Published:Updated:

`வீட்டுச் சுவை... 90 ஆண்டுகள் பாரம்பர்யம்... கமகமக்கும் மதுரை பருத்திப்பால்!'

கருப்பட்டி பருத்திப்பால்
கருப்பட்டி பருத்திப்பால் ( என்.ஜி.மணி )

மதுரையில் 90 ஆண்டுகள் பழைமையான கமகமக்கும் கருப்பட்டி பருத்திப்பால்!

மதுரையில் அன்றாட பாட்டாளி மக்கள் அதிகப்படியாக இரவு நேரங்கள் வரை பணியாற்றுவதால், சின்னஞ்சிறு தள்ளுவண்டி கடைகளுக்குப் பஞ்சமிருக்காது. டீ, வடை, ஜிகர்தண்டா, பரோட்டா என்று எல்லாமும் சுவையாகக் கிடைக்கும்.

சந்தானம் மகன் மற்றும் பேரனுடன்.
சந்தானம் மகன் மற்றும் பேரனுடன்.

பர்மா இடியாப்பம் முதல் பாட்டிக் கடை கறிதோசை வரை எல்லாமும் ஃபேமஸ்தான். சுவைக்காக தேடிச் சாப்பிடும் கூட்டம் ஜாஸ்திதான். இப்படி தேடிச் சாப்பிட வைக்கும் உணவில் பருத்திப்பாலும் அடங்கும்.

மதுரை முனிச்சாலை பகுதியில் 90 ஆண்டுகளுக்கு மேல் பருத்திப் பாலுக்கு என்றே திருமலை மடைக்கருப்பசாமி என்கிற பெயர் கொண்ட கடை இயங்கிவருகிறது. சுவைமிக்க பருத்திப்பாலை வாடிக்கையாளர்களுக்குத் தினம்தோறும் வழங்கும் இந்தக் கடை உரிமையாளர் சந்தானம் நம்மிடம், ``பழைமையிலும் புதுமை எங்கள் கருப்பட்டி பருத்திப்பால். அப்பா காலத்திலிருந்து எனக்கு இதுதான் தொழில்.

தற்போது என் பையனும் என்னுடன்தான் இருக்கான். என் மனைவி, மகன், மருமகள் எனக் குடும்பத்தோடு சேர்ந்துதான் இந்தப் பருத்திப்பால் தொழிலை நடத்திவருகிறேன். எங்களிடம் வீட்டுச் சுவையில் பருத்திப்பால் கிடைக்கும். பருத்திப்பால் என்றவுடன் வெல்லம், வெள்ளைச் சீனி, எசென்ஸ் கலந்து செய்யும் இந்தக் கால பருத்திப்பால் என்று நினைத்துவிடாதீர்கள்.

சந்தானம்
சந்தானம்

திக்கான மஞ்சளும் அரக்கு நிறமும் நிறைந்த கருப்பட்டி பருத்திப்பால். இதில் சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, கருப்பட்டி , திப்பிலி, தேங்காய் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களைக் கலந்து உணவே மருந்து என்ற பாணியில் பருத்திப்பால் வழங்குகிறேன். 'திருமலை மடைக்கருப்பசாமி' என்பது குலதெய்வத்தின் பெயர். எனக்கு இறை நம்பிக்கை அதிகம் அதனால் மிகவும் சுத்தமாகவும் தரமாகவும் தொழில் செய்கிறேன். இந்தப் பருத்திப்பால் வியாபாரத்தில் ஒரு சேவை மனப்பான்மை நிறைந்திருக்கு.

சீனியோ, வெல்லமோ கலப்படம் செய்யாமல் ஒரிஜினல் பனங்கருப்பட்டி மூலம் செய்கிறேன். பருத்திப்பாலை நன்கு ஊறவைத்து ஆட்டி அதிலிருந்து கிடைக்கும் பாலை பசும்பால் போல நன்கு காச்ய்சி, ஆட்டிய பச்சரிசியையும் கலந்து கருப்பட்டியைக் காய்ச்சி ஊத்திவிடுவேன். பின் மிதமான சூட்டில் தொடர்ச்சியாக வைத்துக்கொள்வேன் வாடிக்கையாளர்கள் பருகும்போது ஏலக்காய், திப்பிலி உள்ளிட்ட பொருள்களைக் கலந்து சுடச்சுட சூடான பருத்திப்பாலை அவர்கள் கையில் கொடுத்துவிடுவேன்.

பருத்திப் பால்
பருத்திப் பால்

பருத்திப்பால் 15 ரூபாய். நெய் கலந்து கொடுத்தால் 20 ரூபாய். சுவை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். சினிமாக்களில்கூட நம்ம கடைய படம் பிடிச்சிருக்காங்க. நம்ம கடையில் பருத்திப்பால் மட்டும் அல்ல; கூழும் கிடைக்கும்'' என்றார் மகிழ்ச்சியாக.

குளு குளு குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து இளநீர், பருத்திப்பால் போன்றவற்றைப் பருகலாம்.

அடுத்த கட்டுரைக்கு