Published:Updated:

குளிர்காலத்தில் நெல்லிக்காயைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டுமா? மருத்துவர் விளக்கம்

``பெரிய நெல்லிக்காய் ஏற்கெனவே சுவாசக்குழாயில் இருக்கிற சளியை வெளியேற்றுமே தவிர,  குளிர் காலத்திலும் சளிப் பிடிக்காது.''

குளிர்காலத்தில் நெல்லிக்காயைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டுமா? மருத்துவர் விளக்கம்
குளிர்காலத்தில் நெல்லிக்காயைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டுமா? மருத்துவர் விளக்கம்

பெரிய நெல்லிக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. கடைத் தெருவுக்குப் போனாலே பச்சைப்பசேல் எனக் கண்களைப் பறிக்கின்றன. ருசிக்காமலேயே காது வரை புளிப்புச்சுவை ஜிவ்வென்று ஏறுகிறது. விட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தருவதில் நம்பர் ஒன். 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்பதெல்லாம் ஓகே. ஆனால், பனியும் குளிரும் கடைவாய்ப் பற்கள் வரை கிடுகிடுக்கச் செய்கிற இந்த சீசனில் பெரிய நெல்லிக்காயைக் குழந்தைகளுக்குத் தரலாமா? அப்படியே தந்தாலும் குழந்தைகள் விரும்புகிறபடி எப்படியெல்லாம் தரலாம் என்று இயற்கை மருத்துவர் யோ.தீபாவிடம் கேட்டோம். 

தாராளமாகச் சாப்பிடலாம்..!

பனிக்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா; அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா என்கிற சந்தேகம் எல்லா அம்மாக்களிடமும் இருக்கிறது. ஆனால், பனிக்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது என்றால், ஏன் இந்த சீசனில் நெல்லிக்காய் காய்க்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? இந்தக் காலத்தில்தான் தொற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகத் தேவைப்படுவதால்தான் இயற்கையே அந்த சீசனில், பெரு நெல்லிக்காயைக் காய்க்க வைத்திருக்கிறது. சீசனலில் வருகிற காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதற்கும் இதுதான் காரணம். 

 எவ்வளவு சாப்பிடலாம்?

10 வயதுக்குள் இருக்கிற குழந்தைகள் பாதியளவு நெல்லிக்காய் சாப்பிட்டாலே போதும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால், இந்த சீசனில் நாளொன்றுக்கு ஒரு நெல்லிக்காய் தாராளமாகச் சாப்பிடலாம். மாலை 6 மணிக்கு மேலே நெல்லிக்காய் சாப்பிடக்கூடாது.   

என்னென்ன நன்மைகள் செய்யும்?

* குளிர் காலத்தில் குழந்தைகளுக்குக் தொற்றுநோய்கள் அதிகம் வரும். வயதுக்கு ஏற்றபடி பெரு நெல்லி சாப்பிட்டு வர, எந்தவித இன்ஃபெக்‌ஷனும் வராது.    

* குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இதனால், அவர்களின் வாழ்நாள் கூடும்.  

* ஏற்கெனவே சுவாசக்குழாயில் இருக்கிற சளியை வெளியேற்றுமே தவிர, குளிர் காலத்திலும் சளிப் பிடிக்காது. 

* நம்முடைய உடம்பானது, இரும்புச்சத்தைக் கிரகிக்க விட்டமின் சி அவசியம். அந்த விட்டமின் சி பெரிய நெல்லிக்காயில் அதிகமாக உள்ளது.     

* குழந்தைகள் பசி எடுத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் வயிற்றில் இருக்கிற பூச்சியெல்லாம் மலம் வழியே வெளியேறி விடும். 

குழந்தைகளுக்கு எப்படித் தரலாம்?

* பிள்ளைகளின் ஸ்கூல் வாட்டர் பாட்டிலில் ஒரு துண்டு நெல்லிக்காயைப் போட்டுவிட்டால்கூட போதும். அதில் இருக்கிற சத்துகள் தண்ணீரில் இறங்கி விடும். பிள்ளைகளும் புளிப்புச்சுவை தெரியாமல் குடித்துவிடுவார்கள்.

*  நெல்லிக்காயைக் சாப்பிட மறுக்கும் பிள்ளைகளுக்கு, நாளொன்றுக்குப் பாதியளவு நெல்லிக்காயை இடித்து, சாறெடுத்து அத்துடன் தேனில் கலந்து கொடுக்கலாம். அல்லது இரவே சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஊறவைத்து காலையில் தரலாம். ஆனால், இனிப்பாகக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுகிறார்களே என்று, கடைகளில் கிடைக்கிற சர்க்கரையில் ஊறவைத்த நெல்லிக்காய்களைக் கொடுத்தீர்கள் என்றால், சளிப் பிடிக்குமே தவிர, போகாது. 

* கைப்பிடி புதினாவுடன், ஒரு நெல்லிக்காய், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து ஜூஸாகத் தரலாம். 

* தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காயச் சட்னி என எல்லா வகை சட்னிகளுடனும்  புளிக்குப் பதிலாக ஒரு நெல்லிக்காயை உடன் வைத்து அரைத்துத் தரலாம், நெல்லிக்காய் இருப்பதே தெரியாமல் பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். 

* எல்லா வகையான ஃபிரெஷ் ஜூஸ்களிலும் நெல்லிக்காய் சாற்றைக் கலந்து தரலாம். 

* நெல்லிக்காயை விரும்பிச் சாப்பிடுகிற பிள்ளைகள் என்றால், அதைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய்கறி சாலடுடன் கலந்து தரலாம். 

பெரிய நெல்லிக்காயை உங்கள் குழந்தைகளிடமிருந்து தள்ளி வைக்க வேண்டாம்.