Published:Updated:

டாக்டர் நியூஸ்

டாக்டர் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்

தகவல்

டாக்டர் நியூஸ்

தகவல்

Published:Updated:
டாக்டர் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நியூஸ்

எடை குறைக்குமா `டயட் டிரிங்க்ஸ்’?

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை பற்றிய கவலை உலகெங்கும் இருக்கிறது. இதனால் தங்களது உடல் பருமனாகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் ‘டயட் டிரிங்க்ஸ்’ எனப்படும் சர்க்கரை சேர்க்காத குளிர்பானங்களுக்கு மாறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு குறைகிறது. ஆனால், `டயட் பானங்களால் உடல் எடை குறைகிறது என்ற அடிப்படை நம்பிக்கையே தவறு’ என்கிறது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு. 

டாக்டர் நியூஸ்

சுமார் 7,000 குழந்தைகள், பதின் பருவத்தினர் மத்தியில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு மற்றவர்களைவிட அதிக கலோரிகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. உணவுகள் மற்றும் பானங்களின் மூலம் மற்றவர்களைவிட அதிக சர்க்கரையை உட்கொள்வதும் தெரியவந்திருக்கிறது.

எனவே, `டயட் பானங்களைக் குடித்தாலே எடை குறைந்துவிடும்’ என்று நம்பிவிடக் கூடாது. மற்ற உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். அத்துடன் ஒட்டுமொத்த சர்க்கரை அளவு மற்றும் கலோரி எண்ணிக்கையை கவனித்து கட்டுப்படுத்தினால்தான் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோக்கியம், சுவை... எது நல்லது?

ஓர் உணவகத்தில் அருகருகே இரண்டு கிண்ணங்கள் இருக்கின்றன. அவை இரண்டின் உள்ளேயும் ஒரே விதமான உணவுகள்தாம் இருக்கின்றன. ஆனால், கிண்ணத்தின் வெளியே பெயர்கள் மட்டும் வேண்டுமென்றே மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்றின்மீது, ‘ஆரோக்கியமான சாலட்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இன்னொன்றின்மீது, ‘சுவையான கேரட்- வெள்ளரி சாலட்’ என எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில் எதை மக்கள் அதிகம் உண்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் நியூஸ்‘ஆரோக்கியம்’ என்ற சொல்லைப் பார்த்ததும், மக்கள் பொறுப்பாக அதை எடுத்துச் சாப்பிடுவார்கள் என்றுதான் எல்லோரும் எண்ணுவோம். ஆனால், ‘சுவை’ என்ற சொல்தான் எல்லோரையும் அதிகம் ஈர்க்கிறதாம். `ஆரோக்கியமாக உண்பது உடலுக்கு நல்லது’ என்பது தெரிந்திருந்தாலும், ‘இது ஆரோக்கியமானது, இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம். ஆகவே, `ஆரோக்கியமான உணவுகளைக்கூட, சுவையான பெயர்களைக்கொண்டே மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்கிறது லண்டனிலுள்ள உலக வளங்கள் கழகம் நடத்தியுள்ள ஓர் ஆய்வு. அதாவது, எதைச் சாப்பிடுவது நல்லது என்பதற்கான புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டி, வற்புறுத்திப் பயனில்லை. நல்ல உணவுப்பொருள்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பிடித்த பெயர்கள், வடிவங்களில் எடுத்துச் சொல்லி சாப்பிடச் செய்ய வேண்டுமாம். உணவகங்கள், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல... வீட்டில் சமைப்பவர்கள், குழந்தைகளுக்குப் பரிமாறுபவர்களுக்குக்கூட இந்த நுட்பம் பயன்படும். ஆரோக்கியமான உணவுகளை புதுமையான பெயரில் வழங்கினால் மக்கள் தாங்களே விரும்பிச் சாப்பிடுவார்கள்.

டாக்டர் நியூஸ்

`செகண்ட்ஹேண்ட் ஸ்மோக்’ ஏற்படுத்தும் பாதிப்பு!

புகைபிடிப்பதால் ஒருவருக்கு வரும் நேரடிப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க, ஒருவரது புகைப்பழக்கத்தால் அருகிலுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் புகைபிடிக்கும்போது அதே அறையிலுள்ள மற்றவர்கள் இந்தப் புகையை உட்கொண்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

`செகண்ட்ஹேண்ட் ஸ்மோக்’ (Secondhand Smoke) எனப்படும் இந்தப் புகையால் `உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்படலாம்’ என்கிறது `யூரோ ஹார்ட்கேர்’ (EuroHeartCare) நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வு. அந்த ஆய்வின்படி, புகைபிடிக்கும் ஒருவரோடு வாழும் மற்றவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு 15 சதவிகிதம் அதிகரிக்கிறதாம்.

‘நல்லவேளை, எங்கள் வீட்டில் யாருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை’ என்று நினைக்க வேண்டாம்; அலுவலகத்தில், பேருந்தில் என எல்லோரும் சந்திக்கும் மிகக் குறைவான அளவு `செகண்ட்ஹேண்ட் ஸ்மோக்’கூட பெரிய பாதிப்புகளை உண்டாக்கக் கூடுமாம். எனவே, `புகைபிடிப்பவர்கள் அதிகமுள்ள இடங்களில் புகைபிடிக்காதவர்கள் இருக்கக் கூடாது’ என்கிறார்கள் நிபுணர்கள்.

‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்பார்கள். ‘புகையைக் கண்டால் புறமுதுகு காட்டி ஓடு’ என்கிறது இந்த ஆய்வு!

குழந்தைகளுக்கான தூக்க வழிகாட்டி!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரோக்கிய வழிகாட்டி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய அந்த நெறிமுறைகளைப் பார்ப்போம்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு:

நாள்தோறும் சுமார் 16 மணிநேரம்வரை அவர்களை நன்றாகத் தூங்கவிடலாம். மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தரையில் தவழ்ந்து விளையாட வேண்டும். இன்னும் தவழத் தொடங்காத குழந்தைகள் விழித்திருக்கும் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் குப்புறப் படுத்து விளையாட வேண்டும். அவர்களைப் ப்ராம்/ஸ்ட்ராலர் வண்டிகளில் அல்லது பெற்றோரின் முதுகில் நீண்டநேரம் கட்டிப்போடக் கூடாது. எலெக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தத் தர வேண்டாம். அவ்வப்போது கதைகளைப் படித்துக்காட்டுவது நல்லது.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு:

நாள் முழுவதும் குறைந்தது மூன்று மணி நேரம் ஓடியாடி விளையாட வேண்டும். அதற்கும் அதிகமான நேரம் விளையாடினால், இன்னும் நல்லது. ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர்களை ப்ராம்/ஸ்ட்ராலர் வண்டிகளில் அல்லது வேறு எங்கும் உட்காரவைக்கக் கூடாது. இரண்டு வயதுக்கு மேல் எலெக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தத் தரலாம். ஆனால், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கலாம். மற்றபடி கதைப் புத்தகங்களை அவர்களோடு சேர்ந்து படிக்கலாம். ஒன்று முதல் இரண்டு வயதுள்ள குழந்தைகள் நாள்தோறும் 11 முதல் 14 மணி நேரம் நன்றாகத் தூங்க வேண்டும். மூன்று முதல் நான்கு வயதுள்ள குழந்தைகள் இதைவிட சுமார் ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கலாம்.

பள்ளிகளில் ஆரோக்கிய வாழ்க்கைமுறை!

குழந்தைகளிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்கப்படுத்துவதில் பள்ளிகளின் பங்கு மிக முக்கியம். ஏனென்றால், குழந்தைகள் தினமும் பல மணி நேரம் பள்ளியில்தான் இருக்கிறார்கள். அங்கு கற்றுக்கொள்ளும் பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது பாதிப்புக்குள்ளாக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்கப்படுத்துவதில் தனியார் பள்ளிகளைவிட அரசாங்கப் பள்ளிகள் சிறப்பாகச் செயலாற்றுவது டெல்லி பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மாணவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோல, பள்ளி வளாகத்தில் குப்பை உணவுகளின் பயன்பாட்டைக் குறைப்பதுடன் விளையாட்டு மைதானங்கள், உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் மது, சிகரெட் போன்றவை பள்ளிக்கருகே கிடைக்காமல் தடுக்க வேண்டும் என்ற அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

இளம் வயதிலேயே ஆரோக்கியமான பழக்கங்களைக் கற்றுக்கொண்டால், பிற்காலத்தில் பல்வேறு உடல், மனப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இந்த வழிமுறைகளைப் பள்ளிகள் சிறப்பு கவனம் எடுத்துச் செயல்படுத்துவது நல்லது.

உறுப்பு தானத்துக்கு உதவும் டிரோன்!

உறுப்புதானம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்படுகின்றன. அதே நேரம், உறுப்பைத் தருபவரும் பெறுபவரும் அருகருகே இல்லாதபோது, அதை பத்திரமாகக் கொண்டு சென்று சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வது சவாலாகிறது.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மேரிலாண்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் `டிரோன்’ எனப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். இதை வெள்ளோட்டம் பார்க்கும்விதமாக, பால்டிமோரில் ஒருவரது சிறுநீரகத்தை இன்னோர் இடத்துக்குக் கொண்டு சென்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினார்கள்.

போக்குவரத்துச் சிக்கல் இல்லாமல் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவாகக் கொண்டு செல்லும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், உறுப்பு தானத்தில் உள்ள யதார்த்தமான சிக்கல்கள் தீரும். அதன் மூலம் இன்னும் பல உயிர்களைக் காக்கலாம். அதற்காகவே இந்த டிரோனில் எட்டு மோட்டார்கள் பொருத்தப்பட்டன. ஒன்று பழுதடைந்தால், இன்னொன்று உதவும். அனைத்தும் பழுதடைந்தால்கூட, பாராசூட் மூலம் டிரோன் பாதுகாப்பாகக் கீழே இறங்கும். அதிலுள்ள உடலுறுப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

என்.ராஜேஷ்வர்