Published:Updated:

கலப்படம், விலை குறைவு, ஆரோக்கியக் குறைபாடு... தரமான பேரீச்சம்பழத்தைக் கண்டறிவது எப்படி?

பேரீச்சம் பழங்கள்

கலப்பட பேரீச்சம் பழங்களைக் கண்டறிவது சற்று சிரமம்தான். என்றாலும், அப்படிக் கலப்படம் செய்யப்படும் பேரீச்சம் பழங்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

கலப்படம், விலை குறைவு, ஆரோக்கியக் குறைபாடு... தரமான பேரீச்சம்பழத்தைக் கண்டறிவது எப்படி?

கலப்பட பேரீச்சம் பழங்களைக் கண்டறிவது சற்று சிரமம்தான். என்றாலும், அப்படிக் கலப்படம் செய்யப்படும் பேரீச்சம் பழங்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

Published:Updated:
பேரீச்சம் பழங்கள்

ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் நம்மைவிட்டு கொஞ்சம் தூரம் தள்ளியே நிற்கும் எனலாம். அந்தளவுக்கு சத்துகளும் புரதங்களும் நிறைந்து காணப்படும் ஓர் அற்புதப் பழ வகை, இந்தப் பேரீச்சை.

டேட்ஸ் சிரப், டேட்ஸ் அல்வா, டேட்ஸ் கேக்ஸ் என்று பேரீச்சம் பழத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் முதல் பழம் என்றால், அது நிச்சயம் பேரீச்சம் பழமாகத்தான் இருக்கும். காரணம், சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தைத் தருவதில் ஆகச் சிறந்தது இந்தப் பேரீச்சம் பழம் எனலாம்.

பேரீச்சம் பழங்கள்
பேரீச்சம் பழங்கள்

ஒவ்வொரு மாதமும், அனைவரின் வீட்டு மளிகை லிஸ்ட்டிலும் முதன்மை இடம் வகிக்கும் இந்தப் பேரீச்சம் பழம், அவ்வளவு சிறப்பானதா என்றால் நிச்சயமாக சிறப்பானதுதான். நீரிழிவு நோயாளிகள்கூட இதை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவு உட்கொண்டால் நல்லதுதான். உடல் எடை அதிகமாக இருப்பவர்களும் பேரீச்சம் பழத்தை தங்கள் டயட் லிஸ்ட்டில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேரீச்சம் பழத்தின் தரம் என்ன என்பதுதான் கேள்விக்குறி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபமாக, இணையத்தில் வீடியோ ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது. அதில் சிலர் பேரீச்சம் காய்களை ஒரு பாத்திரத்தில் நன்கு வேகவைத்து, அவற்றை சர்க்கரைக் கரைசலில் ஊறவைத்து, பின்னர் சில ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தி, மஞ்சள் நிறத்தில் உள்ள பேரீச்சம் காய்களை அடர் பிரவுன் நிறத்துக்கு மாற்றி, பின்னர் உலர்த்தி, பேக் செய்கின்றனர். இயற்கையாக நமக்குக் கிடைக்கிறது என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பேரீச்சம் பழத்திலும் கலப்படம் என்று, பார்ப்பவர்களை அலறவைக்கிறது இந்த வீடியோ.

பேரீச்சம் பழங்கள்
பேரீச்சம் பழங்கள்

இது குறித்து சற்று விவரமாக அறிய, தமிழ்நாட்டின் பிரபல பேரீச்சம் பழம் உற்பத்தியாளர், முருகவேலை தொடர்புகொண்டு பேசினோம். ``பேரீச்சம் பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை உண்ணக்கூடியது . எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்ட இந்தப் பேரீச்சம் பழத்தின் பூர்வீகம் இராக். எகிப்து, ஏமன், சவுதி அரேபியா, மொரோக்கோ, சூடான் என்று பல்வேறு மேலைநாடுகளில் இந்தப் பேரீச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே அதிகளவில் பேரீச்சம் பழத்தை இறக்குமதி செய்யும் நாடு, இந்தியா. இந்தியாவில் `கிமியா' வகை டேட்ஸுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலைவன தேசங்களில் மட்டுமே பேரீச்சம் பழங்கள் விளையும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவிலும் சில இடங்களில் பேரீச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் பகுதிகளில் பெரிய அளவில் உற்பத்தி நடக்கிறது. தவிர தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் விளைவிக்கப்படுகின்றன.

உலகளவில் மொத்தம் 3,000 வகை பேரீச்சம் பழங்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிட்ட சில வகைகளே மிகப் பிரபலம் எனலாம். தமிழ்நாட்டில் ஏறக்குறைய 35 வகை பேரீச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முருகவேல்
முருகவேல்

பேரீச்சம் பழ உற்பத்தி முறைகள் கால நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். எந்த ஒரு பேரீச்சை வகையும் பெரும்பாலும் மரத்திலிருந்து பறிக்கும்போது நமக்குப் பழமாகக் கிடைப்பதில்லை. காய்களை அறுத்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்திய பின்னர் அதன் நிறம் மாறி, பக்குவப்படுத்தப்பட்டு, பின்னர்தான் பேக் செய்யப்படுகின்றன.

பேரீச்சம் பழங்களைக் கொதிவிட்டு வேகவைத்துச் செய்யும் பழக்கங்கள் எதுவும் நம் நாட்டில் இல்லை. மேலை நாடுகளில் அப்படிச் செய்யப்பட்டு பின்னர் நம்மால் இறக்குமதி செய்யப்படுகின்றன. பேரீச்சம் பழங்களை அதிகம் இந்தியாவில் விளைவிக்க முடியாததற்குக் காரணம் நம் நாட்டில் நிலவும் பருவ நிலை மாற்றங்களே. இங்கு பேரீச்சம் காய்களை பக்குவப்படுத்தத் தேவையான வெப்பம் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் பேரீச்சம் பழங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

பொதுவாக, இதுபோன்ற கலப்படம் செய்யப்படுகின்ற தரம் குறைந்த பேரீச்சம் பழங்கள் பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நன்கு பிரபலமான கடைகளில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. மாறாக, சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில்தான் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. அவை கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பேரீச்சம் பழத்தைப் பொறுத்தவரையில் அதன் விலையை வைத்தே தரத்தை அறிந்துவிடலாம். தரமான டேட்ஸ் கிலோ 300-ல் தொடங்கி கிலோ 5,000 வரை உள்ளது.

பேரீச்சம் பழங்கள்
பேரீச்சம் பழங்கள்

விலை குறைவாக இருக்கிறது என தரமற்ற பேரீச்சம் பழங்களை வாங்கிச் சாப்பிட்டால், அவை ஆரோக்கியமற்றவையாகவே இருக்கும். ஆனால், பேரீச்சம் பழத்தின் தரத்தைக் கண்டறிந்து வாங்குவதும் கொஞ்சம் கடினம்தான். காரணம், பேரீச்சம் பழத்தில் சில வகைகள் மிருதுவாகவும், சில வகைகள் கடினமாகவும் இருக்கும்; சில வகைகள் மஞ்சள் நிறத்திலும், சில வகைகள் பிரவுன் மற்றும் அடர் கறுப்பு நிறத்திலும் காணப்படும். எனவே, கலப்பட பேரீச்சம் பழங்களைக் கண்டறிவது சற்று சிரமம்தான். என்றாலும், அப்படிக் கலப்படம் செய்யப்படும் பேரீச்சம் பழங்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். உள்ளே மஞ்சள் நிறத்திலும் மேற்புறம் பிரவுன் நிறத்திலும் திட்டாக இருக்கும். மேலும், அவை சர்க்கரைக் கரைசலில் ஊறவைக்கப்பட்டுத் தயாராகும் பழங்கள் என்பதால், இனிப்புச் சுவை சற்றே தூக்கலாக இருக்கும். இந்த இரண்டு வரையறைகளை வைத்துத்தான் போலிகளைக் கண்டறிய வேண்டும்'' என்றார் முருகவேல்.

ரசாயனங்கள் சேர்த்துத் தயாராகும் பேரீச்சம் பழங்களை உட்கொள்ள நேர்வதால் ஏற்படும் விளைவுகளை, இரைப்பை, குடல் மருத்துவர் மகாதேவன் விளக்குகிறார்.

``நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இயற்கைக்கு முரணாகச் செயல்பட்டு செயற்கையை நாடுவதுதான் கலப்படம். ஒரு பேரீச்சம் பழம் முறையே நமக்கு உண்ண உகந்ததாகக் கிடைப்பதற்கு அதிக கால நேரம் தேவைப்படும். ஆனால், அதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கின்ற நிலையில், காய்களை வேகவைத்து, மிருதுவாக்கி, இனிப்பு, ரசாயனங்கள் சேர்த்துத் தயார் செய்கின்றனர்.

பொதுவாக, பேரீச்சம் பழம் மிகவும் சுவை மற்றும் சத்து நிறைந்தது. எல்லாப் பழங்களும் தினமும் உட்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை, பேரீச்சம் ஒன்றைத் தவிர. காரணம் உடல் வலிமைக்கும் இயக்கத்துக்கும் அதன் தேவை அதிகமாக இருப்பதால்தான்.

இரைப்பை, குடல் மருத்துவர் மகாதேவன்
இரைப்பை, குடல் மருத்துவர் மகாதேவன்

எந்த ஒரு காயையோ, பழத்தையோ தண்ணீரில் வேகவைக்கும்போது அதன் சத்துகள் நீரில் கரைந்து அந்தக் காய்/பழம் வெறும் சக்கையாகிவிடும். அப்படி, பேரீச்சம் காய்களைக் கொதிக்கவைக்கும்போதும் அதன் சத்துகள் நீரில் கரைந்துவிடும். மேலும் அதன் இயற்கை இனிப்புத் தன்மையும் நீரில் கரைந்து குறைந்துவிடும். இதனால் அந்தப் பேரீச்சம் பழம் எந்தவிதச் சத்தும் இல்லாத சக்கையாக மாறிவிடும். அதை நாம் உண்ணுவதும், உண்ணாமல் இருப்பதும் ஒன்றுதான். மேலும், அந்தக் காய்களைப் பழமாக்க அவர்கள் பயன்படுத்தும் ரசாயன நிறமூட்டிகள், ஒருவேளை அரசால் அனுமதிக்கப்படாதவையாக இருந்தால், அதைத் தொடர்ந்து உண்டுவரும்போது கேன்சர் ஏற்படும் அபாயம்வரை இதில் உள்ளது'' என்றார்.

மொத்தத்தில், சாலையோரம் விற்கப்படும் மற்றும் அங்கீகாரமற்ற பேக்கிங்குகள் கொண்ட பேரீச்சைகளைத் தவிர்த்து, தரம் பார்த்து வாங்குவோம் இந்த செல்ல பழத்தை!

தரமில்லாத பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு கேடு விளைவதைப் போலவே, தரமான பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. பேரீச்சம் பழத்தில் அடங்கியுள்ள சத்துகளையும், அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

1. பேரீச்சம் பழம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது, 1 முதல் 5 வயதினருக்கு ஒரு பேரீச்சம் பழம் வீதம், வாரம் இரண்டு முறை கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 பேரீச்சம் வீதம், வாரம் மூன்று முறை கொடுக்கலாம். பெரியவர்கள் தினமும் 3 மூன்று பேரீச்சம் பழங்கள் உண்ணலாம்.

உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

2. நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது, அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கக்கூடும்.

3. டேட்ஸ் சிரப் - நல்லதல்ல... பேரீச்சம் பழத்தை சிரப்பாக மாற்றும்போது பழத்தின் சத்துகள் குறைந்துவிடும், மேலும், அந்த சிரப்பில் கூடுதல் இனிப்புச் சுவைக்காக சர்க்கரை பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது, எனவே, பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

4. இனிப்பு குறைவான பேரீச்சம் பழங்கள் என்று மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுபவற்றை வாங்கக் கூடாது, பேரீச்சம் பழம் இயற்கையாகவே அதீத இனிப்புச்சுவை கொண்டது, இனிப்பு குறைவு எனும்போது அது வியாபாரத்துக்காகச் செய்யப்படும் சூட்சுமம்.

5. இனிப்பாக, சுவையாக உள்ளது என்பதற்காக அதை அதிகமாகவும் சாப்பிடக் கூடாது, அப்படி அதிக அளவில் உட்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பேரீச்சம் பழங்கள்
பேரீச்சம் பழங்கள்

6. பேரீச்சம் பழங்கள் பதப்படுத்தி பேக் செய்யப்படும்போது அதன் ஈரப்பதம் குறைந்து விடுகிறது, ஆனால், அதன் சுவையும் சத்துகளும் ஒரு போதும் குறைவதில்லை.

7. பேரீச்சம் பழம் வல்லாரைக்கீரையைப் போன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லமை உடையது, குழந்தைகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏழைகளின் பாதாம் பிஸ்தா என்றெல்லாம் மக்கள் பேரீச்சம் பழத்தை அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு குறைவான விலையில் நிறைவான சத்துகளையும் நமக்கு அது தருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism