Published:Updated:

'இந்துப்பு' நல்லதா... கெட்டதா..? சந்தேகங்கள், விளக்கங்கள்... A to Z தகவல்கள்! #IsRockSaltHealthy

இந்துப்பு

இந்துப்பு அனைத்து உப்புகளையும் விட மேன்மையானதா?

`உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்'
`உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'...

இப்படி உப்பு பற்றிய பழமொழிகள் பல இருக்கின்றன.

'உப்பு..!' வரலாற்றிலும்... பழங்கதைகளிலும்...

உப்புக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. நிரந்தர மற்றும் ஸ்திரத்தன்மையின் சின்னமாக இருந்தது உப்பு. பைபிளில்கூட `உப்பு உடன்படிக்கை' என்ற பெயரில் நிலையான உடன்படிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக உடன்படிக்கை செய்யும் இருதரப்பினரும் உப்பிட்ட உணவைச் சேர்ந்து உண்டு அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தினர். அதேபோல், மோசேயின் நியாயப் பிரமாண சட்டப்படி பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகளுடன் உப்பு சேர்க்கப்பட வேண்டியிருந்தது. அது பலியாகச் செலுத்தப்பட்ட பொருள்கள் கெட்டுப்போகாமலும் சிதைவுறாமலும் இருப்பதைக் குறிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முற்காலத்தில் உப்பு முக்கிய பண்டமாற்றுப் பொருளாக இருந்தது!

'அட்சய திருதியை நாளன்று கடலில் இருந்து பெறப்படும் உப்பை தானமாகக் கொடுத்தால் வற்றாத செல்வம் பெருகும்' என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இப்படி உப்பு பற்றிய பல்வேறு ஆச்சர்யத் தகவல்கள் இருக்க, வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, கடலிலிருந்து கிடைக்கும் உப்பைத் தாண்டி, மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு வகைகள் மற்றும் பாறைகளிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் உப்பு வகைகளையும் மனிதர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இந்துப்பு அனைத்து உப்புகளையும் விட மேன்மையானதா?

சமீபகாலமாக அனைவரின் பார்வையும் உப்பின் மீது திரும்பியிருக்கிறது.

'உப்பு நோயை உண்டாக்குமா, அது மனித உடலுக்கு எவ்வளவு அத்தியாவசியம், இந்துப்பு (Rock Salt) பயன்படுத்தலாமா, இந்துப்பு அனைத்து உப்புகளையும் விட மேன்மையானதா' என்பனபோன்ற சந்தேகங்கள் நம்மிடையே உலா வருகின்றன. குறிப்பாக இன்றைக்கு இந்துப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வருவதால் அதுபற்றி பேசுவது சரியாக இருக்கும். சித்த மருத்துவர் வி.விக்ரம் குமாரிடம் கேட்டோம்

இந்துப்புக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் அளித்திருக்கிறது. சைந்தவம், சிந்துப்பு, பாறையுப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதிகூர்மை, சிந்தூரம், மதியுப்பு என பல்வேறு பெயர்களில் இந்துப்பு அழைக்கப்படுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிகளவில் கிடைக்கிறது.

இந்துப்பு
இந்துப்பு
 • இந்துப்பு மலமிளக்கியாகச் செயல்படும். இந்துப்பு பல்வேறு சித்த மருந்துகளுடன் சேர்த்து மலத்தை இளக்கும் வகையிலும், பேதியை உண்டாக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் வாவை அகற்றுவது, பசியைத் தூண்டுவது, சிறுநீரைப் பெருக்குவது போன்ற செயல்பாடுகளும் இந்துப்புக்கு உண்டு.

சித்த மருத்துவத்தில் இந்துப்பு!

‘அட்டகுன்ம மந்தம் அசிர்க்கரஞ்சூர்…’

எனத் தொடங்கும் இந்துப்பு பற்றிய சித்த மருத்துவப் பாடல் குன்மம், மலக்கட்டு, விஷம், கண் நோய்கள், பூச்சிக்கடி, கபம் போன்றவை இந்துப்பினால் விலகும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்துப்பை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து வாய்கொப்பளித்தால் வாய்ப்புண், பல் ஈறு வீக்கம் போன்றவை மறையும்.

 • இந்துப்பு, சீரகம், ஓமம், திப்பிலி, சுக்கு, கடுக்காய் போன்றவற்றை வெவ்வேறு விகிதங்களில் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்துப்பு சூரணம், வாந்தி, பசி மந்தம், வீக்கம் போன்றவற்றைக் குறைக்கக்கூடியது. மற்ற குடிநீர் வகைகளுடன் சேர்த்து பித்த நோய்களுக்கும் வாய்வைக் குறைக்கவும் இந்துப்பு மருந்தாகப் பயன்படுவதாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.

 • உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு ஒத்தடமிடவும் தசைவலிக்கு பற்றுப் போடும் பொருளாகவும் இந்துப்பு பயன்படுகிறது. பல்வேறு சித்த மருந்துகளில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது. இந்துப்பைச் செயற்கையாகத் தயாரிக்கும் முறையையும் சித்த மருத்துவம் விளக்கியிருக்கிறது. தக்க சுத்திகரிப்பு முறையுடன், தகுந்த சேர்மானத்துடன் இந்துப்பைப் பயன்படுத்த, பல்வேறு நற்குணங்களை வாரி வழங்கும்.

 • இந்துப்புக்கென பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும். இந்துப்பு பயன்படுத்துவதால், செயலிழந்த சிறுநீரகம் பழைய நிலைக்குத் திரும்பி புத்துயிர் பெறும் என்று சொல்வதெல்லாம் பொய். சிறுநீரகத்தில் பிரச்னையை வைத்துக்கொண்டு இந்துப்பை மட்டுமே கொண்டு சரி செய்துவிடலாம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. சமூக வலைதளங்களில் இதுபோன்று பரப்பப்படும் அனைத்துத் தகவல்களையும் உண்மையென்று நம்பிவிடக்கூடாது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அதன் செயல்படும் திறன், கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இந்துப்பு சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது உண்மையா?

இந்துப்பு பயன்படுத்துவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது தவறான தகவல்.

அவரவர் தேவைக்கேற்ப உப்பு வகைகளைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். எந்த வகை உப்பானாலும் அளவுக்கு அதிகமாகும்போது அது பல பிரச்னைகளை உண்டாக்கும். உப்பை அதிகம் பயன்படுத்தினால், முதலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். அதைத்தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

உணவில் இருக்கும் உப்பின் அளவைக் கணக்கிடுவது முக்கியம்.

குறிப்பாக உயர் ரத்த அழுத்த நோயாளிகள், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்வதுடன் தாங்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் உப்பின் அளவையும் கணக்கிடுவது முக்கியம். கர்ப்பிணிகள் இந்துப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ஆனால் இன்று `உப்பு அதிகமிருக்கும் பண்டம் உங்கள் உடலை குப்பையாக்கிவிடும்’
என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

முற்காலத்தில் உணவின் மூலம் கிடைக்கும் உப்புச் சத்து மற்றும் சிறிதளவு சேர்க்கப்படும் உப்பைச் சார்ந்து மட்டுமே உடல் இருந்தது. ஆனால் இன்று, உணவுகளில் சேர்க்கப்படும் உப்பையும் தாண்டி, துரித உணவுகளின் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் உப்பைக் கணக்கிட்டால் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கும்.

உணவில் உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது?

ஒரு நாளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவிலேயே உப்பை நம் உடலுக்குள் செலுத்துகிறோம். குறிப்பாக ஒருவர் துரித உணவுகளை அதிகமாக உட்கொள்கிறார் என்றால், பல நாள்களுக்குத் தேவையான உப்பின் அளவை ஒரே நாளில் அவர் எடுத்துக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் சாப்பிடும் துரித உணவுகளின் பாக்கெட்டில், உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை உற்றுப் பாருங்கள்.
 • ஒரு நாளில் சாப்பிடும் உப்பின் அளவைக் கூட்டிப் பாருங்கள், பேரதிர்ச்சியாக இருக்கும். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் உள்ளிட்ட பல நொறுவைகளின் மூலம் கணக்கில்லாத அளவுக்கு உப்பு உடலுக்குள் சென்று பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

 • உப்பின் செயல்பாடுகளைக் கவனிக்கும் உள்ளுறுப்புகளுக்கு கூடுதல் சுமையைக் கொடுத்து உடலைக் கெடுத்துக் கொள்கிறோம்.

 • உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளின் மூலமும் நமக்கு உப்பு கூடுதலாகக் கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், மறைமுகமாக உப்பு நிறைந்த துரித உணவுகள் அனைத்தும் கூடுதலாக உடலுக்குள் உப்பைக் கொடுக்கின்றன.

 • உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளை அதிகளவிலான உப்பு பயன்பாடு பரிசளிக்கும். குறிப்பாக குழந்தைகள் சிறுவயதிலிருந்தே அதிகளவு உப்பு சார்ந்த சிற்றுண்டி ரகங்களைச் சாப்பிடும்போது பின்னால் ஏற்படப்போகும் விளைவு மிக ஆபத்தானது.

 • உடலுழைப்பு அதிகமாக இருந்தால், வியர்வை அதிகளவில் வெளியேறி கூடுதலாக உப்புச் சத்து தேவைப்படலாம். ஆனால் இன்று பலருக்கும் அதிகம் உழைப்பில்லாத, வியர்வை அதிகம் வெளியேறாத பணிச் சூழலே காணப்படுகிறது. இந்நிலையில் உப்பை மட்டும் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் ‘ஓவர் லோடு’ ஆகும்.

 • உப்பில் உள்ள சோடியம் உடலின் நீர்த்துவ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிமுக்கிய காரணியாகும். அதையும் தாண்டி சோடியத்துக்கென பல பணிகள் இருக்கின்றன. உப்பை அளவோடு பயன்படுத்தும்போது மருத்துவ குணம் நிறைந்திருக்கும்.ஆனால் சுவைக்காகப் பயன்படுத்தும் உப்பின் அளவு அதிகரித்தால் வறட்சி, முடி உதிர்தல், சருமத்தில் சுருக்கம், நாவறட்சி ஆகியவை ஏற்படும்.

5 கிராம்!
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்.
எந்த வகை உப்பாக இருந்தாலும் அளவு மீறும்போது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல உப்பும் நஞ்சாகும்.
தென்னிந்தியாவின் கடலோரங்களில் கல்லுப்பு கிடைத்ததால் அதன் பயன்பாடு அதிகமாக இருந்தது. கல்லுப்பு கிடைக்காத வடநாட்டின் மலையடிவாரப் பகுதிகளில் வாழும் மக்கள், பாறை உப்பான இந்துப்பைப் பயன்படுத்தினர். இன்றைக்கும் வடஇந்தியாவில் விரதங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்துப்புதான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. அயோடின் சேர்க்கப்படாத கடல் உப்பான கல்லுப்பைப்போலவே, இந்துப்பிலும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்துள்ளன.
சோடியம் குளோரைடின் அளவு குறைவு.
நாம் உணவில் சேர்க்கும் தூள் உப்பைவிட இந்துப்பில் சோடியம் குளோரைடின் அளவு குறைவு. மற்ற உப்புகளில் உள்ளதைவிட இதில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பைக்காட்டிலும் இந்துப்பு பயன்படுத்துவது நல்லது. அதிக சத்துகள் அடங்கியது.

"இந்துப்பு" சில கேள்விகளும் மருத்துவரின் விளக்கங்களும்

இந்துப்பு குறித்து பரவலாகப் பலருக்கு இருக்கும் சந்தேகங்களும் அவற்றுக்கு மருத்துவர் Dr. G.ராஜாசங்கர் M.D.(S )  அவர்களின் விளக்கங்களும் கீழே...

தைராய்டு நோயாளிகளுக்கு இந்துப்பு பலன் அளிக்குமா?

இந்துப்பில் தைராய்டு சுரப்பை ஊக்கப்படுத்தும் அயோடின் இயற்கையாகவே உள்ளது என்பதால் தைராய்டு நோயாளிகள் பலர் இந்துப்பை சேர்த்துக்கொள்கின்றனர். ஹைப்பர்தைராய்டு நோய் பாதித்தவர்களுக்கு இந்துப்பு நல்லது. அதே நேரம், ஒருவேளை அவர்கள் ரேடியோ அயோடின் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு தைராய்டு சுரக்காது. இந்தச் சூழலில் ஹைப்பர்தைராய்டு நோயாளிகள் இந்துப்பு சேர்த்துக்கொண்டாலும் நோய் குணத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எனவே, அவர்கள் இந்துப்பு சேர்த்தாலும் அது பயனில்லாமல் போகும்.

சிறுநீரக நோயாளிகள் இந்துப்பை எடுத்துக்கொள்ளலாமா?

 • இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது என்பதால் இதுவரை கல் உப்பு, தூள் உப்பைப் பயன்படுத்தியவர்கள் இந்துப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு செய்தி... பொட்டாசியம் குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு இந்துப்பு மட்டுமன்றி வேறு சில உப்புகளிலும் உள்ளன.

 • நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் சிலவற்றிலும்கூட கலந்திருக்கின்றன. வாழைப்பழம், வெந்தயக் கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, காளான், வெள்ளரிக்காய், பூசணிக்காய், தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் சில வகை மீன்கள், பால் பொருள்கள், சோயா பீன்ஸ், கோழி இறைச்சி, சிவப்பரிசி மற்றும் தவிடு நீக்காத தானியங்களில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது.

 • குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், சூப், சாஸ் வகைகள், சிப்ஸ், உறைந்த இறைச்சி, குளிர் பானங்கள் போன்றவற்றிலும் பொட்டாசியம் குளோரைடு கலந்துள்ளது. ஆனால், சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் குளோரைடு தொடர்ச்சியாக மற்றும் அதிகமாக உடலில் சேரும்போது அது சிறுநீரக அழற்சியை ஏற்படுத்துவதுடன் சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 • குறிப்பாக பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு உள்ள இந்துப்பு நல்லது என்பதற்காக அதை அதிகளவில் பயன்படுத்தினால், அது சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை அதிகரிக்கச் செய்யும். எனவே,

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இந்துப்பைத் தவிர்க்கவும்.

இந்துப்பு யாருக்கெல்லாம் மருந்தாகும்?

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், நாள்பட்ட சளி, புற்றுநோய் போன்ற நோய்களைத் தள்ளிப்போட இந்துப்பு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படுகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுகளை நீரின் மூலமாகவும், மலத்தின் வழியாகவும், வியர்வையின் மூலமாகவும் வெளியேற்றி வாத, பித்த, கப சமன்பாட்டை ஏற்படுத்தி உடலை நல்ல நிலையில் வைக்கும். மாதவிடாயின்போது உண்டாகும் கர்ப்பப்பை வலியைத் தளர்த்தும். ஆசன வாய்ப்பகுதியில் வரும் நோய்கள், விரைவாதம் மற்றும் விலாப்பகுதியில் வரும் வலிகளையும் போக்கக்கூடியது. இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரால் வாய் கொப்பளித்தால் வாய்நாற்றம், ஈறு வீக்கம் மற்றும் பல்வலி போன்றவை சரியாகும். குளிப்பதற்கு முன் இந்துப்பை உடலில் தேய்த்து சற்று நேரம் கழித்துக் குளித்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். கண்களில் உண்டாகும் நோய்த் தொற்றுகளை நீக்கும். தவிர, மேலும் பல நோய்களைக் குணப்படுத்தக் கூடியது இந்துப்பு.

இளஞ்சிவப்பு, வெள்ளை, ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இவற்றில் எந்த நிற இந்துப்பை வாங்க வேண்டும்?

இந்துப்பு கடைகளில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. எதை வாங்குவது எனத் தெரியாமல் பலர் குழம்பிப்போய் இருக்கின்றனர். பொதுவாக இந்துப்பின் மேல் பக்கம் இளஞ்சிவப்பு நிறமாகவும், உள்பக்கம் வெண்மையாகவும் காணப்படும். இரும்பு, ஆக்ஸைடு, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சிறு அளவில் கலந்திருப்பதால் இதற்கு இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. இந்த உப்பு சுற்றுச்சூழல் மாசுபடாத இமாலயப் பகுதியில் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான 84 விதமான தாதுஉப்புகள் இதில் கலந்துள்ளன. ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலும் இந்துப்பு காணப்படுகிறது. இதிலுள்ள மலினங்கள் (மாசு) மற்றும் தாது உப்புகளின் காரணமாக இந்த நிற மாறுபாடுகள் அமைகின்றன. பொதுவாக, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற இந்துப்பை உபயோகிப்பது நல்லது.

இந்துப்பிலும் போலியா? என்ன தீர்வு?

இன்று மக்கள் விரும்பும், பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் போலிகள் வந்துவிட்டன. இந்துப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்துப்புக் கட்டிகளை வாங்கி, சித்த மருத்துவ முறையில் சித்தர்கள் காட்டிய சுத்தி முறையான மூன்று நாள்கள் புளித்தகாடியில் அதை ஊறவைத்து உலர்த்தி எடுத்துப் பயன்படுத்துவது நன்மை தரும்.

நாம் எப்போதும் பயன்படுத்தும் கடலுப்பின் அளவில் கால் பங்கு இந்துப்பைச் சேர்த்துக்கொண்டால் போதுமானது. உப்பை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தும்போது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற விதியை மனதில்கொள்ள வேண்டும்.