Published:Updated:

`முட்டைக்குள் என்ன இருக்கு...' - பா.ஜ.க எம்.பி-யின் சர்ச்சைப் பேச்சு... நிபுணர்கள் சொல்வது என்ன?

முட்டை
முட்டை

குழந்தைகளைப் பொறுத்தவரை இது ஆகச் சிறந்த உணவு. எனவே, அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவாக தாராளமாக முட்டை தரலாம்.

"குழந்தைப் பருவத்திலிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கி அசைவ உணவுகளை உண்பவர்கள் பின்னாளில் `நரமாமிசம்' உண்பவர்களாக மாறிவிடுவார்கள்" - இந்தக் கருத்துக்கணிப்பை எந்தவொரு மருத்துவத் துறையும் கூறவில்லை! சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தைக் கூறியவர் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரான கோபால் பார்கவா!

கோபால் பார்கவா -பா.ஜ.க.
கோபால் பார்கவா -பா.ஜ.க.

மத்தியப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், அங்கன்வாடி குழந்தைகளுக்கான சத்துணவில் முட்டையைச் சேர்க்க முடிவெடுத்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் முயற்சியாக இது கொண்டுவரப்பட உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த தலைவர் கோபால் பார்கவா, ``இந்தத் திட்டம் முட்டை சாப்பிடாத குழந்தைகளையும் கட்டாயப்படுத்துவதாக உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்குவதற்கு இன்று முட்டை கொடுப்பவர்கள் நாளை சிக்கன், மட்டனையும் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்திய கலாசாரம் அசைவ உணவுக்கு எதிரானது. சிறுவயதிலிருந்தே முட்டை சாப்பிடத் தொடங்கி அசைவ உணவுகளை உண்பவர்கள் `நரமாமிசம்' சாப்பிடுபவர்களாக மாறிவிடுவர்கள்" என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்குப் பலரிடமிருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

முட்டை
முட்டை

``உண்மையில் முட்டை என்பது அவ்வளவு பயங்கரமான உணவா?" பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளில் முட்டை கண்டிப்பாக இடம்பெறும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக முட்டை பார்க்கப்படும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

முட்டை பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள `டயட்டீஷியன்' ராஜேஷ்வரியிடம் பேசினோம்.

``முட்டை என்பது புரதச்சத்து நிறைந்த மிக முக்கிய உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக இதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். முட்டையின் வெள்ளைக் கருவில் அல்புமின் புரோட்டீன் உள்ளது. அதன் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளது. வயதானவர்களை மட்டும் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு உண்ணச் சொல்வோம்.

'டயட்டீஷியன்' ராஜேஷ்வரி
'டயட்டீஷியன்' ராஜேஷ்வரி

இன்றைய அவசர உலகத்தில் பலர் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் ஒரு டம்ளர் பாலும், 2 முட்டைகளும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் வாரத்துக்கு ஆறு முட்டைகள் சாப்பிடலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்தக் கணக்கு எதுவுமில்லை. அவர்கள் எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பால், முட்டை, கேழ்வரகு... எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்! #VikatanPhotoCards

பலர் முட்டையை வேக வைக்காமல் பச்சையாகவே சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது நுண்ணுயிரித் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேக வைத்துச் சாப்பிடுவதே நல்லது. இன்று நகரங்களிலும் பல இடங்களில் நாட்டுக் கோழி முட்டைகள் கிடைக்கின்றன. முடிந்தால் அவற்றை வாங்கி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதீத உடல்நலக் கோளாறு உள்ள சிலருக்கு வேண்டுமானாலும் முட்டை தவிர்க்க வேண்டிய உணவாக இருக்கலாமே தவிர குழந்தைகளைப் பொறுத்தவரை இது ஆகச் சிறந்த உணவு. எனவே, அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவாக தாராளமாக முட்டை தரலாம்" என்றார்.

முட்டை
முட்டை

மேலும் , ``முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் -டி எலும்பு, பற்களின் வலிமையைப் பேணுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் லூடின், சியாங்தின் ஆகியவை கண் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

பண மூட்டைகளில் புரண்டுகொண்டிருந்த அரசியல் இன்று ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் முட்டைவரை வந்துவிட்டதைப் பற்றி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகச் செயல்படும் `தோழமை' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் தேவநேயனிடம் பேசினோம்.

தேவநேயன்  `தோழமை அமைப்பு'
தேவநேயன் `தோழமை அமைப்பு'

``இன்று இந்திய குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்கள் பெரும்பாலும் மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற பகுதிகளில்தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான ஊட்டச்சத்தைத் தர வேண்டியது அந்தந்த மாநில அரசின் கடமை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை ஒரு சிறந்த உணவு.

Vikatan

பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளுக்கு அங்கன்வாடி உணவு அவசியமான ஒன்றாக உள்ளது. அதில் சைவம், அசைவம் என்று அரசியல் செய்வது சாதிய பாகுபாட்டின் உச்ச நிலையைக் காட்டுகிறது. குழந்தை, கருவில் உருவானதிலிருந்து அதன் ஐந்து வயது வரை மூளை கட்டமைக்கப்படும் பருவமாக உள்ளது. இந்தப் பருவத்தில் சத்தான உணவு அவசியம். ஆனால், அது பொருளாதாரத்தைப் பொறுத்து பலருக்குக் கிடைப்பதில்லை. இதுவே பலரையும் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான ஊட்டச்சத்து அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்காக மீன் போன்ற உணவுகளையும் அங்கன்வாடி உணவுகளில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம்" என்றார்.

முட்டை
முட்டை

இவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் அரசியல் காரணங்களுக்காக குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஓர் அமைச்சரே அவதூறு செய்திகளைக் கூறுவது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.

பின் செல்ல