Published:Updated:

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!
கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

நாம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கலப்படமானவையாக இருக்கலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

பிரீமியம் ஸ்டோரி

உணவுக் கலப்படம் என்பது எப்போதும் நடந்துகொண்டே இருக்கும் குற்றம், நம் கிச்சனிலேயே இருக்கும் தீங்கு. என்றாலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் ரெய்டு நேரங்களில், ‘கலப்பட எண்ணெய் கண்டுபிடிப்பு’ போன்ற செய்திகள் வரும்போது மட்டுமே அதுபற்றி அவ்வப்போது பேசுகிறோம். மீண்டும் மறந்து விடுகிறோம்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

நாம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கலப்படமானவையாக இருக்கலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். கலப்படத்தைக் கண்டறிவது எப்படி என்று தெரியாததாலும், நம் அலட்சியத்தாலும் அந்தப் பொருள்களையே பயன்படுத்தப் பழகி விடுகிறோம். கலப்பட உணவுப் பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். சில ஆபத்தான ரசாயனக் கலப்புகள், தீவிரப் பிரச்னைகள் வரை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பால், தானியங்கள், மசாலா பொருள்கள், தாளிப்புப் பொருள்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களிலும் உள்ள கலப்படங்களை கண்டறிய, எளிய வழிமுறைகளை உங்களுக்குச் சொல்லவிருக்கிறது இந்த இணைப்பிதழ். மேலும், கலப்பட உணவுகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் உணவுக் கலப்படத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட அம்சங்கள் பற்றியும் விளக்குகிறது.

நம் குடும்ப ஆரோக்கியத்துக்கான முக்கிய விழிப்புணர்வு பெறுவோம்... வாருங்கள்!

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

எளிமையாகக் கிடைக்கும் பொருள்கள்தான்!

கலப்படத்தைக் கண்டறிவதற்கு டிஞ்சர் அயோடின், ஹைட்ரோக்ளோரிக் அமிலம் ஆகியவை முக்கியமாகத் தேவைப் படும். காயங்களுக்குப் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து தான் டிஞ்சர் அயோடின். இது, மருந்தகத்தில் கிடைக்கும். ஹைட்ரோக்ளோரிக் அமிலமும் எளிதாகக் கடைகளில் கிடைக்கும்.

பரிசோதனை செய்ய... தண்ணீர் போதும்!

நாம் வாங்கும் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப் பட்டுள்ளதா என்பதை எளிய வழிமுறைகள் மூலம் கண்டறியலாம். உதாரணமாக, வெறும் தண்ணீரைக்கொண்டே சுமார் 10 உணவுப்பொருள்களின் கலப்படத்தைக் கண்டறிய முடியும். வீட்டிலேயே எளிதாகக் கலப்படத்தைக் கண்டறியும் வழிகளை இங்கு பார்க்கலாம்.

பாலில் டிடர்ஜென்ட் பவுடரா?

பிறந்த குழந்தை முதல் முதியவர்கள்வரை எடுத்துக்கொள்ளும் உணவு, பால். அதன் அடர்த்தியை அதிகரித்துக் காட்ட டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் அரிசி மாவு, பாலின் அளவை அதிகரிக்க தண்ணீர் ஆகியவை கலக்கப்படுகின்றன. இந்தக் கலப் படங்களைக் கண்டறிய, ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது குடுவையில் 10 மி.லி அளவு பாலும் அதனுடன் சம அளவில் தண்ணீரும் எடுத்து, பாட்டிலை நன்றாகக் குலுக்க வேண்டும். பாலில் டிடர்ஜென்ட் கலக்கப்பட்டிருந்தால், அடர்த்தியான நுரை உருவாகும். கலப்படமில்லாத பால் என்றால் பாட்டிலைக் குலுக்கியதால் மெலிதான நுரையே உருவாகியிருக்கும்.

பாலில் அரிசி மாவு கலந்திருப்பதைக் கண்டறிய, அதில் இரண்டு, மூன்று சொட்டுகள் டிஞ்சர் அயோடின் கரைசலைச் சேர்த்தால் பால் நீல நிறமாக மாறும். பாலில் தண்ணீர் கலந்திருப்பதையும் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். சாய்வான, பாலிஷான தரையில் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம். வீட்டில் பயன்படாத அடர் நிற டைல்ஸ் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம். ஒரு துளி பாலை எடுத்து, சாய்வான இடத்தில் விட வேண்டும். அதில் தண்ணீர் கலந்திருந்தால் அந்தப் பால் உடனடியாகக் கீழ் நோக்கி வேகமாக வழிந்து ஓடும். அது வழிந்து ஓடிய பாதையில் எந்தத் தடமும் இருக்காது. தண்ணீர் கலக்காத பால் என்றால், மெதுவாக வழிந்து வரும். வழிந்து வந்த பாதையில் வெண்மைத் தடம் காணப்படும்.

 பாலில் டிடர்ஜென்ட் பவுடரா?
பாலில் டிடர்ஜென்ட் பவுடரா?

நெய், வெண்ணெயுடன் கலக்கப்படுவது என்ன?

சத்தான உணவுப் பொருள்களாக மக்களால் விரும்பப்படும் இவற்றில் வனஸ்பதி, உருளைக்கிழங்கு, மாவுப்பொருள்கள் ஆகியவை கலப்படத்துக்காகச் சேர்க்கப்படுகின்றன. வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிய உருக்கிய நெய் /வெண்ணெயை எடுத்து அதனுடன் சில துளிகள் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு குலுக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதில் கருஞ்சிவப்பு நிறம் தோன்றினால் அதில் வனஸ்பதி கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். நெய் மற்றும் வெண்ணெயுடன் சில துளிகள் டிஞ்சர் அயோடின் கரைசலைச் சேர்க்கும்போது அது நீல நிறமாக மாறினால், அதில் மசித்த உருளைக்கிழங்கு அல்லது மாவுப்பொருள்கள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பனீர், கோவாவில் ஸ்டார்ச் கலப்படம்!

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள்கூட விரும்பிச் சாப்பிடும் பொருள்கள் இவை. இவற்றுடன் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள்கள் கலப்படத்துக் காகச் சேர்க்கப்படுகிறது. அதைக் கண்டறிய, பனீர்/கோவாவில் சிறிதளவு மாதிரியை எடுத்து 5 மி.லி தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அது ஆறியவுடன் 2 - 3 துளி டிஞ்சர் அயோடின் கரைசலை அதில் சேர்த் தால், மாவுப்பொருள் கலந்திருக்கும் பட்சத்தில் அதில் நீல நிறம் உருவாகும்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!
Irina Taskova

உணவு தானியங்கள் ஒரிஜினலா... அறிவது எப்படி?

பொதுவாக, தானியங்களுடன் கல், மண், கழிவு தானியங்கள் போன்ற கண்களுக்குத் தெரியும் பொருள்களைத்தான் கலப்படம் செய்வார்கள். அதை உற்று நோக்கினாலே எளிதாகக் கண்டறிய முடியும். ஒரு தட்டில் தானியத்தைக் கொட்டி கண்களால் ஆராய்ந்தாலே அது சுத்தமானதா, கலப்படம் செய்யப்பட்டதா என்று தெரிந்துகொள்ளலாம்.

தானியத்தில் ஏதாவது செயற்கை நிறம் சேர்க்கப் பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் தானியத்தைப் போடவும். செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருந்தால் அது கரைந்து தண்ணீரின் நிறம் மாறும்.

தானியங்களுடன் ஊமத்தை விதைகளைக் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. ஊமத்தை விதைகள் மிளகாய் விதைகளைப் போன்று கருப்பும் பழுப்பும் கலந்த நிறத்திலும், முனைகளுடன் கூடிய விதைகளாகவும் இருக்கும். தானியங்களைக் கூர்ந்து பார்த்து அந்த விதைகளைப் பிரித்தெடுத்துவிட முடியும். உருப்பெருக்கிக் கண்ணாடியும் பயன்படுத்தலாம்.

கடலைப்பருப்பு Vs கேசரிப்பருப்பு!

கடலைப்பருப்புடன் கேசரிப்பருப்பு என்ற ஒரு வகை தரம் குறைந்த பருப்பு கலக்கப்படும். இதைக் கண்டறிய உருப்பெருக்கிக் கண்ணாடி கொண்டு பருப்பைப் பரிசோதிக்க வேண்டும். உடைத்த கேசரிப்பருப்பின் ஒவ்வொன்றிலும் உளிவைத்து வெட்டியது போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். கடலைப் பருப்பு சமமான வட்ட வடிவத்தில் இருக்கும்.

 கடலைப்பருப்பு Vs கேசரிப்பருப்பு!
கடலைப்பருப்பு Vs கேசரிப்பருப்பு!

பாசிப்பயறு, பச்சைப்பட்டாணி... பச்சை சாயம்!

இவற்றின் நிறத்தை கவர்ச்சியாகக் காண்பிக்கவும், ஃபிரெஷ்ஷாக இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் அவற்றுடன் பச்சை நிறச் சாயம் கலக்கப்படும். கலப்படத்தைக் கண்டறிய பாசிப்பயறு, பச்சைப்பட்டாணியை அரை மணி நேரம் நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு குச்சி அல்லது கரண்டியை வைத்துக் கலக்கினால் சாயம் பிரிந்து நீர் பச்சை நிறமாகிவிடும்.

துவரம்பருப்புடன் சேர்க்கப்படும் மசூர்பருப்பு!

நமது வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் துவரம் பருப்பில் தரம் குறைந்த மசூர்பருப்பு கலப்படம் செய்யப்படுகிறது. பருப்பை வெறும் கண்களால் கூர்ந்து பார்த்தே இந்தக் கலப்படத்தைக் கண்டறிய முடியும். மசூர்பருப்பு கிட்டத்தட்ட சதுர வடிவமாக, முனைகளுடன் இருக்கும். சுத்தமான துவரம் பருப்பு வட்ட வடிவில் மட்டுமே இருக்கும்.

கேழ்வரகு பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறதா?

சிறுதானியங்களில் முதலிடம், ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகுக்குத்தான். கோயில் திருவிழாக்கள் தொடங்கி கோடைக்காலம் வரை கேழ்வரகின் ஆட்சிதான். தரமற்ற கேழ்வரகு தானியம் பார்வைக்கு கவர்ச்சியாக இருக்க, அதனுடன் ரோடாமைன் பி (Rhodamine B) என்ற செயற்கை வண்ணம் கலக்கப் படுகிறது. இதைக் கண்டறிய, சிறிய பஞ்சு உருண்டையை தண்ணீரில் நனைத்து எடுக்கவும். பஞ்சின் மேற்புறத்தில் சிறிதளவு கேழ்வரகை எடுத்துத் தேய்க்கவும். அதில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருந்தால் அது பஞ்சில் வெளிப்பட்டுவிடும்.

 கேழ்வரகு பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறதா?
கேழ்வரகு பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறதா?

நீங்கள் சாப்பிடுவது கோதுமையா, தவிடா?!

அரிசிக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்துவது, கோதுமையைத்தான். முழு கோதுமையைக் காட்டிலும் கோதுமை மாவின் பயன்பாடுதான் அதிகம். கோதுமை மாவு தயாரிக்கும்போது அதனுடன் அதிகம் தவிடு கலப்படம் செய்யப்படும். அதை எளிதில் கண்டறிய, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் மாவைத் தூவவும். கலப்படம் செய்யப்பட்ட மாவில் உள்ள தவிடு தண்ணீரில் மிதக்கும். மாவு நீரில் அடியில் படிந்துவிடும்.

ரவையை பரிசோதிக்க காந்தம்... ஏன்?!

பண்டிகை நாளோ சாதாரண நாளோ, ரவையின் பயன்பாடு வீட்டில் தவிர்க்க முடியாதது. ரவையுடன் இரும்புத் துகள்கள் கலந்து விற்பனை செய்யப்படலாம். அதைக் கண்டறிய சிறிய துண்டு காந்தத்தை ரவைக்குள் போட்டுப் பரிசோதிக்கவும். அதில் இரும்புத்துகள் கலந்திருந்தால் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்.

பாஸ்மதி அரிசி பிரியர்கள்... படிக்கவும்!

செல்லா பாஸ்மதி அரிசி வகை, தங்கம் போன்ற மஞ்சள் நிறத்தில் காணப்படும். அதே தோற்றத்தை ஏற்படுத்த சாதாரண பாஸ்மதி போன்ற தோற்றம் கொண்ட அரிசியில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இதைக் கண்டறிய, ஒரு தட்டில் சிறிதளவு அரிசியை எடுத்து, அதில் சுண்ணாம்பு கலந்த நீரைத் தெளிக்கவும். கலப்படமில்லாத அரிசி அதே நிறத்திலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட அரிசி சிவப்பு நிறமாக மாறும்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!
subodhsathe

மசாலா பொருள்களும் நிறங்களும்!

இன்று பலரும் வீடுகளில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் அரைத்துப் பயன்படுத்துவதைவிட கடையில் அவற்றை ரெடிமேடாக வாங்கிப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மாறிவருகிறார்கள்.

மிளகாய்த்தூளுடன் மரத்தூள்!

மிளகாய்த்தூளில் செங்கல்தூள், மரத்தூள் அல்லது செயற்கை யான நிறங்கள் கலக்கப்படலாம். அதைக் கண்டறிய ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் குலுக்கவும். மிளகாய்த்தூளைவிட செங்கல்தூள் பாரம் அதிகமாக இருக்கும் என்பதால் அது பாத்திரத்தின் அடியில் படிந்துவிடும்.

சிறிதளவு மிளகாய்த்தூளுடன் சில துளிகள் அடர் ஹைட்ரோ க்ளோரிக் அமிலம் கலந்து, அதைத் தீக்குச்சியின் பின்புறத்தில் எடுத்து, தீச்சுடரில் காட்டவும். தீச்சுடர் சிவப்பு நிறத்தில் எரிந்தால் அதில் செங்கல் தூள் கலந்திருக்கிறது என்று அர்த்தம். செங்கல் தூளில் காணப்படும் கால்சியத்தின் காரணமாகவே அது சிவப்பு நிறச் சுடராக எரியும்.

செயற்கையான நிறம் மிளகாய்த்தூளில் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டறிய, கண்ணாடி டம்ளரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளைத் தூவவும். செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருந்தால் சிவப்பு நிறக்கோடுகளாக அது கீழேயிறங்கும்.

மரத்தூள் கலப்படத்தைக் கண்டறிய, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மிளகாய்த்தூளைப் போட்டால், மரத்தூள் மிதக்கத் தொடங்கும், மிளகாய்த்தூள் டம்ளரின் அடியில் படியும். மல்லித் தூளில் மரத்தூள் கலப்படத்தைக் கண்டறியவும் இதே முறையைப் பின்பற்றலாம்.

 மிளகாய்த்தூளுடன் மரத்தூள்
மிளகாய்த்தூளுடன் மரத்தூள்

மஞ்சள்தூள்... அடர் மஞ்சளா, வெளிர் மஞ்சளா?!

தமிழர்களின் சமையலில் மஞ்சள்தூள் சேர்க்காத உணவுகள் மிகவும் குறைவே. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கு சிறந்த மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளில், அதன் நிறத்தை கவர்ச்சியாகக் காட்டுவதற்காக, அனுமதிக்கப்படாத சாயம் கலக்கப்பட்டிருக்கலாம். சிறிதளவு மஞ்சள்தூளுடன் அடர் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் குழைக்க வேண்டும். அது இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளவும்.

ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூளைத் தூவவும். சுத்தமான மஞ்சள்தூள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் டம்ளரின் அடியில் படியும். செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட மஞ்சள்தூளாக இருந்தால், அடர் மஞ்சள் நிறத்துடன் அடியில் படியும்.

முழு மஞ்சள் (மஞ்சள் கிழங்கு)

மஞ்சள்தூளைப் போன்று முழு மஞ்சளிலும் கலப்படம் செய்யப்படுகிறது. அதன் நிறத்தை கவர்ச்சியாகக் காட்ட லெட் குரோமேட் (Lead chromate) என்ற மஞ்சள் நிற ரசாயனத்தூள் சேர்க்கப்படுகிறது. ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில் முழு மஞ்சளைப் போடும்போது சாயம் போகாவிட்டால் அது சாயம் பூசப்படாத மஞ்சள். தண்ணீரில் மஞ்சள் நிறம் கரைந்தால் அது ரசாயன சாயம் பூசப்பட்ட மஞ்சள். ரசாயனம் பூசப்பட்ட மஞ்சள் உண்மையான மஞ்சளைக் காட்டிலும் பளிச்சென்ற நிறத்தில் காணப்படும்.

பெருங்காயத்தை எரித்தால்..!

உணவுக்குச் சிறந்த சுவையூட்டியாகவும், வாயு, அஜீரணத்துக்கான மருந்துப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது பெருங்காயம். அதனுடன் வேறு பிசின்கள், சலவைக்கல், மணல், மாவுப்பொருள்கள் ஆகிய பொருள்கள் கலக்கப்படலாம். அவற்றைக் கண்டறிவது பற்றிப் பார்ப்போம்...

வேறு பிசின்கள் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய பெருங்காயத் தூளை ஒரு ஸ்பூனில் வைத்து எரிய விட வேண்டும். கற்பூரத்தைப் போல பற்றி எரிந்தால் அது கலப்படமற்றது. சரியாக எரியவில்லை என்றால் கலப்படப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

பெருங்காயத்தூளில் சலவைக்கல், மணல் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டறிய சிறிதளவு தூளைத் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் குலுக்கவும். சலவைக்கல் மற்றும் மணல் கலந்திருந்தால் அவை பாத்திரத்தின் அடியில் படிந்துவிடும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயத்தூள் கரைந்து நீர் வெள்ளைநிறத் திரவம்போல மாறும்.

மாவுப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிய அதனுடன் சிறிதளவு டிஞ்சர் அயோடின் கரைசல் சேர்க்க வேண்டும். நீல நிறமாக மாறினால் அதில் மாவுப்பொருள் கலக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: கூட்டுப்பெருங்காயத்தைத் தயாரிப்பதற்கு மாவுப் பொருள்கள் சேர்க்கப்படும். அதனால் இந்தச் சோதனை கூட்டுப் பெருங்காயத்துக்குப் பொருந்தாது.

காபித்தூளில் சிக்கரியின் அளவு!

கையில் காபி கோப்பையை ஏந்தாவிட்டால் பொழுதே விடியாது நம்மில் பலருக்கு. காலையில் எழுந்தால் காபி, இடைவேளையில் காபி, டென்ஷன் ஆனால் காபி, சோம்பல் முறிக்க காபி என்றுதான் வாழ்கிறோம். அந்தக் காபித்தூளில் சிக்கரித்தூள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப் பட்டால் அதுவும் கலப்படமே. சிக்கரி கலப்படத்தைக் கண்டறிய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதன் மேற்பரப்பில் காபித் தூளைத் தூவவும். சுத்தமான காபித்தூள் நீரில் மிதக்கும். சிக்கரித்தூள் சிவப்பு நிறச் சாயத்துடன் நீரில் மூழ்கும். சிக்கரியில் உள்ள இனுலின் என்ற வேதிப்பொருள் அதை நீரில் கரைய வைக்கிறது. கரையும் சிக்கரி அதிகம் இருக்கிறதா, மிதக்கும் காபித்தூள் அதிகமிருக்கிறதா என்று பாருங்கள்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

உங்கள் காபியில் களிமண் இருக்கிறதா?

காபித்தூளில் களிமண்ணும் கலப்படம் செய்யப்படலாம். தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளரில் அரை டீஸ்பூன் காபித் தூளைப் போட்டு ஒரு கரண்டியை வைத்து கலக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மண்துகள் டம்ளரின் அடியில் படிந்துவிடும்.

டீயுடன் சேர்த்துக் குடிப்பது... தார்?!

சிலருக்குக் காபி என்றால், பலருக்கு டீ கோப்பைதான் உற்சாகத்தை அள்ளித் தரும் பானம். காபி ஷாப் என்ற மார்டன் பெயரைக் காட்டிலும், டீக்கடைதான் அதிக பரிச்சயம். நம்முடன் அதிகம் இணக்கமான டீ தயாரிக்கப் பயன்படும் தேயிலைத் தூளில் நிலக்கரி தார், செயற்கை வண்ணங்கள் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.

அதை எளிதில் கண்டறிய, ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது டீத்தூளைப் பரத்தி வைக்கவும். தண்ணீர் தெளித்து டிஷ்யூ பேப்பரை நனைக்கவும். சில நிமிடங்கள் கழித்து டிஷ்யூவை ஓடும் தண்ணீரில் மெதுவாக அலசிவிட்டு, லைட் வெளிச்சத்தில் பார்க்கவும். சுத்தமான டீத்தூளாக இருந்தால் டிஷ்யூவில் எவ்வித கறையும் இருக்காது. நிலக்கரி தார் கலக்கப்பட்டிருந்தால் பேப்பரில் அந்தக் கறை படிந்து இருக்கும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூளில் செயற்கை வண்ணங்கள் சேர்த்து, புதிது போன்ற தோற்றம் ஏற்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டிஷ்யூவில் சிறிதளவு டீத்தூளைப் பரத்தி அதில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விடவும். டீத்தூளில் சாயம் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்ணீரில் கரைந்து அதன் தடங்கள் அந்தத் தாளில் படிந்திருக்கும்.

 டீயுடன் சேர்த்துக் குடிப்பது... தார்?!
டீயுடன் சேர்த்துக் குடிப்பது... தார்?!

இனிப்புகள் கவனம்!

இனிப்பு என்பதே ஒதுக்க வேண்டியது என்று மருத்துவர்கள் அறிவுறுத்திவருகிறார்கள். அதில் கலப்படமும் சேரும்போது கவனம் இரட்டிப்பாக வேண்டும்.

சர்க்கரை... இப்படிப் பரிசோதிக்கலாம்!

நம் அன்றாட உணவில் வெள்ளைச் சர்க்கரையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். வெள்ளைச் சர்க்கரையே உடலுக்குத் தீங்கானது என்கிறபோது அதில் கலப்படமும் செய்தால் உடலுக்குக் கூடுதல் பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக வெள்ளைச் சர்க்கரையில் `சாக் பவுடர்' கலப்படம் செய்யப்படுகிறது. அதைக் கண்டறிய, தண்ணீரில் சர்க்கரையைத் தூவவும். கலப்படமில்லாத சர்க்கரை தண்ணீரில் கரைந்துவிடும். சாக் பவுடர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அதில் கால்சியம் கார்பனேட் இருக்கும் என்பதால் தண்ணீரில் கரையாமல் அடியில் படிந்துவிடும்.

வெல்லமா, சோடாவா?

பண்டிகை நாள்களில் பலகாரங்கள் செய்வதற்கு வெல்லம் அதிகம் பயன்படும். வெல்லத்துடன் வாஷிங் சோடா கலந்து விற்பனை செய்வதுண்டு. அதைக் கண்டறிய வெல்லத்தில் சிறிய துண்டை எடுத்து அதில் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சில துளிகள் ஊற்றவும். ஊற்றியதும் நுரைத்து வந்தால் சோடா கலக்கப்பட்டிருப்பது உறுதி. வெல்லத்திலும் சாக் பவுடர் கலப்படம் செய்யப்படுகிறது. அதைக் கண்டறிய சர்க்கரைக்குப் பயன்படுத்திய அதே முறையைப் பயன்படுத்திப் பரிசோதிக்கலாம்.

தேன் எரியுமா?!

மருத்துவக் காரணங்களுக்காகவும் உணவுக்காகவும் தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்று எனத் தேனைக் கூறலாம். கடைகளில் தாராளமாகக் கிடைக்கும் தேனில் சர்க்கரைப் பாகு கலக்கப்படுகிறது. இதைக் கண்டறிய தேனை பஞ்சில் நனைத்து எடுத்துக் கொள்ளவும். அந்தப் பஞ்சை தீயில் காட்டவும். கலப்படம் இல்லாத தேன் பற்றி எரியும். மாறாக அதில் சர்க்கரைப் பாகு கலக்கப்பட்டிருந்தால் பஞ்சு எரியாது அல்லது வெடித்து வெடித்து எரியும். கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு துளி தேனை விடவும். சுத்தமான தேன் தண்ணீரில் உடனடியாகக் கரையாது. சர்க்கரைப் பாகு கலக்கப்பட்டிருக்கும் தேன் தண்ணீரில் கரைந்துவிடும்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

தாளிப்புப் பொருள்கள்... செக் லிஸ்ட்!

சமைக்கவிருக்கும் உணவின் ருசி எப்படி அமையப்போகிறது என்பதை, தாளிப்பின்போது வரும் வாசனையே பாதி சொல்லிவிடும். அந்தப் பொருள்களில் கலப்படத்தை கண்டறிய...

கடுகு

ஓர் உணவின் சுவையை உணரச் செய்வது தாளிப்பு. தாளிப்புப் பாத்திரத்தில் கடுகுதான் ராஜா. கடுகில்லாத தாளிப்பு ருசிப்பதில்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட கடுகில் ஆர்ஜிமோன் (Argemone) என்ற தாவரத்தின் விதைகள் கலக்கப்படுகின்றன.

சிறிதளவு கடுகை எடுத்து ஒரு தட்டில் வைத்துப் பார்த்தாலே கலப்படத்தைக் கண்டறிந்துவிடலாம். கடுகு விதைகளின் மேற்புறம் வழவழப்பாக இருக்கும். அதை நசுக்கினால் உள்ளே மஞ்சள் நிறம் காணப்படும். ஆர்ஜிமோன் விதைகளின் மேற்புறம் சொரசொரப்பாக இருக்கும். அதன் தலைப்பகுதியில் குடுமி வைத்தது போன்ற தோற்றம் இருக்கும். நசுக்கிப் பார்த்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் இருக்கும்.

சீரகம்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த சீரகத்துடன் கரித்தூள் கலக்கப் பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதைக் கண்டறிய, சிறிதளவு சீரகத்தை உள்ளங்கையில் வைத்து மற்றொரு உள்ளங்கையால் தேய்க்கவும். கரித்தூள் சேர்க்கப்பட்டிருந்தால் உள்ளங்கையில் கறுப்பு நிறம் ஒட்டிக்கொண்டிருக்கும்.

மிளகு

சமையலில் மட்டுமல்ல, சித்த மருத்துவத்திலும் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள். நச்சு முறிவு, நோய் எதிர்ப்புத் திறன் என இதன் மருத்துவப் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மிளகின் விலையும் சற்று அதிகம்தான். அதனுடன் பப்பாளி விதை கலப்படம் செய்யப்படலாம். உருப்பெருக்கி கண்ணாடி வைத்துப் பார்த்தே இதைக் கண்டறியலாம்.

மிளகு அடர் பழுப்பு நிறத்திலும், உருண்டையாகவும் இருக்கும். மிளகு விதையில் சுருக்கங்கள் காணப்படும். காரமான மணமும் சுவையும் இருக்கும். பப்பாளி விதை முட்டை வடிவத்தில் இருக்கும். பச்சை கலந்த பழுப்பு நிறம் அல்லது கறுப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். காரமிருக்காது. நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரில் ஒரு டீஸ்பூன் மிளகைப் போட்டால் அழுகிய மிளகு, பப்பாளி விதை ஆகியவை மிதக்கும். உண்மையான மிளகு அடியில் படிந்துவிடும்.

 மிளகு
மிளகு

லவங்கப்பட்டை

நறுமணப் பொருள்களில் லவங்கப்பட்டைக்கும் முக்கியமான இடம் உண்டு. கருவேல மரத்தின் பட்டையான காசியா பட்டை, லவங்கப்பட்டையுடன் சேர்த்தோ, லவங்கப்பட்டை என்று சொல்லி ஏமாற்றியோ விற்பனை செய்யப்படலாம். அதைக் கண்களால் ஆராய்ந்து பார்த்தே கண்டறிந்துவிடலாம்.

காசியா பட்டை விரைப்பாகவும் தடியாகவும் இருக்கும். மேல்புறம் கடினமாகவும், உள்ளே போகப்போக மெல்லிய அடுக்குகளும் காணப்படும். லவங்கப்பட்டை மெலிதாக, சுருளும் தன்மையுடன் இருக்கும். அதற்கென்று பிரத்யேக வாசனையும் காணப்படும்.

கிராம்பு

கறிக்குழம்பு தொடங்கி வெற்றிலை பீடா வரையில் இடம்பிடிப்பது கிராம்பு. மருத்துவ குணங்களும் ஏராளம் கொண்டது. கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்ப் பொருள் நீக்கப்பட்டு, வெறும் தக்கையான பொருள் மட்டும் விற்பனை செய்யப்படலாம். அதைக் கண்டறிய வேண்டுமென்றால் கிராம்பைச் சுவைத்துப் பார்த்தால் சுவையற்று இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் கிராம்பைப் போட்டால் எண்ணெய்ப் பொருள் நீக்கப்படாத நல்ல கிராம்பு நீரின் அடியில் தங்கிவிடும். எண்ணெய்ப் பொருள் நீக்கப்பட்ட கிராம்பு மிதக்கும்.

குங்குமப்பூ

பிரியாணி, இனிப்புகள் எனப் பலவற்றையும் அலங்கரிக்கும் குங்குமப்பூவின் விலை அதிகம். அதில் சாயம் பூசப்பட்ட சோளக் கதிரின் இழைகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதைக் கண்டறிவது எளிது. சுத்தமான குங்குமப்பூ, கலப்பட குங்குமப்பூவைப்போல எளிதில் உடையாது. சுத்தமான குங்குமப்பூவை தண்ணீரில் கலந்தால் அதன் நிறம் மாறாது.

தூள் உப்புக்கு... உருளைக்கிழங்கு பரிசோதனை!

உலகின் எந்த நாட்டு உணவு என்றாலும் அதில் தவிர்க்க முடியாத ஒரே பொருள் என்றால் அது உப்புதான். அதில் சாக் பவுடர், வெள்ளைக்கல் தூள் ஆகியவற்றைக் கலக்க வாய்ப்புள்ளது. தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலந்தால், அதில் வெள்ளைக்கல் தூள் சேர்ந்திருந்தால் தண்ணீர் வெண்மையாக மாறும். அதுவே சாக் பவுடர் கலக்கப்பட்டிருந்தால் அது கீழே தங்கிவிடும்.

நாம் பயன்படுத்துவது அயோடின் கலந்த உப்பா என்பதையும் நாமே பரிசோதித்து அறிய முடியும். சிறிதளவு உப்புடன் இரண்டு சொட்டு பொட்டாசியம் அயோடைஸ்டு மற்றும் ஸ்டார்ச் கரைசல் ஒரு சொட்டு சேர்க்கவும். சேர்த்தவுடன் நீல நிறமாக மாறினால், அதில் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறிந்துகொள்ளலாம்.

இதற்கு மற்றொரு எளிய வழியும் உள்ளது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை இரண்டாக வெட்டவும். வெட்டப்பட்ட ஒரு பாதியின் நடுவில் உப்பைத் தூவிவிட்டு ஒரு நிமிடம் காத்திருக்கவும். பிறகு, அதன் மேல் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாற்றை விடவும். அது அயோடைஸ்டு உப்பு என்றால் நீல நிறம் தோன்றும். அயோடின் சேர்க்கப்படாத உப்பு என்றால் நீல நிறம் தோன்றாது.

 தூள் உப்புக்கு... உருளைக்கிழங்கு பரிசோதனை
தூள் உப்புக்கு... உருளைக்கிழங்கு பரிசோதனை

எண்ணெய் பரிசோதனைகள்!

உணவு தயாரிக்கத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா, நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லதா என்ற வாதத்துக்குச் செல்வதற்கு முன்பு, கலப்படமில்லாத சுத்தமான எண்ணெயைப் பயன்படுத்துகிறோமா என்று உறுதிசெய்ய வேண்டும்.

சமையல் எண்ணெய்களின் அளவை அதிகரிக்க, ஆர்ஜிமோன் கலந்த கடுகு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஆர்ஜிமோனில் உள்ள சேங்குவைனரின் (Sanguinarine) என்ற ஆல்கலாய்டு நச்சுத்தன்மை கொண்டது.

இந்தக் கலப்படத்தைக் கண்டறிய, சிறிய சோதனைக் குழாய் அல்லது கண்ணாடி டம்ளரில் சிறிதளவு எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவில் அடர் நைட்ரிக் அமிலம் சேர்த்துக் குலுக்கவும். கீழ்அடுக்கில் சிவப்பு, கருஞ்சிவப்பு நிறத்தில் தோன்றினால் அதில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கப்பட்டிருக்கிறது.

அரக்கு, வார்னிஷ் போன்றவற்றில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்து வதற்காக சேர்க்கப்படும் ட்ரை ஆர்த்தோ க்ரெசில் பாஸ்பேட் (Tri Ortho Cresyl Phosphate - TOCP) எனப்படும் ரசாயனம் சமையல் எண்ணெய்களில் கலக்கப்படுகிறது. இதைக் கண்டறிய 2 மி.லி அளவில் எண்ணெயை எடுத்து அதனுடன் உப்பு சேர்த்த மஞ்சள் நிற வெண்ணெயைச் (Salted Yellow Butter) சேர்க்க வேண்டும். வெண்ணெய் திடமான நிலையில் இருக்க வேண்டும். பட்டரை சேர்த்தவுடன் உடனடியாகச் சிவப்பு நிறம் தோன்றினால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

எண்ணெய் பரிசோதனை
எண்ணெய் பரிசோதனை

தேங்காய் எண்ணெய்

சமையலுக்குத் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம், அதில் கலப்பட வேலைகளும் நடைபெறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலப்படத்தைக் கண்டறிவது மிகவும் சுலபம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் தேங்காய் எண்ணெயை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும் (ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது). 30 நிமிடங்கள் கழித்து எடுத்துப் பார்க்கும்போது எண்ணெய் உறைந்திருந்தால் அது சுத்தமான தேங்காய் எண்ணெய். உறையாமல், கலக்கப்பட்ட வேறு எண்ணெய் தனி லேயராகப் பிரிந்து நின்றால் அது கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய்.

காய்கறிகள்... நிறங்கள்!

‘கண்ணை ஏமாற்றும் நாம் காணும் தோற்றம், உண்மை இல்லாதது’ என்பது காய்கறி கலப்படத்துக்குப் பொருந்தும்!

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

அதிக இனிப்பைக் கொண்ட கிழங்கு வகையான சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கவர்ச்சியாகக் காண்பிக்க அதன் மேற்புறத்தில் ரோடாமைன் பி (Rhodamine B) என்ற செயற்கை வண்ணம் பூசப் படுகிறது.

ஒரு பஞ்சு உருண்டையை தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் நனைத்து, கிழங்கின் வெளிப்புறத்தில் தேய்க்கவும். பஞ்சில் நிறம் ஒட்டிக்கொண்டு வந்தால் அது செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட கிழங்கு.

வெண்டைக்காய், பாகல், பச்சை மிளகாய்

சில பச்சை நிற காய்கறிகளில், அது வதங்கியது தெரியாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் காட்ட பச்சை வண்ணம் பூசப்படும். சிறிய துண்டு பஞ்சை தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் நனைத்து, அந்தக் காயின் மீது தேய்க்கவும். நிறம் பூசப்பட்டிருந்தால் அது பஞ்சில் தோய்ந்து வந்துவிடும்.

தகவல்: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, சென்னை மாவட்டம்.

தகவல் உதவி: எம்.சோமசுந்தரம், நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர்.

என்ன பாதிப்புகள் ஏற்படும்?

கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும், உணவுகளைச் சாப்பிடுவதாலும் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று விளக்குகிறார் இரைப்பை, குடல் மற்றும் ஈரல் சிகிச்சை மருத்துவர் எம்.எஸ்.விஸ்வநாதன்

“இயற்கையாகக் கிடைக்கும் பொருளில் செயற்கையான விஷயங்களைச் சேர்ப்பதைத்தான் கலப்படம் என்கிறோம். ஓர் உணவுப் பொருளில் கலப்படம் செய்யும்போது அதன் தரம் குறைந்து அது சாப்பிடுவதற்கு ஒவ்வாத விஷயமாக மாறிவிடும். அது மட்டுமன்றி கலப்படம் செய்யப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது அது உடல்நலத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உணவுக் கலப்படத்தை தெரிந்தே செய்வது, தவிர்க்க இயலாமல் நடைபெறுவது, தொழிற்சாலைகள் மூலம் நடைபெறுவது என மூன்றாகப் பிரிக்கலாம்.

பயிர்களில் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் அது உணவுப் பொருளில் கலப்பது என்பது தவிர்க்க இயலாமல் நடைபெறுவது. தொழிற்சாலை கழிவுகளான பாதரசம், ஈயம் போன்ற ரசாயனங்கள் பயிர்களில் சேர்வதைத் தொழிற்சாலைகளால் நடைபெறும் கலப்படம் என்று கூறலாம். எந்த வகையான கலப்படமும் நடைபெறக் கூடாது என்றாலும், தெரிந்தே கலப்படம் செய்வதுதான் அதிக ஆபத்தானது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் தெரிந்தே கலப்படம் செய்யப்படுகிறது.

 எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.எஸ்.விஸ்வநாதன்

எப்படியெல்லாம் கலப்படம் நடத்தப்படுகிறது?

  • செயற்கையாக ஏதாவது பொருளைச் சேர்ப்பது.

  • உணவுப்பொருள்களில் காணப்படும் புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு சத்தை நீக்குவது.

  • உணவுப் பொருள்களில் நீக்கப்பட்ட சத்துகளுக்குப் பதில் வேறு ஏதாவது தரம் குறைவான பொருளைச் சேர்ப்பது... இவைதான் கலப்படத்தின் அடிநாதங்களாக இருக்கின்றன.

  • பழங்களைப் பழுக்க வைக்க கார்பைட் கற்கள் பயன்படுத்துவது, பழம், காய்கறிகளின் தோல் பளபளப்பாகத் தெரிவதற்கு மெழுகைப் பூசுவது ஆகியவையும் கலப்படத்தில் சேரும்.

  • பேக்கரி பொருள்களில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களையும் கலப்படம் செய்யப்படும் உணவுகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னென்ன உடல்நலப் பிரச்னைகள்..?

  • கலப்படமான உணவுகளைச் சாப்பிடும்போது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் தீவிரமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

  • உணவில் செயற்கை நிறங்களை அதிகம் சேர்க்கும்போது ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படும். சிலர், ‘ஏதோ சாப்பிட்டுட்டேன். ஃபுட் அலர்ஜி ஆயிடுச்சு’ என்று சொல்வார்கள்.

  • இது, உணவினால் அல்ல. அதில் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ சேர்க்கப்படும் பொருள்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

  • பால், பானங்கள் போன்றவற்றில் அளவை அதிகரிக்க தண்ணீரைக் கலப்படம் செய்யும்போது, அது நிச்சயம் சுத்தமான தண்ணீராக இருக்காது. அசுத்தமான தண்ணீரினால் டைபாய்டு, காலரா, கல்லீரலை சேதப்படுத்தும் ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படலாம்.

  • பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் சேர்ந்த உணவுகள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்து, செயலிழப்பை ஏற்படுத்தலாம்.

  • கலப்பட உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது குடல், இரைப்பை பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு தொடங்கி புற்றுநோய் வரை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை, மலட்டுத்தன்மை போன்றவற்றுக்கும் இது காரணமாக அமையலாம். இப்படி தலை முதல் கால்வரை பிரச்னைகள் ஏற்படலாம்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

ஆதாரங்கள் இல்லை!

கலப்படம் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை, இதனால்தான் இது ஏற்பட்டது என்று பரிசோதனையில் கண்டறிய முடியாது. பல நோயாளிகள் நீண்ட நாள் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதற்கான காரணத்தைக் கண்டறிய முடியாது. கலப்பட உணவுப்பொருளை சாப்பிடுவதால் சிறிய சிறிய பாதிப்புகள் மெள்ள மெள்ள ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் நாள்பட்ட பிரச்னையாக உருவாகும். உணவுக் கலப்படத்தால்தான் நாள்பட்ட பிரச்னைகள் உருவாகின்றன என்பதை நிரூபிப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைப்பதில்லை.

என்ன செய்ய வேண்டும்?

  • கலப்படமான உணவுகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதை முதலில் கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • காலாவதியான உணவுப்பொருள்களை நிச்சயம் பயன்படுத்தக் கூடாது.

  • நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்து வழிகாட்டும் அமைப்புகள் குறிப்பிடும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

  • உள்ளூரில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்களை வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது. நம் மண்ணில் விளையாத பொருள்களை நம்முடைய பகுதிக்கு விற்பனைக்குக் கொண்டு வரும்போது அதைப் பதப்படுத்துவதற்கு நிச்சயம் ரசாயன பிரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படும். உதாரணமாக, ஸ்ட்ராபெரி, செர்ரி போன்ற பழங்கள் எங்கிருந்தோ கொண்டு வரப்படுபவை. பதப்படுத்தாமல் அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ள முடியாது. பதப்படுத்த ஆரம்பிக்கும்போதே அந்த உணவின் ஆரோக்கிய விஷயங்கள் தொலைந்துபோய், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் குடிகொண்டுவிடும்.

  • நம் பகுதியில் அந்தந்த காலநிலையில் விளையும் பொருள்களை, தெரிந்த வணிகர்களிடம் வாங்கிப் பயன்படுத்தும்போது கலப்பட உணவுகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறையும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றை அமைத்து நமக்குத் தேவையானவற்றை நாமே விளைவித்துச் சாப்பிடுவதும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கான எளிய வழியாகும்” என்றார் மருத்துவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

உணவுப்பொருள்களை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது என்னென்ன?

கலப்படம் இல்லாத தரமான உணவுகளை வாங்குவது எப்படி என ஆலோசனை அளிக்கிறார் உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் ஏ.ராமகிருஷ்ணன்

  • கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டாலோ, கலப்படம் தொடர்பான புகார்கள் இருந்தாலோ 94440 42322 என்ற தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையின் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் புகார் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். துறையின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் புகார் அளித்தவர் களுக்குத் தெரிவிக்கப்படும்.

  • பேக்கிங் (Packing) செய்யப்பட்ட உணவுப் பொருள்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதன் பேக்கிங் பிரிந்து, அதிலிருக்கும் பொருள் சிந்தியவாறு இருக்கக் கூடாது.

  • லேபிள் கவரில் இருக்கும் முத்திரைகளைப் பார்க்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இந்தியா

  • (FSSAI - Food Safety and Standards Authority of India) என்ற எழுத்துகள் பொறித்த முத்திரையும், அதற்குக் கீழ் உணவுப் பாதுகாப்புத் துறை வழங்கிய லைசென்ஸ் நம்பரும் இருக்கிறதா என்று செக் செய்யவும்.

  • தண்ணீர் பாட்டில், பால், குழந்தைகளுக்கான உணவுப் பொருள் போன்றவற்றில் ஐ.எஸ்.ஐ (ISI) தர முத்திரை இருக்கும். எண்ணெய், காய்கறி, பழங்கள், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றில் அக்மார்க் முத்திரை இருக்கும்.

  • தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கூடுதல் ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள் என்று சில உணவுகளைப் புதிதாக வகைப்படுத்தியுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும். இவற்றில் இரும்புச்சத்து, அயோடின், வைட்டமின் பி 12, ஃபோலிக் ஆசிட் ஆகிய கூடுதல் ஊட்டச்சத்துகள் சேர்க்கப்படும். அதை உறுதிப்படுத்தும் வகையில் F என்ற முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும்.

 ஏ.ராமகிருஷ்ணன்
ஏ.ராமகிருஷ்ணன்

உண்மையிலேயே ஆர்கானிக்கா?

ஆர்கானிக் பொருள்கள் (ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட/உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள்) மீது தற்போது மக்களின் கவனம் அதிகமாக பதிய ஆரம்பித்துள்ளது. இவற்றின் பயன்பாடும் மெள்ள அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இப்படி ஆர்கானிக் என்கிற பெயரில் விற்பனையாகும் பொருள்கள் அனைத்துமே உண்மையில் ஆர்கானிக் முறையில் தயாரானவைதானா என்பதை எப்படிக் கண்டறிவது?

ஆர்கானிக் பொருள்களைக் கண்டறிய FSSAI-ன் கீழ் செயல்படும் ஜைவிக் பாரத் (Jaivik Bharat) என்ற அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். பச்சை நிற வளையத்துக்குள் பச்சை நிற டிக் மார்க் போடப்பட்டிருப்பதே ஜைவிக் பாரத்தின் முத்திரை. இந்த முத்திரை பொறிக்கப் பட்டிருந்தால் அரசின் சார்பில் இந்த உணவுப்பொருள் பல்வேறு நிலையில் கண்காணிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!
 பச்சைப்பட்டாணி பரிசோதனை...
பச்சைப்பட்டாணி பரிசோதனை...

பிரிசர்வேட்டிவ்... அதுவா, இதுவா?

உணவுப் பொருள்களில் பெரும்பாலும் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும். கிளாஸ் 1, கிளாஸ் 2 என இரண்டு வகையான பிரிசர்வேட்டிவ்கள் உள்ளன.

கிளாஸ் 1 என்பது உணவைப் பதப்படுத்துவதற்கு உப்பு, சர்க்கரை, தேன் போன்ற இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துவது.

கிளாஸ் 2 என்பது ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுவது. கிளாஸ் 2 பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

நாம் வாங்கும் உணவுப் பொருள்களின் பேக்கிங் லேபிளில் உள்ள இடுபொருள்கள் (Ingredients) பட்டியலைப் பார்த்து இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!
SoumenNath
பால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய்கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு!

சைவமா, அசைவமா..?

நாம் வாங்குவது சைவ உணவா, அசைவம் சேர்க்கப்பட்ட உணவா என்பதைக் கண்டறிய பழுப்பு மற்றும் பச்சை நிற குறியீடுகள் லேபிளில் இருக்கும். பழுப்பு நிறம் என்றால் அசைவ உணவுப் பொருள் அல்லது அசைவ உணவு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். பச்சை நிறக் குறியீடு சைவம் என்பதைக் குறிக்கும்’’ என்று பட்டியலிடுகிறார் ஏ.ராமகிருஷ்ணன்.

உணவுக் கலப்படம் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

உணவு கலப்படம் என்பது சட்டப்படி தவறான காரியம். உணவில் கலப்படம் செய்யப்படுவதைக் கண்காணிப்பதற்கும், அதைத் தடை செய்வதற்கும் உணவு தர நிர்ணய சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டுள்ளது. உணவுக் கலப்பட தடைச் சட்டத்தில் கலப்படம் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் இங்கே...

  • ஓர் உணவுப் பொருள் அதை வாங்குபவர் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லாதிருப்பது.

  • உணவில் உள்ள ஏதேனும் ஒரு பொருள் அல்லது தயாரிக்கும் முறை உணவின் தரத்தை பாதிப்பது.

  • தரம் குறைந்த, விலை குறைந்த பொருள்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உணவுப்பொருளின் தரத்தைக் குறைக்கும்படி சேர்க்கப்பட்டிருப்பது.

  • உணவில் உள்ள பொருள்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ பிரித்தெடுக்கப்பட்டிருப்பது.

  • உணவுப் பொருள்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்படுவதால் தரமிழந்து, சுகாதாரக் கேடு ஏற்படுவது.

  • உணவுப்பொருள் பூச்சிகளினால் பாதிக்கப்பட்டு உண்பதற்குரிய தரத்தில் இல்லாமல் இருப்பது.

  • நோயுற்ற விலங்கின் மூலம் கிடைத்த உணவுப் பொருள் - இறைச்சி.

  • உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்கள் உணவில் சேர்ந்திருப்பது.

  • அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட அதிகமாக இடுபொருள்களைச் சேர்ப்பது.

  • உணவுப் பொருள்களின் தூய்மையும் தரமும் அறிவுறுத்தப்பட்டுள்ள வரையறையைவிடக் குறைந்திருப்பது.

மேற்கூறிய விஷயங்களில் எது ஒன்று இருந்தாலும் அதைக் கலப்படம் செய்யப்பட்ட உணவாகவே கருத வேண்டும்.

பெறுவோம் விழிப்புணர்வு... நகர்வோம் ஆரோக்கியத்தை நோக்கி!

உணவு கலப்படத்தை எளிதில் கண்டறிவது பற்றிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அளித்த செயல் விளக்கத்தின் முதல் பாகம் அவள் விகடன் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவின் இரண்டாம் பாகம் அவள் விகடன் யூடியூப் சேனலில் விரைவில் வெளியாகும். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு