Published:Updated:

தயிர்சாதத்தை இரவில் சாப்பிடலாமா... என்ன சொல்கிறது ஆயுர்வேத மருத்துவம்?

கிராபியென் ப்ளாக்

தயிர் சாதத்தை இரவில் சாப்பிடும்போது மூக்கில் நீர் வடிதல், தலைவலி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

தயிர் சாதம்
தயிர் சாதம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு, தயிர். நம்முடைய உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் தரப்படுகிறது. கோயில் பிரசாதங்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தயிர் சாதம் தவறாமல் இடம்பிடிக்கிறது. தயிரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், காலநேரம் பார்க்காமல் தயிரைச் சாப்பிட்டால் பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தயிர் சாதம்
தயிர் சாதம்

'எப்போது தயிர் சாப்பிடவேண்டும்?', 'தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா?' என்று ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். "குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மை தயிருக்கு உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதுடன் வயிற்றுப்புண் உள்ள நோயாளிகளுக்கு அருமருந்து என்பதால், தயிரை இரவில் எடுத்துக்கொள்ளலாமா? என்கிற கேள்வி பலருக்கும் எழும். அதை அறிந்துகொள்வதற்கு முன், இரவில் உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வது முக்கியம்.

ஆயுர்வேத மருத்துவம் இரவு உணவு குறித்து கச்சிதமான சில வரையறைகளைச் சொல்லியிருக்கிறது. 'சூரியன் மறைந்ததும் மூன்று மணி நேரத்துக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும். ஐந்து மணிக்குச் சூரியன் மறைந்தால் இரவு எட்டு மணிக்குள் உணவு உட்கொண்டுவிட வேண்டும். பகலைவிட இரவில் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்' என்று அறிவுறுத்துகிறது.

தூக்கம் சரியாக இருந்தால்தான் வளர்சிதை மாற்றங்களும் சரியாக நடக்கும். அதனால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை இரவில் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படாது. தயிர் சாதம் எளிதில் செரிமானமாகாது.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்
தயிர்
தயிர்

இரவு நேரம்தான் உடலுறுப்புகள் ஓய்வெடுத்துக்கொள்ளும் என்பதால் எளிதில் செரிமானம் அடையும் உணவுகளையே இரவில் சாப்பிடவேண்டும். ஒரு மனிதனின் வளர்சிதை மாற்றங்கள் இரவில்தான் நிகழ்கின்றன. தூக்கம் சரியாக இருந்தால்தான் வளர்சிதை மாற்றங்களும் சரியாக நடக்கும். அதனால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை இரவில் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படாது. தயிர் சாதம் எளிதில் செரிமானமாகாது. அதனால் தயிர் சாதத்தை இரவு நேரத்தில் உட்கொள்ளக் கூடாது என்கிறது ஆயுர்வேதம்.

தயிர் சாதத்தை இரவில் சாப்பிடும்போது மூக்கில் நீர் வடிதல், தலைவலி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

தயிர்
தயிர்

இன்று நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான தயிர் தரமற்றவை. மோரில் நிறையத் தண்ணீர் கலந்தும் முறையாக உறை ஊற்றாத தயிரிலுமே பெரும்பாலும் தயிர் சாதம் செய்யப்படுகின்றன என்பதால் அதனால் கூடுதல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தயிரை சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் கண்டிப்பாகத் தயிர் சாப்பிடக்கூடாது.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்

தினமும் தயிர் சாப்பிடலாமா?

தயிர், மோர், நெய் ஆகியவற்றின் பிறப்பிடம் ஒன்றுதான். ஆனால், குணாதிசயம் வெவ்வேறாக இருக்கிறது. பாலிலிருந்து உருவாவதுதான் தயிர். தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். தினமும் மோரை முக்கிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தயிரை எடுத்துக்கொள்ளக்கூடாது. அமிர்தத்துக்கு ஒப்பானது மோர். உடலிலுள்ள அனைத்து ரத்தக்குழாய்களையும் சுத்தப்படுத்தும் வல்லமை கொண்டது.

மோர்
மோர்

ஆனால், தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் உருவாகும். எனவே, தினமும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள்,ஒருவேளை மட்டும் தயிர் சாப்பிட்டால் பிரச்னையில்லை.

தயிரை சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் கண்டிப்பாகத் தயிர் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் உடலில் அரிப்பு ஏற்படும். அதேபோல, சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். தயிருக்குப் பதில் வெண்ணெய் நீக்கிய மோரை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்.

தயிர் சாப்பிடும்போது அதனுடன் எந்த வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்கிற பட்டியலும் ஆயுர்வேதத்தில் உண்டு. அந்த வகையில் தயிர் சாப்பிடும்போது நெல்லிக்காய் ஊறுகாய், சர்க்கரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்”என்கிறார் ஆர்.பாலமுருகன்.