Published:Updated:

இன்றைய மெனு: முந்திரி

முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி

சரித்திர விலாஸ்

இன்றைய மெனு: முந்திரி

சரித்திர விலாஸ்

Published:Updated:
முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
முந்திரி
தூப்பி இனத்தவர்கள் பிரேசிலின் பழங்குடியினர். இயற்கையோடு இயைந்த வாழ்வு தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களும் ஸ்பானியர்களும் பிரேசிலில் காலனி அமைத்தனர். தூப்பி மக்கள் அடிமையாக்கப்பட்டனர்.

அந்தக் காடுகளில் முந்திரிப் பழம் அதிகமாக விளைந்து கிடந்தது. மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அவை, பறித்து உண்ணும் ஆசையைத் தூண்டின. பறித்தார்கள். சுவைத்தார்கள். அவை பிடித்தும் பிடிக்காமலும் இருந்தன. முந்திரிப் பழத்தின் கீழ் நீண்டுகொண்டு இருக்கும் கொட்டையைக் கடித்தார்கள். த்தூ... த்தூ என்று துப்பினர். அவர்கள் வாயில் ஒருவித அழற்சி ஏற்பட்டது. அதைப் பார்த்த தூப்பி மக்கள் சிரித்தனர்.

முந்திரிப் பழத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கொட்டையை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பைத்தான் உண்ண வேண்டும் என்று போர்த்துக்கீசியர்களுக்கு தூப்பி மக்கள் சொல்லிக் கொடுத்தனர். அந்தக் கொட்டைகளை நெருப்பில் வாட்டியோ, வறுத்தோ பருப்பைத் தனியே பிரித்து உண்ணவும் கற்றுக் கொடுத்தனர். தூப்பி மக்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீசியர்களின் நாக்குகள் முந்திரிப் பருப்பின் சுவைக்கு அடிமையாகின. முந்திரிக் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைத்தான் உண்ண வேண்டும் என்று தூப்பி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தவை அங்கே வாழும் கபுச்சின் வகை குரங்குகள் என்பது சுவாரஸ்யமான தகவல். முந்திரிப் பருப்பைக் கப்பெனப் பிடித்துக்கொண்ட போர்த்துக்கீசியர்கள், அதன் பழங்களையும் விட்டு வைக்கவில்லை. பழத்தின் சதையிலிருந்து மது பானங்கள் தயாரிக்கும் முறையை உருவாக்கினர்.

தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதி, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வடகிழக்கு பிரேசில்தான் முந்திரியின் பூர்வீகமாகக் கருதப்படுகிறது. இதனுடன் மத்திய அமெரிக்கப் பகுதிகள், கரிபீயன் தீவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். முந்திரி என்பது ‘அனகார்டியேசியா’ (Anacardiaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம். ‘அனகார்டியம்’ (Anacardium) என்ற பேரினத்தைச் சேர்ந்தது. மேற்பகுதியில் பேரிக்காய் வடிவத்தில் மஞ்சள் நிறத்தில் காய்த்துத் தொங்குவது முந்திரியின் பழம் என்று பொதுவாகச் சொல்லுவோம். ஆனால், அது நிஜமான பழம் அல்ல. ‘போலிப்பழம்’ என்றே இதை அழைக்கிறார்கள். நம் மக்களுக்கு ‘கொல்லாம் பழம்’. இந்தப் போலிப்பழத்துக்குக் கீழே சிறுநீரக வடிவத்தில் நீண்டிருப்பதே அசல் முந்திரிப் பழம். அதை நாம் கொல்லாங்கொட்டை (முந்திரிக்கொட்டை) என்கிறோம். அதற்குள்தான் நாம் உண்ணும் முந்திரிப் பருப்பு இருக்கிறது. சதைப்பற்றுமிக்க போலிப் பழத்துக்கு உப்புத் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் இங்கே இருக்கிறது.

முந்திரிக் கொட்டையின் வெளிப்புற ஓட்டில் அலர்ஜியை உருவாக்கக்கூடிய சில நச்சுகள் உண்டு. தகுந்த சூட்டில் முந்திரிக் கொட்டையைப் பதமாக வறுத்தால் நச்சுத் தன்மைகள் நீங்கிவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவும் முந்திரியும்

பிரேசிலில் அறிமுகமான முந்திரிப் பருப்பைக் கொறிப்பது என்பது போர்த்துக்கீசியர்களின் அன்றாட வழக்கம் ஆகிவிட்டது. ஆகவே, அவர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கப்பலில் முந்திரிக்கொட்டையையும் எடுத்துக்கொண்டார்கள். 16-ம் நூற்றாண்டில் இந்தியாவில் தடம் பதித்த போர்த்துக்கீசிய வணிகர்கள் மூலமாக இங்கும் நிலம் பார்த்து முந்திரி மரங்கள் வேர்விட்டன. வெப்ப மண்டலப் பயிரான முந்திரி, இந்தியாவில் நன்றாகவே வளர்ந்தது. கி.பி 1565 நேரத்தில் கோவாவில், இந்தியாவின் முதல் முந்திரி மரம், முந்திரிப் பழத்தைக் கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, கேரள கடற்கரைப் பகுதிகளில் முந்திரிக் காடுகள் உருவாகின. இந்தப் பகுதிகளில் இருந்துதான் முந்திரி, இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் பரவியது. தமிழகத்துக்கு முந்திரி, கொல்லத்தில் இருந்து கப்பலில் வந்து சேர்ந்தது. கொல்லத்தில் இருந்து வந்ததால் பேச்சு வழக்கில் கொல்லாம் பழம், கொல்லாங்கொட்டை, கொல்லாமரம் என்ற பெயர்கள் உருவாகின.

முந்திரி
முந்திரி

முந்திரி, இந்தியாவில் இருந்துதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பரவியது. முந்திரி, சர்வதேச அளவில் கவனம் பெற்ற வணிகப் பொருளாக மாறியது 20-ம் நூற்றாண்டில்தான். 2017-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலக அளவில் அதிகம் முந்திரி விளைவிக்கும் நாடு வியட்நாம். இந்தியாவும் ஐவரி கோஸ்ட்டும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் முந்திரி அதிகம் விளையும் மாநிலம் கேரளம். சர்வதேச அளவில் இந்திய முந்திரிகளுக்கே சந்தை மதிப்பு அதிகம். முந்திரிக் கொட்டையை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் முந்திரி வணிகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான சரியான தகவல் கிடையாது. 1920-ம் ஆண்டில் ரோச் விக்டோரியா என்பவர் கொல்லத்தில் இந்த முந்திரி வணிகத்தை ஆரம்பித்தார் என்று ஒரு பதிவு இருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த ரோச் விக்டோரியா, மெட்ராஸைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருடன் இணைந்து முந்திரி வணிகத்தைத் தொடங்கினார். முந்திரிக் கொட்டையைப் பதமாக வறுத்து, அதில் இருந்து முந்திரிப் பருப்பை லாகவமாகப் பிரித்தெடுத்து, தரம் பிரித்து, மேம்படுத்தி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். கொல்லத்தில் Indian Nut Company என்ற நிறுவனத்தை நடத்தி வந்த W.T.ஆண்டர்சன் என்பவர், இந்த முந்திரிப் பருப்பை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தார். ஆரம்பத்தில் தேயிலை அடைக்கப்படும் மரப்பெட்டிகளில் முந்திரியையும் அடைத்து ஏற்றுமதி செய்தார்கள். பிறகு, டின்களில் அடைக்கப்பட்டு முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முந்திரி ஏற்றுமதித் தொழிலில் செழிப்பைக் கண்ட பிறரும் இந்தத் தொழிலுக்கு மாற ஆரம்பித்தனர். அமெரிக்கா மட்டுமன்றி, பிரிட்டனுக்கு, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களுக்கும் இந்திய முந்திரி ஏற்றுமதி விரிவடைந்தது. ஆப்பிரிக்காவில் இருந்தும் முந்திரி ஏற்றுமதி தொடங்கப்பட, சர்வதேச சந்தையில் இந்திய முந்திரிக்கான தேவையை அதிகமாக்கும் முயற்சிகள் தொடங்கின. விளைவாக, 1955-ம் ஆண்டில் Cashew Export Promotion Council Of India ஆரம்பிக்கப்பட்டது. வணிக வாய்ப்புகள் சகல திசைகளிலும் பெருகின.

முந்திரி
முந்திரி

உலக அளவில் மக்கள், உப்பு, காரம் சேர்த்து வறுத்த முந்திரியைத்தான் அதிகம் விரும்பி உண்கிறார்கள். பலரது விருப்பமான நொறுக்குத் தீனி இது. இந்த வடிவத்தில்தான் முந்திரி அதிகம் விற்பனையாகிறது. இந்திய, பாகிஸ்தான் உணவுக் கலாசாரத்தில் இனிப்புகளுடன் முந்திரிப் பருப்பு சேர்க்கப்படுகிறது. இனிப்புகளின் மேல் அலங்காரம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. குருமாவுக்கு முந்திரியை அரைத்து ஊற்றுகிறார்கள். புலாவ்களில் சேர்க்கப்படுகிறது.

கொங்கனி கலாசாரத்தில் முந்திரி சமையலில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதுபோல, கோவா மக்கள் ஃபெனி என்ற பானத்தைக் குடிக்கிறார்கள். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், கள் போன்று கோவா மக்கள் தென்னை அல்லது முந்திரி மரத்திலிருந்து இந்த ஃபெனி பானத்தைத் தயாரிக்கிறார்கள். முந்திரி மரத்தின் பழங்களைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படும் இந்த முந்திரி ஃபெனியை கோவாவின் ‘தேசிய பானம்’ என்றே சொல்லலாம்.

21-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் பல தேசங்களில் முந்திரி விவசாயம் அதிகரித்திருக்கிறது. காரணம் உலக அளவில் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக ‘முந்திரிப் பால்’ பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகியிருக்கிறது. முந்திரிப் பருப்பிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பாலை, பண்ணைப் பால் அல்லது தேங்காய்ப்பாலுக்குப் பதில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். முந்திரிப் பருப்பிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் எண்ணெயும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. முந்திரி ஓட்டிலிருந்து எடுக்கப்படும் Cashew Shell Oil தொழிற்சாலைத் தேவைகளுக்காகவும், உயவுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சுவாரஸ்யமான ஒரு தகவல். முந்திரிக்குத் தமிழில் இன்னொரு பட்டப்பெயரும் இருக்கிறது. ‘கப்பல் வித்தான் கொட்டை.’ அதாவது, அந்தக் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கே வணிக நோக்கில் வந்த சிலர், முந்திரிப் பருப்பின் சுவைக்கு அடிமையாகிப் போனார்களாம். தங்கள் கையிலிருக்கும் காசு, பொருள்கள் எல்லாம் விற்று முந்திரியை வாங்கி வாங்கித் தின்ற அவர்கள், அதற்கு மேல் முந்திரி வாங்க ஏதுமின்றி வெறுங்கையோடு தவித்தார்களாம். அவர்கள் நாக்கு ‘கொண்டா கொண்டா’ என்று முந்திரியைக் கேட்க, வேறு வழியே இன்றி தாங்கள் வந்த கப்பலையே விற்று முந்திரியை மூட்டை மூட்டையாக வாங்கித் தின்றார்களாம்.

கப்பல் வித்தான் கொட்டைக்குப் பின்னணியில் இருக்கும் வாய்வழிக் கதை இதுதான்.

காசுக்கு எட்டு!

மிழில் முந்திரி, மலையாளத்தில் ‘அண்டிப்பருப்பு’, இந்தியில காஜு என்ற பெயர்களில் இது அழைக்கப் படுகிறது. Acaju என்பது தூப்பி பழங்குடியினர் முந்திரியை அழைக்கும் சொல். அதற்கு, தானாக விளையும் கொட்டை என்று அர்த்தம். அதைத்தான் போர்த்துக்கீசியர்கள் Caju என்று பதிவு செய்து வைத்தார்கள். Caju என்பதில் இருந்துதான் Cachou என்ற வார்த்தை உருவாகி, பின் காலப்போக்கில் Cashew Nut என்ற ஆங்கில வார்த்தையாக மாறியிருக்க வேண்டும். ஆனால், Cashew nut என்ற வார்த்தை எப்படி உருவானது என்பதற்கு நம் ஊரில் வாய்வழிப் பழங்கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு.

போர்த்துக்கீசியர்களால் இங்கே முந்திரி செழிப்பாக விளைய ஆரம்பித்தது. சாதாரண மக்களும் அதைச் சந்தையில் விற்க ஆரம்பித்தார்கள். அப்போது இங்கே வந்த பிரிட்டிஷாருக்கு இந்த முந்திரிப் பருப்பு பற்றித் தெரியவில்லை. வெள்ளைக்காரர் ஒருவர், சந்தையில் முந்திரி விற்றுக்கொண்டிருந்த வியாபாரியிடம் அதை வாங்கிச் சுவை பார்த்திருக்கிறார். அவருக்கு அந்தச் சுவை பிடித்திருந்தது. உடனே, அதன் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்? ‘What is the name of this nut?’

நம் ஊர் வியாபாரிக்கு ஆங்கிலம் புரியவில்லை. வெள்ளைக்காரர் விலையைத்தான் கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டு, ‘காசுக்கு எட்டு’ என்று பதில் சொல்லியிருக்கார். அதை வெள்ளைக்காரர் ‘Cashew nut’ என்று புரிந்துகொண்டார். ‘காசுக்கு எட்டு’ என்பதுதான் Cashew nut என்ற ஆங்கிலச் சொல்லானது என்பது வெள்ளைக்காரன் காலத்துக் கதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism