Published:Updated:

தமிழகத்தில் விற்கப்படும் பாலில் நச்சுத்தன்மை!- மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் முதல் அனைவரும் பருகும் இந்த நச்சுத்தன்மை மிகுந்த பாலால் கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், வளர்ச்சிக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பால்
பால்

இன்றைய மக்களவை கூட்டத் தொடரின்போது தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அச்சத்தையும் புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், ''நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு உகந்ததல்ல.

அஸ்வினி குமார் சௌபே
அஸ்வினி குமார் சௌபே

தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அஃப்ளாடாக்ஸின் எம்.1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது. பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் குறித்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது புது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் குழந்தைகள் முதல் அனைவரும் பருகும் இந்த நச்சுத்தன்மை மிகுந்த பாலால் கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், வளர்ச்சிக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ``பாலில் நச்சுத்தன்மை குறித்து T.R.பாலு MP எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

பால்
பால்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, பாலில் நச்சுத் தன்மை இருப்பது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``ஆவின் பாலில் நச்சுத் தன்மை இல்லை'' எனக் கூறினார்.