
வேக வைத்த பலாக்கொட்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நம் உடலில் இருக்கிற கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால், மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.
மஞ்சள் நிறத்தில் ஈரப்பதத்துடன் பளபளக்கும். ஒரு சுளையைப் பிய்த்து வாயில் வைத்த நொடி அடித்தொண்டை வரைக்கும் இனிக்கும். ஊரெங்கும் இப்போது பலாப்பழ வாசம்தான். முழு பலாப்பழம் அதன் தரத்தைப் பொறுத்து, கிலோ 25 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. பலாப்பழம், பலாக்கொட்டை, பலா இலை ஆகியவற்றின் மருத்துவக் குணங்கள் பற்றி இயற்கை மருத்துவர் யோ.தீபா சொல்கிறார். பலாவில் நான்கு ரெசிப்பிகள் சொல்லித் தருகிறார் அவள் வாசகி விஜயலட்சுமி.

பலாப்பழமும் பலன்களும்...
’’பலாப்பழத்தில் கலோரி அதிகம். உடலில் எனர்ஜி குறைவாக இருப்பதாக உணர்பவர்கள் உடனடியாக சாப்பிட வேண்டியது பலாப்பழத்தைத்தான்.
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், நம் உடலில் இருக்கிற சோடியத்தை ரெகுலேட் செய்து ரத்தக்குழாய்க்குள் இருக்கிற டென்ஷனை நீக்கி விடும். இதனால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
பலாப்பழத்தில் இருக்கிற வைட்டமின் ’சி’ நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பலாப்பழச் சுளைகள் தினமும் இரண்டு சாப்பிடுங்கள். இதிலிருக்கிற வைட்டமின் ’ஏ’ கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது. கேட்ராக்ட் பிரச்னையைத் தடுக்கலாம். இளமையையும் நீட்டிக்கலாம்.
நம் உடம்புக்குள் எந்தக் காயம் இருந்தாலும் அதை ஆற்றுவதற்கு உதவி செய்யும் பலாப்பழம்.
பலாப்பழத்தில் இருக்கிற காப்பர் தைராய்டு மெட்டபாலிசத்தை ரெகுலேட் செய்து, நம் உடம்பு அயோடின் கிரகிப்பதற்கு உதவி செய்யும். தைராய்டினால் உடல் எடை அதிகமானவர்கள் பலாப்பழம் சாப்பிட எடையைக் குறைத்து, தைராய்டு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

பலாக்கொட்டையும் பலன்களும்...
பலாக்கொட்டையில் இருக்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நம் உடல் செல்களில் இருக்கிற கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும். புற்றுநோய் இருந்தால், அந்த இடங்களில் புதிய ரத்தக்குழாய்களை உருவாக்கி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்கிற குணத்தில் பலாக்கொட்டையும் இனிப்புதான்.
வேக வைத்த பலாக்கொட்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நம் உடலில் இருக்கிற கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால், மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.
நீரிழிவு இருப்பவர்கள் பலாக்கொட்டை சாப்பிட சுகர் கன்ட்ரோலில் இருக்கும்.
நம் வயிற்றிலிருக்கிற நல்ல கிருமிகளைத் தக்கவைக்கும். இதனால் அஜீரணம் வராது. வயிற்றிலிருக்கிற கழிவுகளையும் நீக்கும்.

பலா இலையும் பலன்களும்...
சிலருக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் இருக்கும். அவர்கள் பலா இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அரை கப் குடிக்கலாம். இந்தப் பலா இலை நீர் நம் உடலில் இருக்கிற தேவையற்ற கெட்ட கொழுப்பை உடைத்து, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், சிம்பிள் சுகராக மாற்றி நீரிழிவு வராமல் தடுக்கும்.
பலாப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இனிப்புச்சத்து மற்றும் கலோரி அதிகம் இருப்பதால் நீரிழிவு இருப்பவர்களும், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பவர்களும் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.

பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் பிரச்னை வருமா?
ஆமாம். வயிற்றுவலி வரும். ஒருவேளை ருசிக்காக அதிகமாக சாப்பிட்டுவிட்டீர்களென்றால், அரை மணி நேரம் கழித்து ஒரு கப் பால் குடித்துவிடுங்கள்.
பலாப்பழ அதிரசம்

அரைத்த பலாப்பழம் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். துருவிய வெல்லம் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர் விட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பழம் வெந்ததும் கீழே இறக்கி ஆற விடவும். பிறகு இதனுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள், மைதா மாவை தூவினாற்போல போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரைக்கும் பிசையவும். இதைப் பூரி போல சற்று தடிமனாக சின்னச் சின்ன வட்டங்களாகத் திரட்டி ரீஃபைன்ட் ஆயிலில் பொரித்து எடுக்கவும்.
பலாப்பழ போளி

ஒரு கப் பொடிதாக நறுக்கிய பலாப்பழத் துண்டுகளுடன், அரை கப் தேங்காய்த்துருவல், சிறிதளவு ஏலக்காய்ப் பொடி மூன்றையும் சேர்த்து, 4 டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அரை கப் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லப்பாகு எடுத்துக்கொள்ளவும். கால் கல் புழுங்கலரிசியை வறுத்துப் பொடிக்கவும். வெல்லப்பாகுடன் நெய்யில் வறுத்த பலாப்பழக் கலவையைக் கொட்டி கிளறவும். பலாப்பழக் கலவைத் தளர்வாக இருந்தால் பொடித்த புழுங்கல் அரிசியைச் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறவும். இதுதான் பூரணம். மைதா மாவைப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி அதற்குள் பூரண உருண்டையை வைத்து மூடி சின்னச் சின்ன வட்டங்களாகத் திரட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
பலாக்காய் டிக்கா

கெட்டியான ஒரு கப் தயிரில் அரை டீஸ்பூன் மிளகுப்பொடி, கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து, வெண்ணெய் மாதிரி வரும் வரைக்கும் அடித்துக் கலக்கவும். சதுர சதுரமாக கட் செய்த வெங்காயத் துண்டுகள் தக்காளித் துண்டுகள், குடை மிளகாய் துண்டுகள், பலாக்காய் துண்டுகள் ஆகியவற்றை தயிர் கலவையில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இவற்றை வரிசையாக டூத் பிக் குச்சியில் செருகி, தோசைக்கல்லில் நெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
பலாக்காய் மஞ்சூரியன்

பலாக்காய் துருவல் ஒரு கப். இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், 4 பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம் இவற்றுடன் மைதா மாவைச் சிறிது சிறிதாக தூவிப் பிசையவும். கலவை உதிர் உதிராக வர வேண்டும். இதைத் தூவினாற்போல போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இன்னொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், 2 டீஸ்பூன் டொமேட்டோ சாஸ் ஊற்றவும். 2 டீஸ்பூன் மைதா மாவைத் தண்ணீரில் கரைத்து, சாஸ் உடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருந்தால் மாவு வெந்துவிடும். இதில் பொரித்த பலாக்காயைச் சேர்த்து நன்கு கிளறி ஒரு ஸ்பூன் தேன் விட்டு சாப்பிடவும்.