Published:Updated:

பாலில் டிடெர்ஜென்ட் கலப்படம்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

பாலில் கலப்படம் செய்யப்படும் பொருள்கள் மக்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை.

பாலில் டிடெர்ஜென்ட் கலப்படம்... அதிர்ச்சி ரிப்போர்ட்!
பாலில் டிடெர்ஜென்ட் கலப்படம்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

ந்தியாவின் ஒரு நாள் பால் தேவை, 14.66 கோடி லிட்டர். நடப்பாண்டில் மார்ச் 18-ம் தேதி வரை உள்ள நிலவரம் இது. நாள் ஒன்றுக்கு இந்தியர் ஒருவர் 480 கிராம் பால் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்களை உண்கிறார்.  நெய், மோர், தயிர், சாக்லேட், ஐஸ்க்ரீம் என ஏதாவது ஒரு பொருள்ரீதியில் நாள் ஒன்றுக்கு 480 கிராம் பால் இந்தியர்களின் உடலில்  சேர்கிறது. சர்வதேச அளவுடனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்தியர்களின் பால் நுகர்வு வெகு குறைவு. ஆண்டுக்கு இந்தியர்கள் சராசரியாக 97 லிட்டர் பால் குடிக்கிறார்கள் என்றால், அமெரிக்கர்கள் 281 லிட்டர் பாலும், ஐரோப்பியர்கள் 281 லிட்டர் பாலும் குடிக்கின்றனர். 

உலகிலேயே பால் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடு, இந்தியா. 1997-ம் ஆண்டு முதல், இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு, 400 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 42 சதவிகிதம் அதாவது 160 மில்லியன் லிட்டர் நீர் வடிவில் அருந்தப்படுகிறது. 240 மில்லியன் லிட்டர் பால், சாக்லேட் உள்ளிட்ட டெய்ரி பொருள்கள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அமுல், நந்தினி கூட்டுறவு நிறுவனங்கள் பால் விற்பனையில் அமோக லாபம் ஈட்டுவதோடு, டெய்ரி பொருள்கள் விற்பனையிலும்  நல்ல லாபம் பார்க்கின்றன. இந்தியாவில் பால் சார்ந்த பொருள்கள் விற்பனையில் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து  55 சதவிகிதச் சந்தையைத் தக்கவைத்திருக்கின்றன.

இப்போது விஷயம் இதுவல்ல. இப்படியாகத் தயாரிக்கப்படும் பால் பொருள்களில் 67 சதவிகிதம் கலப்படம் என்கிற அதிர்ச்சித் தகவலை இந்திய  உணவுத் தரக் கட்டுப்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. 

அக்டோபர் 8-ம் தேதி இந்திய தரக் கட்டுப்பாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  `தேசிய அளவிலான பால் கலப்பட ஆய்வு, கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. பொதுவாக இந்தப் பொருள்களில் சலவைக்குப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட்கள் அதிகளவில் கலக்கப்படுகின்றன. தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில்தான் பாலில் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலின் கெட்டித்தன்மைக்காகவும் நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் யூரியா, குளூகோஸ், பார்மாலின் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பொருள்களால் மனிதர்களின் வயிற்றுப்பாகம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம். பாலில் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருள்கள் உடலின் பல பாகங்களுக்குத் தீங்கு விளைவிப்பவை. குழந்தைகள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்.

உலகச் சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தில் விழித்துக்கொண்டு, மத்திய அரசைக் கடுமையாக எச்சரித்துள்ளது. பாலில் கலப்படத்தைத் தவிர்க்கவில்லை என்றால், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 87 சதவிகித மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளது.

``வழக்கமாக, பாலில் தண்ணீர் கலப்பார்கள். இதனால் வியாபாரிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைத்தாலும் மக்களின் உடல்நலத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. தற்போதோ, பாலில் தண்ணீரை மட்டுமல்லாமல் லாப நோக்கத்துக்காக உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருள்களைச் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது'' என்று இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டுக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மோகன்சிங் அதுவாலியே, ``பொதுவாக பாலில் சோடா, சோப் டிடெர்ஜென்ட், வெள்ளை பெயின்ட், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் போன்றவற்றைக் கலக்கின்றனர். பாலில் மட்டுமல்ல கோதுமையிலும் கலப்படத்தில் ஈடுபடுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார். 

குழந்தைகள், தாய்ப்பால் அருந்துகின்றனர். வளர்ந்தவர்கள் பசும்பால் குடிக்கிறோம். டீயிலிருந்து மோர் வரை பால், நம் அன்றாட வாழ்வில்  கலந்துவிட்ட ஒன்று. ஆனால், அதுவே விஷம் என்றால் எங்கே போவது?