Published:Updated:

ரசம்... ரசனை... இது வீட்டுச் சமையல் உணவகம்!

 சின்னத்தம்பி  - ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
சின்னத்தம்பி - ஆனந்த்

இங்கே கிடைக்கிற ரசம் சாதத்துக்காகவே பல்வேறு பகுதிகளிலிருந்து பசியோடும், லஞ்ச் பாக்ஸ்களோடும் வந்து நிற்பவர்கள் ஏராளம்.

ரசம்... ரசனை... இது வீட்டுச் சமையல் உணவகம்!

இங்கே கிடைக்கிற ரசம் சாதத்துக்காகவே பல்வேறு பகுதிகளிலிருந்து பசியோடும், லஞ்ச் பாக்ஸ்களோடும் வந்து நிற்பவர்கள் ஏராளம்.

Published:Updated:
 சின்னத்தம்பி  - ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
சின்னத்தம்பி - ஆனந்த்
சென்னை மாநகரத்தில் பரபரப்பான பகல் வேளையில், பல்வேறு வேலைப்பளுக்கிடையில் களைப்பு தீர சூடான ரசம் சாதமும் சுவையான பொரியலும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இப்படிப்பட்ட சுகத்தையே திருவல்லிக்கேணியில் உள்ள பேச்சுலர்கள் அனுபவிக்கிறார்கள். வீட்டை யும் உறவுகளையும் விட்டுவந்து தங்கியிருக்கிற விடுதிக்காரர்களுக்கு அம்மா வீடு, அம்பாள் மெஸ்தான்!

அம்பாள் மெஸ்
அம்பாள் மெஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் பாரம்பர்ய உணவகங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவை எத்தனையோ வரலாறு களைத் தாங்கி நிற்பவை என்றாலும் காலப்போக்கில் வடிவம் வேறாகியிருக்கும்; விலைகள் உயர்ந்திருக்கும்; தரம் குறைந்திருக்கும். ஆனால், தொடங்கிய காலம் முதல் இப்போது வரையில் பொருத்தமான விலையில் வீட்டுச் சுவையோடு அமுது படைக்கிறது அம்பாள் மெஸ்.

திருவல்லிக்கேணி பெரிய தெரு பள்ளி வாசலை அடுத்து சில அடி தூரத்தில் இருக்கிறது அம்பாள் மெஸ். 23 வயதைக் கடந்து இயங்கி வருகிறது. வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், இளம் பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரை யும் ஈர்த்து வருகிறது இந்த மெஸ்.

சுவையூட்டும் எக்ஸ்ட்ரா சேர்மானங்கள் இல்லை, உணவில் அதீத காரம் இல்லை. வயிற்றைத் தீண்டாமல் வாய்க்கு ருசியாக மினி விருந்து, இந்த அம்பாள் மெஸ். கேட்பவர்களுக்கு மட்டும் முட்டை உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெஸ்ஸின் உரிமையாளர் 63 வயது சின்னத்தம்பி. நாமக்கல் அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சென்னைக்குக் குடியேறியவர். திருவல்லிக்கேணி பகுதி ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவந்த நேரம் பல உணவகங்களில் சாப்பிட்டு அவற்றின் நிறைகுறைகளை அறிந்து அதிலிருந்து தனித்துத் தெரியும்படி ஒரு மெஸ்ஸை உருவாக்க வேண்டும் என்பது இவரது கனவு. அதன்படி 1997-ம் ஆண்டு உருவானதுதான் அம்பாள் மெஸ்!

அம்பாள் மெஸ்
அம்பாள் மெஸ்

“நாம சாப்பிடுறதைப் போல எல்லோருக் கும் சாப்பிடக் கொடுத்தா என்னன்னு நினைச்சோம். அதுதான் இந்த மெஸ்! அன்றன்றைக்கு எண்ணெய் மாற்றிவிடுவோம். உப்பும் காரமும் கம்மியாத்தான் சமைப்போம் கிறதால சாப்பாடு, உடம்புக்குப் பிரச்னை பண்றதில்லை. அதனாலேயே எல்லோரும் மெஸ் சாப்பாட்டை விரும்புறாங்க” என்கிறார் சின்னத்தம்பி.

அம்பாள் மெஸ்ஸில் இரண்டு வேளைகளிலும் இட்லி, தோசை உள்ளிட்ட வழக்கமான வகையறாக்கள் பிரதானம். அவை தவிர்த்து வழங்கப்படுகிற சாதம் வெரைட்டிகள்தாம் மெஸ்ஸின் ஸ்பெஷலே!

இங்கே கிடைக்கிற ரசம் சாதத்துக்காகவே பல்வேறு பகுதிகளிலிருந்து பசியோடும், லஞ்ச் பாக்ஸ்களோடும் வந்து நிற்பவர்கள் ஏராளம்.

மிளகு ரசம், தக்காளி ரசம் போக... ஆரோக்கியத்துக்காகவே மெனுவில் சேர்ந்திருக்கின்றன இன்னும் பல ரசங்கள். துளசி ரசம், தூதுவளை ரசம், முடக்கத்தான் ரசம், வல்லாரை ரசம், பிரண்டை ரசம், சுக்குமல்லி ரசம் என நாளொரு ரசமும் பொழுதொரு வாசமுமாக வாடிக்கையாளர் களை ஈர்க்கின்றன.

ரசம் மட்டுமல்ல; தொடுகறி வகைகளிலும் ஸ்கோர் செய்கிறார்கள். பீர்க்கங்காய்க் கூட்டு, பீன்ஸ் பொரியல் உள்ளிட்டவை தினங்களுக்கேற்ப மாறி மாறி வழங்கப்பட்டு வருகின்றன. காலையில் கத்திரிக்காய்ப் புளிக்குழம்பு, அவரைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் என ஒவ்வொரு நாளைக்கு ஒன்று, சுடச்சுடக் கிடைக்கின்றன.

இட்லி, சிறுதானியப் பொங்கல், ராகி சேமியா கிச்சடி ஆகியவையும் கிடைக்கின்றன. கீரை தோசை அட்டகாசம். தோசையில் கீரை மணம் ருசிகூட்டுகிறது. காலை மெனுவில் ஒவ்வொரு நாளும் மோர்க்குழம்பு சாதம், காரக்குழம்பு சாதம் தருகிறார்கள்.

அலுவலகம் போகிறவர்கள் லஞ்ச் பேக்கிங் செய்து கொள்கிறார்கள். காலை 7:30 மணி முதல் 11:30 வரையிலும், இரவு 7 மணி முதல் 10:30 வரையிலும் மெஸ் இயங்குகிறது.

தந்தைக்கு அடுத்தபடியாக மகன் ஆனந்த் மெஸ்ஸை கவனித்துக்கொள்கிறார்.

“எனக்கு ஒரு தங்கச்சி. ஐ.டிகம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. நானும் அப்படி வேலை பார்த்திருக்க வேண்டியவன்தான். எதிர்பாராத விபத்தும், அடுத்தடுத்த சூழலும் அப்படியே இந்த ஃபீல்டுக்கு என்னைக் கூட்டி வந்திடுச்சு” என்கிறார் ஆனந்த்.

இரவுக்கு முட்டை மசாலா, இட்லி தோசைக்கு நன்றாக இருக்கிறது. அதோடு சோள தோசை, கம்பு தோசை, பூண்டு தோசை என ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வகை தோசை. இதுதவிர சிறப்பு மசால் தோசை வகைகளும் ஆஸம். பச்சைப்பட்டாணி மசால் தோசை, வாழைத்தண்டு மசால் தோசை, வெள்ளை சுண்டல் மசால் தோசை, பச்சைப்பயறு மசால் தோசை உள்ளிட்ட ஆறு வகை மசால் தோசைகள் ஆறு நாள்களுக்கும் கிடைக்கும். இரவு வெரைட்டி சாதங்களில் மணத்தக்காளிக்கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், பருப்புக்கீரை சாதம் உள்ளிட்டவை நாளுக்கேற்றபடி மாறி மாறி இருக்கும். தொட்டுக்கொள்ள பீட்ரூட், கேரட், பாகற்காய், பீன்ஸ், அவரைக்காய் பொரியல்கள். டின்னரை முடித்துவைக்க ஒரு கிண்ணம் ரசம் சாதமும் ஒரு கப் பொரியலும் நல்ல காம்பினேஷன்.

சின்னத்தம்பி  - ஆனந்த்
சின்னத்தம்பி - ஆனந்த்

வீட்டில் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட வழிமுறை அல்லவா இது! எவ்வளவு சாப்பிட்டாலும் இரவு வீட்டில் சாப்பிடும் ரசம் சாதம்தானே நிம்மதியான தூக்கம் தரும். அதற்காகவே இந்த மெனு என்கிறார்கள்.

பரோட்டா போன்ற மைதா அயிட்டங் களே கிடையாது. பரோட்டா டேஸ்ட்டுக்குச் சாப்பிட விரும்புபவர்களுக்காக வெஜ் சப்பாத்தி. இது, கொத்து பரோட்டா போலவே இருக்கும். நான்வெஜ் டேஸ்ட்டுக்காகப் புளிப்பும் காரமுமாக வெஜ் இட்லி.

தினசரி மெனுவில் ரசம் சாதம் 30 ரூபாய், தோசை 27 ரூபாய், மசால் தோசை 37 ரூபாய். ஆனியன் தோசை மட்டும் அதிக விலை... 40 ரூபாய். மற்ற எல்லாமே 40 ரூபாய்க்குள் நல்ல தரமும் சுவையும்கொண்ட உணவுகள்.

வாடிக்கையாளர்களின் வேண்டு கோளுக்கும் கருத்துகளுக்கும் செவிகொடுத்து நல்ல மாற்றங்களையும் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

“நாற்பது வயசுக்கு மேல இருக்கிறவங்க நிறைய பேர் வர்றாங்க. ‘எனக்கு சுகர் இருக்கு. தினைப் பொங்கல் போடுங்களேன்’னு சொன்னாங்க. செய்யத் தொடங்கினோம். தினை, சுகர் லெவலைக் கட்டுப்படுத்தும். சிறுதானியங்களை உப்புமாவா தந்தோம். சாப்பிடச் சிரமமா இருக்குன்னு எல்லோரும் சொல்லவும், சிறுதானியங்களில் பொங்கல் தயாரிக்கத் தொடங்கினோம். இப்போ மூணு வருஷமா சிறுதானியப் பொங்கல் தான்!” என்கிறார் ஆனந்த்.

சமையலுக்கு வேண்டியதை மொத்தமாக மூட்டை மூட்டையாக வாங்கி வைப்பதே இல்லை. காய்கறி உள்ளிட்டவற்றை அன்றன்றைக்கு வாங்கித்தான் சமைக் கிறார்கள்.

அதிகாலை 4:30 மணிக்குச் சமையல் தொடங்கும். மாஸ்டர் உட்பட நான்கு பேர் மட்டும்தான். மெயின் டிஷ், தொடுகறிகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேலை. மெஸ் திறக்கும்போது எல்லாம் தயாராக இருக்கும்.

மெஸ்ஸை ஆரம்பித்த புதிதில், கற்றுக் கொள்வதற்காக வந்து சேர்ந்தவர் சின்னத்தம்பியின் அக்கா மகன் சுரேஷ். இப்போது மாஸ்டராக இருக்கிறார்.

“அப்பாவுக்குக் கொஞ்சம் சமையல் தெரியும்னாலும், நிர்வாகத் திறன்மிக்கவர் என்பதுதான் அவரது தனித்துவமே. அதுதான் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு” என்கிறார் ஆனந்த்.

இவர்கள் எந்த டெலிவரி ஆப்களிலும் இல்லை. “டெலிவரி ஆப்கள் மூலமா பிசினஸை டெவலப் செய்யலாம்தான். ஆனா, நேர்ல வர்ற கஸ்டமர்களை முழுமையா கவனிக்க முடியாமல் போயிடுமே. அதுமட்டுமில்ல, எந்த உணவகமா இருந்தாலும் நேர்ல வந்து வாங்கிச் சாப்பிடும் போதுதானே சாப்பிட்ட முழுமை கிடைக்கும். உணவுங்கிறதே சூடா சாப்பிடத்தானே!” - அர்த்தம் நிறைந்த நிதானத்தோடு பேசுகிறார், 30 வயது ஆனந்த்.

“ஒருநாள் வந்தா எல்லா நாளும் வருவாங்க. வீட்டில் எப்படிச் சமைக்கிறோமோ அதே முறையில எந்த மாற்றமும் இல்லாமல் மெஸ்ஸில் சமைக்கிறோம். எந்த டிஷ்ஷையும் நல்லா நேரமெடுத்து முழுமையா வேகவச்சு சமைப்போம். அம்மா நமக்கு அப்படித்தானே சமைப் பாங்க... அதேதான் இங்கேயும்!” என்று மென்மையாகப் புன்னகைக் கிறார்கள், ஆனந்தும் அவர் தந்தையும்!