Published:Updated:

`நவீன ஃபயர் பீடாவும் பாரம்பர்ய பாக்கு வெத்தலையும்!' - தாம்பூலத்தின் இந்த நன்மைகள் அறிவீர்களா?

ஃபயர் பீடா பற்றிப் பேசும்போது, தாம்பூலம் தரிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நலக்கூறுகளைப் பற்றி விவரிக்காமல் இருப்பது முறையல்ல!

திருமண வரவேற்பு நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தேன். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருப்தியாக உணவருந்திவிட்டு புறப்படத் தயாரான நிலையில் கண்ணில் தென்பட்டது அந்த பீடா ஸ்டால்! சாதாரண பீடா ஸ்டால் அல்ல, `ஃபயர் பீடா’ ஸ்டால்!

உணவுக்குப் பிறகு வெற்றிலைக்குள் பாக்கைத் திணித்து, சுண்ணாம்பு தடவி தாம்பூலம் தரிக்கும் முறையெல்லாம் மாடர்னாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன! அப்படியான மாடர்ன் தாம்பூல ஸ்டாலில் கிடைத்த ஒரு புதுமைதான் நெருப்பு பீடா!

பனிக்கூழ்… பழங்கள்… இனிப்புகள்… பஞ்சுமிட்டாய்… என அப்பகுதியில் நிறைய ரகங்கள் வரிசைகட்டி நின்றாலும், நெருப்பு பீடா ஸ்டாலில்தான் பெருமளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. `எனக்கு ஃபயர் பீடாலாம் வேணாம்… சாதாரண பீடாவே கொடுங்க…’ எனப் பலர் சொல்லிக்கொண்டிருக்க, இளசுகளோ `அந்த ஃபயர் பீடாவை கொடுங்க பாஸ்…’ என ஸ்டால் உரிமையாளரை மொய்த்துக்கொண்டிருந்தனர்.

Sweet Beeda (Representational Image)
Sweet Beeda (Representational Image)
Photo: Balasubramanian.C / Vikatan

ஃபயர் பீடாவை வாயில் போடும் கலையை, பலர் சுற்றி நின்று ரசித்துக்கொண்டிருந்தனர். `அச்சோ நெருப்பு…’ எனப் பலரும் கூச்சலிட்டு அச்சப்பட்டதையும் பார்க்க முடிந்தது! ஃபயர் பீடா ஃபயருடன் வாய்க்குள் செல்வதை செல்ஃபி புகைப்படம் எடுத்தும், காணொளி எடுத்தும் குதூகலமடைந்ததைப் பார்க்க முடிந்தது!

சரி நாமும் அந்த ஃபயர் பீடாவின் புதுமையை அனுபவிக்கலாம் என்ற ஆர்வத்தில் `எனக்கொரு ஃபயர் பீடா கொடுங்க பிரதர்…’ என உரிமையாளரைக் கேட்டேன். வெற்றிலையை எடுத்து, அதற்குள் கலர் கலராக மினி இனிப்புகளைத் திணித்து, கொஞ்சம் பாக்கு சீவல்களை வைத்து சிறிதளவு உலர்ந்த தேங்காய் சீவல்களை மேல் வைத்தார். இதில் ஹீரோவாகப் போவதே உலர்ந்த தேங்காய் சீவல்கள்தான். ஆம் வைத்த தேங்காய் சீவல்களின் மீது, அருணாசலம் ரஜினி ஸ்டைலில் நெருப்பைப் பற்ற வைத்தார் உரிமையாளர். உடனடியாக வெற்றிலையின் மேல் உள்ள பொருள்கள் தீபமாக எரியத் தொடங்கின.

`வாயத் தொறங்க சார்…’ என அவர் சொல்ல, நெருப்பைப் பார்த்த சலனத்தில் தயக்கத்துடன் வாயை அகல விரித்தேன். எரியும் சூடத்தை வாயில் போட்டு அடக்கும் வித்தையும் அந்தச் சில நொடிகளில் நினைவுக்கு வந்தது. எரிந்துகொண்டிருக்கும் ஃபயர் பீடாவை வாய்க்கு அருகில் கொண்டு வந்து, அப்படியே அலேக்காக மடித்து உள்ளுக்குள் திணித்துவிட்டார்.

`கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல, கொஞ்சம் தாமதமாக வெற்றிலையை மடித்துத் திணித்திருந்தால் சிக்கல்தான்! பொசுங்கும் சுவை மற்றும் மணமோடு தாம்பூலத்தின் சுவை உண்மையில் வித்தியாசமாகவே இருந்தது. நெருப்பு உள்ளடங்கிய மகிழ்ச்சியில் கண்களிலிருந்து லேசாகக் கண்ணீர் எட்டிப்பார்த்தது உண்மை!

Betel Leaves
Betel Leaves
Photo: Chidambaram.A / Vikatan

வெற்றிலையின் சாரம்… பொசுங்கிய மணம்… புதுமையான அனுபவமாக இருந்தாலும், பாரம்பர்ய முறைப்படி வெற்றிலைக்குள் கிராம்பு, ஏலம், சாதிக்காய், பாக்கு மற்றும் இன்னபிற பொருள்களை வைத்து, டப்பிக்குள் இருக்கும் சுண்ணாம்பை விரல் நுனியில் தீண்டி வெற்றிலையில் தடவி, சுற்றம் சூழ சாப்பிடும் தாம்பூலத்துக்கு எவ்வித புதுமையும் ஈடாகாது!

இருப்பினும் ஃபயர் பீடா… நெருப்புடா… நெருங்குடா… விரும்புடா… என்று பொசுங்காமல் ஆனந்திக்கத் தூண்டும் காலா ரகம்! ஃபயர் பீடா பற்றிப் பேசும்போது, தாம்பூலம் தரிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நலக்கூறுகளைப் பற்றி விவரிக்காமல் இருப்பது முறையல்ல!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தால் உண்டாகும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தனிப்பெரும் மருத்துவ குணம் கொண்டது வெற்றிலை. செரிமானத்தை அதிகரித்து, சாப்பிட்ட உணவு முறையாக செரித்து உடலுக்கு ஊட்டமாக மாறுவதற்கு வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கும்.

திருமண நிகழ்வுகள்… திருவிழாக்கள்… அசைவ விருந்துகளில் அதிக அளவில் உணவு சாப்பிட்டுவிட்டால் உண்டாகும் மந்தத்தைப் போக்குவதே தாம்பூலம்தான். தாம்பூலத்தில் இருக்கும் ஏலம், சிறந்த செரிவூக்கிப் பொருள். வாய்ப்பகுதியில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, வாய்ப்பகுதியில் ஏற்படும் நாற்றத்தைப் போக்க பேருதவி புரியும். துவர்ப்புச்சுவை நிறைந்த பாக்கு வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களைப் போக்கும் அற்புதமான மருந்து!

Betel Leaves
Betel Leaves
Photo: Gunaseelan.K / Vikatan

கிராம்பின் மகத்துவங்களைச் சொல்ல வேண்டியதில்லை. கிருமிநாசினி செய்கையோடு, குடற்புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. தாம்பூலத்தில் இடம்பெறும் சிறிதளவான சாதிக்காய், உடலுக்கும் மனதுக்கும் ஊட்டம் அளிக்கும் முக்கியமானதொரு மூலிகை!

திருமணமான ஆண்களுக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் தாம்பூல ரகங்கள் இன்றும் பல இடங்களில் வழக்கத்திலிருக்கின்றன. அவற்றில் சாதிக்காய் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். சுண்ணாம்பும் செரிமானத்தை துரிதப்படுத்தும் முக்கிய கருவி என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் என்பது, செரிமானத்துக்கான உற்ற தோழன்!

மூலிகைகள் சேர்ந்த தாம்பூலம் தரிப்பதில் எந்தவிதமான தீமைகளும் ஏற்படப்போவதில்லை. ஆனால், வெற்றிலைக்குள் போதை வஸ்துகளை நிறைத்து மெல்லும் முறை பல்வேறு பாதகங்களை உண்டாக்கும். போதையால் ஏற்படும் தீமைகள் விபரீதங்களைத் தரக்கூடியவை.

விக்ரம் குமார்
விக்ரம் குமார்

அதைத்தாண்டி, புகையிலை திணித்த வெற்றிலையால் உண்டாகும் மிகப்பெரும் ஆபத்து புற்றுநோய். வாய்ப்புற்றுநோய் உண்டாவதற்கு மிக முக்கிய காரணம் புகையிலை என்பதை மறந்துவிட வேண்டாம். இப்போதும் வாய்ப்புற்றுநோயின் எண்ணிக்கை நமது நாட்டில் மிகத்தீவிரமாக இருப்பதை கருத்தில்கொள்வது முக்கியம்!

தாம்பூலம் தரிக்கும் பாரம்பர்ய முறையாக இருந்தாலும் சரி, அதில் நவீனம் புகுத்தப்பட்டிருந்தாலும் சரி, அடிப்படை மாறாமல் இருந்தால் தாம்பூலத்தால் ஆரோக்கியம் நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு