Election bannerElection banner
Published:Updated:

வெற்றிலையும் கடலை மிட்டாயும் எதிர்ப்பு சக்திக்கானவையா?! - வாட்ஸ் அப் வீடியோவும் உண்மையும்

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்

கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், மலிவு விலையில் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது எப்படி எனும் மையப் பொருளுடன் உணவியல் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பெருந்தொற்றாக உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல வழிமுறைகளை மக்கள் கையாண்டு வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாலும், மருத்துவ நிபுணர்களாலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பரிந்துரைக்கப் படும் செயல்முறைகளை மக்கள் பின்பற்றி வந்தாலும், சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் வழிமுறைகளும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் வலம் வரும் அத்தகைய தகவல்களின் உண்மைத் தன்மை என்ன என்பது கேள்விக்குறி.

வெற்றிலை
வெற்றிலை

கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், மலிவு விலையில் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது எப்படி எனும் மையப் பொருளுடன் உணவியல் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெற்றிலையில் கடலைமிட்டாயை வைத்து மடித்துச் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் ஏற்படும் மூச்சுத் திணறலுக்கு நல்ல மருந்தெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், உச்சநிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்த நிலையில் இது, அரசு மருத்துவமனைகளின் சிகிச்சையிலும் இடம்பிடித்ததாகவும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய, ஊட்டச்சத்து ஆலோசகர் நிஷாவிடம் பேசினோம். "சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் நம்பகத்தன்மையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிலையும் கடலைமிட்டாயும் ஊட்டச்சத்து மிகுதியானவை என்பதோடு, எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருள்கள்தான். இவற்றுடன் எதையும் சேர்க்காமல் அப்படியே சாப்பிட்டாலே மருத்துவ ரீதியிலான பயன்களை அடையலாம்.

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்

குறிப்பாக, கடலைமிட்டாயில் புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற கனிமப் பொருள்கள் செறிந்து காணப்படுகின்றன. குழந்தைகள் சாப்பிட பிடிவாதம் பிடிக்கும் வேளையில், உணவுக்கு இணையான ஊட்டச்சத்துகளைப் பெற கடலைமிட்டாயைக் கொடுக்கும்படி பெற்றோருக்குப் பரிந்துரைக்கிறோம். அதேபோல, சளிப்பிடித்திருந்தால் வெற்றிலையை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. வெற்றிலை வலி நிவாரணியாகவும், செரிமானத் திறனை ஊக்குவிக்கும் பொருளாகவும் இருக்கிறது. வெறும் வெற்றிலையாக எடுத்துக் கொள்ளாமல் இஞ்சிச் சாறு, கற்பூரவல்லி மற்றும் துளசி இலைகளைத் தேவைக்கேற்ப எடுத்து வெந்நீரில் காய்ச்சிக் குடித்து வர நல்ல பயன்களைப் பெறலாம்.

ஆனால், வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது போல, இரண்டையும் ஒன்றாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மூச்சுத் திணறலுக்கு இவை இரண்டும் மருந்தாகச் செயல்படும் எனக் கூறப்படுவதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. தற்காப்பு நடவடிக்கையாக இவற்றைச் சாப்பிடுவதுடன், அரசு வலியுறுத்தி வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி பெருந்தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்" என்றார்.

ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையாக வீடியோவில் சொல்லப்பட்டிருந்தாலும், அவை சித்த மருத்துவத்தின் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுவதாக சித்த மருத்துவரான சங்கராஜ் கூறுகிறார். மேலும், அவர் கூறியது, "சித்த மருத்துவ முறைகளாக இருந்தாலும் அவை முறையான ஆவணங்களோடு நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பரிந்துரைக்கப்படும் மருந்தாக ஏற்றுக்கொள்ளப்படும்.

வெற்றிலை
வெற்றிலை
நோய் எதிர்ப்பு சக்தி முதல் வைட்டமின்கள் வரை... பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா?

வெற்றிலையும் கடலைமிட்டாயும் நல்ல எதிர்ப்பு சக்தி உள்ள பொருள்கள் என்பதோடு ஊட்டச்சத்து மிகுதியானவையும்கூட. சித்த மருத்துவ அடிப்படையில் வெற்றிலை கபம் எனப்படும் சளிக்கும், செரிமானக் கோளாறுகளைப் போக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றைத் தனித்தனியாகச் சாப்பிடும்போது நல்ல பயன்களைப் பெறலாம். இவற்றை சேர்த்துச் சாப்பிடுவதால் பயன் கிடைப்பதாக சித்த மருத்துவக் குறிப்புகளில் இல்லை. எனவே, வீடியோவில் சொல்வது போல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும்படி மக்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

- கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு