Published:Updated:

சூடான அன்னாசிப்பழ நீர் புற்றுநோயை சரி செய்யுமா; வாட்ஸ் அப் தகவல் உண்மையா... மருத்துவர் சொல்வது என்ன?

அன்னாசிப்பழம் புற்றுநோயைக் குணப்படுத்துமா... வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

pineapple
pineapple ( pixabay )

சீனத் தலைநகர் பீஜிங் ராணுவப் பொது மருத்துவமனையின் பேராசிரியர் சென் ஹுயிரென். அவர் `சூடான அன்னாசி நீர் உங்கள் வாழ்நாளைக் காப்பாற்றும். நான் சொன்ன இந்தச் செய்தியை நகல் எடுத்து 10 பேருக்கு அனுப்பினால், அவர்களில் ஒருவரின் உயிரையாவது உங்களால் காப்பாற்ற முடியும்' என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் சூடான அன்னாசி நீர் புற்றுநோய் செல்களைக் கொல்லும் திறன் படைத்தவை என்றும் கூறியுள்ளார்.

pineapple
pineapple
pixabay
அலர்ட்... ஆண்களையும் பாதிக்கலாம் மார்பகப் புற்றுநோய்!  விழிப்புணர்வுத் தகவல்கள் #MaleBreastCancer

சூடான அன்னாசி நீரைத் தயாரிப்பது எப்படி என்றும் அவர் இதில் விளக்கியுள்ளார். `ஒரு கோப்பையில் இரண்டு முதல் மூன்று துண்டுகள் அன்னாசிப்பழத்தை மெல்லியதாக வெட்டி சூடான நீருடன் சேர்க்க வேண்டும். இந்த நீரை தினமும் தயாரித்துக் குடித்து வந்தால் புற்றுநோயை உருவாக்கும் செல்களுக்கு எதிராகச் செயல்படும். அத்துடன் பெண்களின் வயிற்றில் உருவாகும் சாதாரணக் கட்டிகள் முதல் நீர்க்கட்டிகள் வரை அனைத்தையும் கொல்லும் திறன் இந்த நீருக்கு இருக்கிறது' என்று சொல்லும் அவர், `இந்த நீர் அனைத்து வகையான புற்றுநோய்களையும் சரி செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்கிறார்.

`அன்னாசி நீர் வன்முறை செல்களை மட்டுமே அழிக்கும். மாறாக ஆரோக்கியமான செல்களை பாதிக்காது. இதிலுள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபீனால்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், ரத்த நாளங்கள் அடைபடுவதைத் தடுக்கும்' என்றும் பேராசிரியர் ஹுயிரென் கூறியுள்ளார்.

"வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டிருக்கும் இந்தத் தகவல் உண்மையா?" என்று சித்த மருத்துவர் வி.விக்ரம்குமாரிடம் கேட்டோம். அவர் இதுதொடர்பாக சில விளக்கங்களைக் கூறினார்.

Dr.V.Vikramkumar
Dr.V.Vikramkumar

"அன்னாசிப் பழத்துக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. ஆனால், வாட்ஸ் அப்பில் உலவும் அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதுபோல சூடான நீருடன் அன்னாசிப்பழத்துண்டுகளைச் சேர்த்துச் சாப்பிட்டால் புற்றுநோய் சரியாகும் என்று எந்த ஆய்விலும் கூறப்படவில்லை. எனவே, இதை உண்மையென நம்பிக்கொண்டு அன்னாசிப்பழத்தை மட்டும் சாப்பிடுவதால் புற்றுநோய் குணமாகாது. ஆனால், அன்னாசிப்பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அது புற்றுநோயைத் தடுக்க பெரிதும் உதவும்.

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் தாது உப்புகளான பொட்டாசியம், தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், பீட்டா கரோட்டின், ஃபோலேட், நார்ச்சத்து, புரோமோலைன் ஆகிய சத்துகள் உள்ளன. குறிப்பாக 80 சதவிகிதம் வைட்டமின் சி இதில் நிறைந்திருப்பதால், இது வெள்ளை அணுக்களைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். எனவே, தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதய பாதிப்பு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், ஆசனவாய் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படும்.

Cancer news
Cancer news
pixabay

இருமல், சளித்தொந்தரவு உள்ளவர்கள் அன்னாசிப் பழத்துண்டுகளைச் சாப்பிட்டால் அந்தப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். கொலாஜென் (Collagen) என்கிற புரதம் உற்பத்தியாக வைட்டமின் சி முக்கியக் காரணம். கொலாஜென்தான் எலும்பு, சருமம், ரத்த நாளச்சுவர் மற்றும் உடல் உறுப்புகள் உருவாக முக்கியக் காரணம். அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலில் ஏற்படும் காயங்களில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் பணியைச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதுடன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

அன்னாசிப்பழத்துக்கு வாய், தொண்டை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை உண்டு. மூட்டுகள் மற்றும் சதை வீக்கத்தைக் குறைக்கும். இதிலுள்ள புரோமோலைன் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி கீல்வாதம் ஏற்படாமல் தடுக்கும்'' என்கிறார்.

pineapple
pineapple
pixabay
Vikatan

மேலும் அவர், "அன்னாசிப் பழத்தைத் தோல் நீக்கிச் சாப்பிடுவோம். அப்போது அதன் நடுவே உள்ள கட்டை போன்ற பாகத்தைச் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அதில்தான் அதிக அளவு புரோமோலைன் உள்ளது. எனவே அதைத் தவிர்க்காதீர்கள். அன்னாசிப்பழம் உடலில் சூட்டினை அதிகரிக்கும் என்பதால் மூலநோய் உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் அன்னாசியைத் தவிர்ப்பது நல்லது'' என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்.