Election bannerElection banner
Published:Updated:

கறிவேப்பிலை குழம்பு முதல் கதம்ப சாதம்வரை... சுவையான, எளிதான ரெசிப்பிக்கள் 5!

ஐந்து எளிமையான, அதே நேரத்தில் ஆரோக்கியமான ரெசிப்பிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார் பிரபல சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.

" 'ஊரே அடங்கி வீட்டுக்குள்ள இருக்கு. பால் பாக்கெட் போடுறவங்கள்ல இருந்து பாத்திரம் தேய்க்கிறவங்க வரை யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவே பயப்படுற சூழ்நிலை. இந்த நேரத்துல சாப்பாட்டுக்கு என்ன செய்றது?' எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறீர்களா? எந்தச் சூழலிலும் கைகொடுக்கும் இந்த சிம்பிள் ரெசிப்பிக்களை ட்ரை செய்துபாருங்களேன்" என பாசிட்டிவ் குறிப்போடு ஐந்து எளிமையான, அதே நேரத்தில் ஆரோக்கியமான ரெசிப்பிக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார் பிரபல சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.

2
Mor Koozh

மோர் கூழ்

அடிக்கிற வெயிலுக்குச் சூட்டைத் தணிக்கும் மோர் கூழைவிடச் சிறந்த காலை உணவு எதுவும் இருக்காது. நம் நாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளில் மோர்க் கூழுக்குத் தனி இடமுண்டு. தேவையான பொருள்களெல்லாம் கையிலிருந்தால் பத்தே நிமிடங்களில் மோர் கூழ் ரெடி.

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு அல்லது அரிசி மாவு - ஒரு கப்

தண்ணீர் - 2 1/2 கப்

கெட்டி மோர் - ஒரு கப்

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் - 1/4 கப்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கனமான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுப்பின் தணலை முற்றிலும் குறைத்துவிட்டு, சிறிது சிறிதாக அரிசி மாவு அல்லது கோதுமை மாவை அதில் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கைவிடாமல் கிளறவேண்டும். அரிசிமாவு/கோதுமை நன்றாக வெந்து அல்வா பதத்துக்கு வந்தவுடன், அதில் மோர் சேர்க்கவும்.

மீண்டும் கைவிடாமல் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் வேளையில் அடுப்பை அணைத்து, எண்ணெய் தடவிய தட்டில் களியைக் கொட்டவும். நன்றாக ஆறிய பிறகு, துண்டுதுண்டாக வெட்டிச் சாப்பிடலாம். விருப்பப்பட்டால், வறுத்த மோர் மிளகாயை அதோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

3
Kariveppilai Kozhambu

கறிவேப்பிலை குழம்பு

'பாத்திரம் தேய்க்கணுமே' எனச் சலித்துக்கொள்கிறவர்களுக்கும் 'தினமும் சமைக்கணுமா' எனப் புலம்புகிறவர்களுக்கும் இந்தக் கறிவேப்பிலைக் குழம்பு மிகப் பெரிய வரப்பிரசாதம். அதிகளவில் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்துகொண்டால், நிச்சயம் மூன்று நாள்கள்வரை கெடாமல் இருக்கும். 'வீட்டிலிருந்தே ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு' என இனி ஃபீல் பண்ணவேண்டாம். இதில் கறிவேப்பிலை அதிக அளவில் உபயோகப்படுத்தியிருப்பதால், அதிகப்படியான மனஅழுத்தத்தைக் குறைக்கும். மேலும், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த எளிமையான ரெசிபியும்கூட.

தேவையான பொருள்கள்

உருவிய கறிவேப்பிலை - 2 கப்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6 - 8

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க

நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை

வறுப்பதற்குத் தேவையான பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த பொருள்களோடு பச்சை கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, கரைத்த புளியை அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும் (சுமார் 5 நிமிடங்கள்). அரைத்த கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலக்கவும். நன்கு கொதித்து, தேவையான பதம் வந்தபிறகு இறக்கிவிடலாம். விருப்பப்பட்டால், புளியின் அளவைக் குறைத்து அதற்கு பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்தக் குழம்பைச் செய்யலாம்.

4
Dal kolambu

மிக்ஸ்டு தால்

பருப்பு என்றாலே புரதம். அதிலும், இந்த ரெசிப்பியில் ஏராளமான பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்துச் செய்வதால் ரத்த அழுத்தத்தின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். வெளியே போகமுடியாமல் சோம்பல் தட்டி இருப்பவர்கள் இந்த எளிமையான மிக்ஸ்டு தால் ரெசிப்பியைச் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள் வதக்க:

காராமணி - ஒரு கைப்பிடி

மசூர் தால் - ஒரு கைப்பிடி

துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி

பயத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

புதினா - 1/2 கப்

கொத்தமல்லித்தழை - 1/2 கப்

தண்ணீர் - தேவைக்கேற்ப

வதக்க செய்முறை:

பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை

காராமணியை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். மற்ற பருப்பு வகைகளை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் வறுத்தெடுத்த பருப்பு வகைகள், ஊறவைத்த காராமணி அனைத்தையும் சேர்த்து குக்கரில் 4-5 விசில் விட்டு வேகவைக்கவும். மத்து வைத்து மசிக்கவேண்டாம்.

வதக்கக் கொடுத்துள்ள பொருள்களை தாளித்து, வதக்கிக் கொள்ளவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வேகவைத்த பருப்புடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன்,அடுப்பிலிருந்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறலாம்.

5
Javvarisi Kichdi

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

எப்போதும் ரவை உப்புமா, இட்லி, தோசை எனச் சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு நிச்சயம் ஜவ்வரிசி கிச்சடி வித்தியாச பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும். மேலும், இது நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

தேவையான பொருள்கள்

ஜவ்வரிசி - 2 கப்

எண்ணெய் - 1/4 கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்

எலுமிச்சை சாறு - ஒரு பழம்

கரகரப்பாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

செய்முறை

ஜவ்வரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி, முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், இஞ்சி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்க்கவும். சிறிது நேரம் வறுபட்ட பிறகு, ஜவ்வரிசியின் வெள்ளை நிறம் மறைந்து கண்ணாடிபோல் ஆகிவிடும். இந்தப் பதம் வந்தபிறகு, அடுப்பிலிருந்து இறக்கி அதில் எலுமிச்சைச் சாறு, வேர்க்கடலைப்பொடி மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறலாம்.

6
Kadhamba Saadham

கதம்ப சாதம் செய்ய தேவையான பொருள்கள்

இந்தக் கதம்ப சாதத்துக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. இதை 'ஒருபானைச் சோறு (One pot one shot)' என்று சொல்லலாம். ஒரேயொரு குக்கர் மட்டுமே இதற்குத் தேவைப்படும். மேலும், இதில் சேர்க்கப்படும் காய்கறிகளின் நற்குணம், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. நேரமாக ஆக ஆகத்தான் இந்தக் கதம்ப சாதத்தின் ருசியும் அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்

புழுங்கல் அரிசி - ஒரு கப்

சாமை/வரகு - ஒரு கப்

கடலைப் பருப்பு - 1/2 கப்

துவரம் பருப்பு - ஒரு கப்

முருங்கைக் கீரை - ஒரு கப்

அரைக்கீரை/சிறு கீரை - அரைக்கட்டு

புளி - ஒரு எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

தனி மிளகாய்த்தூள்: 4 - 6 டீஸ்பூன்

என்ன காய்கறிகளைச் சேர்க்கலாம்?

நறுக்கிய கொத்தவரங்காய் - 100 கிராம்

முருங்கைக்காய் - 2

அவரைக்காய் - 100 கிராம்

கத்தரிக்காய் - 100 கிராம்

சிறுகிழங்கு/சேப்பக்கிழங்கு (வேக வைத்து, தோல் நீக்கியது) - 100 கிராம்

தாளித்து வதக்குவதற்கு

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடிதுருவிய தேங்காய் - 2 மூடி

சீரகம் - 2 டீஸ்பூன்

நசுக்கிய பூண்டு - 8 பல்

விழுதாக அரைக்க

துருவிய தேங்காய் - 2 மூடி

சீரகம் - 2 டீஸ்பூன்

நசுக்கிய பூண்டு - 8 பல்

செய்முறை

அரிசி, பருப்பு, கீரை ஆகியவற்றைக் குக்கரில் போட்டு அவை மூழ்கும்வரை தண்ணீர்விட்டு அரைமணி நேரம் வேகவைக்கவும். குக்கரில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய காய்கறிகள், தேங்காய் - சீரகம் விழுது, நசுக்கிய பூண்டு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றோடு கரைத்து வைத்திருக்கும் புளியையும் சேர்த்துக்கொள்ளவும். இதனோடு ஏற்கெனவே வேகவைத்த அரிசி - பருப்புக் கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, 3 விசில் விடவும். அரிசி - பருப்புக் கலவை தயாரானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தாளித்துப் பரிமாறலாம்.

Menurani Chellam

வேகவைத்து, தோல் நீக்கிய சிறுகிழங்கு அல்லது சேப்பக்கிழங்கை லேசாக வதக்கி, தாளிக்கும் முன் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான கதம்ப சாதம் தயார்.

`கொரோனா'வால் மட்டன் பிரியாணி பயமா..?! பலாக்காய் பிரியாணி இருக்கே!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு