Published:Updated:

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

Published:Updated:
அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை
அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

றிவேப்பிலையின் பசுமையில் ஒளிந்திருக்கும் இயற்கையின் செறிவுகள், உணவை மேன்மையாக்கும் நலக்கூறுகள்! இலையின் ஒவ்வொரு மெல்லிய நரம்பும் உண்பவரின் ஆயுளைக் காப்பதற்கான முகவரிகள்!

‘நரை, திரை, மூப்பு’ ஆகியவற்றைத் தள்ளிப்போடும் இயற்கையின் பேரானந்தமான கறிவேப்பிலைக்கு, கறிவேம்பு, கறியபிலை, கருவேப்பிலை போன்ற வேறு பெயர்களும் உள்ளன. செரிமானத்தைத் துரிதமாக்கி, உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் அஞ்சறைப் பெட்டியின் அச்சாணி கறிவேப்பிலை.

கறிவேப்பிலை இலைகளில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசியமான கூறுகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள `கார்பசோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும். பீட்டா-கரோட்டீன்களுடன் வைட்டமின் சி-யையும் நிறைவாகக்கொண்டுள்ளது கறிவேப்பிலை. நீரிழிவால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கறிவேப்பிலை சிறந்தது என ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

நல்ல கொழுப்பை அதிகரித்து, டிரை கிளிசரைடுகளின் அளவை கறிவேப்பிலை குறைக்கும். குடல் பகுதியின் ஆரோக்கியத்தை அதிகரித்து, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கறிவேப்பிலை குறைக்கும் என்கிறது ஆராய்ச்சி. நினைவுத் திறனை அதிகரிக்கவும், நுண்புலத்துடன் செயல்படுவதற்குக் காரணமான மூளையின் குறிப்பிட்ட பகுதிகளைக் கறிவேப்பிலை தூண்டும்.

கறிவேப்பிலையின் மணமும் சுவையும் எச்சிலின் சுரப்பை அதிகரித்து, செரிமானத்துக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையை அரைத்து, எலுமிச்சைச்சாற்றுடன் கலந்து குடித்தால், பயணங்களின்போது வாந்தி, குமட்டல் உணர்வுகள் காணாமல்போகும். கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் வரும் குமட்டல், உணவு எதுக்களித்தல், வாந்தி, அஜீரணம் போன்ற குறிகுணங்களைக் குறைத்து, சீரான செரிமானத்தைத் தருவதுடன், இரும்புச் சத்தையும் அள்ளிக்கொடுக்கக்கூடியது கறிவேப்பிலை. இதைப் பொடியாக்கி, நல்லெண்ணெய்விட்டுக் குழைத்து, தினமும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது உடல்நலத்துக்குத் தொடக்கப்புள்ளி!

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

‘வாயினருசி வயிற்றுளைச்சல் ஈடுசுரம்…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல், கறிவேப்பிலையை உணவாகப் பயன்படுத்தி னால் சுவையின்மை, வயிற்றுப் பொருமல், காய்ச்சல் போன்றவை மறையும் என்பதைக் குறிப்பிடுகிறது. கறிவேப்பிலையின் ஈர்க்குகளைப் பொடியாக்கி சமையலில் சேர்த்துவந்தால், ரத்த சோகைக்கான குறிகுணங்கள் மறையும்.

கறிவேப்பிலையை உலர்த்திப் பொடித்து மிளகு, சீரகம், சுக்குத்தூள், சோம்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் கலந்து, நெய்விட்டு குழைத்துச்சாப்பிட்டால் வயிறு மந்தம், மலபந்தம், வாய்வுக்கோளாறுகள் நீங்கி எளிதாகச் செரிமானமாகும். மலக்கட்டு பிரச்னையால் அவதிப்படுபவர்கள், கறிவேப்பிலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சாதத்துடன் குமட்டிக்காய், கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து, அப்போதைக்குக் கடைந்தெடுத்த வெண்ணெயில் வறுத்து மணம் கமழச் சாப்பிடும் உணவு, ஒருகாலத்தில் தென்னிந்தியாவில் பிரசித்திபெற்றது. பிஞ்சு மாதுளையுடன் கறிவேப்பிலை சேர்த்து, வெண்ணெய்விட்டு வதக்கிப் பரிமாறப்படும் சிற்றுண்டி பற்றிய சங்க இலக்கியப் பதிவு, கறிவேப்பிலைக்குப் பெருமை சேர்க்கிறது. இந்திய சமையல் கலாசாரத்தின் தாக்கத்தால், இங்கிலாந்து உணவு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கறிமசாலாக் கலவையில் கறிவேப்பிலை இடம்பிடித்துள்ளது.

உடலில் அதிகரித்த பித்தத்தை சாந்தமடையச் செய்ய கறிவேப்பிலைத் துவையல் பலனளிக்கும். சிறுவர்களின் பசியை அதிகரிக்க, கறிவேப்பிலையுடன் ஒரு மிளகு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி, வெந்நீரில் கலந்து சிறிதளவு கொடுத்தால், உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். கறிவேப்பிலைப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்து அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.
 
கறிவேப்பிலை ஈர்க்குடன் சுக்கு, சீரகம், ஓமம் சம அளவு சேர்த்து நீர் விட்டுக் காய்ச்சி, சுண்டச்செய்த குடிநீரில் தேன் கலந்து அருந்தலாம். செரியாமையுடன் வாய்வுக்கோளாறு சேர்ந்து நம்மை அவதிப்படுத்தும்போது, இது கைகண்ட மருந்தாகச் செயல்படும். அக்கால பற்பொடிகளில் உப்பு, துவர்ப்பு சேர்த்துக் கொடுக்கும் பொருள்களுடன் கறிவேப்பிலையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.

கறிவேப்பிலையை அரைத்து, தட்டி உலர்த்திய சிறு வில்லைகளை, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தடவினால் கருமையான, அடர்த்தியான கூந்தலுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். `தலைமுடி அதிகமாக உதிர்கிறதே’ என்று கவலை கொள்பவர்கள், உணவில் கறிவேப்பிலையின் அளவை அதிகரித்துப் பாருங்கள், மாற்றங்கள் நிகழும். இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கறிவேப்பிலையின் துணையிருந்தால் போதும். தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டம் கொடுப்பதோடு, இளநரையை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

உலர்ந்த கறிவேப்பிலைகளைப் பயன்படுத்தினால், அதன் பிரத்யேக மணம் உங்கள் உணவுகளுக்கு உயிர் கொடுக்காது. உயிர்ப்புடன் செயல்படும் அஞ்சறைப்பெட்டியான கறிவேப்பிலைச் செடி உங்கள் இல்லத்தில் இருந்தால், நலத்துக்கு உத்தரவாதம். உணவில் கலந்த கறிவேப்பிலையின் சாரங்களே மிகப்பெரிய அளவில் நன்மைகளைச் செய்யும்போது, அதன் இலைகளையும் தவிர்க்காமல் சுவைத்துச் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை எண்ணிப்பார்ப்பது அவசியம்.

கறிவேப்பிலை… உணவிலிருந்து தூக்கி வீசப்பட வேண்டிய பொருள் அல்ல; வாரி அணைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம்!

கறிவேப்பிலை - கத்திரிக்காய் கடைசல்: வேகவைத்த கத்திரிக்காயுடன் தேங்காய்த் துருவல், நிறைய கறிவேப்பிலை, ஏலம் சேர்த்து எலுமிச்சைச்சாறு அல்லது ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து நன்றாகக் கடைந்து, இறுதியில் சிறிது பச்சைக் கற்பூரம் தூவி பரிமாறுவதே கத்திரிக்காய் - கறிவேப்பிலைக் கடைசல். இது, வித்தியாசமான சுவை அனுபவத்தைக் கொடுக்கும். மன்னர்களுக்கான ராஜ உபசார விருந்தில் இடம்பெற்ற இந்த உணவைப் பற்றி 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசர் பதிவு செய்திருக்கிறார்.

காதி (Kadhi): தயிர் மற்றும் கடலை மாவுக் கலவையுடன் கறிவேப்பிலையை வறுத்துச் சேர்த்து, புளிப்புத் தன்மை நிறைந்த `காதி’ எனப்படும் ரெசிப்பி வடமாநிலங்களில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது ரொட்டி வகைகளுக்குத் தொடு உணவாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை கறிமசாலாப் பொடி: ஒரு கப் கொத்தமல்லி விதைகள், அரை கப் சீரகம், தலா கால் கப் சோம்பு மற்றும் கடுகு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம் போன்றவற்றை மணம் வரும்வரை லேசாக வறுக்கவும். 30 கறிவேப்பிலை, கால் கப் காய்ந்த மிளகாய், இரண்டு டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து நன்றாகக் கலந்துவைத்துக் கொண்டால் காரத் தன்மையுடன், அசைவ உணவுகளுக்குக் கூடுதல் ருசி கொடுக்கும் மசாலாப் பொடி தயார்.

கறிவேப்பிலை வடகம்: கறிவேப்பிலை, உப்பு, மிளகு, கொத்தமல்லி, கிச்சிலிக் கிழங்கு, சாதிபத்திரி போன்றவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். அதை சுண்டைக்காய் அளவு உருண்டையான வடகங்களாக்கி, உலர வைத்து வறுத்துப் பயன்படுத்தலாம். இதனால் பசியின்மை, சுவையின்மை, கழிச்சல், செரிமானக் கோளாறுகள் உடனடியாக மாறும்.

-டாக்டர் வி.விக்ரம்குமார்