Published:Updated:

`சமையலில் வெங்காயத்தை ஏன் தவிர்க்கக் கூடாது?' - இயற்கை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர் விளக்கங்கள்

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன.

வெங்காய விலை விறுவிறுவென ஏறிக்கொண்டே இருக்க, தங்க நகைகளுக்குப் பதிலாக 'வெங்காய நகைகள்', பிறந்தநாள், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு 'வெங்காய பொக்கே' பரிசு என வெங்காயக் கதைகள் தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

Onions
Onions
சுவையில்லை, மணமில்லை... எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?

இதற்கிடையே, வெங்காய விலை உயர்வு பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில், 'நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை, எங்கள் வீட்டில் நாங்கள் அவ்வளவாக வெங்காயத்தைப் பயன்படுத்த மாட்டோம்' என்று பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வெங்காய மீம்களையும், அதற்கான எதிர்வினைகளையும் மட்டுமே கண்டு கடந்துபோய்விடுகிறோம் நாம். ஆனால், வெங்காயத்திலுள்ள ஊட்டச்சத்துகள் பற்றியும், அவற்றால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இயற்கை மருத்துவர் மணவாளன், அவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

இயற்கை மருத்துவர் மணவாளன்
இயற்கை மருத்துவர் மணவாளன்

"சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்... இரண்டுக்கும் பொதுவான குணங்கள் நிறைய உண்டு. ஆனால், பெரிய வெங்காயத்தைவிட சிறிய வெங்காயத்தில் வீரியம் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிய வெங்காயம்:

சிறிய வெங்காயத்திலிருந்து 5 மில்லி அளவுக்கு அரைத்து எடுத்த சாற்றை, மோர் அல்லது தேனோடு கலந்து தினமும் குடித்தால், அதிகப்படியான கொழுப்பால் ஏற்படும் இதய அடைப்புப் பிரச்னையிலிருந்து நிச்சயம் தற்காத்துக்கொள்ளலாம். இதனால்தான், பழைய சோற்றுக்குச் சிறிய வெங்காயம் என்ற காம்பினேஷன் உருவானது. இயற்கை மருத்துவத்தில் இது மிகப் பெரிய வரப்பிரசாதம்.

Small Onions
Small Onions

தாளித்து அல்லது வேகவைத்துச் சாப்பிடுவதைவிட, சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடும்போது வெங்காயம் மிகச் சிறந்த மருத்துவப் பொருளாகச் செயல்படுகிறது. மேலும், இது ஜீரண சக்தியையும் வலுப்படுத்துகிறது. கோடைக்காலத்தில், சிறிய வெங்காயத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதைக் குறித்துக்கொள்ளவும்.

பெரிய வெங்காயம்:

பல்லாரி அல்லது பெரிய வெங்காயத்தில் வீரியத்தன்மை குறைந்திருக்கும். இது, ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது. அதிகப்படியான உணவு வகைகளைச் சாப்பிட்டாலும்கூட, இந்த வெங்காயம் சிறிதளவு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமடையும். பெரிய வெங்காயத்துடன், தக்காளி, கோஸ், போன்றவற்றைச் சேர்த்து சாலட்டாகச் செய்தும் சாப்பிடலாம்'' என்றார் மருத்துவர் மணவாளன்.

Onions
Onions

வெங்காயத்திலுள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கங்கள் பற்றி டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"வெங்காயம் குறைந்த கலோரி உணவுப் பொருள். காய்கறிகளோடு சேர்த்துச் சாப்பிடும்போது, அதன் சக்தி மேலும் அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் வெங்காயத்துக்குப் பதிலாக, முட்டைகோஸைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்யும்போது சுவையைச் சரிப்படுத்த முடியுமே தவிர, வெங்காயத்தின் பிரத்யேக ஊட்டச்சத்து உணவில் சேராமல் போகும். என்ன உணவாக இருந்தாலும், சிறிதளவு வெங்காயம் சேர்த்தால் மட்டுமே அதன் சக்தி உடலைச் சென்றடையும்.

ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி
ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி

100 கிராம் வெங்காயத்தில்...

சிறிய வெங்காயம்:

புரதச்சத்து - 1.8 கிராம், நார்ச்சத்து - 1.2 கிராம், கார்போஹைட்ரேட் - 11.5, எனர்ஜி - 57 கிலோ கலோரிகள்

பெரிய வெங்காயம்:

புரதச்சத்து - 1.5 கிராம், நார்ச்சத்து - 2.5 கிராம், கார்போஹைட்ரேட் - 9.5 கிராம், எனர்ஜி - 48 கிலோ கலோரிகள்

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன. சர்க்கரை நோய், இதயப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தாராளமாகச் சாப்பிடலாம்.

Fried Onions
Fried Onions
`2,000 கிலோ வந்தும் வாங்க ஆளில்லை!' - எகிப்து வெங்காயத்தால் கலங்கும் தஞ்சை வியாபாரிகள்

சிறுநீரகக் கோளாறு, அல்சரால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதுபோன்ற சில உடல்நலக் காரணங்கள் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து வெங்காயத்தைச் சமையலில் குறைத்துக்கொள்ளலாம், ஆனால் தவிர்க்கக் கூடாது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு