Published:Updated:

ஒரு மணி நேரத்தில் 4 கிலோ உணவு... `புல்லட் பரிசு மட்டுமல்ல; இரைப்பையும் வெடிக்கலாம்!' - அலெர்ட்

வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்
வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்

4 கிலோ அசைவ உணவை வேக வேகமாக எடுத்துக்கொள்வதால் உடல் ரீதியாக பிரச்னை வராதா?

``ஒரு மணி நேரத்துக்குள் 4 கிலோ அசைவ சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்கும் நபர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள ராயல் எல்ஃபீல்டு புல்லட் பரிசாக வழங்கப்படும்” என புனேயில் உள்ள ஹோட்டல் ஒன்று அதிரடியான சாப்பாட்டு போட்டியை அறிவிக்க பலரும் `பரோட்டா சூரி’ கணக்காக அந்த ஹோட்டலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

புனே, வட்காவ் பகுதியில் உள்ள சிவ்ராஜ் ஹோட்டலில்தான் இப்படியான அதிரடி போட்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால் ஹோட்டல் பிசினஸில் ஏற்பட்ட சரிவை எப்படி சரிகட்டுவது என்ற சிந்தனையில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் அதுல் மனதில் உதித்ததுதான் இந்த புல்லட் திட்டம். பொரித்த மீன் மற்றும் குழம்பு, அடுப்பில் சுட்ட கோழி, கோழிக்கறி, ஆட்டு இறைச்சி என மொத்தம் 16 வகையான உணவு வகைகளை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால், நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஓட்டி வரலாம். `புல்லட் சாப்பாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாப்பாட்டின் எடை 4 கிலோ, விலை 2,500 ரூபாய்.

ஃபைல் படம்: அசைவ உணவு
ஃபைல் படம்: அசைவ உணவு
Kalimuthu.P

`நீ கள்ள ஆட்டம் ஆடுற... கோட்டை அழிச்சுட்டு, மொதல்ல இருந்து போடு'ன்னு பரோட்டா சூரி மாதிரியெல்லாம் வசனம் பேச முடியாது. புல்லட்டை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹோட்டலுக்கு வரும் பலரும் குறித்த நேரத்தில் மொத்த உணவையும் சாப்பிட முடியாமல் திணறுகின்றனராம். ஜனவரி 1-ம் தேதியில் தொடங்கி தினமும் 60 பேர் வரை புல்லட் சாப்பாட்டை சாப்பிட்டாலும் எளிதில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை.

சோலாப்பூரைச் சேர்ந்த சோம்நாத் பவார் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் அனைத்து சாப்பாட்டையும் சாப்பிட்டு முதல் ராயல் எல்பீல்டு புல்லட்டை வென்றுள்ளார். இதைக் கேள்விபட்ட பலர் போட்டியில் கலந்துகொள்ள ஏதுவாக குறைந்த நேரத்தில் வேகமாகச் சாப்பிடுவதற்கு வீட்டில் பழகிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற மும்பை உதவி போலீஸ் கமிஷனர் அசோக் ஜாதவ்கூட தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார். `போட்டியில் கலந்துகொண்டு புல்லட்டை வெல்வேன்’ என்று நம்பிக்கையுடன் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சுவாரஸ்யங்களையெல்லாம் தாண்டி, வழக்கமான சாப்பாட்டையே வேகமாகச் சாப்பிட்டால் நெஞ்சை அடைத்துக்கொள்கிறதே ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் 4 கிலோ அசைவ உணவை எடுத்துக்கொள்வதால் உடல் ரீதியாக பிரச்னை வராதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

Chicken (Representational Image)
Chicken (Representational Image)
Photo by Branimir Petakov on Unsplash
4 கிலோ `புல்லட் சாப்பாடு’ ; முடித்தால் புத்தம் புது புல்லட்! - புனே உணவகத்தின் பலே ஐடியா

இதுகுறித்துப் பேசிய உணவுக்குழாய் மற்றும் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த், ``இப்படிக் குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிடும் வீடியோக்களை யூடியூபிலேயே நிறைய பார்க்க முடிகிறது. படையல் மாதிரி வைத்துக்கொண்டு சாப்பிடுகின்றனர். வீடியோவில் காட்டப்படுவது எடிட்டிங்காகக்கூட இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே இதுபோன்ற உணவுப் போட்டிகளில் கலந்துகொள்வது என்பது விஷப் பரீட்சைதான்.

சாப்பிடுவதற்கென சில முறை இருக்கிறது. பொறுமையாக மென்று சாப்பிட்டால்தான் அந்த உணவு எந்தச் சிக்கலும் இல்லாமல் இரைப்பைக்குச் செல்லும். வேக வேகமாக உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் ஓட்டமும் நாம் உணவு விழுங்கும் வேகமும் ஒருசேர இல்லாமல் போகும். அப்படியான சூழலில், உணவுக்குழாய் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சாதாரணமாகவே எல்லோருக்கும் இரைப்பையில் காஸ் இருக்கும் உணவை வேகமாக உள்ளுக்குள் செலுத்தும்போது அந்த காஸ் மொத்தமாக வெளியேற முயலும். முழு காஸும் சிறிய உணவுக்குழாய் மூலம் வாய்ப்பகுதி வழியாக வெளியேற முயலும்போது, உணவுக்குழாயில் அழுத்தம் அதிகமாகி வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அடுத்ததாக இப்படி வேக வேகமாக உணவை உண்ணும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. உணவுக் குழாயும் மூச்சுக் குழாயும் அருகருகேதான் இருக்கின்றன. வேகமாக அதிகளவிலான உணவை உண்ணும்போது சிலருக்கு எதுக்கலித்தல் தன்மை உருவாகும். அப்படி எதுக்கலிக்கும்போது அந்த உணவானது உணவுக் குழாய்க்குச் செல்லாமல் மூச்சுக் குழாய்க்குச் சென்று அடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படியான சூழலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதற்கான அபாயமும் உள்ளது.

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

இதுபோக, சிலருக்கு இரைப்பையே வெடிப்பதற்கான அபாயமும் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே நிறைய சாப்பிட்டு வயிறு விரிந்திருக்கும்பட்சத்தில் அதற்கேற்ற வகையில் அதிகமான உணவை அவர்களால் வயிற்றுக்குள் அடக்கி வைத்துக்கொள்ள முடியும். அந்தப் பயிற்சி இல்லாதவர்கள், சிறிய வயிறு உடையவர்கள் இப்படியான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவர்களுக்கு இரைப்பை வெடிக்கும் ஆபத்தும் இருக்கிறது. இப்படியான போட்டிகளை நடத்துபவர்களும் கலந்துகொள்பவர்களும் இந்த விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு