Published:Updated:

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சராசரியாக 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சராசரியாக 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

Published:Updated:
பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

குழந்தைப் பருவத்தில் உட்கொள்ளும் ஆரோக்கிய உணவுகள், பிற்கால உடல்நலனிலும் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. இது உண்மைதானா?

“நிச்சயம் உண்மைதான்! அஸ்திவாரத்தைப் பொறுத்தே கட்டுமானத்தின் தரம் அமையும். அதற்காக, கட்டுமானத்தின் உறுதித்தன்மை குறைந்தால், கட்டடம் நிலைப்பெறுமா? அதுபோலத்தான் நம் ஆரம்பகால உணவுப்பழக்கமும் ஆரோக்கியம் சார்ந்த வாழ்வியல் முறைகளும்.

ஊட்டச்சத்து, உடல் உறுப்புகளின் இயக்கம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளும் குழந்தைப் பருவத்திலிருந்தே சிறப்பாகவும் முறையாகவும் நடைபெற்றால், குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நல்ல உணவுப்பழக்கத்துடன், வாழ்வியல் முறைகளும் சரியாக இருந்தால், நம் உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டில் இயங்கும். இதனால், இளமை முதல் முதுமைவரை எந்தச் சிக்கலும் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்” என்று உறுதியளிக்கிறார்கள் மருத்துவர்கள்.

`` ‘சரி... படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களால் பிற்காலத்தில் ஆரோக்கிய மான உணவுகள் கிடைக்காமல் போனால்?’ என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். அப்படியான சூழலில், குழந்தைப் பருவத்தில் நாம் உட்கொண்ட உணவுகளால் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியே, குறிப்பிட்ட காலம்வரை நம் உடல்நலனைப் பாதுகாக்கும். மிக விரைவாக மீண்டும் முறையான உணவுகளுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்வியலுக்குத் திரும்பும் பட்சத்தில், உடல்நலன் சார்ந்த பாதிப்புகள் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்” என பால்யகால உணவுப்பழக்கத்தின் முக்கியத்துவத்தையும் மருத்துவர்கள் அடிக்கோடிட்டுச் சொல்கின்றனர்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

தாய்ப்பால் கொடுக்கும் கால அளவு முதல் குழந்தைக்கான ஆரோக்கிய உணவுகளை உறுதி செய்வதுவரை பெற்றோர்களுக்கு எழுகின்ற சந்தேகங்கள் ஏராளம்.

‘பாக்கெட் பால் கொடுக்கிறது நல்லதாங்கிறதுல தொடங்கி, குழந்தைக்கு தினமும் எவ்வளவு பால் கொடுக்கலாம்ங்கிறது வரைக்கும் எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு; என் குழந்தை சரியா சாப்பிடுறதேயில்லை; போன் கொடுத்தால்தான் சாப்பிடவே சம்மதிக்கிறான்; சாப்பாட்டுக்கு பதிலா நொறுக்குத்தீனியையே அதிகமா விரும்புற என் பொண்ணு, காய்கறிகளைக் கண்டாலே முகம் சுளிக்கிறா; முட்டை மட்டும் என் குழந்தைக்கு ஒத்துக்கவே மாட்டேங்குது...’ இப்படி பெற்றோருக்குள் இருக்கும் அத்தியாவசிய கேள்வி களுக்கான பதில்கள், காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதுபோன்ற அவசிய கேள்விகள் பலவற்றுக்கும் விரிவான விளக்கங்களைத் தருகிறது இந்த இணைப்பிதழ். ஆரோக்கியமான உணவுகள் மூலமாக, குழந்தைகளின் நலனைச் சிறுவயதிலிருந்தே பேணுவதற்கான வழிமுறைகளை முழுமையாக அலசும் இந்தத் தொகுப்பு, குழந்தை வளர்ப்புக்கான பயனுள்ள தகவல் பெட்டகமாகப் பெற்றோர்களுக்கு உதவும்.வாருங்கள்... குழந்தைகளின் நலனையும், நம் பொறுப்பையும் உறுதி செய்வோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகள் முதல் அவர்களுக்கு உணவின் மீதான ஆர்வத்தைக் கூட்டுவது வரையிலான பயனுள்ள தகவல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தாரணி கிருஷ்ணன்
தாரணி கிருஷ்ணன்

முதல் ஆறு மாதங்கள்... தாய்ப்பால் மட்டுமே போதும்!

``தாய்ப்பால்தான் உலகிலேயே ஆகச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில், குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சத்துகள், மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், பலவிதமான வைட்டமின்கள், புரதச்சத்து உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றன. மனிதனின் வாழ்க்கையில் முதல் 0 - 6 மாதங்களில்தான் உடல் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். எனவே, அந்தக் காலகட்டத்தில் முறையாக தாய்ப்பால் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஜலதோஷம், காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் வருவது கட்டுப்படும். எனவே, பிறந்த குழந்தைக்கு, பசிக்கு ஏற்ப இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என, முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதுமானது. இதிலேயே நீர்ச்சத்தும் அதிகமிருப்பதால், தண்ணீர் மற்றும் வேறு இணை உணவுகள் எதுவுமே அந்தக் காலகட்டத்தில் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
VladimirFLoyd

6 - 12 மாதக் குழந்தைகளுக்கு...

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சராசரியாக 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். இதற்கு இடைப்பட்ட நேரத்தில், பசிக்கு ஏற்ப, சத்துமாவுக் கஞ்சி, ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற பிற இணை உணவுகளையும் கொடுக்கலாம். இதை ‘காம்ப்ளிமென்டரி ஃபீடிங்’ என்போம்.

ஏழாவது மாதத்துக்குப் பிறகு, ஆப்பிள், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற பலவிதமான காய்கறிகளில், ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றிரண்டு காய்கறிகளைச் சேர்த்தோ ஆவியில் வேகவைத்து கையால் மசித்து (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்) குழந்தைகளுக்கு ஊட்டலாம். எளிதில் செரிமானமாகும் சிறுபருப்பில் தொடங்கி, படிப்படியாகப் பிற பருப்புகள் மற்றும் தானியங்களையும் கஞ்சியாகக் கொடுக்கலாம். இட்லி அல்லது தோசையையும் கொடுக்கலாம். தாய்ப்பால், கேழ்வரகுக் கஞ்சி, மசித்த காய்கறிகள் என ஒவ்வொரு வேளைக்கான உணவையும் மாற்றிக்கொடுப்பதால், குழந்தைக்குச் சரிவிகித ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

1–2 வயதில் கூடுதல் கவனம் தேவை!

6 முதல் 18 மாதங்களுக்குள் எத்தனை விதமான உணவுகளைக் கொடுத்துப் பழக்குகிறோமோ, அந்த அளவுக்கு எல்லா உணவுகளையும் குழந்தைகள் சாப்பிடப் பழகுவார்கள். எனவே, இந்தக் காலகட்டத்தில் காய்கறிகள், கீரைகள், தானியங்கள் உட்பட பெரியவர்கள் சாப்பிடும் எல்லா விதமான உணவுகளையும் மிகக் குறைவான அளவிலிருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்க ஆரம்பித்ததும், திரவ வடிவிலான உணவைக் கொடுப்பதைவிட, நன்றாக மென்று உண்பதற்கு ஏதுவான திட உணவுகளைக் கொடுத்துப் பழக்கப் படுத்தலாம். முளைகட்டிய தானியங்களை வேகவைத்து வெறும் வாயில் மென்று சாப்பிடப் பழக்கப்படுத்தலாம். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கான உணவில் உப்பு, காரம், புளி, எண்ணெய், மசாலாப் பொருள்கள் போன்றவை மிகவும் குறைவாக இருக்க வேண்டியது முக்கியம்.

இரண்டு வயதுக்குப் பிறகு...

ஊட்டிவிடுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, தானாகச் சாப்பிட குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். இரண்டு வயதுக்குப் பிறகு, காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் மட்டும் உணவு கொடுத்தால் போதுமானது. காய்கறிகள், தானியங்கள், நல்ல கொழுப்பு உணவுகள் ஆகியவை ஒவ்வொரு வேளை உணவிலும் சரிவிகித அளவில் இருக்க வேண்டும். கூடவே, உணவு நேரத்துக்கு இடைப்பட்ட வேளையில், தலா ஒரு டம்ளர் பாலை (150 - 200 மி.லி) தினமும் இரண்டு முறை கொடுக்கலாம். தயிர் சாதமாகவோ அல்லது வெறும் தயிராகவோ (தினமும் 200 மி.லி) கொடுக்கலாம். குறிப்பாக, 2 - 3 வயது வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில், குறைந்தபட்சம் ஒரு வயது வரையாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
towfiqu ahamed

வெள்ளை உணவுகளில் இவையெல்லாம் வேண்டாமே...

மைதா, மக்காச்சோள மாவு உள்ளிட்ட வெள்ளை நிற உணவுகளைக் குழந்தை களுக்கான உணவில் சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது. பாலில் சர்க்கரையைக் குறைவான அளவில் சேர்க்கலாம். சர்க்கரைக்கு மாற்றாக, காய்ச்சிய பாலில் நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டியைச் சேர்ப்பதாக இருந்தாலும் குறைவான அளவிலேயே சேர்க்கலாம். உப்பு பயன்பாடும் குறைவாக இருக்கட்டும். ‘பளிச்’ நிற அரிசியைக் காட்டிலும், செமி பாலிஷ்டு அரிசி அல்லது பாரம்பர்ய அரிசியைப் பயன்படுத்தலாம்.

தினமும் நெய் தரலாமா?

ஏழாவது மாதத்திலிருந்து அதிக பட்சமாக தலா ஒன்று அல்லது ஒன்றரை டீஸ்பூன் வீதம் காலை மற்றும் மதிய உணவில் நெய் சேர்க்கலாம். இதே நடைமுறையை ஒரு வயதுக்குப் பிறகும் தொடரலாம் அல்லது மூன்று வேளை உணவிலும் அதிகபட்சமாக ஒரு டீஸ்பூன் மட்டும் நெய் சேர்க்கலாம்.

நட்ஸ்... உலர் பழங்கள்...

இரண்டு வயதில் குழந்தைக்குப் பற்கள் முளைத்துவிடும். அப்போதி லிருந்து ஏதாவதொரு வகை நட்ஸ் அல்லது உலர் பழத்தில் 2 - 3 எண்ணிக் கையில் மட்டும் கொடுக்கலாம். நட்ஸ் மற்றும் உலர் பழங்களைக் குழந்தைகள் சரியாகக் கடித்துச் சாப்பிடாமல் நேரடியாக விழுங்கவும் வாய்ப்புள்ளது. இதனால், செரிமானக் கோளாறு, தொண்டை அடைப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், மூன்று வயது வரை நட்ஸ் மற்றும் உலர் பழங்களை நறுக்கிக் கொடுப்பதே சிறந்தது அல்லது தேவையைப் பொறுத்து, நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரு டம்ளர் பாலில் (200 மில்லி மிகாமல்) ஓரிரு டீஸ்பூன் அளவுக்குக் கலந்து கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

துரித உணவுகள்... ஆரம்பத்திலேயே கடிவாளம் அவசியம்!

எண்ணெய் அதிகமுள்ள மற்றும் துரித உணவுகளை அடிக்கடி கொடுத்தால் அவை செரிமானமாக காலதாமதம் ஏற்படும். இதனால், குழந்தைகள் அடுத்த வேளை உணவைச் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் மற்றும் எண்ணெய் உணவுகளைக் குழந்தைகள் கண்ணில்படும்படி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்ப்பதுடன், பெரியவர்களும் இந்த உணவுகளைக் குழந்தைகள் முன்னிலையில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான உணவகங்களில் சுவைக்காக மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே தவிர, தரத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதிய அக்கறை கொடுக்கப்படுவதில்லை. உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள் மற்றும் சுகாதாரம் குறைந்த உணவகங்களின் உணவுகளின் சுவை, குழந்தைகளைச் சுலபமாக ஈர்த்துவிடுவதால், அதன்பிறகு, அவர்களைச் சரிப்படுத்துவது கடினமாகிவிடும். எனவே, ஆரோக்கியமான உணவுகளை, உரிய அளவில் கொடுத்து வளர்க்கும் போது, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் இன்றி குழந்தைகள் வளர்வதை உறுதிசெய்யலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா?

குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை எனில் தொந்தரவு செய்யாமல் அமைதி யாக விட்டுவிட்டால், அடுத்த வேளை பசி எடுக்கும்போது அவர்களாகவே முன்வந்து உணவு வேண்டுமென்று கேட்பார்கள்.

பொதுவாக வீட்டில் பெரியவர்களுக்காக சமைக்கப்படும் சத்தான உணவுகளைத்தான், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளையும் சாப்பிட வைக்க வேண்டும். அத்தகைய உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்று அவர்களுக்குப் பிடித்த மாதிரியான வெளி உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்துப் பழக்குவதோ அல்லது உணவகங்களில் வாங்கித் தருவதோ கூடாது.

உணவு உட்பட எல்லா விஷயத்திலும் குழந்தைகள் புதுமைகளை எதிர் பார்ப்பார்கள். பத்துக்கும் மேற்பட்ட கீரைகள் சந்தைகளில் தடையின்றி கிடைக்கின்றன. எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை கீரையைக் குழந்தைகளுக்கான உணவில் பயன்படுத்தலாம். பொரியல், கூட்டு, துவையல், அடை, சாலட் உட்பட வெவ்வேறு விதமாகக் கொடுக்கலாம்.

வீட்டுத்தோட்டத்தில் செடி வளர்க்கப் பழக்கப்படுத்தி, விளைந்த காய்கறிகளை, குழந்தைகளையே அறுவடை செய்ய வைக்கலாம். தோட்டம் அமைக்க இடமில்லாதபோது, மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் எளிய பராமரிப்பு தேவைப்படும் செடிகளையாவது வளர்க்க ஊக்கப்படுத்தலாம்.

சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். காய்கறிகள் வாங்கச் செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம். குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது, கூட்டாஞ்சோறு சாப்பிடுவது, சாப்பிடும்போது கதைகள் சொல்வது, நிலாச்சோறு சாப்பிடுவது போன்றவையும் உணவின் அருமையை உணர்த்துவதுடன், ஆரோக்கிய உணவுகள்மீதான ஆர்வத்தையும் குழந்தை களுக்கு அதிகப்படுத்தும்.

சாப்பிடும் நேரம்... கேட்ஜெட்டுக்கு என்ன வேலை?

டிவி, போன் போன்ற சாதனங்களைப் பார்த்தபடியே சாப்பிடும்போது சரியாகச் சாப்பிடாமல் அல்லது அளவுக்குமீறி சாப்பிட வாய்ப்புள்ளது. இதுவே பழக்க மானால், கேட்ஜெட் இருந்தால்தான் சாப்பிடுவேன் என குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். இதனால், குழந்தைகளைச் சாப்பிட வைப்பதே பெற்றோர்களுக்குச் சுமையாக மாறும். இந்தத் தவறான போக்குக்கு பெற்றோர்தான் முதல் காரணம் என்பதை உணர்ந்து, குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் கேட்ஜெட் பயன்பாட்டை ஆரம்பத்திலிருந்தே உறுதியுடன் தவிர்க்க வேண்டும்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
Phynart Studio

இருவரின் பங்களிப்பும் அவசியம்!

சமையல் மற்றும் உணவு ஊட்டுவது உட்பட குழந்தைகளுக்கான தேவைகளைக் கவனிக்கும் பொறுப்புகள், காலங்காலமாகப் பெண்களின் வேலைகளாகவே கருதப்படுகின்றன. சமையல் செய்வதை ஒருவரும், சாப்பாடு ஊட்டுவதை மற்றொருவரும் என தினமும் மாறி மாறிச் செய்யலாம். குழந்தை வளர்ப்பில் எல்லா வேலைகளிலும் பெற்றோர் இருவரின் பங்களிப்பும் இணையாக இருந்தால், குழந்தையின் வளர்ச்சி சிறப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும். இந்த விஷயத்தைக் கட்டாயம் கடைப்பிடிப்போம்.''

 கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்

எப்படி இருக்க வேண்டும் குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்?

குழந்தைகளுக்குப் பால் தரலாமா... பாலுக்கு மாற்று என்ன கொடுக்கலாம்... செறிவூட்டப்பட்ட உணவுகள் அவசியமா... பிஸ்கட் மற்றும் ஜூஸ் உகந்ததா... - இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எளிமையான விளக்கங்கள் சொல்கிறார், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த குழந்தைகள்நல அரசு மருத்துவர் கோபால கிருஷ்ணன்.

இதுதான் சரிவிகித உணவுப் பட்டியல்!

``குழந்தைகளுக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டிய சத்துமிக்க, சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

காய்கறிகள், கீரைகள், பருப்பு போன்ற உணவுகளில் வைட்டமின்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, கால்சியம், தாதுச்சத்துகள், இரும்புச்சத்து உள்ளிட்ட பலவித ஊட்டச்சத்துகள் உள்ளன. இதுபோன்ற சமச்சீர் உணவுகள் குழந்தை களுக்கான உணவில் 50 சதவிகிதம் இருக்க வேண்டும்.

அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் பழங்களில் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து அதிகமிருக்கும். இந்தச் சத்து 25 சதவிகிதம் இருக்க வேண்டும்.

தாய்ப்பால் மற்றும் சோயா பால், தேங்காய்ப் பால் உள்ளிட்ட பிற பால் உணவுகள், முட்டை, சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள், நட்ஸ், இறைச்சி போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். இது, குழந்தைகளுக்கான அன்றாட உணவில் 25 சதவிகிதத்துக்கு மிகாமல் கிடைக்க வேண்டும்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

பசும்பாலா... எருமைப்பாலா...?

குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் மட்டுமே பருகி, அதன்பிறகு வேறு எந்தப் பாலும் பருகாமல் எல்லா விதத்திலும் உடல்நலனைச் சரியாகப் பராமரிப்பவர் களுக்கு ரத்த அழுத்தம், இதயம், உடல்பருமன் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவ வட்டாரத்தில் உறுதிசெய்யப்படுகிறது. கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பாலில் இரும்புச்சத்து குறைவாகவே இருக் கும். இதனால், கால்நடைகளின் பாலைக் குழந்தைகளுக்கு அதிக அளவில் அல்லது அதிக காலம் கொடுக்கும்போது, ரத்தச்சோகை ஏற்படலாம்; திட உணவு களை மென்று சாப்பிடும் திறன் குறையலாம். மேலும், பால் உணவு ஜீரணமாக அதிக நேரமாகும். இதனால், இயல்புக்கு அதிகமான நேரம் குழந்தைகள் தூங்கலாம்; உடல் பருமன் ஏற்படலாம்; சுறுசுறுப்பு குறையலாம்; சரியான பசியின்றி, சத்துமிக்க பிற உணவுகளைச் சாப்பிடாமல் போகவும் வாய்ப்புள்ளது.

எனவே, ஒன்றிரண்டு வயது வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவிட்டு, பிறகு, எந்தப் பாலும் கொடுக்காமல் குழந்தைகளை வளர்ப்பது நல்லது. ஒருவேளை தாய்ப்பாலுக்கு மாற்றாக, கால்நடைகளின் பாலைக் கொடுக்க விரும்புபவர்களுக்கு, பசும்பால் அல்லது எருமைப்பாலில் எது கொடுக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும். பசும்பாலைவிட, எருமைப்பாலில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எருமைப்பால் கொடுக்கும்பட்சத்தில் ஒரு டம்ளர் பாலுக்கு அரை டம்ளர் தண்ணீர் வீதமும், பசும்பாலாக இருந்தால் ஒரு டம்ளர் பாலுக்கு கால் டம்ளர் தண்ணீர் வீதமும் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கலாம்.

ஆவினில் சமன்படுத்திய பால் (நீலம்), நிலைப்படுத்திய பால் (பச்சை), கொழுப்புச்சத்து உடைய பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்திய பால் (பிங்க்) என பல நிறங்களில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதில், கொழுப்புச்சத்து அதிகமுள்ள ஆரஞ்சு நிற பாக்கெட் பால் குழந்தைகளுக்கு உகந்தது. உடல் பருமனுடைய குழந்தைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கு பதிலாக, பச்சை நிறத்திலுள்ள நிலைப்படுத்திய பால் கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
Deepak Sethi

பாக்கெட் பாலுக்கு மாற்று என்ன?

தாய்ப்பாலுடன் இணை உணவாகவும் அல்லது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு, பாக்கெட் பாலுக்கு மாற்றாக வேறுவிதமான பால் ஏதாவது கொடுக்க விரும்பினால், சோயா பால், தேங்காய்ப் பால், பாதாம் பால், நிலக்கடலைப் பால், கேழ்வரகுப் பால் ஆகியவற்றைக் கொடுக்கலாம். இவற்றில் ஏதாவதொரு வகை பாலை, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் அரை டம்ளர் வீதமும், அதன்பிறகு தினமும் ஒரு டம்ளர் வீதமும் கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
Picsfive

பால் பவுடர் வேண்டாம்!

அதிக வெப்பநிலைக்குப் பாலைச் சூடுபடுத்தி, பின்னர் குளிர்விக்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால், பால் பவுடரிலுள்ள பாக்டீரியா கிருமிகள் அழிந்துவிடுகின்றன. இதனால், பால் பவுடர் நீண்ட காலத்துக்குக் கெடாது. இதை, தண்ணீர் சேர்த்து நினைத்த நேரத்துக்குக் காய்ச்சி பாலாகக் கொடுக்க முடிவதாக நினைக்கும் பெற்றோர் பலரும், இந்த பவுடரால் ஏற்படும் பாதிப்புகளை யோசிப்பதில்லை. பால் பவுடரில் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறைவாகவே இருக்கும். மேலும், உப்பு சார்ந்த சேர்மானங்கள் (Preservatives) அதிகம் சேர்க்கப்படுவதால் அஜீரணக் கோளாறுகள், ஒவ்வாமை, உடல் பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால், குழந்தைகளுக்கு பால் பவுடர் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.

பால், தயிர், மோர்... எது சிறந்தது?

பசும்பால் மற்றும் எருமைப்பாலில் அதிக அளவில் இருக்கும் Caseinogen எனும் புரதம், தயிர் மற்றும் மோரில், கொழுப்புச்சத்து குறைந்த Casein என்ற உடலுக்கு நன்மை பயக்கும் புரதமாக மாறிவிடும். இது, செரிமானத்தை விரைவு படுத்தும். காய்ச்சிய பால் நொதித்தல் முறையில் தயிராக உருவாகும்போது, அதன் மேற்புறத்தில் சிறிதளவு நீர் சேகரமாகும். அதில், ‘வே புரோட்டீன்’ (Whey Protein) எனும் நன்மை பயக்கும் புரதம் அதிக அளவில் இருக்கும். எனவே, தயிரின் மேற்புறத்தில் சேகரமாகும் நீரை கீழே ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும். தாய்ப்பால் தவிர, வேறு எந்தப் பாலும் கொடுக்க விரும்பாதவர்கள், தினமும் (ஒருவேளை உணவாக மட்டும்) தயிர் சாதத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க லாம். ஜீரணத்தை விரைவுபடுத்தி, பசியுணர்வைத் தூண்டுவதால், தினமும் இரண்டு முறை தலா ஒரு டம்ளர் மோரைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு டீ, காபி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் வளர்ப்பது நல்லதுதான்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
subodhsathe

செறிவூட்டப்பட்ட உணவுகள் அவசியமா?

‘குழந்தைகளின் வளர்ச்சிக்கானது’ என்ற விளம்பரத்துடன் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் விற்கப்படும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தேவையற்றவை தான். அதில், நிறம், சுவை மற்றும் நீண்டகால பயன்பாட்டுக்காகப் பல்வேறு சேர்மானங்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அந்தச் சுவைக்குப் பழக்க மான குழந்தைகள், ‘ஹோம் மேடு’ முறையில் வீட்டிலேயே தயாரித்த தானியக் கஞ்சியைக் குடிக்க மறுக்கலாம். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் கூடிய வீட்டு உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுப்பது தான் நல்லது. கூடவே, அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், தினை, சாமை உள்ளிட்ட பலவித தானியங்களுடன், தேவைக்கேற்ப பருப்பு மற்றும் பயறு வகைகளையும் சேர்த்து சுகாதாரமான முறையில் அரைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதைக் கஞ்சியாகத் தயாரித்து, 6 – 24 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் குறைந்தது இரண்டு வேளைகள் கொடுக்கலாம். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை உணவாக இந்தக் கஞ்சியைக் கொடுக்கலாம்.

பிஸ்கட்டுக்கு பதில் பாரம்பர்ய பண்டங்களைப் பழக்குங்கள்!

காலையில் தூங்கி எழுந்த குழந்தைக்குப் பசியைப் போக்க, பிஸ்கட் சாப்பிடக் கொடுப்பதைப் பல குடும்பங்களிலும் கடைப்பிடிக்கிறார்கள். அந்தப் பழக்கத்தில், பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாக பிஸ்கட் மாறிவிடுகிறது. கம்பெனி பிஸ்கட் முதல் உள்ளூரில் தயாராகும் சிறுதானிய பிஸ்கட் வரை எதுவானாலும் மைதா, வனஸ்பதி, சர்க்கரை, உப்பு போன்ற உடல்நலனுக்கு ஒவ்வாத பொருள்களே அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் பிஸ்கட் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு, அஜீரணக்கோளாறு, உடல் பருமன், சரியாகப் பசி ஏற்படாதது, ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். எனவே, பிஸ்கட்டுக்கு மாற்றாக, தேங்காய் பர்பி, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, வேகவைத்த நிலக் கடலை, தானியங்கள், அவல், சிறுதானிய லட்டுகள், பொரி, பொட்டுக்கடலை, தேங்காய் போன்றவற்றை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.

அசைவ உணவுகள் எப்போதிலிருந்து?

எட்டாவது மாதத்துக்குப் பிறகு, மிகக் குறைவான அளவில் தொடங்கி சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளைப் படிப்படியாகக் கொடுக்கலாம். எண்ணெயில் பொறித்த மற்றும் அதிக எண்ணெய் இருக்கும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை இரண்டு வயது வரை கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. பத்து வயது வரையிலுமே வாரத்துக்கு ஓரிரு வேளைக்கு மட்டும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைக் கொடுப்பது போதுமானது. மாலை ஆறு மணிக்குப் பிறகு, குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
triloks

ஜூஸ் வேண்டாம்... பழங்களே பெஸ்ட்!

ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கலாம். கூடவே, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பெரும்பாலான பழங்களின் சதைப்பகுதியை மட்டும் கொடுத்துப் பழக்கலாம். பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் குழந்தைகள் நேரடியாகவே பழங்களைக் கடித்துச் சாப்பிடுவார்கள். மென்று சாப்பிடுவதால், பழங்களின் முழு சுவையை நன்கு உணர்வார்கள்; பசி உணர்வு தூண்டப்படும்; நார்ச்சத்தும் அதிக அளவில் கிடைக்கும்; பற்கள், ஈறுகள் மற்றும் தாடை வளர்ச்சி மேம்படும். எனவே, குறைந்தபட்சம் ஐந்து வயது வரை யாவது, பழங்களை மிக்ஸியில் அரைத்து ஜூஸாக கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

தேன் கொடுக்கலாமா?

எட்டாவது மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் நாக்கில் தினமும் சில துளிகள் தேனைத் தடவி விடலாம் அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுடன் குறைவான அளவில் தேனைத் தொட்டு ஊட்டலாம். மூன்று வயதுக்குப் பிறகு, தினமும் 5 மில்லி அளவுக்குத் தேனைக் கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

இப்படித்தான் சாப்பாடு ஊட்ட வேண்டும்!

தாய்ப்பால் கொடுக்கும்போது, தனக்குத் தேவையான அளவு பாலை, தாயிடமிருந்து மிகவும் பிரயத்தனப்பட்டு உறிஞ்சிக் குடிக்கும்போது, குழந்தை இயல்பாகவே சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால், எந்த உடல் திறனையும் வெளிப்படுத்தாமலேயே புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு, மந்தத்தன்மை ஏற்படலாம். தவிர, புரையேறுதல், காதுவலி, நெஞ்சுச்சளி, சீரற்ற பல் வரிசை போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். பால் பாட்டிலின் நிப்பிளில் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தால் அதன்மூலம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, மூச்சிரைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதனால், புட்டிப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தாய்ப்பால் போக, குழந்தைக்கு இதர பால் ஏதாவது கொடுக்க விரும்பினால், குழந்தையை மடியில் உட்கார வைத்து, நம் உடல்மீது குழந்தையின் தலையை லேசாகச் சாய்த்து பால் புகட்டலாம். இதற்கு, பால் பாட்டிலைத் தவிர்த்து, சங்கில் ஊற்றித்தான் கொடுக்க வேண்டும். ஒரு வயதுவரை இவ்வாறு பால் கொடுக்கலாம். பின்னர், சிறிய டம்ளரில் பக்குவமாக ஊட்டிவிடலாம். தரையில் உட்கார வைத்தோ அல்லது மடியில் உட்கார வைத்தோ குழந்தைகளுக்கு உணவு ஊட்டலாம். படுக்க வைத்தபடியோ அல்லது தூங்கிய குழந்தையை எழுப்பியோ அல்லது அவசர அவசரமாகவோ உணவு ஊட்டக் கூடாது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களே சிறந்தவை!

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அவர்களுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களின் சுகாதாரத்துக்கும் கொடுக்க வேண்டும். பாத்திரங்களைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் விட்டால், கிருமித்தொற்றால் அதில் சேர்க்கப்படும் உணவு நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புள்ளது. குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு, பாத்திரத்தை நன்கு சுத்தம் செய்து, வெயிலில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். அதேபோல, அடுத்த வேளை மீண்டும் சாப்பாடு ஊட்டும் முன்பு, பாத்திரத்தை நீரில் சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வெள்ளி மற்றும் தங்கத்திலான பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது, சுத்தம் செய்வது சில நேரங்களில் சிரமமாக இருக்கும். இதனால், அந்தப் பாத்திரங்களில் கிருமித்தொற்று ஏற்பட்டு, அதன் மூலமாகவும் உடல்நல பாதிப்புகள் உருவாகலாம். எனவே, குழந்தைகளுக்கான உணவு கொடுக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களே பாதுகாப்பானவை.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
Ankit Sah

தினமும் எத்தனை முட்டை தரலாம்?

முட்டையில் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து, குழந்தை களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். வெள்ளைக்கருவில் சுவை பெரிதாக இருக்காது. இதனால், முதலில் வெள்ளைக்கருவைக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால் முட்டைகள்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படலாம் அல்லது வெள்ளைக்கரு மட்டுமே பிடித்துப் போகலாம். மேலும், முட்டையின் மஞ்சள்கருவால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், சில குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஆறு மாதத்துக்குப் பிறகு, வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை ஓரிரு வாரங்களுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்திய பிறகு, வெள்ளைக்கருவுடன் கூடிய முட்டையை தினமும் ஒன்று வீதம் கொடுக்கலாம். வேகவைக்காத முட்டை அல்லது அரைவேக்காட்டுடன் கூடிய முட்டையைக் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது. இரண்டு வயதுக்குப் பிறகு, தினமும் இரண்டு முட்டைகள்கூட கொடுக்கலாம் (சாப்பாட்டு நேரத்துக்கு இடைப்பட்ட வேளையில்). அப்படிக் கொடுக்கும்பட்சத்தில் இதர இணை உணவுகளைக் குறைத்துக்கொடுப்பதுடன், முட்டை சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே குழந்தையைத் தூங்க வைக்க வேண்டும்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு
kwanchaichaiudom

உணவால் ஒவ்வாமை ஏற்பட்டால்?

சில உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தும் மாறுபடும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அலர்ஜி ஏற்படுத்தும் உணவின் அளவினைக் குறைவாகக் கொடுத்துப் பார்க்கலாம். தொந்தரவு சரியாகவில்லை எனில், மருத்துவரை அணுகலாம். அலர்ஜி தொடர்ந்தால், பாதிப்பை ஏற்படுத்தும் உணவை மட்டும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

நாள்பட்ட உணவா?

உலக அளவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் பிரச்னைகளில் வயிற்றுப் போக்கு முக்கியமானது. எண்ணெய் உணவுகள், மறுமுறை பயன்படுத்திய எண்ணெயில் சமைத்த உணவுகள், சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்திய உணவுகள், காலாவதியான உணவுகளால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே, நாள்பட்ட உணவுகள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவையும் சமைத்த ஓரிரு மணி நேரத்துக்குள் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவது நல்லது.''

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

சத்துமாவுக் கஞ்சியை வீட்டிலேயே செய்வது எப்படி?

சுத்தம் செய்த கேழ்வரகை நன்கு கழுவி, இரவில் ஊற வைக்க வேண்டும். அதை, காலையில் மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பாலை ஒரு பாத்திரத்தில் இரண்டு மணி நேரம் வைத்திருந்தால், அடியில் சிறிதளவு மாவு சேகரமாகும்; மேற்புறத்தில் தண்ணீர் மிதக்கும். அந்த நீரை வடிகட்டிவிட்டு, அடியில் தங்கிய மாவை மட்டும் பிரித்தெடுத்து, வெயிலில் உலர்த்தி, தனியாகச் சேமித்து வைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் மாவுக்கு நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் வீதம் சேர்த்து (உப்பு, சர்க்கரை சேர்க்காமல்) நன்கு காய்ச்சி, ஆறவைத்து குழந்தைக்கு ஸ்பூன் மூலமாக ஊட்டலாம். இந்தக் கேழ்வரகுக் கஞ்சியை, ஆறு மாதக் குழந்தைக்கு முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் தினமும் ஒருமுறை ஊட்டலாம். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, இந்தக் கஞ்சியின் அளவைப் படிப்படியாகக் கூட்டலாம். அரிசிக் கஞ்சியில் புரதச்சத்து குறைவாகவே இருக்கும். ஆனால், கேழ்வரகுக் கஞ்சியில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும்.

ஸ்நாக்ஸ் பாக்ஸ்... வண்ணங்களால் நிறையட்டும்!

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பேக்கரி உணவுகள், பாக்கெட்டில் அடைத்த உடனடி உணவுகள் மற்றும் துரித உணவுகளைக் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். நறுக்கிய பழத்துண்டுகள், பச்சைக் காய்கறிகள், நட்ஸ், உலர் பழங்கள், வேகவைத்த தானியங்களை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நிறங்கள் மிகவும் பிடிக்கும். எனவே, தினமும் வெவ்வேறு நிற சட்னி செய்து கொடுக்கலாம். துருவிய கேரட், பீட்ரூட், தேங்காய் போன்றவற்றை உணவின்மீது தூவி அலங்காரம் செய்து அனுப்பலாம்.

நெல்லிக்காய் தரலாமா?

வைட்டமின் சி, கால்சியம் போன்ற நோய் எதிர்ப்பு சத்துகள் அதிகமுள்ள பெரிய நெல்லிக்காயில் புளிப்புச்சுவை அதிகமிருப்பதால், இதை வெறும் வாயில் சாப்பிட குழந்தைகள் மறுப்பார்கள். எனவே, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறில் ஒரு பங்கு நெல்லிக்காய்த் துண்டினை மட்டும், ஒரு வயது பூர்த்தியான குழந்தை களுக்கு தினமும் கொடுக்கலாம்.

என்ன... எப்போது... எவ்வளவு? - குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்! - பெற்றோருக்கான கம்ப்ளீட் கைடு

உணவு முறை மாற்றத்துக்கு யார் காரணம்?

நம் முன்னோர் காலத்தில் அதிகபட்சமாக ஐந்து வயதுவரை குழந்தை களுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்துள்ளனர். உணவுப் பொருள்களைக் கூடுமானவரை இயற்கை முறையில் தாங்களே விளைவித்துக்கொண்டனர். தங்கள் வாழ்விடத்தில் விளையும் ஆரோக்கிய உணவுகளையே அதிகம் உட்கொண்டனர். கால்நடைகளை வளர்த்து பால் தேவையைப் பூர்த்திசெய்துகொண்டவர்கள், சோர்வு நீங்க நீராகாரம், மோர் உள்ளிட்ட நீர்ச்சத்து பானங்களையே அதிகம் பருகினர். ஒரு வீட்டில் சமைத்த உணவு மற்றொரு வீட்டுக்குப் பகிரப்பட்டதே தவிர, வெளி உணவகங்களில் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்தனர். அந்த உணவுப்பழக்கம் படிப்படியாக மாறி, இப்போது உணவகங்களில் வாங்கிச் சாப்பிடுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியதுடன், புதுப்புது நோய்களையும் தொந்தரவுகளையும் விலைகொடுத்து வாங்குகிறோம். பெரியவர்களின் இந்த உணவுமுறை தவறுகளால், குழந்தைகள் பெரிதாக பாதிக்கப்படுவதை அனைவரும் உணர்ந்து மாற வேண்டும்.