Published:Updated:

உணவை விழுங்குவதில் சிரமமா... இந்தப் பிரச்னைகளாக கூட இருக்கலாம்! #WorldSwallowingDay

Food/ Representational Image
Food/ Representational Image ( Image by Ron Mitra from Pixabay )

உணவு விழுங்குவதில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்த குறைபாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டிசம்பர் 12-ம் தேதி உலக விழுங்கும் நாளாக (World Swallowing Day) அனுசரிக்கப்படுகிறது.

நாம் எல்லோரும் தினமும் தன்னிச்சையாகச் செய்யும் செயல், திட அல்லது திரவ உணவுகளை விழுங்குவது. இயல்பான அந்த விஷயம் பலருக்கும் பெரும் சவாலாக அமைகிறது என்பதை அறிவீர்களா?

Dysphagia காரணமாகப் பலரும் இந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். திட உணவு அல்லது திரவ உணவுகளை விழுங்குவதில் ஏற்படும் சிரமம்தான் Dysphagia எனப்படுகிறது. இப்படி உணவு விழுங்குவதில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்த குறைபாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டிசம்பர் 12-ம் தேதி உலக விழுங்கும் நாளாக (World Swallowing Day) அனுசரிக்கப்படுகிறது. சரி, இந்த Dysphagia ஏன் ஏற்படுகிறது?

Idli
Idli
Image by mcthrissur from Pixabay

இந்தப் பிரச்னைக்கான காரணங்கள்

1. பக்கவாதம் (stroke)

2. நரம்பணு நோய்கள் (ALS – Amyotrophic Lateral Sclerosis)

3. நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோய்

4. போலியோமையலைடிஸ் (இந்த வைரஸ் தண்டுவடத்தை தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம்)

5. தண்டுவட மரபு நோய் (Multiple sclerosis)

6. முதுமை

7. தலை அல்லது வாய் புற்றுநோய்

8. அண்ணம் மற்றும் உதட்டுப் பிளவு (Cleft lip Palate)

Dosa
Dosa
Image by nurabooo from Pixabay

Dysphagia-விற்கான அறிகுறிகள்

கீழ்க்கண்ட இந்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் Dysphagia பிரச்னையாக இருக்கலாம்.

1. வாயில் திரவத்தை வைத்திருப்பதில் சிரமம்.

2. திரவ உணவுகளைக் குடிக்கும்போது இருமல், மூச்சு இரைத்தல்.

3. குடித்த பின் குரல் மாறும் தன்மை.

4. உணவு, தொண்டையில் அல்லது வாயில் சிக்கிக்கொள்ளும் உணர்வு.

5. உணவு விழுங்கிய பின் இருமல், மூச்சிரைத்தல்

6. உமிழ்நீர் ஒழுகும் தன்மை

இதில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால்கூட காது மூக்கு தொண்டை மருத்துவரையோ அல்லது ஸ்பீச் தெரபிஸ்ட்டையோ அணுகவேண்டும். அவர்கள் இந்த அறிகுறியை எப்படி எதிர்கொள்வது என சொல்லிக்கொடுப்பார்கள் அல்லது பாதுகாப்பான விழுங்குதல் முறையை உங்களுக்குப் பயிற்சி மூலம் உணர்த்துவார்கள்.

வயது முதிர்ந்தோர் உணவு உண்ணும் போதும் நீர், ஜூஸ், மோர் போன்ற திரவ உணவுகளை விழுங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதே தெரியாத நிலை இருக்கிறது. அவர்கள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு அல்லது பேசிக்கொண்டே உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கூழ் போன்ற உணவு
கூழ் போன்ற உணவு

பாதுகாப்பான விழுங்குவதற்கான குறிப்புகள்

நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

திரவ உணவுகளைச் சிறிது சிறிதாக வாயில் ஊற்றியே விழுங்க வேண்டும்.

அவசரமாக வாயில் நிறைய உணவை அடைத்துக் கொள்ளாதீர்கள்.

நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்குங்கள்.

லேசான பிரச்னை உள்ளவர்கள் உணவு அமைப்பை மாற்றி அமைக்கலாம் (உதாரணமாக கடினமான உணவை கூழ் போல் மாற்றி அமைப்பது, பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொடுப்பது அல்லது கூழ் போல் அரைத்துக்கொடுப்பது)

எளிதில் குடிக்க ஏதுவாக சின்ன ஸ்பூன்களை அல்லது வாயுடன் கூடிய குப்பிகளைப் பயன்படுத்தலாம்.

சாப்பிட்ட பின்பு முப்பது நிமிடங்களுக்குப் படுக்காமல் இருக்க வேண்டும்.

- ஸ்ரீமதி வெங்கட்ராமன், கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்
அடுத்த கட்டுரைக்கு