Published:Updated:

குளிர்கால உடல் அசதியை நீக்கும் மட்டன் ரெசிப்பிகள்!

வாரம் ஒருமுறை மிளகு சேர்த்த மட்டன் எலும்பு சூப் குடிப்பது உடம்பில் இருக்கிற கபத்தை நீக்கும்.

குளிர்கால உடல் அசதியை நீக்கும் மட்டன் ரெசிப்பிகள்!
குளிர்கால உடல் அசதியை நீக்கும் மட்டன் ரெசிப்பிகள்!

குளிர்காலங்களில் உடல் அசதி, கை கால் வலி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே சற்று சோர்வாகத்தான் இருப்பார்கள். வார இறுதியில் கீழேயுள்ள மட்டன் சூப், சாறு மற்றும் குழம்பைச் சாப்பிட சோர்வு நீங்கி தெம்பு ஆவார்கள்... டிரை பண்ணிப் பாருங்க.

மட்டன் சூப்

தேவையானவை:

மட்டன் எலும்புக்கறி - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 2 பல்

தக்காளி - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 2 சிட்டிகை

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு    

செய்முறை: 

எலும்புக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை  ஒன்றிரண்டாகத் தட்டிவைக்கவும். தேங்காய்த் துருவலை பால் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து... பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி மட்டனையும் சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, உப்புச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி `வெயிட்’ போட்டு 6 விசில் விட்டு, தீயைக் குறைத்து வைத்து 2 விசில் விட்டு நிறுத்தவும். ஆவி விட்டவுடன் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்தால்... சுவையான மட்டன் சூப் ரெடி.

100 கிராம் மட்டனுக்கு 5 டம்ளர் சூப் செய்யலாம்.

மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

தேவையானவை:

எலும்புள்ள மட்டன் துண்டுகள் - 150 கிராம்

முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு

கேரட் - ஒன்று

தக்காளி - 2

பிரிஞ்சி இலை - ஒன்று

மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒன்றில் பாதி

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய்- 2

இஞ்சி - ஒரு துண்டு

 பூண்டு - 6 பல்

 மல்லித்தூள் (தனியாத்தூள் ) - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு 

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 தண்ணீர் - ஒன்றரை லிட்டர்

செய்முறை:

மட்டனைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, சேர்த்து நிறம் மாற வதக்கி, முருங்கைக் கீரையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

கொடைக்கறிக் குழம்பு

தேவையானவை:

 மட்டன் -  முக்கால் கிலோ

 சின்ன வெங்காயம் - 5 

 தக்காளி - 2

 உருளைக்கிழங்கு - 2 

 முருங்கைக்காய் - ஒன்று

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 வனஸ்பதி - ஒரு டீஸ்பூன்

 சோம்பு - ஒரு டீஸ்பூன்

 பட்டை - சிறிய துண்டு

 கிராம்பு - 2 

 ஏலக்காய் - 2

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டேபிள்ஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 கறிமசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனைச் சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வனஸ்பதி ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். இதே வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இனி, நறுக்கிய மட்டன் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும். இத்துடன் கறிமசாலாத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.