Published:Updated:

`தினமும் காலையில் பழைய சோறு... இது உணவல்ல; மருந்து!' - விளக்கும் மருத்துவர்கள்

பழைய சாதம்
பழைய சாதம்

நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சாதத்தில்' அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டுவரும் பட்சத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவரும் பேராசிரியருமான ஜஸ்வந்த் சத்யநேசன் `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.

Stomach (Representational Image)
Stomach (Representational Image)
Image by Darko Djurin from Pixabay
அடிக்கடி அடிவயிற்றைக் கலக்குகிறதா..? இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாக இருக்கலாம்... அலெர்ட்!

`இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (IBS - Irritable bowel syndrome)' என்பது நமக்கு ஏற்படும் ஒருவித `ஃபங்ஷனல் டிஸ்ஆர்டர் (Functional disorder)'. அதாவது ஏதேனும் ஒரு நோய்க் கிருமியாலோ, சத்துக் குறைவாலோ ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இது நோயே அல்ல. நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடுவார்கள்.

மருத்துவர் ஜஸ்வந்த் சத்யநேசன் மேற்கொண்டுள்ள ஆய்வில் `பழைய சாதம்' சாப்பிடுவதன் மூலம் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமை குணப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து அவரிடம் பேசினோம்.

மருத்துவர் ஜஸ்வந்த் சத்யநேசன்
மருத்துவர் ஜஸ்வந்த் சத்யநேசன்

``நம் குடலில் லாக்டோபேசிலஸ் (Lactobacillus), ஈ.கோலை (E.coli) போன்ற நன்மை விளைவிக்கும் சில பாக்டீரியா உயிர்வாழ்கின்றன. இவை உணவு செரித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்கப் படுத்துகின்றன. மேலும், நம் மூளையில் ஏற்படும் உணர்வு மாற்றங்களால் குடலில் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைத்து `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' வராமலும் தடுக்கின்றன. நம் குடலில் வாழும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் குறையும்போது செரிமான பிரச்னை, மலச்சிக்கல், வயிறு உப்புசம், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சாதத்தில்' அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டுவரும் பட்சத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும். இதனை ஆய்வு பூர்வமாக நிரூபிக்கும் பொருட்டே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன். தற்போது இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோர்க்குத் தினமும் பழைய சாதத்தைச் சாப்பிடச் சொல்லி அவர்களைத் தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். அடுத்தகட்டமாக, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட 600 நபர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆய்வுக்குத் தேவைப்படும் நுண்ணோக்கி மற்றும் சில மருத்துவ உபகரணங்களைத் தற்போது தயார் செய்து வருகிறோம்" என்றார்.

பழைய சாதம்
பழைய சாதம்
ஒரு மணி நேரத்தில் 4 கிலோ உணவு... `புல்லட் பரிசு மட்டுமல்ல; இரைப்பையும் வெடிக்கலாம்!' - அலெர்ட்

பழைய சாதம் சாப்பிடுவது `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' வராமல் தடுக்குமா... பழைய சாதத்தின் பயன்கள் என்னென்ன... சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்டோம்.

``நம்மிடையே பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருக்கும் உணவுதான் பழைய சாதம். எளிய உணவுதான். ஆனால், இதிலுள்ள சத்துகள் ஏராளம். பழைய சாதம் எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் சிலர், காலையில் வடிக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மதியம் சாப்பிடுவார்கள். இதுபோல் எடுத்துக்கொள்வதால் அதிக பயன் எதுவும் கிடைக்காது.

நாம் தண்ணீர் ஊற்றிவைக்கும் சாதம் நொதித்தலுக்கு (Fermentation) உட்பட வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். வடித்த சாதத்தை மண் பானையில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைக்க வேண்டும். பானையை முழுவதுமாக மூடிவிடாமல் சிறிது காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சாதம் நொதிக்க வெயில் காலத்தில் 8-10 மணிநேரமும், மழைக்காலத்தில் 10-12 மணிநேரமும் எடுத்துக்கொள்ளும். சிலர் பழைய சாதத்தை எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மண்பாண்டமே சிறந்தது.

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்
சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

பழைய சாதமும்... பயன்களும்...

மண் பானையில் நொதிக்க வைத்த பழைய சாதத்தைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மேலும் நொதித்தலுக்கு உட்பட்ட சோற்றில் லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. தவிர இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.

இத்துணை சத்துகள் நிறைந்த பழைய சாதம் நமக்கு மட்டுமல்லாமல், நம் குடலில் வாழும் நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கும் சிறந்த உணவாக (Culture medium) உள்ளது. உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் நம் குடலில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் உடல் ஆரோக்கியத்தோடு சேர்த்து மனதின் செயல்திறனையும் நிர்ணயிக்கக் கூடியவையாக உள்ளன. அதனால் உடலில் இவற்றின் எண்ணிக்கை குறையும்போது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், செரிமான பிரச்னை உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நம் வயிற்றில் வாழும் நல்ல நுண்ணுயிரிகள் குறைவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் துரித உணவுகள். அதிக உப்பு, காரம், எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம்
அடிக்கடி அடிவயிற்றைக் கலக்குகிறதா..? இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமாக இருக்கலாம்... அலெர்ட்!

ஆனால், பழைய சாதம் நம் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்குச் சிறந்த உணவாக இருந்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குகிறது. தினமும் காலையில் 7 - 8.30 மணிக்குள் காலை உணவாகப் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்" என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

அடுத்த கட்டுரைக்கு