Published:Updated:

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருக்கு இவ்வளவு மகத்துவமா?

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருக்கு இவ்வளவு மகத்துவமா?
வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருக்கு இவ்வளவு மகத்துவமா?

இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்' என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல்நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது.  

வெண்டைக்காயில் உள்ள சத்துகள், மருத்துவ குணங்கள் குறித்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவர் ஜீவா சேகர். 

```வாயோ வெண்டைக்காய், கையோ கருணைக்கிழங்கு...' என்று ஒரு பழமொழி உண்டு. வெண்டைக்காயைப்போல வளவளவென்று  பேசி

கருணைக்கிழங்கைப்போல எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறது இந்தப் பழமொழி. வெண்டைக்காய் வளவளப்பானது மட்டுமல்ல, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அற்புத மருத்துவத்தன்மை நிறைந்தது. 

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும். ஆனால், உணவு செரிமானத்துக்குப் பிறகு, இது கரையா நார்ச்சத்தாக மாறுவதால் குடலைப் பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத் திரவத்தை அருந்தினால் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும். எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.

வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, இந்த நீரை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும். முற்றிய வெண்டைக்காய் மூன்று, ஒரு தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சுவாசம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவது நல்லது. குறிப்பாக ஆஸ்துமா கோளாறு சரியாகும். வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரைச் சேர்த்துக் குடித்தால் இருமல், நீர்க்கடுப்பு,  வெள்ளைப்படுதல் சரியாகும். வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும். மலச்சிக்கலும் தீரும். 

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வை மேம்படும். 

வெண்டைக்காயில் ஆக்சலேட்  அதிகமுள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். கல் பிரச்னையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். லேசாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்'' என்கிறார் ஜீவா சேகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு