Published:Updated:

புத்தம் புது காலை : இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் நிஜமாகவே ஃபிரெஞ்ச் தானா?

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
News
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

பிரெஞ்சு புரட்சிக்குப்பின் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் அனைவருக்குமான சிற்றுண்டியாகவும், பிரபல ஸ்ட்ரீட் ஸ்நாக்காகவும் மாறியிருக்கிறது.

முதன்முதலில் செடிக்கு அடியில் உருளைக்கிழங்குகளை பார்த்த ஆதிமனிதன், ஒரு செடிக்கு அடியில் எதற்கு இத்தனை உருண்டைக் கற்கள் கிடக்கிறது என்று ஆச்சர்யப்பட்டானாம். ஆனால், இன்றைய மனிதனோ அதே உருளைக் கிழங்கில் இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்தால் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறான்.

அதுசரி... ஃப்ரெஞ்சுக்கும் உருளைக்கிழங்கு ஃப்ரைக்கும் என்ன கனெக்‌ஷன்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போதைய பெல்ஜியம் நாட்டின் ம்யூஸ் பள்ளத்தாக்குப் பகுதியை ஸ்பானிஷ் நெதர்லாந்து என முன்பு அழைப்பார்கள். இந்த ம்யூஸ் பகுதியைச் சுற்றியிருந்த நாமூர், அந்தேன், டினான்ட் ஆகிய கிராமங்களில் வசித்த ஏழை மக்கள் பெரும்பாலும் ம்யூஸ் நதியில் கிடைக்கும் சிறு மீன்களைத்தான் உணவாக உண்பார்களாம். மீன்களைப் பிடித்து நெருப்பில் சுட்டும், எண்ணெயில் பொரித்தும் உட்கொண்ட அந்த மக்களுக்கு, குளிர்காலத்தில் நதி உறைந்து போகும்போது மீன்கள் கிடைக்கவில்லை. அப்போது உருளைக்கிழங்குகளை சிறுமீன்கள் அளவிற்கு வெட்டி, அவற்றை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தனர் என்று 1680-ல் தனது புத்தகத்தில் பெல்ஜியம் எழுத்தாளர் ஜோ ஜெரார்ட் குறிப்பிட்டுள்ளார்.

french fries
french fries

தெற்கு பெல்ஜியத்தின் பேச்சு மொழி பிரெஞ்சு மொழி என்பதால் அவர்கள் இதை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என்று அழைத்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. ஆனால், பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப், ஒருநாள் இரவு உணவுக்குத் தாமதமாக வந்ததால், ஏற்கெனவே பொரித்து ஆறியிருந்த உருளைக்கிழங்குகளை எடுத்து மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறினாராம் அரண்மனையின் சமையல்காரர்.

முன்பே பொரித்திருந்ததால் சற்று உப்பியிருந்த உருளைக்கிழங்குத் துண்டுகள் மீண்டும் பொரித்ததால் மொறுமொறுப்புடனும், நல்ல சுவையுடனும் இருக்க, மன்னருக்கு அந்தச் சுவை மிகவும் பிடித்துப் போய் அதிலிருந்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என்ற புதிய உணவு அறிமுகமானது என்கிறார்கள். பிரெஞ்சு புரட்சிக்குப்பின், இது அனைவருக்குமான சிற்றுண்டியாகவும், பிரபல ஸ்ட்ரீட் ஸ்நாக்காகவும் மாறியிருக்கிறது. இந்த ஃபிரெஞ்சு கனெக்‌ஷனை சொல்லி, இது பெல்ஜியத்தில் தோன்றியது அல்ல... தங்களது நாட்டின் சொத்து என்று உரிமை கொண்டாடுகிறது பிரான்ஸ்.

ஆனால், பெல்ஜியத்துக்கு உருளைக்கிழங்கு வந்ததே 1735-ம் ஆண்டுதான். அப்படியிருக்க 1680-ம் ஆண்டு மீன்களுக்கு பதிலாக எப்படி உருளைக்கிழங்கை வறுத்திருப்பார்கள் என்று கேட்கிறது இன்னொரு வரலாறு. கூடவே பிரான்ஸுக்கு உருளைக்கிழங்கு வந்தது 1795-ம் ஆண்டுதான். ஆனால், அவர்கள் எப்படி அதற்கு முன்னரே "பொம்மெ பான்ட் நியூஃப்” (pomme pont neuf) அதாவது வறுத்த உருளைக்கிழங்கு பாரிஸில் விற்கப்பட்டதாக சொல்கின்றனர் என்று கேட்கிறார்கள் பெல்ஜியத்துக்காரர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கெல்லாம் மாறாக, முதல் உலகப் போரின்போது பிரான்கோஃபோனில் தங்கியிருந்த அமெரிக்க சிப்பாய்கள் உணவின்றி உருளைக் கிழங்குகளை வறுத்து உண்டதாகவும், பிற்பாடு நாடு திரும்பிய அவர்கள் அதன் சுவையை தங்கள் நாட்டுக்கு சொல்ல இது பிரான்கோஃபோன் ஃபிரை என்று பரவினாலும் உலகமெங்கும் ஃப்ரெஞ்ச் ஃப்ரை என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாகவும் சைக்கிள் கேப்பில் இன்னொரு வரலாறு வேறு சொல்லப்படுகிறது.

பராக் ஒபாமா
பராக் ஒபாமா

உண்மையில் இந்த ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் என்ற frites-சை அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் கொண்டு சென்றது பிரான்ஸ்தான் என்கிறது இன்னொரு வரலாறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான தாமஸ் ஜெஃபர்சன் சிறு துண்டுகளாக நறுக்கி, பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை தனது வெள்ளை மாளிகை விருந்தில் உட்கொண்டதாகக் குறிப்பிட (pommes de terre frites en petites tranches) அமெரிக்கர்களுக்கும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் மீதான காதல் அதிகரித்தது. பின்பு கனடா, லத்தீன் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் என உலகமயமாக்கப்பட்டது இந்த ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் என்கிறது அது.

மன்னருக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமல்ல… மற்ற எல்லாருக்கும் பிடித்தமான உணவு என்பதால், "தெருக்கள் உணவின் ராணி" என்று செல்லமாகச் சொல்லப்படும் இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரை உண்மையில் எந்த நாட்டில் பிறந்தது என்று வேண்டுமானால் குழப்பம் இருக்கலாம். ஆனால் சைவர்கள் அசைவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் விரும்பும் உணவுகளில் இதுதான் சுவை மிகுந்தது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.

இவற்றின் பிறப்பிடம் பெல்ஜியமோ, பிரான்ஸோ... இவற்றைத் தயாரிக்கும் சுலபமான முறை இதுதான். விரல் நீள உருளைக்கிழங்கு துண்டுகளை முதலில் ஒருமுறை பொரித்து (blanching), பொரித்ததை சிறிதுநேரம் குளிரூட்டி (deep freeze), மீண்டும் பொன்னிறமாகப் பொரிப்பது தான் ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் செய்யும் முறையாகும்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

தற்சமயம் உலகெங்கும் அனைவராலும், முக்கியமாக குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படும் இந்த பிரெஞ்சு ஃப்ரைஸ், அமெரிக்கர்கள் கெட்ச் அப் சேர்த்து உண்ண, ஆங்கிலேயர்கள் வினிகரிலும், கனடியர்கள் சீஸ் சேர்த்தும், மெக்சிக்கோவினர் எலுமிச்சை சேர்த்தும், பெல்ஜியத்தினர் மேயோனைஸ் சேர்த்தும், ஃபிரெஞ்சு மக்கள் மஸ்டர்ட் சேர்த்தும், ஜப்பானியர்களும், வியட்நாமியர்களும் மிளகு சேர்த்தும் உட்கொள்கின்றனர்.

சாதாரண உருளைக்கிழங்கு ஃப்ரையை விட இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரையில் கலோரி (ஒரு மீடியம் சர்விங் : 500 கலோரிகள்) மற்றும் கொழுப்பு அதிகம் என்பதால் உண்ணும் அளவில் கவனம் செலுத்துதல் நலம் என்கிறார்கள் உணவு வல்லுனர்கள்.

"I make French Fries Disappear..

What is your Superpower?"

என்று கேட்கிறது ஒரு சூப்பர் பவர் நாடு.

ஆம்...

இந்த பதப்படுத்திய ஃபிரெஞ்சு ஃப்ரைஸை அதிகமாக உற்பத்தி செய்வது கனடா என்றும், அமெரிக்க மக்கள் தான் அதை அதிகமாக உண்கின்றனர் என்றும், அதிலும் ஒரு அமெரிக்கர் ஒரு வருடத்திற்கு 13 கிலோ ஃபிரஞ்சு ஃப்ரைஸை சாப்பிடுகிறார் என்றும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இந்த சுவையான உணவைப் பற்றி முதன்முதலாக புத்தகத்தில் பிரசுரித்த இன்றைய தினத்தைத்தான் (ஜூலை 13) ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் தினமாகவும் கொண்டாடுகின்றனர் என்கிறது உணவு சரித்திரம்.

இன்றைய ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் தினத்தன்று, மெக்டொனால்ட்ஸ், பர்கர் 21, செக்கர்ஸ், ரெட் ராபின், கேஎஃப்சி, ஹார்டிஸ் ஆகிய பல கடைகள் பல இலவசங்களை இணையத்தில் அறித்துள்ளன. அவற்றிற்காக காத்திருக்க வேண்டுமா என்ன? வாருங்கள் சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை நாமே வீட்டில் செய்து, அளவாக ஆனால் சுவையாக உண்டு மகிழ்வோம்!

#FrenchFriesDay