Published:Updated:

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

உமையாள் வைரவன்

பிரீமியம் ஸ்டோரி
சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

அகத்திக்கீரை சூப்

தேவை: அகத்திக்கீரை - அரை கட்டு, தக்காளி - 2 (நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்), சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்ப்பால் - 200 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசி கழுவின நீர் - 200 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

பார்லி துளசி சூப்

தேவை: பார்லி அரிசி - 4 டீஸ்பூன், பார்லிதூள் - 2 டீஸ்பூன், பீன்ஸ் - 50 கிராம் (நறுக்கவும்), கேரட் - 50 கிராம் (நறுக்கவும்), நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, துளசி – 2, மிளகுத்தூள் - 3 டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர்பொடி) - 2 டீஸ்பூன், தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைக்கவும். பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லிதூள் ரெடி. இதை 2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அடுத்து பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேக வைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு உப்பு, பார்லிதூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மாங்காய்த்தூள், மிளகுத்தூள், வெங்காயத்தாள், துளசியைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி துளசி சூப் ரெடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலுமிச்சை மஷ்ரூம் சூப்

தேவை: மஷ்ரூம் - 200 கிராம் (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பூண்டு - 7 பற்கள், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, சோள மாவு (கார்ன் ஃப்ளார்) – ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மஷ்ரூம், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு மீண்டும் வதக்கவும். பின்னர் சோள மாவை ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஊற்றிக்கரைத்து இத்துடன் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், பெருங்காயத்தூள், எலுமிச்சைச்சாறு, வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

பிஞ்சு பாகற்காய் சூப்

தேவை: பிஞ்சு பாகற்காய் - 100 கிராம், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, மோர் - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6 (நறுக்கவும்), தக்காளி - 2 (நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி கழுவிய தண்ணீர் - 200 மில்லி, சோள மாவு (கார்ன் ஃப்ளார்) கரைசல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பிஞ்சு பாகற்காயைச் சுத்தம்செய்து நறுக்கி மோர்விட்டு அரை மணி நேரம் கழித்து மோரிலிருந்து எடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் ஊறவைத்த பாகற்காயைச் சேர்த்து வதக்கிய பின்பு அரிசி கழுவிய தண்ணீர், சோள மாவுக்கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும். வடிகட்டி அல்லது அப்படியே பரிமாறவும்.

வாழைத்தண்டு பச்சைப்பயறு சாலட்

தேவை: வாழைத்தண்டு - 50 கிராம், முளைகட்டிய பச்சைப்பயறு - 20 கிராம், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 20 கிராம், மோர், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சோளம் பச்சைப்பயறு சாலட்

தேவை: வேகவைத்த சோளம் - 40 கிராம், முளைகட்டிய பச்சைப்பயறு - 30 கிராம், சின்ன வெங்காயம் - 5 (நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்), தக்காளி (நறுக்கி விதை நீக்கவும்) - 2, ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த சோளம், முளைகட்டிய பச்சைப்பயறு, நறுக்கிய சின்ன வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு, ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், சீரகத்தூள் அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பீன்ஸ் துளசி சாலட்

தேவை: பீன்ஸ் - 50 கிராம், சின்ன வெங்காயம் - 8, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துளசி இலை – 2, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பீன்ஸ் இளசாக இருக்க வேண்டும். பீன்ஸ், சின்ன வெங்காயம், துளசியை நறுக்கவும். வாணலியில் ஆலில் ஆயில்விட்டு காய்ந்ததும் நறுக்கிய பீன்ஸ், சின்ன வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். அகன்ற பாத்திரத்தில் வதக்கிய பீன்ஸ், சின்ன வெங்காயம், நறுக்கிய துளசி, எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

மொச்சை சாலட்

தேவை: மொச்சை - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, குடமிளகாய் - ஒன்று, ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உலர்திராட்சை - 20 கிராம், உப்பு - தேவைக்கு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி (விதை நீக்கி), குடமிளகாய் அனைத்தையும் நறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உலர்திராட்சை, மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பாலக் ஆப்பிள் சாலட்

தேவை: பாலக் கீரை - 50 கிராம், ஆப்பிள் - ஒன்று (நறுக்கவும்), உலர் திராட்சை - 20 கிராம், எலுமிச்சைச்சாறு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, ஆலிங் ஆயில் - 2 டீஸ்பூன்.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சைச்சாறு, உப்பு, ஆலிவ் ஆயில் கலந்துகொள்ளவும். பரிமாறுவதற்கு முன் நறுக்கிய ஆப்பிள், உலர்திராட்சை, கீரையைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

சுரைக்காய் ரைத்தா

தேவை: சுரைக்காய் - 150 கிராம் (நறுக்கவும்), தயிர் - 200 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, சுரைக்காய் போட்டு வதக்கவும். நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறியபின் தயிர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

சிறுதானிய தோசை வித் வெஜ் கறி

தேவை தோசைக்கு: வரகு அரிசி - 100 கிராம், திணை அரிசி - 100 கிராம், குதிரைவாலி அரிசி - 100 கிராம், சாமை - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 75 கிராம், சிகப்பு அவல் - 50 கிராம், உப்பு தேவைக்கேற்ப.

வெஜ் கறிக்கு: வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, பீன்ஸ் - 50 கிராம், கேரட் - 30 கிராம், குடமிளகாய் - ஒன்று, முட்டைகோஸ் - 3, பட்டை - சிறிதளவு, பூண்டு - 7 பற்கள், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - 2 டீஸ்பூன், உளுந்து - ஒரு ஸ்டீபூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 6 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: அனைத்து அரிசிகளுடன் உளுந்து, அவல் சேர்த்து நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும். காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். இஞ்சி - பூண்டை இடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், குடமிளகாய், முட்டைகோஸை நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு, உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, இடித்த இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கிய பிறகு பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உப்பு போட்டு வதக்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் அரைத்த மசாலாவைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் வெஜ் கறி ரெடி. தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசை வார்த்து, வெஜ் கறியுடன் பரிமாறவும்.

கோதுமை ரவை கிச்சடி

தேவை: கோதுமை ரவை - 200 கிராம், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பீன்ஸ் - 25 கிராம், கேரட் - 25 கிராம், குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 800 மில்லி (ஒரு கப் ரவைக்கு, நான்கு கப் தண்ணீர்).

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பீன்ஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி வதக்கிய பிறகு பீன்ஸ், கேரட், குடமிளகாய் போட்டு வதக்கவும். பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு பின் தண்ணீர் சேர்த்து இரண்டு கொதிவந்தவுடன் கோதுமை ரவையைச் சேர்த்து நன்கு கிளறி, மூடிபோட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கோதுமை ரவை கிச்சடி ரெடி.

வெந்தயக்கீரை கோதுமை பரோட்டா

தேவை: கோதுமை மாவு - 250 கிராம், வெந்தயக்கீரை - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வெந்தயக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, கீரை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர்விட்டு நன்றாக சப்பாத்தி மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக உருட்டி, வட்டமாக தேய்ந்து தோசைக்கல்லில் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, திருப்பிப்போட்டு எடுத்தால் சுவையான வெந்தயக்கீரை கோதுமை பரோட்டா ரெடி.

நெல்லிக்காய் ரசம்

தேவை: நெல்லிக்காய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், பூண்டு - 3 பற்கள், புளி - எலுமிச்சை அளவு (ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும்), கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி - ஒன்று (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வெறும் வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆறியபின் அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காயை நன்றாகக் கழுவித் துருவிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காயைச் சேர்த்து அத்துடன் அரைத்த கலவை, மஞ்சள்தூள், உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். நுரை கட்டி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முருங்கைக்கீரை பொரிச்சக் குழம்பு

தேவை: முருங்கைக்கீரை - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தேங்காய்த்துருவல் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8 (நறுக்கவும்), தக்காளி - ஒன்று (நறுக்கவும்), சாம்பார்பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, முருங்கைக்கீரை போட்டு வதக்கவும். பின் சாம்பார்பொடி, உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் புளிக்கரைசல்விட்டு, அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து இரண்டு கொதிவந்தவுடன் இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை பொரிச்சக் குழம்பு தயார்.

பீர்க்கங்காய் சப்ஜி

தேவை: பீர்க்கங்காய் - 100 கிராம் (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று (நறுக்கவும்), தயிர் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்(தனியா)தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மாங்காய்ப்பொடி (ஆம்சூர் பவுடர்) – ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 20 கிராம், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: முந்திரி, கசகசாவை பத்து நிமிடங்கள் ஊறவைத்து, அதனுடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மாங்காய்ப்பொடி, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் பீர்க்கங்காய் போட்டு வதக்கவும். அத்துடன் அரைத்த தேங்காய்க்கலவை, தயிர் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு மூடி போட்டு இரண்டு கொதிவந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

முள்ளங்கி கோலா

தேவை: முள்ளங்கி - 150 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், சோம்பு - 3 டீஸ்பூன், சீரகம் - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்), எண்ணெய் - 50 மில்லி, கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: முள்ளங்கியைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த பருப்புடன் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், துருவிய முள்ளங்கி, அரைத்த பருப்பு அனைத்தையும் போட்டு அடுப்பைக் குறைந்த தீயில் அரைமணி நேரம் வைக்க வேண்டும். இடையிடையே கிளறவும். மொறுமொறுப்பாக வந்ததும் இறக்கவும்.

மாப்பிள்ளை சம்பா கஞ்சி

தேவை: மாப்பிள்ளை சம்பா அரிசி - 100 கிராம், தண்ணீர் - 100 மில்லி, மோர் - 50 மில்லி, சின்ன வெங்காயம் - 8 (நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும். நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

வெஜ் ஃப்ரை

தேவை: பேபி கார்ன் – 100 கிராம், குடமிளகாய் - ஒன்று, புரொக்கோலி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 7 பற்கள், மஷ்ரூம் - 100 கிராம், வெங்காயத்தாள் - 20 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மாங்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பேபி கார்ன், குடமிளகாய், புரொக்கோலி, மஷ்ரூம், வெங்காயத்தைச் சீரான அளவில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு பேபி கார்ன், குடமிளகாய், புரொக்கோலி, மஷ்ரூம், உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கியபின் மாங்காய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பிறகு சிறிதளவு தண்ணீர்விட்டு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

தாமரைத்தண்டு மோர்க்குழம்பு

தேவை: தாமரைத்தண்டு காய்ந்தது - 5, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தயிர் - 250 மில்லி, தேங்காய்த்துருவல் - 7 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: தாமரைத் தண்டை எண்ணெயில் இட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, தனியா, பச்சரிசி ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெந்தயத்தை நல்லெண்ணெயில் வறுத்தெடுக்கவும். அந்த வெந்தயத்துடன் சீரகம், பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் அரைத்த துவரம்பருப்புக் கலவை, தேங்காய் மசாலா கலவை சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். பிறகு தாமரைத்தண்டு சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு தயிரில், மஞ்சள்தூள் சேர்த்து மோராக்கிக் கொள்ளவும். கொதிக்கும் குழம்பில் மோர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு இறக்கவும். பின் மற்றொரு கடாயில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மோர்க் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

நெல்லி கொண்டைக்கடலை பிரியாணி

தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 (கொட்டை நீக்கி விழுதாக அரைத்துக்கொள்ளவும்), வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தாளிக்க தேவையான அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2, பிரியாணி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - 500 கிராம், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: பிரியாணி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு வேகவைத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்த நெல்லிக்காய் விழுது, புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தயிர், வேகவைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போன பிறகு, ஊறவைத்த பிரியாணி அரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறி தண்ணீர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்க்கவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

நூல்கோல் சோளச் சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - 250 கிராம், நூல்கோல் - 30 கிராம், சோளம் - 30 கிராம், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை; சோளத்தை உப்பு சேர்த்து வேகவைக்கவும். பிறகு வேகவைத்த சோளத்தை அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரைத்து சோளம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இவற்றுடன் எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும். நூல்கோலைத் துருவி வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, துருவிய நூல்கோலுடன், செய்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். அரைமணி நேரம் ஊறிய பிறகு, சிறு சிறு உருண்டைகளாக்கித் தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

சிவப்பரிசி முட்டைகோஸ் ரோல்

தேவை: சிவப்பரிசி - 50 கிராம், முட்டைகோஸ் இதழ்கள் - தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - ஒன்று, மஷ்ரூம் - 50 கிராம், கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: முட்டைகோஸ் இதழ்களை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுக்கவும். சிவப்பரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், மஷ்ரூம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மஷ்ரூம், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கொத்தமல்லியைத் தூவி இறக்கிவைக்கவும். இதை சிவப்பரிசி சாதத்துடன் சேர்த்துப் பிசிறி, பூரணமாக உருட்டிக்கொள்ளவும். முட்டைகோஸ் இதழின் நடுவில் இந்தப் பூரணத்தை வைத்து, ரோலாகச் சுற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தால் சிவப்பரிசி முட்டைகோஸ் ரோல் ரெடி.

சௌசௌ வெப்புடு (ஆந்திரா ஸ்பெஷல்)

தேவை: சௌசௌ - 200 கிராம் (சுத்தம் செய்து நறுக்கவும்), பருப்புப்பொடி - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

பருப்பு பொடி தயாரிக்க: பொட்டுக்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 1 தேங்காய்த்துருவல் - 20 கிராம் அனைத்தையும் சேர்த்து அரைத்தால் பருப்புப்பொடி ரெடி.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: நறுக்கிய சௌசௌவுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வேகவைத்த சௌசௌ, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பருப்புப்பொடி சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

கோதுமை இடியாப்பம்

தேவை: கோதுமை மாவு - 250 கிராம், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: கோதுமை மாவை மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். கோதுமை மாவில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, இடியாப்பக்குழாயில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு இடியாப்பம் ரெடி.

இதற்குத் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை வைத்துப் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

வல்லாரைக்கீரைத் துவையல்

தேவை: வல்லாரைக்கீரை - 50 கிராம், தேங்காய்த்துருவல் - 75 கிராம், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: வல்லாரையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் காய்ந்த மிளகாய், வல்லாரைக்கீரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும். ஆறிய பிறகு அரைத்தால் சுவையான வல்லாரைக்கீரைத் துவையல் ரெடி.

குறிப்பு: வல்லாரையுடன் புளி சேர்த்து அரைத்தால், அதன் மருத்துவ குணம் போய்விடும்.

கவுனி அரிசி உருண்டை

தேவை: கவுனி அரிசி மாவு - 250 கிராம், தேங்காய்த்துருவல் - 100 கிராம், நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும். ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

சிவப்பரிசி ரொட்டி

தேவை: சிவப்பரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், கேரட் - ஒன்று (துருவவும்), தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும். சிவப்பரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் பிசிறி அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாகவிட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.

சிவப்பரிசிக் கொழுக்கட்டை

தேவை: சிவப்பரிசி - 200 கிராம், தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: சிவப்பரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து அரைத்த சிவப்பரிசியை அதில் சேர்த்து நன்றாக ஈரப்பதம் போகும் அளவு கிளறவும். ஆறியதும் கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சிறுதானிய சுரைக்காய் அடை

தேவை: திணை அரிசி - 100 கிராம், வரகு அரிசி - 100 கிராம், சுரைக்காய் - 150 கிராம் (துருவிக்கொள்ளவும்), துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பெருங்காயம் - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2 (நறுக்கவும்), கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

சந்தோஷமா சாப்பிடலாம்... சர்க்கரையையும் விரட்டலாம் - 30 வகை சத்தான உணவுகள்!

செய்முறை: திணை அரிசி, வரகு அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசி, பருப்புகளுடன் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் அனைத்தையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், துருவிய சுரைக்காய், கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல்லில் வார்த்து எடுத்தால் சுவையான சிறுதானிய சுரைக்காய் அடை தயார்.

ரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி’ என்று சொல்லப்பட்ட நீரிழிவு நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான்.

‘சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... நீரிழிவுக்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளூக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இந்த `குளூக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே நீரிழிவு என்கிறோம்’ என்று கூறும் மருத்துவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான்.

உமையாள் வைரவன்
உமையாள் வைரவன்

இந்தக் கொரோனா போன்ற வைரஸ்களுக்கு எளிய இலக்கு நீரிழிவு நோயாளிகளே என்பதையும் தற்போது நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, சரியான உணவுப் பழக்கத்துடன் சரியான உணவுகளையும் எடுத்துக்கொண்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட உணவுகளைப் படங்களுடன் அளித்திருக்கிறார் தஞ்சையில் வசிக்கும் உமையாள் வைரவன். Umaiyal Kitchen என்ற யூடியூப்பில் பல ரெசிப்பிகளை அளிக்கும் இவரின் 30 வகை உணவுகள் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பல்சுவை விருந்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு