Published:Updated:

டார்க் சாக்லேட், சால்மன் மீன், கேரட்... மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்!

கானப்ரியா

`உணவு', பெரும்பாலானவர்களின் `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றே சொல்லலாம். அந்த வரிசையில், பின்வரும் உணவு வகைகளை உட்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்க உதவுகிறது.

Stress Busters
Stress Busters

பொதுவாக அதிகப்படியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு விதமான சிகிச்சை முறைகளை முயற்சி செய்து பார்ப்பார்கள். சிலரோ, மனஅழுத்தம் தரும் செயல்களிலிருந்து திசை திருப்பும் முயற்சியில் இறங்குவார்கள். அந்த வகையில் உணவு பெரும்பாலானவர்களின் `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றே சொல்லலாம். அந்த வரிசையில், பின்வரும் உணவு வகைகளை உட்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி கிடைக்கும்.

நட்ஸ்:

Nuts
Nuts

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அதிகமுள்ள நட்ஸ் வகைகளை அவ்வப்போது உட்கொண்டால், நிச்சயம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். வால்நட், முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் நேர்மறை மற்றும் சந்தோஷ உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கும் `செரோடினின்' உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை நிறைந்திருக்கிறது. மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு, கைப்பிடியளவு கலந்த நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வதன்மூலம், மனஅழுத்தத்தை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சக்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்:

Carrots
Carrots

பொதுவாகவே வேர் காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் நிறைந்திருக்கும். இவை, செரோடினின் உற்பத்தியை உயர்த்த உதவும். கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஏராளமான தாது மற்றும் வைட்டமின் சத்துகள் உள்ளன. இவை, சீரான ரத்தஓட்டத்துக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது. வாரம் இருமுறை, வேகவைத்த சக்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்டை எடுத்துக்கொண்டால், ஸ்ட்ரெஸ் நிச்சயம் குறையும்.

டார்க் சாக்லேட்:

Dark Chocolates
Dark Chocolates

`எண்டோர்பின்' அதாவது உடம்பில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உணவு வகைகளில் சாக்லேட்டுக்கு நிகர் எதுவுமில்லை. அவற்றில் டார்க் சாக்லேட், cortisol மற்றும் catecholamines எனும் மனஅழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், 70 சதவிகிதத்துக்கும் மேல் `கொக்கோ' உள்ளடங்கிய சாக்லேட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். சாக்லேட்தானே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான். இதில், அதிகப்படியான கலோரி இருப்பதால், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அளவாகச் சாப்பிடுவதே சிறந்தது.சால்மன் மீன்:

சால்மன் மீன்

Salmon Fish
Salmon Fish

சால்மன் மீன் வகையில் அதிகப்படியான ஒமேகா 3 அத்தியாவசிய கொழுப்புச் சத்துகள் இருப்பதனால், செரோடினின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், நாளத்தின் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. இவை, மனஅழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்து, மனநிம்மதி தருகிறது. இந்த மீன் வகையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

பழங்கள்:

Friuits
Friuits

ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களிலிருக்கும் வைட்டமின் C மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கியமான கனிமமான `பொட்டாசியம்' நிறைந்துள்ள அவகேடோ மற்றும் வாழைப்பழங்களையும் அதிகளவில் உட்கொள்ளலாம்.

மேலும், கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவு வகைகள், முட்டை, பூசணி மற்றும் ஆளி விதை, ஸ்பினாச் கீரை போன்ற உணவுப் பொருள்களும் ஸ்ட்ரெஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தினால் சாப்பிடாமல் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் அரை மணி நேரத்தில் ஃபீல் ஃப்ரெஷ் மனநிலை நிச்சயம் உருவாகும். நாம் முகரும் 'மணம்', மூளைக்குச் சென்றடைந்து, பல்வேறு விதமான உணர்ச்சிகள் மற்றும் நினைவலைகளைத் தூண்டும் தன்மையுடையது. தேங்காய், லாவண்டர் போன்றவற்றின் மணமும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.