பார்க்கலாம்.

பேரிடர் காலங்களில்தான் நாம், நம் ஆதிகால மனிதகுல வாழ்வைத் திரும்பிப்பார்க்க நேர்கிறது.வானமே கூரையாக தரையே விரிப்பாக காற்றே உணவாக ஒரு வாழ்வுக்குத் திரும்புகிறோம்.கிடைப்பதை ஏற்றுக்கொண்டு உண்டு வாழும் மனநிலைக்கு வருகிறோம். பிடித்த உணவு, பிடிக்காத உணவு எனத் தேர்வுசெய்யும் வாய்ப்பை நாம் இழக்கிறோம். நமக்குப் பிடித்த உணவு என்பது எப்படி வந்தது என்கிற ஆராய்ச்சியில் மனம் இறங்குகிறது. உலகம் முழுவதும் எல்லோருக்கும் பிடித்த ஒரே உணவுவகை என எதுவும் கிடையாது. அந்தந்த நாட்டில், அந்தந்த நிலப்பரப்பில் என்ன விளைகிறதோ, அதை ஒட்டியே நம் உணவு வகைகளும், வரிசைகளும், வண்ணங்களும், வாசனைகளும் வந்து சேர்ந்தன.

வீட்டு சாப்பாடு - 24

வணிகர்கள் என்கிற ஒரு வர்க்கம்தான் கடல் தாண்டியும் மலைகள் தாண்டியும் பயணித்துப் பலவகையான பழக்கவழக்கங்களையும் உலகம் எங்கும் பரப்புகிறார்கள்.பண்பாட்டுக் கலப்புக்குப் பெரும் பங்காற்றுகிறார்கள். அரசியல் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் காரணமாகவும் மதரீதியான பெரும் பயணங்கள் காரணமாகவும்கூட கலப்புகள் ஏற்பட்டன. இந்த வணிகக் குழுக்கள் சென்று வந்ததனாலும் பல வகை உணவுவகைகள் இங்கும் அங்கும் பரஸ்பரம் பரவின. இலங்கையின் தேங்காய்ப்பால் சொதி, தென் தமிழகத்துக்கு வருகிறது. ரொட்டியும் சப்பாத்தியும்கூட வந்து சேர்கின்றன.  விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் கடலை எண்ணெய், மிளகாய் போன்றவை தமிழகத்துக்கு வந்தன. அதன் பிறகே நமக்கு பஜ்ஜி, வடை, மிக்ஸர் போன்ற பொரித்த உணவுவகைகள் கிடைக்கின்றன.

ஐரோப்பியர்களின் வருகையுடன் பிரெட், பன், ஜாம் எல்லாம் வந்தன. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உணவுப்பண்டங்களும் தமிழகத்துக்கு வந்தன. இங்கிலாந்து நாட்டின் உணவுப் பண்பாடும் சாப்பாட்டு மேசைகளும் நம் வீடுகளுக்குள் வந்து சேர்ந்தன.

இப்படியாக நம்முடைய தட்டில் இன்று நம் வீட்டு சாப்பாடாக விழும் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. உலகமயப் பொருளாதாரம், உலக மக்கள் எல்லோரையும் அதன் தயாரிப்புகளைத் தின்னும் பிராணிகளாக நம்மை மாற்ற முயல்கிறது. மதவெறி அரசியலார் நம்மை ஒற்றை உணவுக் கலாசாரத்துக்குள் தள்ளுகிறார்கள். நம் வீட்டு சாப்பாட்டில் கைவைக்கும் இந்த இருவகை அத்துமீறல்களையும் முறியடித்து, நமக்கே உரிய பன்முகப்பட்ட நம் உணவுப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம். நம் சமையலறைக்குள் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?

முற்றும்.

படங்கள்: மீ.நிவேதன், மா.பி.சித்தார்த்

வறுத்தரைக்கும் துவையல்கள்

பயண காலங்களில் வெளியூர் செல்லும்போது கொண்டுசெல்வதற்கான துவையல் வகைகளில் ஒன்று தேங்காய்த் துவையல். தேங்காய்த் துவையல் சாதாரணமாக சீக்கிரம் கெட்டுவிடும். ஆகவே, ஒரு மூடித் தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். 10 மிளகாய் வத்தல்களை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உடைத்த, தோல் நீக்காத உளுத்தம்பருப்பை மூன்று மேசைக் கரண்டி அளவு வாணலியில் வறுத்து எடுக்க வேண்டும். உரித்த வெள்ளைப் பூண்டு நாலு பல், புளி அரை எலுமிச்சை அளவுக்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். துருவிய தேங்காயையும் லேசாக எண்னெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேற்சொன்ன எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால், துவையல் தயார். இதை மீண்டும் சற்று நேரம் வாணலியில் போட்டு நீர் வற்றச்செய்து கொள்ளலாம். தாக்குப்பிடிக்கும் துவையல் என்று இதைச் சொல்லலாம். மறுநாள் வரை கைபடாமல் எடுத்துச் சாப்பிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு