Published:Updated:

சிக்கன், மட்டன் மூலம் பரவுமா கொரோனா? நிபுணர்கள் விளக்கங்கள் #FactCheck

கோழிகளின் மூலம் பரவுமா கொரோனா?
கோழிகளின் மூலம் பரவுமா கொரோனா?

"இந்தச் சூழலில் வளரும் நுண்ணிய உயிரினங்கள் என்னதான் வேக வைத்தாலும் அழியாது. அப்படிப்பட்ட பாக்டீரியா உடலில் சென்றாலும் ஆபத்து. ஆனால், இதற்கும் கொரோனாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை."

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மாஸ்க், சானிடைஸர் உள்ளிட்ட பொருள்கள் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேற மக்கள் அஞ்சுகின்றனர். தேவை அதிகமானதால், இதுபோன்ற பொருள்களின் விலை விறுவிறுவென ஏற, சிக்கன் உள்ளிட்ட சில உணவுப் பொருள்களின் விலை மலைபோல் சரிந்தது. கோழிக்கறி வியாபாரம் சரிவர இல்லாததால், சில வியாபாரிகள் தங்களின் கோழிகளை உயிரோடு புதைக்கும் அவலம் வரை நடந்தேறியிருக்கிறது.

Chickens
Chickens
`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்!’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி

வேளாண் பொருளாதார வல்லுநரும் இந்தியக் கோழிப்பண்ணை கூட்டமைப்பின் ஆலோசகருமான விஜய் சர்தானா, The Economic Times பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், "ஒரு கோழியை, அதன் உரிமையாளர்கள் வெறும் 20 ரூபாய்க்கு மட்டுமே தற்போது சந்தையில் விற்கின்றனர். நாடு முழுவதும் கோழி வணிகத்தில் பணிபுரியும் சுமார் 2 கோடி மக்களின் வேலை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் கோழி, ஆட்டிறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகளை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழியின் மொத்த விலை 70 சதவிகிதம்வரை குறைந்துவிட்டது. இதன் விளைவாக, முன்பு 180 முதல் 200 ரூபாய்வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழியின் விலை தற்போது 100 - 150 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

Hens
Hens

மேலும், தமிழ்நாட்டில் ஒரு கிலோ கோழியின் விலை 40 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது. மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கோழி வணிகத்தில் தினசரி ரூ .1,500-2,000 கோடியை இழந்து வருவதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, மக்காச்சோளம், சோயாபீன் உள்ளிட்ட கோழித் தீவன நிறுவனங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் கோழி, ஆடு போன்ற இறைச்சிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்றபோதிலும், கொரோனாவால் அதிகரித்த உயிரிழப்பின் விகிதம் காரணமாகக் கோழி வியாபாரிகள் பலர் அதிகப்படியான வியாபார வீழ்ச்சியைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணை வியாபாரி நசீர் அகமது மகந்தர், 6,000 பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைத்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.

தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்

உண்மையில் கோழிகள் மூலம் கொரோனா பரவுமா என்ற கேள்வியைப் தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூரிடம் முன்வைத்தோம்.

"கோழி, ஆட்டுக்கறிகள் மூலம் நிச்சயம் கொரோனா வைரஸ் பரவாது. பறவை காய்ச்சல் கேரளாவில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. எனவே, தமிழ்நாட்டு மக்கள் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதற்கு அஞ்ச வேண்டாம். எந்த உணவாக இருந்தாலும் அவற்றை நன்கு சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது" என்று கூறினார்.

அசைவ உணவுகளை எப்படிச் சமைத்து சாப்பிடுவது என்பதைப் பற்றி டயடீஷியன் மீனாக்ஷி பஜாஜ் நம்மோடு பகிர்ந்துகொண்டார். "அசைவ உணவுகள் சாப்பிடுவதன்மூலம் கொரோனா வைரஸ் நிச்சயம் பரவாது. ஆனால், ஹோட்டல் உணவுகளை உட்கொள்வதன்மூலம், சாதாரண நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதை கொரோனா தாக்கம் என்று யாரும் தவறாக எண்ணவேண்டாம். ஹோட்டலில் சமைக்கப்படும் அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்திருப்பார்களா அல்லது ஃபிரெஷ் உணவுதானா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

சிக்கன்
சிக்கன்
கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிடமிருந்தும் காக்கும் உணவுகள்!

சரியாக வேக வைக்காத உணவுகளைச் சாப்பிட்டால் நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், சில உணவகங்களில், தாங்கள் தயாரிக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க சில ரசாயனப் பொருள்களைச் சேர்த்தே சமைக்கின்றனர். இவை, உடல்நலத்துக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும்போது, நம் உடலில் உள்ள எதிர்ப்புசக்தி குறைந்துவிடும். எதிர்ப்புசக்தி குறைந்தால், நிச்சயம் நோய்த்தொற்று ஏற்படும்.

நாம் இறைச்சி வாங்குமிடம் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பெரும்பாலும் இறைச்சிகளை வாங்கியவுடன் சமைப்பது சிறந்தது. சமைத்ததும் சாப்பிட வேண்டும். அசைவ உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல. அதேபோல, நீண்ட நாள்கள் கோழி, ஆட்டுக்கறி, மீன் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்துச் சமைத்து உண்பதும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

Meenakshi Bajaj
Meenakshi Bajaj

ஏனென்றால், சில சமயங்களில் மின்சாரம் தடைப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது, வேறு சில நுண்ணிய உயிரினங்கள் வளர்வதற்கு ஏதுவாக அமைந்துவிடும். இந்தச் சூழலில் வளரும் நுண்ணிய உயிரினங்கள் என்னதான் வேக வைத்தாலும் அழியாது. அப்படிப்பட்ட பாக்டீரியா உடலில் சென்றாலும் ஆபத்து. ஆனால், இதற்கும் கொரோனாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனவே, கோழி, மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை வாங்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதே ஆரோக்கியமானது."

அடுத்த கட்டுரைக்கு