எடைக்குறைப்பு, சரும பளபளப்பு... ஆப்பிள் சிடர் வினிகரை யார் யார் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்?

ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்?
நம்மில் பெரும்பாலானோர் தினமும் ஆப்பிள் சிடர் வினிகரை (Apple Cider Vinegar) உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்போம். ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை அனைவரும் ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்களைப் பட்டியலிடுவதைப் பார்க்க முடிகிறது. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் குறித்து சமீபத்தில் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து டயட்டீஷியன் ராஜேஸ்வரியிடம் பேசினோம்.
``ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். ஆப்பிள் ஜூஸை நொதிக்க வைத்து (Fermentation) இது தயாரிக்கப்படுகிறது. புளிப்புச் சுவையுடையது. இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன.
ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள்

ஆப்பிள் சிடர் வினிகரைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க முடியும். வயிற்றின் முன்பகுதி, இடுப்பு மற்றும் உடலில் அங்கங்கே படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.
அஜீரணப் பிரச்னையை இது குணப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிப்பதிலும் இது முக்கிய இடம் வகிக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம்.

அமிலத் தன்மைகொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது. காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. தினமும் செய்தால் வினிகரில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையால் பற்களின் எனாமல் பகுதி தேய்மானம் அடைய வாய்ப்பிருக்கிறது.
சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது

வயிற்றுப்புண், அல்சர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அமிலத்தன்மை மிகுந்திருப்பதால் குழந்தைகளும் முதியவர்களும் கூட இதைத் தவிர்க்கலாம். தவிர நடுத்தர வயதுடைய ஆண், பெண் இருவருமே இதை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதைக் காலையில் அருந்துவது உடல் எடையைக் குறைக்கவும், இரவில் அருந்துவது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீராக்கவும் உதவும்.
தங்கள் உணவில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக்கொள்ள விரும்புவோர், அதற்கு முன்பாக ஒரு டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது" என்றார் டயட்டீஷியன் ராஜேஸ்வரி.