Published:Updated:

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!
`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

நாம் அருந்தும் பானங்களில் குளிர்ச்சியூட்டும் ஐஸ்கட்டிகள் சுகாதாரமானதாக, சுத்தமான நீரால் செய்யப்பட வேண்டும். ஆனால், எல்லா இடங்களிலும் சுத்தமான ஐஸ்கட்டி கிடைப்பது சாத்தியமில்லை.

கோடைக்காலம் தொடங்கியதும் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் புதிது புதிதாகக் கடைகள் முளைக்கத் தொடங்கிவிடும். 'ஃப்ரூட் ஜூஸ்', 'கரும்பு ஜூஸ்', 'சர்பத்' என வியாபாரம் களைகட்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கரும்பு என ஜூஸ் எதுவாக இருந்தாலும், பெரும்பாலும் அதில் ஐஸ் சேர்த்துதான் வழங்கப்படும். 'ஐஸ் இல்லாமல் ஜூஸ் குடித்தால் திருப்தி இருக்காது' என்பதைப் பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், அந்த ஐஸ் எந்தத் தண்ணீரில் செய்யப்பட்டது? அதை எங்கிருந்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் என்பதுபற்றி யாரும் கவலைகொள்வதில்லை. 'சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஐஸ்கட்டிகளை நேரடியாக ஜூஸ் போன்ற பானங்களில் கலந்து உட்கொள்ளும்போது கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்படும்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

இதுகுறித்து பொதுநல மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம். 

"கோடைக்காலத்தில் தேவையான அளவு நீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல நாம் குடிக்கும் நீர் சுகாதாரமாக

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

இருக்கிறதா, பானங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டியதும் அவசியம். நாம் அருந்தும் பானங்களில் குளிர்ச்சியூட்டும் ஐஸ்கட்டிகள் சுகாதாரமானதாக, சுத்தமான நீரால் செய்யப்பட வேண்டும். ஆனால், எல்லா இடங்களிலும் சுத்தமான ஐஸ்கட்டி கிடைப்பது சாத்தியமில்லை. ஐஸ்கட்டிகள் சவக்கிடங்களிலிருந்துகூட விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுவதுண்டு. 

சுகாதாரமற்ற நீரையோ, அப்படிப்பட்ட நீரால் தயாரிக்கப்பட்ட பானங்களையோ பருகும்போது கடுமையான உடல் உபாதைகள் உண்டாகும். குறிப்பாக காலரா, டைபாய்டு, போலியோ, கல்லீரல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சுகாதாரக் குறைவான ஐஸ்கட்டிகளை நேரடியாகப் பானங்களில் கலந்து உட்கொள்ளும்போதும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஜூஸ்களை அருந்தியதும் வாந்தி, தொடர்ச்சியாகக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. மருத்துவரால்தான் எந்த வைரஸ் மூலம் பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிக்க முடியும். மேலும், ஜூஸில் ஐஸ் சேர்ப்பதால் எந்த சத்துகளும் கிடைக்கப்போவதில்லை. அதுவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸாக இருந்தால் கூடுதலாகப் பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும். ஜூஸில் ஐஸ் இல்லாமல் அருந்துவதே உடல் நலத்துக்கு நல்லது" என்றார்.   

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தியிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டோம்.

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

"ஐஸ் கட்டிகள் தயாரிப்பதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் தயாரிக்கும் ஐஸ் கட்டிகள் உணவு பயன்பாட்டுக்குத் தரமானவைதானா என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். உணவுக்காகப் பயன்படுத்தும் ஐஸ்கட்டிகள் தூய நீரில் தயாரிக்கப்பட வேண்டும். அதை அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி உறுதி செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற உணவுசார்ந்த நிறுவனங்கள் நடத்தவும், உரிமம் பெறவும் கடுமையான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் அடிக்கடி நேரடி ஆய்வில் ஈடுபட்டு அவை முறையாகத் தயாரிக்கப்படுகின்றனவா என்பதைப் பரிசோதிக்கின்றன. இத்தகைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமானதா, அதில் உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது? சுகாதாரமானமுறையில் ஐஸ் கட்டிகளாக மாற்றப்படுகின்றனவா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தெரியவில்லை. பெரும்பாலான நோய்கள் குடிநீரால்தான் பரவுகின்றன. எனவே, குடிநீர் தொடர்பான ஆய்வுகளை அடிக்கடி நடத்தினால் மட்டுமே சுகாதாரமற்ற ஐஸ்கட்டி பயன்பாட்டைத் தடுக்க முடியும்" என்கிறார் டாக்டர் புகழேந்தி.

மும்பை நகரில் ஹோட்டல்கள், சாலையோரக் கடைகள் உள்ளிட்ட 39 இடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக  உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தது. அப்போது சுமார் 19,000 கிலோகிராம் ஐஸ்கட்டிகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவரிடம் பேசினோம்.  

`ஐஸ் சேர்த்து ஜூஸ் குடிப்பவரா நீங்கள்...' கவனம்!

"தமிழகத்திலும் அவ்வப்போது வரும் புகார்களின்பேரில் இதுபோன்று சுகாதாரமற்ற ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் உணவகங்களில் ஆர்.ஓ வாட்டரில் தயாராகும் ஐஸ் கட்டிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் சாதாரணமாக சாலையோரங்களில் இயங்கும் கடைகளுக்கு குறைந்த அளவே ஐஸ் கட்டிகள் தேவைப்படுவதால் அவர்களாகவே ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம். இவை முறையாக நடக்கிறதா என்பதையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு பரிசோதனை செய்கிறார்கள். அதேபோல, எந்தப் பகுதியிலும் இது போன்ற சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் தயங்காமல், '9444 042322' என்ற உணவு பாதுகாப்பு அலுவலக எண்ணுக்குப் புகார் அளிக்கலாம். வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு