Published:Updated:

அவசரத்துக்கு சமைக்க ஆரோக்கியமான பத்து டிஷ்! - வாசகி பகிர்வு #MyVikatan 

Representational Image
Representational Image

ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆரோக்கியக்கேட்டை  விலை கொடுத்து வாங்குவதேயாகும். 

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நிறைய பெண்கள் வேலைக்குப்போகும் அவசரத்தில் சத்தான பதார்த்தங்கள் சமையலில் சேர்த்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பல சமயங்களில் சமைக்கவே சலிப்படைந்து ஆர்டர் செய்து சாப்பிட நினைக்கிறார்கள். அதற்கேற்றார்போல் இப்போது ஸ்விகி, ஊபர் போன்ற செயலிகள் வந்துவிட்டன. எப்படியிருந்தாலும், ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆரோக்கியக்கேட்டை விலை கொடுத்து வாங்குவதேயாகும். 

Representational Image
Representational Image

60 வயதைக் கடந்த நான் சத்தான பதார்த்தங்கள் சமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவேன். எனக்குத் தெரிந்த ஆரோக்கியமான எளிமையான 10 உணவுகளின் செயல்முறையை இங்கே பகிர்கிறேன்.

நிறைய சத்து நிறைந்த நெல்லிக்காயை வைத்து சுலபமாக ஒரு துவையல் அரைக்கலாம்.

`பெரிய இரண்டு நெல்லிக்காய்களை எடுத்துக்கொள்ளவும். அதனோடு மூன்று பத்தை தேங்காய் அல்லது மீடியம் சைஸில் உள்ள தேங்காயில் கால் பாகம், விருப்பத்துக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், ஒரு புளியங்கொட்டையிலும் பாதியாக இஞ்சி, தேவையான அளவு உப்பு இவற்றைச் சேர்த்து அரைத்து சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.  அல்லது இரண்டு கரண்டி சிறிது புளித்த (விருப்பத்திற்கேற்ப) தயிர் சேர்த்து கலக்கி வைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி சாதத்தில் கலந்து சாப்பிட இதுதான் அமிர்தமோ என்று தோன்றும். வேலைக்குப் போகும் பெண்கள் சாதம் வைத்துவிட்டு, இந்த சட்னி/ பச்சடியைச் சுலபமாக செய்து எடுத்துச் செல்லலாம்.

Representational Image
Representational Image

மேற்சொன்ன முறையில் மாங்காவையும் செய்யலாம், துவையலாகவும் தயிர் கலந்து பச்சடியாகவும். அதி அற்புத சுவை தரும். கிளிமூக்கு மாங்காய் என்றால் இன்னும் பிரமாதம். தாளிக்க மட்டும் அடுப்பு பக்கம் போனால் போதும்.

நெல்லிக்காயை ஒரு 1/4 கிலோ வாங்கிவந்து கழுவி இட்லி தட்டில் வைத்து இட்லி போல் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி காய்களை எடுத்தால் கொட்டையிலிருந்து பிளந்து வந்திருக்கும். கொட்டையை நீக்கி துண்டுகளாக்கி கொள்ளுங்கள். நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி சிறிது மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து  தாளித்துக் கொட்டி இறக்கிவிடுங்கள்.  மறக்காமல் பிரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். சுவையான சத்தான ஊறுகாய் ரெடி. ஈரப்பதம் இருப்பதால் பிரிஜ்ஜில் வைத்தால் கெடாது.

Representational Image
Representational Image

சிறுநெல்லிக்காய் கிடைத்தால் ஒரு டம்ளருக்கு 3/4 பங்கு சர்க்கரை சேர்த்து சிம்மை விடக் கொஞ்சம் அடுப்பைக் கூட்டிவைத்து அவ்வப்போது கிண்டி விட சர்க்கரை இளகும்.  லேசாகக் கொதித்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு, ஆறியபின் பாட்டிலில் எடுத்து வைக்கப் புளிப்பு இனிப்பு ஊறுகாய் ரெடி.  சாம்பார் சாதம் தயிர் சாதத்துக்கு அருமையாயிருக்கும்.

வெறும் தயிரை எடுத்து ஒரு டம்ளர் வைத்துக்கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்கிக் கடுகு காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயம் போட்டு தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி சாப்பிட்டால் சிம்பிள் டிஷ் ரெடி.  வேண்டுமென்றால்  இதில் சாம்பார் வெங்காயம் அல்லது பூண்டு சிறிது அல்லது இஞ்சி மிகச் சிறிய அளவில் தட்டிப் போட்டு, கறிவேப்பிலை அதிகம் போட்டு தாளிக்கச் சுவை அள்ளும்.

Representational Image
Representational Image

மேலே சொன்ன அத்தனைக்கும் அப்பளம் மோர் மிளகாயே போதுமானது. மாங்காய், நெல்லிக்காய் போல வெள்ளரிக்காயையும் சட்னியாகவும் பச்சடியாகவும் செய்யலாம்.

நாம் சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது நல்லதென்று கேள்விப்பட்டிருப்போம். தயிரில் சேர்த்து சாப்பிடுகிறோம். நிறையபேர் பழைய சாதத்தோடு சாப்பிடுகிறார்கள். இன்னொரு முறையில் எப்படியென்றால் புளியை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஊறவைத்துக் கரைத்து கொஞ்சம் நீர்க்க எடுத்துக் கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

சிறிய வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து உரித்து (கொஞ்ச நேரம் ஊற வைத்தால் எளிதாய் உரிக்கலாம்.) மத்தாலோ கையாலோ மசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை புளிநீரில் ஒரு பச்சை மிளகாயும் (அல்லது ஒரு காய்ந்த மிளகாயை லேசாய் வறுத்து) சேர்த்து, கலந்து சாதத்தோடு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். விருப்பத்துக்கேற்ப நல்லெண்ணைய் மேலே ஊற்றிச் சாப்பிட லாம். இதெல்லாமே அவசரத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவுகள்.

இனி சிற்றுண்டிக்கு வைத்துச் சாப்பிட சட்னிக்குப் பதிலான  காய்கறி எப்படிச் செய்வதென பார்ப்போம்.

சுரைக்காய், சௌசௌ, மஞ்சள் பூசணிக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்களில் ஏதேனும் ஒன்றை  குக்கரில் போட்டு பயத்தம் பருப்போ துவரம் பருப்போ சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வெங்காயம் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் அல்லது மிளகாய்ப் பொடி இவற்றை ‌சுவைக்கேற்ப அரிந்து  பருப்போடு சேர்த்து வேகவைக்கலாம்.

Representational Image
Representational Image

மூன்று விசிலானதும் மத்தால் லேசாக மசித்துக் கடுகு உ.பருப்பு பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி தேவைக்கேற்ப உப்பு சேர்த்தால் அருமையான சத்து நிறைந்த காய்கறி கடைசல் ரெடி. பருப்பே போடாமல் கத்திரிக்காயும் சுரைக்காயும் கூட செய்யலாம்.

இனிப்பு என்று ஒதுக்கும் சத்து நிறைந்த கேரட் பீட்ரூட் போன்றவற்றை அரிந்து வதக்கி அதில் வெங்காயம், பச்சை‌மிளகாய், புளி, விரும்பினால் தக்காளி இவற்றையும் வதக்கி தேங்காய் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் அருமையான துவையல் ரெடி.

Representational Image
Representational Image

ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், 2 பூண்டு இவற்றை பச்சையாய் அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட இட்லி தோசைக்கு மிகப் பிரமாதமாயிருக்கும். இதோடு கொஞ்சம் கறிவேப்பிலையோ கொத்தமல்லி இலையோ புதினாவோ ஒரு துண்டு தக்காளியோ எது வேண்டுமானாலும் நம் விருப்பம் போல் சேர்க்கலாம். இதுமாதிரி சிம்பிளாக நாம் செய்யும் இவ்வகையான பதார்த்தங்கள் மிக ஆரோக்கியமானவை. 

-ராதா செளந்திரராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு