Published:Updated:

`மோஹன்தால்' இனிப்பு - மைசூர்பாகின் தங்கையைத் தெரியுமா? #DiwaliSweets

மோஹன்தால் இனிப்புடன் இனிதே தொடங்குங்கள் உங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை....

இனிப்பு
இனிப்பு

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று மோஹன்தால். நம்மூர் மைசூர்பாகுக்கு தங்கை என்று சொல்லலாம். இதுவரை தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய கிச்சன் பக்கமே எட்டிப் பார்த்ததில்லை' என்பவர்களும், `எந்த ஸ்வீட் செய்தாலும் சொதப்பிடுது' என்பவர்களும் தைரியமாக மோஹன்தால் செய்ய முயலலாம்.

சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.
சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

செய்முறையைச் சரியாகப் பின்பற்றினால் ரிசல்ட் சூப்பராக வரும். கோவா சேர்ப்பதால் கூடுதல் சுவை கியாரன்டி. மைசூர்பாகு சுவை பிடிக்காதவர்களுக்கும் மோஹன்தால் நிச்சயம் பிடிக்கும். எளிதில் கிடைக்கும் பொருள்களைவைத்து ஈஸியாகச் செய்துவிடக்கூடிய மோஹன்தால் செய்முறையைக் கற்றுத் தருகிறார் சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

இந்த இனிப்புடன் இனிதே தொடங்குங்கள் உங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை!

தேவையான பொருள்கள்

கடலை மாவு - ஒரு கப்

இனிப்பு சேர்க்காத கோவா - அரை கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

நெய்- முக்கால் கப்

குங்குமப்பூ - சிறிது

ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

உடைத்த பாதாம், முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

Vikatan

செய்முறை

முதலில் வாணலியில் நெய் விடாமல் கோவாவை மட்டும் போட்டு அதன் நிறம் மாறும் வரை 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்து அதைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு கடலைமாவில் சிறிது சூடான நெய் சேர்த்து நன்றாகக் கலந்து, அதை வாணலியில் நெய்விட்டு இளஞ்சூட்டில் வறுக்க வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் ஒன்றரை கப் சர்க்கரை மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறி பாகு பதத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு கோவா மற்றும் கடலைமாவுக் கலவையை சர்க்கரைப் பாகுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். ஒரு தட்டில் நெய் தடவி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி போன்றவற்றைத் தூவி, அவற்றின் மேல் சூடு ஆறிய கடலைமாவு-சர்க்கரை பாகுக் கலவையைக் கொட்டி, சமன்படுத்தி விருப்பமான வடிவில் வெட்டிப் பரிமாறவும்..