Published:Updated:

``அடிக்கிற வெயிலுக்கு நம்ம ஊரு நீராதான் பெஸ்ட்!" - எப்படி தயாராகிறது?

நீர்ச்சத்து குறையும்போது நாம் வெப்பத்தை தணிக்கத் தண்ணீரையும், குளிர்ச்சியான பானங்களையும் குடிப்போம். அப்படி அருந்தும் பானங்கள் ரசாயனங்கள் கலந்ததாக இருந்தால் அதுவும் உடல்நிலையை நிச்சயமாகப் பாதிக்கும்

``அடிக்கிற வெயிலுக்கு நம்ம ஊரு நீராதான் பெஸ்ட்!" - எப்படி தயாராகிறது?
``அடிக்கிற வெயிலுக்கு நம்ம ஊரு நீராதான் பெஸ்ட்!" - எப்படி தயாராகிறது?

``உணவே மருந்து என்ற வாக்கியத்தை உருவாக்கி, அதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்கள் நம் முன்னோர்கள்.  ஆனால், இப்போது நாம் உண்ணும் உணவில் இருந்து பயன்படுத்தும்  பொருள்கள் வரை எல்லாம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டவை, அவை உடலுக்குத் தீங்கானவை என்று தெரிந்தும் நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவசரகால  உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இயற்கையின் எல்லா காலநிலைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி நம் உடல் அமைப்பு இருந்தாலும், சில காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, நாம் தான் உடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  நீர்ச்சத்து குறையும்போது நாம் வெப்பத்தை தணிக்கத் தண்ணீரையும், குளிர்ச்சியான பானங்களையும் குடிப்போம். அப்படி அருந்தும் பானங்கள் ரசாயனங்கள் கலந்ததாக இருந்தால் அதுவும் உடல்நிலையை நிச்சயமாகப் பாதிக்கும். எனவே, நாம் அவற்றைத் தவிர்த்து, இயற்கையின் வரப்பிரசாதங்களான நன்னாரி, இளநீர், நுங்கு, கம்மங்கூழ், பானகம், நீரா போன்றவற்றை எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை தரும். அதிலும் சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் நீரா  உடலுக்கு அதிகமான நன்மை தருவதாக இருக்கிறது.

நீரா, தென்னை மர பாலையை சீவி விட்டு அதில் வடியும் நீரைக் குளிர்குடுவை ( ice box) மூலம் மரத்தில் இருந்தே சேகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீர் போல கேரளாவில் தென்னையிலிருந்து நீரா எடுக்கப்படுகிறது. இப்போது அதற்கான அனுமதி தமிழ்நாட்டிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளா நீராவுக்காக சிறப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் (coconut Development Board) மூலம் நீரா உற்பத்தியை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கிறது. கேரள மாநில அரசு நீரா இறக்கப் பயிற்சி பெறும் ஒரு நபருக்கு 10 ஆயிரம் ரூபாய்  மானியம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. தவிர, ஒவ்வொரு தேங்காய் உற்பத்தியாளர்களுக்கும் மானியம் தர ரூ10 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவையில் நீரா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது, கேரள அரசாங்கத்தின் நீரா தயாரிப்பு சான்றிதழ் (technician certificate ) பெற்றுத் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தமிழக மக்களும் இதற்கு வரவேற்பு கொடுத்தும் வருகிறார்கள். கோடைக்காலங்களில் இயற்கையின் இந்தப் பரிசும் இனிமையாகத்தான் இருக்கும்.  நீரா சாக்லெட், தேன், சர்க்கரை , வெல்லம் போன்ற நிறைய வழிகளில் பயன்படுகிறது.  நீராவிலிருந்து  தயாரிக்கப்படும் சர்க்கரையானது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியம் ( coconut Development Board) கணக்கெடுப்பின்படி, உலக அளவில் பிலிப்பைன்ஸ் 35 % ( Phillipines), இந்தோனேஷியா 18%( Indonesia), தாய்லாந்தில் 22% (Thailand), மலேசியாவில் 8% (Malaysia), ஸ்ரீ லங்காவில் 14% ( Sri lanka) நீரா தயாரிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் எல்லாம் தென்னை அதிகம் வளர்கின்றன என்பதும் முக்கியமான காரணம். இலங்கையில் தயாரிக்கப்படும் நீராவை இரண்டு வருடம் வரை பதப்படுத்தி பயன்படுத்தலாம்.

தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் நீரா ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது, இந்த ஆறுமாத இடைவெளி குருத்து வளர்ச்சியடைவதற்காக.  இது உடலுக்கு குளிர்ச்சியளிப்பதோடு, இதில் உள்ள சத்துகளான வைட்டமின்  சி, வைட்டமின் இ, கால்சியம் (calcium), லோரிக் ஆசிட் (lauric acid),  நம் உடலைச் சோர்வடையாமலும் வைக்கிறது. இதில் சர்க்கரையின் அளவு,  Glycemic index  எனப்படும், ரத்தத்தின் சர்க்கரை அளவு 35% மட்டுமே இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் நீராவை எடுத்துக்கொள்ளலாம். நீராவில் புளித்த நீரா, புளிக்காத நீரா என இரண்டு வகை இருக்கிறது. 

உண்மையில் இதுபோன்ற நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப, நம் சொந்த மண்ணில் தயாரிக்கப்படும் உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வதால்  நம் உடலையும், மனதையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சீராக வைத்துக்கொள்ள பெரிதும் சிறந்ததாகும்.