Published:Updated:

``உணவகங்களுக்கு இனி எங்கள் ஹைஜீன் ரேட்டிங் முக்கியம்!" - உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு

ஒவ்வொரு துறைக்கும் அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் உணவகங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரேட்டிங் தருவதுதான் சரியாக இருக்கும்.

ஹோட்டல்
ஹோட்டல்

எல்லாமே இணையமயமாகிவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மில் பலரும் மனிதர்களைவிட ரேட்டிங்கையே அதிகம் நம்புகிறோம் என்பது அழுத்தமான உண்மை. உதாரணமாக, ஏதேனும் புது இடத்துக்குச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணப்படவிருக்கும் வாகனம், தங்கப்போகும் ஹோட்டல், அங்கு நீங்கள் உணவு ஆர்டர் செய்யும் உணவகம், ஷாப்பிங் ஏரியாக்கள், அங்குள்ள விற்பனை நிலையங்கள், பொருள்கள்... இவற்றையெல்லாம் எதை வைத்து தேர்ந்தெடுப்பீர்கள்? ரேட்டிங்! ஆக, இணையத்தைச் சார்ந்தோரின் வாழ்வு எப்போதும் ரேட்டிங்கை சார்ந்துதான் இயங்குகிறது.

ஹோட்டல்
ஹோட்டல்

ஆனால், ஆன்லைனில் தரப்பட்டிருக்கும் `ரேட்டிங்' எதுவும், வல்லுநர்களால் தரப்பட்டவை அல்ல. அங்கு செல்லும் அல்லது அதை உபயோகிக்கும் பயனாளர்களால் தரப்பட்டவை. தங்கும் அறைகள், பயணப்படும் வாகனம், விற்பனை பொருள்கள் போன்றவற்றுக்குப் பயனாளர்கள் தரப்பில் ரேட்டிங் தரப்படுவது சரிதான். ஆனால், உணவகங்களையும் அதன் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கலாமா? உணவுக்கும் பயனாளர் தரும் ரிவ்யூ சரியாக இருக்குமா?

உணவென்று வரும்போது, சமீபகாலமாகவே ஹோட்டல்களில் உணவு/ரெடிமேட் உணவுப்பொருள்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. உணவின் நேரடி வணிகத்தைவிடவும், ஆன்லைன் வணிக விநியோகம் இப்போது ஏறுமுகத்தில் இருக்கிறது. இதற்கென இயங்கும் பிரத்யேக தளங்கள் யாவும், கடந்த காலங்களைவிட இப்போது அதிக ஆக்டிவ்வாக இருக்கின்றன.

ஹோட்டல்
ஹோட்டல்

ஆனால், எதன் அடிப்படையில், குறிப்பிட்ட ஓர் உணவையோ, ரெடிமேட் உணவுப்பொருளையோ நாம் ஆர்டர் செய்கிறோம் என யோசித்துப்பார்த்தால், அதே `ரேட்டிங்'. ஆனால், உணவுத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ரேட்டிங் யாவும் தரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டனவா என்றால், இல்லையே! உணவின் சுவை, அதன் அளவு, மணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பயனாளர் தருவதுதான் இந்த ரேட்டிங். தரமான உணவை, இதன் அடிப்படையில் எப்படித் தேர்ந்தெடுப்பது?

சில விஷயங்களில், வல்லுநர் தரும் ரேட்டிங்தான் சரியாக இருக்கும். குறிப்பாக, உணவுக்கான ரேட்டிங்கை, வல்லுநர்கள் கொடுப்பதுதான் சரி. அதன் அடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு ஓர் ஆரோக்கியமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம். இந்த ஆணையம், உணவகங்களின் உணவுகளுக்கு அவற்றின் சுகாதார மதிப்பீட்டின் அடிப்படையில் `ஹைஜீன் ரேட்டிங்' தரவிருக்கிறது.

ஹோட்டல்
ஹோட்டல்

தமிழக உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.டி.அன்பழகனிடம் இது குறித்துப் பேசினோம்.

``ஆன்லைன் வணிகத்துக்கு மட்டுமல்ல, உணவகங்களுக்கு நேரடியாகச் சென்று சாப்பிடுபவர்களுக்கும் பயனாளர் தரும் ரேட்டிங்தான் குறிப்பிட்ட உணவகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. ஹோட்டல்களுக்கு ரேட்டிங் தரும் பயனாளர் என்பவர் பொதுவாக உணவகத்தின் தோற்றம், உணவு பரிமாறப்படும் விதம், உணவின் சுவை, உணவுக்காகக் காத்திருக்கும் நேரம் போன்றவற்றின் அடிப்படையில்தான் தன்னுடைய ரேட்டிங்கை தருவாரே தவிர, அவரால் அதன் தரத்தை முழுமையாகக் கண்டறிய முடியாது.

``பள்ளிக்கு ஓர் உணவியல் நிபுணர்"- உணவுக் கட்டுப்பாட்டுத்துறை பரிந்துரைக்கும் ஒரு `வாவ்' யோசனை!

பயனாளரை நாம் குறைசொல்லவும் முடியாது. காரணம் அவர் நிபுணர் அல்லர். ஒவ்வொரு துறைக்கும் அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் உணவகங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரேட்டிங் தருவதுதான் சரியாக இருக்கும். அதற்கான ஒரு முன்னெடுப்புதான், `எஸ்.என்.எஃப் (SNF - Safe and Nutritious Food) எனப்படும் `பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு' என்ற திட்டம். இதை, `ஹைஜீன் ரேட்டிங்', அதாவது உணவின் சுகாதார மதிப்பிடு என்றும் சொல்லலாம்.

ஏ.டி.அன்பழகன்
ஏ.டி.அன்பழகன்

இந்தத் திட்டத்தின் நோக்கம், ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரன்ட்கள், தாபாக்கள், கேன்டீன்கள், பள்ளிகளில் இயங்கும் உணவகங்கள், விழாக்களில் உணவு தயாரித்து விற்கும் உணவு வணிகக் குழுக்கள் ஆகிய இடங்களில் தரப்படும்/தயாரிக்கப்படும் உணவுகள் யாவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதுதான். மாறி வரும் வாழ்க்கை முறையில் ஹோட்டல் உணவுகள், பலருக்கும் வழக்கமாகிவிட்டது. நாளுக்கு நாள் இந்த வழக்கம் அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆகவே, இனி உணவு வணிகக் குழுக்கள் இயங்கும் இடங்களுக்கு நாங்களே (உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள்) நேரடியாகச் சென்று ரேட்டிங் தரப்போகிறோம். இதுகுறித்த முழுமையான விவரங்கள், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ(FSSAI - Food Safety and Standards Authority of India) தளத்தில் உள்ளன.

பதிவுபெற்று இயங்கும் எல்லா ஹோட்டல்களும், `எஸ்.என்.எஃப்' ஹைஜீன் ரேட்டிங் விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதற்கு, முதலில் உணவு வணிகக் குழுக்களின் உரிமையாளர்கள், தங்களின் ஹோட்டல் குறித்த விவரங்களை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-ன் பிரத்யேக தளத்தில் பதிவுசெய்துகொண்டு, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று விதிகளுக்கு ஏற்ப, தங்களுடைய ஹோட்டலுக்கு தாங்களே குறிப்பிட்ட ரேட்டிங்கை தரவேண்டும். அந்த மூன்று விதிகள் பின்வருபவை...

ஹோட்டல்
ஹோட்டல்

1) உணவு வணிக விற்பனை செய்யும் ஒவ்வொரு குழுவிலும், தகுதி வாய்ந்த உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர், அவ்வப்போது உணவு மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும். ஹோட்டல் பணியாளர்களுக்கு, உணவைக் கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2) உணவு விநியோகிக்கப்படும் இடத்தில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

3) சுகாதாரமான இடத்தில் உணவு தயாரிக்கப்படவும், பரிமாறப்படவும் வேண்டும்.

பாலில் கலக்கப்படும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள்!-  உணவு பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி அறிக்கை

உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களுக்கான ரேட்டிங்கை தந்த பிறகு, குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்வோம். பின், நாங்கள் அவர்களுக்கு எங்களின் `ஹைஜீன் ரேட்டிங்' தருவோம். உணவின் தரத்தைக் கொண்டு தரப்படும் இந்த ரேட்டிங்கை, தங்களின் அனைத்துத் தளங்களிலும் அவர்கள் புரொமோட் செய்துகொள்ளலாம். தங்களின் கடைகளின் முகப்பிலும் வைத்துக்கொள்ளலாம். 3 ஸ்டார் ரேட்டிங்தான் கிடைத்திருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த முறையும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப ரேட்டிங்கில் எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றம் செய்துகொள்ளலாம்.

ஹோட்டல்
ஹோட்டல்

இப்போதைக்கு, உணவு விற்பனையகங்களில் ஹைஜீன் ரேட்டிங் கட்டாய விதியாக்கப்படவில்லை. விருப்பமிருக்கும் விற்பனையகங்கள், தாமாக முன்வந்து இதைச் செய்துகொள்ளலாம். வருங்காலத்தில் இந்த ரேட்டிங் கட்டாயமாக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. மற்ற ரேட்டிங்கை விடவும், உணவுக்கட்டுப்பாட்டுத் துறை மூலமாகத் தரப்படும் இந்த ரேட்டிங், கூடுதல் கௌரவத்தைக் கொடுக்கும் என்பதால் அனைத்து ஹோட்டல்களும் இதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என்கிறார் அன்பழகன்.

`தரமான உணவு விற்பனைக்கு இந்தத் திட்டம் எந்தளவுக்குத் துணைபுரியும்?' என ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர், ஆர்.சீனிவாசனிடம் கேட்டோம்.

உணவு
உணவு

``இன்றைக்கு இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் உணவு விநியோகிக்கும் சில தளங்கள், ரேட்டிங் விஷயத்தில் சில மோசடி வேலைகள் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது, குறைவான ஸ்டார் ரேட்டிங் கிடைக்கப்பெறும் கடைகளை நேரடியாக அணுகி, `எங்களுக்கு ஆஃபர் கொடுங்கள், உங்களின் விற்பனை மற்றும் ரேட்டிங்கை அதிகரிக்கிறோம்' என்பது. இப்படி ரேட்டிங் தரும்போது, அந்தக் கடை தேடுதலில் முன்னிலையில் நின்றுவிடுகிறது. பயனாளரும், தகுதி இல்லாத ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கிக்கொள்கின்றனர்.

இப்படியான சூழலில் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-ன் இந்த `ஹைஜீன் ரேட்டிங்' முயற்சி, தகுதி இல்லாத ஹோட்டல்களின் நிலையை முழுவதுமாகக் கேள்விக்குறியாக்கும். மேலும், தகுதியுள்ள ஹோட்டல்கள், தங்களின் தரத்தை மேன்மேலும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தையும் இது உருவாக்கும். ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். இப்படியான ஆரோக்கிய மனப்பான்மை, வருங்காலத்தில் அனைத்து இடங்களிலும் தரமான உணவு கிடைக்கப் பெரியளவில் உதவிபுரியும்.

ஹோட்டல்
ஹோட்டல்

ஹோட்டல்கள் சங்கத்தினர் மட்டுமன்றி, விழாக்களுக்குச் சமையல் செய்யும் குழுக்கள், கேன்ட்டீன்கள், தாபா உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினமே இந்த `ஹைஜீன் ரேட்டிங்' முறைக்குப் பெரிதும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்" என்றார் சீனிவாசன்.