Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: அறவே தவிர்ப்பது ஆரோக்கியமல்ல!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்... எடையைக் குறைக்க உத்தரவாதம் தருவதாக இன்னும் இப்படி ஏகப்பட்ட டயட் முறைகள் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஜீரோ கார்போஹைட்ரேட் டயட்டும் அவற்றில் ஒன்று. அதாவது, கார்போஹைட்ரேட்டை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தும் டயட் முறை இது.

அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், பிரெட், பீன்ஸ், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால், தயிர் எனப் பல உணவுகளிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். ஜீரோ கார்போஹைட்ரேட் டயட்டில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க அறிவுறுத்துவார்கள். அவற்றுக்கு மாற்றாக மீன், சிக்கன், முட்டை, சீஸ், நட்ஸ், எண்ணெய் மற்றும் வெண்ணெய் என கொழுப்பும் புரதமும் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படும்.

மாவுச்சத்து இல்லாத முட்டைகோஸ் காலிஃபிளவர், வெள்ளரிக்காய், புரொக்கோலி, பீர்க்கங்காய், சுரைக்காய், கீரை வகைகள், வெங்காயம், தக்காளி போன்றவை சில நேரங்களில் அனுமதிக்கப்படும். அவகாடோ, தேங்காய் மற்றும் டீ, காபி போன்றவற்றுக்கும் அனுமதி இருக்கும்.

அறவே தவிர்ப்பது ஆரோக்கியமல்ல!
அறவே தவிர்ப்பது ஆரோக்கியமல்ல!

ஜீரோ கார்போஹைட்ரேட் டயட்டின் நன்மைகள்

இந்த டயட் குறுகிய கால எடைக்குறைப்புக்கு உதவி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்கிறது. இந்த டயட் பெரிய அளவில் எடைக்குறைப்புக்கு உதவுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். `ஜீரோ கார்ப்' டயட்டில் எடுத்துக்கொள்ளப்படும் உணவுகள் புரதமும் கொழுப்பும் நிறைந்தவை. அவை வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ளச் செய்வதால் இன்சுலின் அளவுகளில் தாறுமாறான ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கும். இதன் விளைவாக குறுகிய காலத்திலேயே எடைக்குறைப்பு சாத்தியமாகும். ஆனால், இப்படிக் குறையும் எடையானது நீண்ட நாளைக்குத் தொடராது. உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் கிளைகோஜென் இரண்டும் வெளியேறியதன் பலனாகவே எடையில் மாற்றம் தெரியும். இந்த டயட்டை நிறுத்திவிட்டால் மீண்டும் உடல் பழைய எடைக்குத் திரும்பிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீண்டகாலப் பக்கவிளைவுகள்

செரிமானப் பிரச்னை

கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். ஜீரோ கார்ப் டயட்டில் பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்கள் தவிர்க்கப்படுவதால் உடலுக்குப் போதுமான நார்ச்சத்து கிடைக்காமல் போகும். உணவு செரிமானத்தில் நார்ச்சத்தின் பங்கு மிக முக்கியம். குடலின் இயக்கத்தைச் சீராக்கி, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் அவற்றின் பங்கு முக்கியமானது. சிலவகை நார்ச்சத்து பிரீ-பயாட்டிக் ஆகவும் வேலை செய்யும். அதாவது, குடலிலுள்ள நல்ல பாக்டீரியா வின் வளர்ச்சியைத் தூண்டும். நார்ச்சத்து இல்லாத உணவுப்பழக்கம் மலச்சிக்கல் உள்ளிட்ட பலவித செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

 எடைக்குறைப்பு ஏ டு இஸட்:  அறவே தவிர்ப்பது ஆரோக்கியமல்ல!

களைப்பு மற்றும் ஆற்றல் இழப்பு

உடலின் ஆற்றலுக்கு உதவும் முக்கியமான தேவைகளில் கார்போஹைட்ரேட் பிரதான மானது. அதை அறவே தவிர்க்கும்போது சீக்கிரமே சோர்வு ஏற்படும். ஆற்றலே இல்லாத உணர்வுக்குத் தள்ளும்.

அவசியமான சத்துகள் குறைபாடு

உணவில் மிக முக்கியமான கார்போஹைட்ரேட் அறவே தவிர்க்கப்படுவதால் கார்போஹைட்ரேட்டின் மூலம் கிடைக்கும் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, புரோபயாடிக் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு போன்றவை கிடைக்காமல் போகும். ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான இந்தச் சத்துகள் குறையும்போது இதயநோய், அல்சீமர் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். தவிர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு மனநலமும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

ஆயுள் குறைவு

வாழ்நாளில் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொண்டவர்கள் இதயநோய், பெருமூளை ரத்தக்குழாய் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னைகளால் சராசரியை விட சீக்கிரமே உயிரிழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு இயக்கக் குறைபாடு

வளர்சிதைமாற்றச் செயல்பாட்டுக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவும் தைராய்டு சுரப்பிகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கும் கலோரி மற்றும் கார்போஹைட் ரேட்டின் அளவுகளைப் பொறுத்து தைராய்டு ஹார்மோன் சுரப்பு மாறுபடலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கலோரி அல்லது கார்போஹைட்ரேட்டின் அளவு குறையும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பும் குறையும். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப் படுவதோடு, ஆற்றலும் குறையும்.

ஹார்மோன் சமநிலையின்மை

நீண்ட காலத்துக்கு `லோ கார்ப் டயட்' எடுத்துக்கொள்ளும்போது ஆண் பெண் இருபாலருக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இந்த டயட் டெஸ்டோஸ்டீரான் அளவை வெகுவாகக் குறைத்து மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசால் என்ற ஹார்மோனை அதிகரிக்கும். இதன் விளைவாக தசையிழப்பு, கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எடையைக் குறைத்து தசைகளைத் திரட்டும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்தச் செய்தி நல்லதல்ல. ஆண்களைவிட பெண்களுக்கு பாதிப்புகள் இன்னும் அதிகம். இதைத் தொடரும்பட்சத்தில் பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாய் வராமல்போவது, கருத்தரிப்பதில் சிக்கல், ரத்தச் சர்க்கரையில் ஏற்ற இறக்கம், பதற்றம், மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள், எலும்புகளின் அடர்த்தி குறைவது, அதீத களைப்பு, தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம்.

 எடைக்குறைப்பு ஏ டு இஸட்:  அறவே தவிர்ப்பது ஆரோக்கியமல்ல!

சருமநோய்

ஒரு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி இது. சவுதியைச் சேர்ந்த 22 வயது ஆண், ஜீரோ கார்ப் டயட்டைப் பின்பற்றி இருக்கிறார். உடலில் கார்போஹைட்ரேட் அளவு வெகுவாகக் குறைந்ததன் விளைவாக அவருக்கு அரியவகை சரும நோய் பாதித்தது. அவரது சருமத்தில் நிற மாற்றம், வீக்கம், அரிப்புடன் கூடிய தடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மருத்துவப் பரிசோதனையில் கார்போ ஹைட்ரேட்டை அறவே தவிர்த்ததன் விளைவு இது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய டயட் முறை மாற்றப்பட்டு கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்த பிறகே பாதிப்பு நீங்கியிருக்கிறது.

ஒரு செய்தி...

உடலின் ஆற்றலுக்கும், அது நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக இயங்கவும் அடிப்படையான, அவசியமான தேவைகளில் ஒன்று கார்போஹைட்ரேட். அதை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் என்பது நீண்ட காலத்துக்கு ஏற்றதல்ல. மைதா, வெள்ளை அரிசி, வெள்ளை பிரெட், இனிப்பு சேர்த்த பானங்கள், பேக்கரி உணவுகள் போன்றவை தவிர்க்க வேண்டிய கெட்ட கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்தவை. பழுப்பு அரிசி, முழு கோதுமை, பருப்புகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை நல்ல கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்தவை.

சாப்பாட்டுத் தட்டில் பாதி அளவுக்குப் பலவண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கட்டும். கால் பங்கு பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், கோதுமை போன்றவற்றில் செய்த உணவுகள் இடம் பெறட்டும். மீதியுள்ள கால் பகுதி விலங்கு மற்றும் தாவர கொழுப்புகளாலான சிக்கன், மீன், முட்டை, பருப்பு, பனீர் போன்றவை இருக்கட்டும். தினமும் 2 முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இந்த இரண்டும் எடைக்குறைப்பில் இலக்கை அடைய மட்டுமன்றி, அது நிரந்தரமாக நிலைக்கவும் உதவும்!

டயட் டவுட்

எடை குறைந்தால் முடியும் மெலியுமா?

எடைக்குறைப்பு முயற்சிகளில் நீங்கள் நினைத்த உடல்வாகைப் பெறுவது உங்கள் வெற்றி என்றால் அதன் மூலம் கிடைக்கும் நிறைவு, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை போன்றவை போனஸ். ஆனால் சருமம் தொய்வடைவதும், கூந்தல் மெலிவதும், நோயாளி தோற்றத்துக்கு மாறுவதும் நீங்கள் தவறான எடைக்குறைப்பு முயற்சிகளைப் பின்பற்றுகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்.

கடந்த சில வருடங்களில் கீட்டோ, பேலியோ போன்ற விதம்விதமான டயட் முறைகளைப் பின்பற்றும் பலரும் மிகச் சீக்கிரமே 30-40 கிலோ எடை குறைத்துவிட்டதாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறேன். கூடவே கடுமையான கூந்தல் உதிர்வினால் பாதிக்கப்படுவதாகச் சொல்வதையும் கேட்கிறேன். அதைச் சரிசெய்வதற்காகத் தனியே சிகிச்சைக்கு வருபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள்.

எந்த வகையான எடைக்குறைப்பு முயற்சியைப் பின்பற்றுவதானாலும் அதில் புரதம் அதிகமுள்ள உணவுகள், பருப்பு, கீரை, காய்கறிகள், முளைகட்டிய பயறுகள், நட்ஸ், சீட்ஸ், பழங்கள் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பருப்பு சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் உடனடியாக முடி உதிர்வால் பாதிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்...

முட்டை, மட்டன் சூப், முருங்கைக் கீரை, பச்சை நிற சட்னி வகைகள், கீரைகள், நெல்லிக்காய், வேர்க்கடலை, முந்திரி, எள், ஆளிவிதை, பாதாம், வால்நட்ஸ், பேரீச்சம்பழம், வெந்தயம், பால் பொருள்கள், அனைத்து வகை பருப்புகள், முளை கட்டிய பச்சை தானியங்கள் (ஒருநாளைக்கு ஐந்து டீஸ்பூன் போதுமானது).

முழு தானியங்களில் பி காம்ப்ளெக்ஸ் சத்து நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். எடைக்குறைப்பில் உங்கள் இலக்கை எட்டியதும் தினமும் ஒரு சிறிய கப் அளவுக்குக் கறுப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பர்ய அரிசியில் ஒன்றைச் சேர்த்துக்கொள்ளவும். பாலிஷ் செய்யப்படாத அவற்றில் பி காம்ப்ளெக்ஸ் சத்தும், தாதுக்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3, பயோட்டின் போன்றவை இருக்கும். அனைத்துமே முடி வளர்ச்சிக்கு உதவுபவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு