Published:Updated:

தேங்காய்ப்பால், சோயா பால், பட்டாணிப் பால்... விலங்குப் பாலுக்கு சிறந்த மாற்றாகும் தாவரப் பால்கள்!

தாவரப் பால்
தாவரப் பால்

ஏறக்குறைய விலங்குகளின் பாலிலிருந்து கிடைப்பதைப்போலவே தாவரப் பாலிலிருந்தும் அதிகளவு கால்சியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் பெறப்படுகின்றன.

பால், பலரின் உணவில் ஒரு முக்கிய உணவு. மேலும், இது அனைத்து வயதினருக்கும் தகுந்த ஓர் உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி12, மற்றும் டி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இருப்பினும் இதில் உள்ள `லாக்டோஸ்' என்னும் பொருளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

பால்
பால்

எனவே விலங்குகளின் பால் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுகிறவர்களுக்கும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளாத `வீகன்' போன்ற உணவு முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் விலங்குகளின் பாலுக்கு மாற்றான தாவரப் பால் பல வகை உள்ளன. தேங்காய், பாதம், பட்டாணி, சோயா, சணல், நிலக்கடலை, அரிசி, ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் அந்த தாவர பால்கள், விலங்குகளின் பாலுக்கு இணையான சத்துகள் தரவல்லவை.

ஏறக்குறைய விலங்குகளின் பாலிலிருந்து கிடைப்பதைப்போலவே தாவரப் பாலிலிருந்தும் அதிகளவு கால்சியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் பெறப்படுகின்றன. தாவரப் பால்களில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்ஜிடம் பேசினோம்.

டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்
டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்

``லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கும் ஒருவர் விலங்கிலிருந்து பெறப்படும் பாலைத் தொடர்ந்து அருந்தும்போது அவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாவரப் பால், விலங்குப் பாலால் ஒவ்வாமை ஏற்படுவோருக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. தேங்காய், பாதாம், ஓட்ஸ், சோயா, நிலக்கடலை, அரிசி, பட்டாணி, மக்காடமியா, சணல் போன்றவற்றிலிருந்து பெறப்படும் இந்த தாவரப் பால்களில் மேக்ரோ மற்றும் மைக்ரோ சத்துகள் நிறைய உள்ளன. குறிப்பாக, புரதத்தின் அடிப்படையில் பசுவின் பாலுக்கு சோயா பால் சிறந்த மாற்றாகும். ஏனெனில் இதில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.

பட்டாணிப் பால்

ஒரு கப் பட்டாணிப் பாலில் 70 கலோரிகள், 8 கிராம் புரதம், 4.5 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் விலங்குகளின் பாலைவிட இரண்டு மடங்கு அதிக வைட்டமின் பி6 மற்றும் பி12, பசும்பாலைவிட இரண்டு மடங்கு அதிக கால்சியம் மற்றும் அதிகப் புரதம், மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இவற்றில் வைட்டமின் பி அதிகளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, மூளைச் செயல்பாடு மற்றும் ஆற்றலுக்கு வைட்டமின் பி முக்கியமானது. பட்டாணியைத் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி வீட்டிலேயே பட்டாணிப் பால் தயாரிக்கலாம்.

மக்காடமியா
மக்காடமியா

மக்காடமியா பால்

மக்காடமியா பால், மக்காடமியா கொட்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து தயாரிக்கப்படுகிறது. ஒரு கப் மக்காடமியா பாலில் 50 - 55 கலோரிகள், 4.5 - 5 கிராம் கொழுப்பு, 1- 5 கிராம் புரதம் மற்றும் 1 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளதால் உணவில் கலோரிகளின் அளவைக் குறைக்க விரும்புவோர்க்கு இது சிறந்த உணவாக இருக்கும். மக்காடமியா பாலில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளன. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

தினமும் சூப் குடிப்பவரா நீங்கள்? இதையெல்லாம் கவனிக்கத் தவறாதீங்க! #ExpertOpinion

சணல் பால்

சணல் செடியிலிருந்து பெறப்படும் சணல் பால், சுவை நிறைந்த சத்தான பால். சணல் செடியின் தண்டுப்பகுதியை அரைத்து, பால் எடுத்து, வடிகட்டி, காய்ச்சி அருந்தலாம். இதில் 60 - 80 கலோரிகள், 4.5 - 8 கிராம் கொழுப்பு, 2 - 3 கிராம் புரதம் மற்றும் 0 - 1 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. சணல் பாலில் பசும்பாலை ஒத்த கொழுப்பு உள்ளது. ஆனால் குறைவான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கும். இது அனைத்து விதமான அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் வழங்குகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆல்பா - லினோலெனிக் அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலம், மற்றும் லினோலிக் அமிலங்கள் உள்ளன.

சோயா பால்
சோயா பால்

சோயா பால்

ஒரு கப் சோயா பாலில் 80 - 90 கலோரிகள், 4 - 4.5 கிராம் கொழுப்பு, 7 - 9 கிராம் புரதம் மற்றும் 4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை, சோயா பால் பசுவின் பாலுக்கு சிறந்த மாற்றாகும். சோயாவை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டிய பிறகு நன்றாகக் காய்ச்சி சோயா பால் தயாரிக்கலாம்.

பாதாம் பால்

பாதாமை 12 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி பால் எடுக்கலாம். பாதாம் பால் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட முழு பாதாம் பருப்புகளிலிருந்து தயாரிக்கப்படுவதால் இதில் அதிகப் புரதச்சத்து உள்ளடங்கியுள்ளது.

பாதாம் பால்
பாதாம் பால்

ஓட்ஸ் பால்

ஓட்ஸ் பால் சுவையாக, பசுவின் பால்போலவே இருக்கும். இதை சமையலிலும் பயன்படுத்தலாம். ஒரு கப் ஓட்ஸ் பாலில் 140 - 170 கலோரிகள், 4.5 - 5 கிராம் கொழுப்பு, 2.5 - 5 கிராம் புரதம் மற்றும் 19 - 29 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஓட்ஸ் பாலில் பசுவின் பாலை ஒத்த கலோரிகளும் புரதமும் உள்ளன. ஓர் ஆய்வில், அதிகக் கொழுப்புச் சத்துள்ள ஆண்கள் ஐந்து வாரங்களுக்கு தினமும் 25 அவுன்ஸ் (750 மில்லி) ஓட்ஸ் பால் உட்கொண்டுவர, அவர்கள் உடம்பில் 3% கொழுப்புக் குறைந்தது தெரியவந்தது. ஓட்ஸை சூடான நீரில் வேகவைத்து அரைத்து, வடிகட்டி ஓட்ஸ்பால் தயாரிக்கலாம்.

சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக புரதம், தாய்ப்பால் சுரப்பு - கடல்பாசிகளின் அற்புத பலன்கள்!

தேங்காய்ப்பால்

நாம் வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் தேங்காய்ப்பாலும் விலங்குகளின் பாலுக்குச் சிறந்த மாற்று. 100 மில்லி தேங்காய்ப் பாலில் 230 கலோரிகள் உள்ளன. இதுபோல் முந்திரி, நிலக்கடலை, வாழைப்பழம் போன்றவற்றிலிருந்தும் தாவரப் பால் தயாரிக்கப்படுகிறது.

தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால்

குழந்தை முதல் பெரியவர்கள்வரை விலங்குப் பாலுக்குச் சிறந்த மாற்றாகத் தாவரப் பால் இருந்தாலும் சிலருக்கு பாதாம், முந்திரி போன்ற பருப்புகளால் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே அவர்கள் தாவரப் பாலை உணவில் சேர்த்துக்கொள்ளும் முன்பு ஓர் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டயட்டீஷியனிடம் ஆலோசனை கேட்பது அவசியம்" என்றார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்.

விலங்குப் பால்களைத் தவிர்க்க வேண்டிய உடல்நிலைக் காரணங்களுடன் இருப்பவர்களுக்குத் தாவரப் பால் சிறந்த மாற்று. இவற்றை வீட்டில் எளியமுறையில் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பின் செல்ல