பிரீமியம் ஸ்டோரி

பால்... கால்சியம், புரதம், பொட்டாசியம், வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள். இன்றோ பாலிலும் கலப்படங்கள் பெருகிவிட்டன. சமீபத்திய அதிர்ச்சியாக... மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கை!

இந்தியாவில் தினந்தோறும் சுமார் 15.5 கோடி டன் பால் உற்பத்தியாகிறது. மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை, கடந்த ஓராண்டாக நாட்டிலுள்ள 1,103 நகரங்களில் உள்ள 6,432 பால் மாதிரிகளை, 13 வகையான சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தது. அதில், தீவனத்தின் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை பாலில் கலந்திருப்பதாகவும் அது புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

`பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில், அது கெட்டுப்போகாத வகையில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் மருந்து மற்றும் ரசாயனப் பொருள்கள் அதிக அளவில் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். அத்துடன் மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்களின் மூலம் `அஃப்லாடாக்ஸின் எம்-1’ என்ற ரசாயனப்பொருள் பாலில் கலந்திருப்பதையும் அறிந்தோம். இது புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.

பாக்கெட் பால் மாதிரிகளில் 37.7 சத விகிதம் தரமற்றதாக இருந்தன. அவற்றில் 10.4 சதவிகிதம் மாதிரிகள் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அம்சங்களை மீறியதாகவும் உள்ளன’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்சக்கட்டமாக... கலப்படம், நச்சுத் தன்மை நிறைந்த பாலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் 114 நகரங்களில் எடுக்கப்பட்ட 551 மாதிரிகளில், 266 மாதிரிகளில் நச்சுத்தன்மை இருந்தது.

பால் கலப்படம்: இன்ஃபோகிராபிக்ஸ்
பால் கலப்படம்: இன்ஃபோகிராபிக்ஸ்

கறந்த பாலில் கிருமிகள்

பால் எந்தெந்த வழிகளில் எல்லாம் ஆபத்தான பொருளாக மாறிப்போகிறது என்பது பற்றிக் கூறுகிறார் நீரிழிவு மருத்துவர் ராஜ்குமார். ‘`மாட்டுக்கு மடி நோய் இருந்தால், மாட்டின் வயிற்றிலோ தோலிலோ கிருமிகள் இருந்தால், பால் கறப்பவரின் கைகள் சுத்தமற்று இருந்தால், பால் கறக்கும் இயந்திரம் சுத்திகரிக்கப்படாமல் இருந்தால், பால் கறக்கும்போதே பாலில் கிருமிகள் கலக்க வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சால்மோனெல்லா, லிஸ்டீரியா, காம்பைலோபேக்டர், ஈ-கோலி போன்ற கிருமிகள் பாலில் கலந்துவிடக்கூடும். மாடுகளுக்குத் தொற்றுநோய்களுக்காகக் கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாலிலும் கலக்கும் அபாயம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புற்றுநோய் பூஞ்சைக் காளான்

`அஃப்லாடாக்ஸின் எம்-1’ என்பது மாட்டுத் தீவனங்களில் காணப்படும் பூஞ்சைக் காளான் மூலம் உருவாகும் ஒரு நச்சுப் பொருள். இதன் மூலம் மனிதர்களுக்குக் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். ஒரு லிட்டர் பாலில் 0.5 மைக்ரோ கிராமுக்குக் கீழ் `அஃப்லாடாக்ஸின் எம்-1’ இருக்கலாம் என்பது எஃப்.டி.ஏ எனும் கட்டுப்பாட்டு அமைப்பின் அளவுகோல். புரோபயாடிக் போன்ற ஊட்டங்களை மாட்டுக்குக் கொடுத்தால் `அஃப்லாடாக்ஸின் எம்-1’ நச்சு குறையக்கூடும்’’ என்றார் டாக்டர் ராஜ்குமார்.

விஷமாகிறதா பால்? 
ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

ஹார்மோன் ஊசியின் கேடு

அதிக பால் சுரப்புக்காக மாட்டுக்குப் போடப்படும் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் ஊசி பற்றிய அதிரவைக்கும் தகவல்களைத் தந்தார், இந்திய நுகர்வோர் சங்கத் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம். ‘`அதிக அளவு பால் சுரக்க வேண்டும் என்பதற்காக மாடுகளுக்கு ஊசி மூலம் ஆக்ஸிடோசின் ஹார்மோன் செலுத்தப்படுகிறது. இது மாட்டுக்கும் நல்லதல்ல, மனிதர்களுக்கும் நல்லதல்ல. அந்தப் பாலில் கொழுப்புச் சத்து கூடுதலாகவும் சர்க்கரை மற்றும் புரதச்சத்து குறைவாகவும் இருக்கும். தொடர்ந்து ஆக்ஸிடோசின் ஊசி போட்டால் அந்த மாடுகளுக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு’’ என்கிற சோமசுந்தரம், கறந்த பாலில் சேர்க்கப்படும் பொருள்கள் பற்றிய அச்சுறுத்தும் பட்டியலையும் தந்தார்.

யூரியா முதல் சோப்புத்தூள் வரை...

‘`கறந்த பால் 12 - 24 மணி நேரம்வரை கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் யூரியா சேர்க்கிறார்கள். பாலிலுள்ள அமிலத் தன்மையைச் சமப்படுத்த காஸ்டிக் சோடா சேர்க்கிறார்கள். பசும்பால் தண்ணீராக இருக்கும் என்பதால் அதைக் கெட்டிப்படுத்த ஸ்டார்ச் சேர்க்கிறார்கள். பால் வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பதற்காக சோப்புத்தூளைச் சேர்க்கிறார்கள். பெரும் பாலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட பசுந்தீவனங்களே மாடுகளுக்கு வழங்கப் படுகின்றன. அதன்மூலம் பூச்சிக்கொல்லியில் இருக்கும் நச்சு, பாலில் கலந்து, அதைக் குடிக்கும் நமக்கும் வந்து சேர்கிறது’’ என்கிறார் சோமசுந்தரம் வருத்தத்துடன்.

  ராஜ்குமார்,  சோமசுந்தரம்
ராஜ்குமார், சோமசுந்தரம்

உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் டாக்டர் வனஜாவைத் தொடர்பு கொண்டோம். ‘`தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் `அஃப்லாடாக்ஸின் எம்-1’ நச்சுப்பொருள் கலந்திருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய ஆய்வுகள் தெரிவித்திருப்பதையடுத்து, நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

உணவில் ரசாயனங்களும் நச்சுகளும் கலக்கப்படும் இந்த விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும், அதிகபட்ச கண்காணிப்பும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு