Published:Updated:

எலுமிச்சை, முருங்கைக்கீரை, கற்றாழை... காற்று மாசுபாட்டைச் சமாளிக்க உதவும் உணவுகள்!

எலுமிச்சை
எலுமிச்சை

காற்று மாசுவை எதிர்கொள்ள நாம் சேர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டார் டயட்டீஷியன் கற்பகம் வினோத்.

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்றின் தரம் அபாய அளவைக் கடந்து மாசடைந்துள்ளது. இந்த மாசுபாட்டால் பல்வேறு சூழலியல் மற்றும் மருத்துவ ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. டெல்லியைப்போல சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 'காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள கேரட் சாப்பிடுவதன் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற சத்துகளைப் பெறலாம்' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது முதலில் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், பின்னர் கவனத்துக்குரிய தகவல் என்பது புரிந்தது.
Dr Harsh Vardhan
Dr Harsh Vardhan
www.drharshvardhan.com
`காற்று மாசுபாட்டைத் தடுக்க யாகம்!' - உ.பி அமைச்சர் யோசனை

குழந்தைகளும் முதியவர்களும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களும் எளிதில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களும் இப்போது நிலவும் காற்று மாசுபாட்டால் நுரையீரல் மற்றும் கணைய பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்... நுரையீரல் சற்று அதிகப்படியான பாதிப்புக்குள்ளாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"இதுபோன்ற அசாதாரண சூழலில் நாம் அன்றாட உணவில் அதை எதிர்கொள்ளத் தேவையான சத்து நிரம்பிய உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்'' என்கிறார் டயட்டீஷியன் கற்பகம் வினோத். காற்று மாசுவை எதிர்கொள்ள நாம் சேர்க்க வேண்டிய உணவுகளை அவர் பட்டியலிட்டார்.

கற்பகம் வினோத்
கற்பகம் வினோத்
  • "வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி சத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய இரண்டு எலுமிச்சை பழங்களைச் சாறு பிழிந்து குடித்தாலே போதுமானது.

  • முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லிக்கீரை போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இவற்றை சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  • உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் உடலினுள் சென்றுவிட்டால் அவற்றுக்கு எதிராக வைட்டமின் 'ஈ' உடனே செயல்படத் தொடங்கி, அவை உடலைத் தாக்காத வகையில் பாதுகாக்கும். பாதாம், வால்நட், சூரியகாந்தி விதைகள் மற்றும் மீன் வகைகளிலும், அவகோடோ பழத்திலும் வைட்டமின் ஈ செறிந்துள்ளது. தினமும் காலையில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தைப்போல, முந்தைய நாள் இரவு ஊறவைத்த பாதாம் பருப்புகளைத் தோலுரித்துச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். இந்த உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் காற்றின் மாசு, துகள்கள் உடலினுள் சென்றாலும்கூட அதை நம் நோய் எதிர்ப்பு சக்தியால் வெல்ல முடியும்.

மீன்
மீன்
தலைநகரை மிரட்டும் காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம்.? இது தமிழகத்தை தாக்குமா.? #VikatanInfographics
  • காற்று மாசுபாட்டால் உடல்நலத் தொந்தரவு ஏற்படும் சூழலில் இஞ்சி, கிராம்பு, மிளகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ரசம், தேநீர், மோர், சூப் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாலுடன் மஞ்சள்தூள் கலந்தும் குடிக்கலாம்.

  • மீன்களில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டக்கூடியது. அசைவம் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3 மாத்திரைகள், வெந்தயக் கீரை முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

  • மக்னீசியம் நிறைந்த உணவுகள் நுரையீரல் சிரமமின்றி இயங்க உதவுவதால் அந்தச் சத்து நிறைந்துள்ள பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், தானியங்களைச் சாப்பிடலாம்.

குடிநீர்
குடிநீர்
  • துளசி, புதினா, கற்றாழை ஆகியவை உடலுக்குள் இருக்கும் கழிவுகளை நீக்கும் சிறப்பு கொண்டவை. இவற்றுடன், அன்றாடம் நமது உடலில் தேங்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றத் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டியதும் அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படும் அளவுக்குத் தண்ணீர் அருந்தாமல் இருப்பதுதான் பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமிடுகிறது.

  • பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனைக் கருத்தில்கொண்டு, இதுபோன்ற சூழலைத் திறம்படக் கையாள முறையான உணவுகளை எடுத்துக்கொள்வதோடு, குழந்தைகளையும் மாசு தாக்குதலிலிருந்து கவனமாகப் பாதுகாக்க வேண்டும்."

அடுத்த கட்டுரைக்கு