Published:Updated:

`கொரோனா'வால் மட்டன் பிரியாணி பயமா..?! பலாக்காய் பிரியாணி இருக்கே!

பலாப்பழத்தின் விலை சட்டெனச் சந்தையில் ஏறியிருக்கிறது. அதற்குக் காரணம் மட்டன், சிக்கனுக்குப் பதிலாகப் பலாக்காயை மக்கள் உபயோகிக்கத் தொடங்கியிருப்பதுதான்.

தமிழ்நாட்டின் முக்கனிகளில், பலாப்பழத்துக்கு இருக்கும் மவுசு என்றைக்கும் குறைந்ததில்லை. சீஸனுக்கு சீஸன் தேடி வாங்கும் பழவகைகளில் பலாப்பழத்துக்கு நிகர் பலாப்பழம் மட்டுமே. பழம் மற்றும் காய்கறி வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பலா, திடீரென தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்குக் காரணம் 'கொரோனா வைரஸின்' தாக்கம்தான்.

பலாப்பழம்
பலாப்பழம்

ஆம், 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலகை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம், சாதாரண இருமல், தும்மலையும் பயத்தோடு பார்க்க வைத்திருக்கிறது. இந்நிலையில், `பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் வழியே கொரோனா வைரஸ் பரவுமோ' என்ற பீதியில் பெரும்பாலான மக்கள் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனால், பல்லாயிரக் கணக்கான சிக்கன் மற்றும் இதர இறைச்சி வியாபாரிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர். இதற்கிடையில், பலாப்பழத்தின் விலை சட்டெனச் சந்தையில் ஏறியிருக்கிறது. அதற்குக் காரணம் மட்டன், சிக்கனுக்குப் பதிலாக பலாக்காயை மக்கள் உபயோகிக்கத் தொடங்கியிருப்பதுதான்.

Chicken
Chicken
`ஹெச்ஐவி, பன்றிக் காய்ச்சல், மலேரியா மருந்து!'- கொரோனா வைரஸ் நோயாளியை குணப்படுத்திய மருத்துவர்கள்

தற்போது ஒரு கிலோ பலாப்பழத்தின் விலை 120 ரூபாய். இது எப்போதும் விற்கப்படும் விலையைவிட 120 சதவிகிதம் அதிகம். மேலும், மட்டன் போலவே இந்தப் பலாக்காய்கள் சுவை தருவதால், இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது. பிரியாணிக்கென்று தனி 'ஃபுட்டிஸ் க்ரூப்' உருவாகி வரும் நிலையில், தற்போது பெரும்பாலான திருமண வீடுகளின் மெனு முதல் வீக் எண்டு விருந்துவரை இப்போது பலாக்காய் பிரியாணிதான் டிரெண்டு. அப்படிப்பட்ட சுவையான பலாக்காய் பிரியாணி ரெசிபியோடு அதன் நன்மைகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார் சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நன்மைகள்:

பலாக்காய்களில் இயற்கையான நல்ல கொழுப்புச் சத்துகள் உள்ளன. பீட்டா கரோட்டின் என்று சொல்லப்படும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மிகுந்த அளவில் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை உடனே கட்டுப்படுத்தக்கூடிய பொட்டாஷியம் இதில் நிறைந்திருக்கிறது. மேலும், புரதம், கார்போஹைட்ரேட், மெக்னீஷியம், மாங்கனீஸ் போன்ற தாதுப் பொருள்களும் பலாக்காய்களில் உள்ளன.

Menurani Chellam
Menurani Chellam

பிரியாணி ரெசிபி:

பலாக்காய் தேர்வு செய்வது எப்படி?

பிரியாணி, புலாவ் போன்ற உணவு வகைகள் சமைப்பதற்குப் பிஞ்சு அல்லது பழுக்காத காயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காய் மிகவும் இறுக்கமானதாக இருக்க வேண்டும். காயின் மேற்பகுதி அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். தோலில் பிரவுன் நிற புள்ளிகள் ஏதுமில்லாமல் இருப்பது நல்லது. நான்கு பேருக்கு மீடியம் அளவு காய் போதுமானது. மிகவும் சிறிய அளவு காய் என்றால் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும்.

பலாக்காய் புலாவ்:

தேவையான பொருள்கள்:

பலாக்காய் பொரிக்க:

பலாக்காய் - 1/4 கிலோ

மஞ்சள் தூள், உப்பு, தயிர், மிளகாய்த்தூள் - தலா1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

சாதத்துக்கு:

பாசுமதி அரிசி - 2 கப்

தண்ணீர் - 4 கப்

தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

ஷாஜீரா - 2 டீஸ்பூன்

ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 4

வதக்குவதற்கு:

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

நீளமாகக் கீறிய பச்சை மிளகாய் - 2

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பலாக்காய்
பலாக்காய்

செய்முறை:

பலாக்காயின் தோலை நீக்கி, உள்ளிருக்கும் காய் பகுதியை சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், தயிர் மற்றும் மிளகாய்ப்பொடி கலந்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து நன்கு வறுத்த பிறகு, கழுவி ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசியை வறுக்கும்போது அதன் நிறம் மாறக்கூடாது. 5 நிமிடங்கள் வறுத்த பிறகு, இரு மடங்கு தண்ணீர் சேர்த்து அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.

சூடான எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு, ஊற வைத்துப் பொரித்த பலாக்காய்களையும் சேர்த்துக்கொள்ளவும். ஏற்கெனவே எண்ணெயில் வறுத்தெடுத்ததால் சிறிது நேரம் வதங்கினாலே போதுமானது.

Jackfruit Pulav
Jackfruit Pulav
சீரகச் சம்பாவா... பாசுமதியா... பிரியாணிக்கு எது பெஸ்ட்?

பலாக்காய் மசாலா தயாரானதும், வேகவைத்த சாதத்தைச் சேர்த்தால் சுவையான பலாக்காய் புலாவ் ரெடி. பரிமாறுவதற்கு முன், காற்று புகாத பாத்திரத்தில் இந்தக் கலவையைக் கொட்டி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால், தம் பிரியாணியின் சுவை கிடைக்கும்.

திரும்பத்திரும்ப அடுப்பில் வைத்து சுண்டக் கிளறிச் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு